மாட்டெரா—வினோத குகை வீடுகளின் நகரம்
இத்தாலியிலிருந்து விழித்தெழு !நிருபர்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, வினோத வீடுகளாய் இருந்தவை ஒரு விதத்தில் டண்டியின் “இன்ஃபர்னோ”-ஆகியிருந்ததாகவும், அதன் காரணமாக, அவ்வீடுகளைக் காலி செய்யும்படியான ஆணையை அரசு விடுக்க நேரிட்டதாகவும் சிலர் நினைத்தனர். ஓரளவுக்கு மீண்டும் குடியேற்றப்பட்டவையாய், அவை இப்போது உலக கலாச்சார இயற்கை சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளன; அவை ஐ.நா. கல்வி, விஞ்ஞான கலாச்சாரக் கழகத்தால் (யுனெஸ்கோ) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்? இந்த வினோத வீடுகள் காலப்போக்கில் மாறுபட்ட விதத்தில் சிந்தித்துப் பார்க்கும்படி தூண்டியிருப்பது ஏன்? முதல் கேள்விக்கான பதில் எளியது: “பூட்” போன்ற இத்தாலியின் கீழ்ப்பகுதிக்குச் சற்று மேற்புறத்திலிருக்கும் நகரமான, தென் இத்தாலியைச் சேர்ந்த மாட்டெராவின் சாஸியைப் (சொல்லர்த்தமாக, இத்தாலிய மொழியில், “பாறைகள்”) பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிப்பதற்கு, அவற்றைப் பற்றியும் அவற்றின் வரலாற்றைப் பற்றியும் சிறிதளவு தெரிந்திருப்பது அவசியம். நாங்கள் சாஸியை பார்க்கச் செல்கையில் நீங்களும் எங்களோடு வந்து, அவற்றைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொண்டாலென்ன?
எழுத்தாளர் க்வீடோ ப்யோவேன்னி கூறுவதன்படி பார்த்தால், “இத்தாலியின் இயற்கைக்காட்சிகளில் மிகவும் கண்கவர் காட்சியை உண்டாக்குவது” மொத்தத்தில் “ஆச்சரியக் கவர்ச்சியுடைய” ஒரு நகரத்தை உருவாக்கும் சாஸியே. ஒரு பரந்த காட்சியைப் பெறுவதற்கு, இயற்கையாகவே அமைந்துள்ள ஒரு வசமான இடத்துக்கு நாம் செல்கிறோம். அங்கிருந்து பார்த்தால் இடுக்கமாய் இருக்கும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கை நன்கு பார்க்கலாம். இந்