முழு பூமியும் ஒரு சரணாலயமாகும்போது
இந்த உலகத்திலேயே மிகக் கொடூரமான மிருகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் ஒரு கண்ணாடியில் பாருங்கள்! ஆம், மனிதர்களாகிய நாம்தான், பூமியின் மிக மோசமான கொலைகாரர்கள்! மிகப்பெரிய அளவில் நாம் ஒருவரை ஒருவர் கொன்றுகொண்டும் இருக்கிறோம்.
இந்தப் பூமியை வனவிலங்குகளுக்கு, விலங்ககங்களில் இருப்பவற்றிற்கும்கூட—முக்கியமாக அவை கடைசி புகலிடமாக ஆகும்போது—பாதுகாப்பானதாக ஆக்கவேண்டுமானால், மனிதவர்க்கத்தின் பேரிடராகிய யுத்தம் நீக்கப்பட வேண்டும். பெர்லின் விலங்ககத்தின் 12,000 மிருகங்களில் 91 மட்டுமே இரண்டாம் உலக யுத்தத்தை தப்பிப்பிழைத்தன. மற்ற அநேக விலங்ககங்கள் இவ்வாறே பாதிக்கப்பட்டன. பால்கன் தீபகற்ப நாடுகளில் சமீபத்தில் நடந்த யுத்தத்தில், தைரியமுள்ள விலங்கக வேலையாட்கள் அநேக மிருகங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர். ஆனால், மான்கள், பூனை இனத்தை சேர்ந்த பெரிய மிருகங்கள், கரடிகள், ஓநாய்கள் உட்பட நூற்றுக்கணக்கான மற்ற அநேக மிருகங்கள் கொல்லப்பட்டன. தி ஆஸ்டிரேலியன் செய்தித்தாளில் மேற்கோள்காட்டப்பட்ட சில அதிகாரிகளின்படி சமீபத்தில் கம்போடிய காடுகளில், அநேக அரிய மிருகங்கள் கமெர் ரூஷ் இயக்கத்தால் கொல்லப்பட்டன. ஏன்? அவற்றின் தோல்களையும் மற்ற பொருட்களையும் ஆயுதங்களுக்காக மாற்றிக்கொள்வதற்கே!
மிருகங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால்—விலங்ககத்திற்கு உள்ளே அல்லது வெளியே—ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வினுக்கு தென்மேற்கிலுள்ள தனித்திருக்கும் பெரான் தீவுகளில் வேண்டுமென்றே செய்யப்பட்ட சுற்றுச்சூழல் நாசம் போன்றதும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய மற்றொரு தீங்காகும். மூன்று வருடங்களில் இரண்டு முறை இந்தத் தீவுகளிலுள்ள பெலிகன் பறவையின் கூடுகள் எரிக்கப்பட்டன. இன்னும் பறந்திராத ஆயிரக்கணக்கான பெலிகன் குஞ்சுகளை, மிகவும் கொடூரமான விதத்தில் கொல்வதற்காகவே அன்றி இதற்கு வேறு எவ்வித காரணமும் இருந்ததாக தெரியவில்லை.
என்றபோதிலும், சமீப பத்தாண்டுகளில், இனங்களின் மிகப் பெரிய இழப்புக்கு காரணம் இப்படிப்பட்ட வன்மம் அல்ல. மாறாக, வசிப்பதற்கு இடமும் பயிர் செய்வதற்கு நிலமும் அவசியமாக தேவைப்படுகிற வேகமாக பெருகிவருகிற மக்கள்தொகை பெருக்கத்தின் பின்விளைவாக இருக்கிறது. மிருகங்களின் வாழிடத்தில் இப்படிப்பட்ட இடைவிடாத ஆக்கிரமிப்பின் காரணமாகவும் அதைப் பின்தொடரும் தூய்மைக்கேட்டின் காரணமாகவும் உலக விலங்கக பாதுகாப்புத் திட்டம் இவ்வாறு எச்சரிக்கிறது: “21-ஆம் நூற்றாண்டிற்கான இந்தப் பூமியின் முழு இயற்கை அமைப்பிற்கும் எதிர்காலமானது நம்பிக்கையற்றதாக இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா பாகங்களிலும் நடந்து கொண்டிருக்கிற அழிவானது சீக்கிரத்தில் நின்றுவிடும் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இல்லை.”
பூமியின் எதிர்காலத்தை பற்றிய அதிகரித்துக் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, இந்த முழுக் கிரகமும் ஒரு சரணாலயமாகும் அந்தக் காலத்தை பற்றி நம்புவது கடினமாக இருக்கிறதா? என்றாலும், இந்த நம்பிக்கையானது, குறுகிய நோக்கமுள்ள மனிதன் மீதல்ல, ஆனால் இதை முன்னறிந்தவராகிய யெகோவா தேவன் மேல் உறுதியாக ஆதாரம் கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஒரு விஞ்ஞான எழுத்தாளரின்படி, வெறும் 50 வருடங்களுக்கு முன்பு மனிதன் இன்றைய உயிரின சூழலின் பேரழிவை பற்றிய எந்த எண்ணமும் இல்லாதவனாக இருந்தான். ஆயிரத்துதொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய நாளில் மனிதவர்க்கமானது “பூமியைக் கெடுத்”துக் கொண்டிருக்கும் என்று கடவுள் முன்னுரைத்தார். (வெளிப்படுத்துதல் 11:18) மிகவும் குறைவான மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சொல்லப்பட்ட அந்தத் தீர்க்கதரிசனமானது, அப்போது வாழ்ந்து கொண்டிருந்த அநேகருக்கு நம்பமுடியாததாக தொனித்திருக்கலாம்; ஆனால் அது எவ்வளவு சரியாக நிரூபித்திருக்கிறது!
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அற்புதங்களை செய்யக்கூடும் என்ற நிலையிலுள்ள ஒரு காலத்தில் இந்த அழிவு ஏற்படுவதுதான் மிகவும் வினோதமாக இருக்கிறது. நுண்கடத்திகளும் விண்கோள்களும் அருகிவரும் இனங்களை கண்காணிக்கின்றன; மழை காடுகளின் அழிவானது விண்வெளிலிருந்து சதுர மீட்டர் கணக்கிலும் காற்றுத் தூய்மைக்கேடானது பத்துலட்சத்தில் இத்தனை பகுதிகள் என்ற கணக்கிலும் அளவிடப்படுகிறது. என்றபோதிலும், சில விதிவிலக்கு தவிர, மலைபோன்ற இந்தத் தகவலின் பேரில் மனிதன் செயல்பட முடியாதவனாக இருக்கிறான். கட்டுப்பாடிழந்த ஒரு இரயிலின் ஓட்டுநரைப் போல மனிதன் இருக்கிறான். அதிநவீன மின்கருவிகளும் மானிட்டர்களும் நிறைந்த ஒரு பலகை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற அனைத்தையும் அவருக்கு காண்பிக்கிறது, ஆனாலும் அவரால் இரயிலை நிறுத்தமுடியவில்லை!
முயற்சிகள் ஏன் தோல்வியடைகின்றன?
ஒரு பெரிய தொழிற்சாலையின், பெருமையுள்ள, ஒழுக்கநெறியற்ற மேனேஜர், அவர் பதவி உயர்வு கொடுக்கப்படாமல் சில மாதங்களில் நீக்கப்பட்டுவிடுவார் என்று தன் முதலாளி சொல்வதை ஒட்டுக்கேட்கிறார் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். கோபமும் வெறுப்பும் நிறைந்தவராய், பொய்கள், லஞ்சம் இன்னும் மற்ற வஞ்சக சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, சேதமுண்டாக்குவதற்கு அதிகமான ஆட்களை தூண்டுகிறார். அவர்கள் மிஷின்களை சேதப்படுத்தி, உற்பத்தியை குறையச் செய்து, விளைபொருட்கள் சேதமடையும்படி செய்கின்றனர்; ஆனாலும் தங்கள் மேல் குற்றம்வராதபடி அவ்வளவு திருட்டுத்தனமாக செய்கின்றனர். இதற்கிடையில், உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத நேர்மையுள்ள வேலையாட்கள், ரிப்பேர் செய்ய முயற்சிக்கின்றனர்; ஆனால் அவர்கள் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக நிலைமை மோசமடைகிறது.
இந்த உலகின் நேர்மையற்ற “மேனேஜரும்”கூட மனிதவர்க்கம் மற்றும் உலகிற்கு எதிராக அதேவிதமாகவே திட்டம் தீட்டியிருக்கிறான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” ஏனென்றால் பைபிள் அவன் முகமூடியை கிழித்து ஒரு கோபமடைந்த ஆவி சிருஷ்டியை—பிசாசாகிய சாத்தானை—வெளிப்படுத்துகிறது. ஒரு தேவதூதனாக இருந்த அவன் தற்புகழ்ச்சியுள்ளவனாக தன்னை கடவுளுக்கு சமமாக நினைத்துக் கொண்டு, வணக்கத்தை பெற விரும்பினான். (2 கொரிந்தியர் 2:11; 4:4) கடவுள் தம்முடைய பரலோக குடும்பத்திலிருந்து அவனை வெளியே தள்ளிவிட்டு அவனுக்கு அழிவு தீர்ப்பளித்தார்.—ஆதியாகமம் 3:15; ரோமர் 16:20.
அந்த நேர்மையற்ற தொழிற்சாலை மேனேஜரைப் போல, இந்தப் “பொய்க்குப் பிதா”வும் அநேக தந்திரமான முறைகளை ஆயுதங்களாக பயன்படுத்தி, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறான். அவன் யெகோவா தேவனை வெறுப்பதனால் அவருடைய சிருஷ்டிப்பை குலைத்துப் போட விரும்புகிறான். (யோவான் 8:44) சாத்தானுடைய மிகவும் வல்லமையுள்ள ஆயுதங்களாவன: பொய்யான வதந்திகளை பரப்புவது, பேராசை, பொருளாசை மற்றும் பாதிப்புண்டாக்குகிற மத போதகங்களே. இவற்றின் மூலம் அவன், ‘உலகமனைத்தையும் மோசம்போக்கி’ பூமியின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டிய மனிதர்களை அதன் மிகவும் கொடூரமான கொலையாளிகளாக, உண்மையில் ‘கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்த’ பூர்வ நிம்ரோதின் வாரிசுகளாக மாற்றியிருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:9, 12; ஆதியாகமம் 1:28; 10:9.
ஒரு உலகளாவிய சரணாலயத்திற்கான ஒரே மெய்யான நம்பிக்கை
என்றபோதிலும், அழிவை ஏற்படுத்தும் மனித மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீதான வெற்றி, பெறப்பட முடியாத ஒன்றல்ல. எல்லா உயிரினங்களின் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகர் நம்மை இந்த மோசமான சுழற்சியிலிருந்து காப்பாற்றுவார்; மேலும் தம்முடைய பரலோக அரசாங்கத்தின் மூலம் இதை செய்யப்போவதாக வாக்கும் கொடுத்திருக்கிறார். பூமியை கெடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொலைகாரர்களை கெடுத்துப் போடுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று சொல்லும்போது நாம் அதற்காகவே ஜெபம் செய்கிறோம்.—மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 11:18.
ராஜ்யத்தின் வருகையானது கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தீர்களா? இது ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யம் பூமியின் மீதான அவருடைய அரசாங்கமாகும். மேலும் ஒரு ராஜ்யமாக இருப்பதனால், அதற்கு ஒரு ராஜா இருக்கிறார்—“ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”வாகிய இயேசு கிறிஸ்துவே அவர். (வெளிப்படுத்துதல் 19:16) அதற்கு குடிமக்களும் இருக்கின்றனர். உண்மையில், இயேசு இவ்வாறு சொன்னார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.” (மத்தேயு 5:5) ஆம், இந்த சாந்தகுணமுள்ளவர்கள்தான் அதன் பூமிக்குரிய குடிமக்கள்; மேலும் கடவுளுடைய ராஜ்யத்தின் உதவியோடு, தங்களுடைய சொத்தை அவர்கள் அன்பாக பாதுகாத்து, அதை ஒரு உயிர் ததும்பும், பூத்துக்குலுங்கும் பரதீஸாக மாற்றுவார்கள். அக்கறைக்குரிய விதமாக, திட்டம் இவ்வாறு சொல்கிறது: “முழு மனிதவர்க்கமும் இயற்கையோடு ஒரு புதிய ஒத்திசைவில் வாழ்ந்தால்தான் மனிதகுலம் மற்றும் இயற்கையின் எதிர்காலம் நிச்சயமானதாய் இருக்கும்.”
இன்று “முழு மனிதவர்க்கமும்” இயற்கையோடு அப்படிப்பட்ட ஒரு “புதிய ஒத்திசைவில்” வாழ இயலாததை சரித்திரமும் அபூரண மனித இயல்பும் சுட்டிக்காட்டுகின்றன; ஏனென்றால் அவர்கள் யெகோவாவை அசட்டை செய்துவிடுகின்றனர். உண்மையில், மனித சுய-ஆட்சியின் பிரயோஜனமற்ற தன்மையை நிரூபிப்பதே, இந்த உலகம் இவ்வளவு காலம் நீடித்திருக்கும்படி கடவுள் அனுமதித்திருப்பதற்கான ஒரு காரணம். ஆனால் சீக்கிரத்தில், கிறிஸ்துவின் ஆட்சிக்காக ஏங்குகிறவர்கள் முழு நிறைவான சமாதானத்தை அனுபவிப்பார்கள். ஏசாயா 11:9 இதை உறுதிசெய்து, இவர்களால் மாத்திரமே ஏன் இயற்கையோடு ஒரு “புதிய ஒத்திசைவில்” வாழ முடியும் என்பதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டுகிறது: ‘என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ ஆம், தெய்வீக போதனையே இதற்கான வழி. மேலும் அது நியாயமாகவும் இல்லையா, இயற்கையின் ஆசிரியரை தவிர வேறு யாரிடம் அப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது?
யெகோவாவை தொடர்ந்து அசட்டை செய்பவர்களைப் பற்றியென்ன? “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்” என்று நீதிமொழிகள் 2:22 சொல்கிறது. ஆம், அவர்களுடைய கொடிய எண்ணம் அல்லது அக்கறையின்மை, வேகமாக நெருங்கி கொண்டிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ அவர்கள் தங்கள் உயிரை இழக்கும்படி செய்யும். தம்முடைய சிருஷ்டிப்பை சுயநலத்திற்காக சுரண்டுவதிலும் வேண்டுமென்றே அழிப்பதிலும் தொடர்ந்திருப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்கான கடவுளுடைய வழியாக இது இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:14; 11:18.
பூமியை மறுபடியும் புதுப்பிக்கும் வேலையில் பங்குகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், பைபிளை வாசிப்பதன் மூலம் கடவுள் உங்களிடம் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை தயவுசெய்து கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாத்திரமே உங்களுடைய சிந்தனையை கடவுளுடைய சிந்தனைக்கு இசைவாக கொண்டுவருவதற்கு வல்லமை இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 4:12) கூடுதலாக, நீங்கள் கற்றுக்கொள்வதை கடைப்பிடிக்கும்போது, இப்பொழுதே நீங்கள் ஒரு நல்ல குடிமகனாக ஆவது மட்டுமல்ல, அவருடைய வேகமாக நெருங்கி கொண்டிருக்கும் ‘புதிய பூமியை’ யெகோவா எப்படிப்பட்ட ஆட்களிடம் ஒப்படைப்பாரோ அவர்களுள் ஒருவராக நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறவர்களாக இருப்பீர்கள்.—2 பேதுரு 3:13.
நீங்கள் விரும்பினால், இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்கள் அல்லது அருகிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையிலுள்ளவர்கள் ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்பை அல்லது இந்த விஷயங்களை விவரிக்கிற கூடுதலான பிரசுரங்களைக் கொண்டு உங்களுக்கு உதவிசெய்ய விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.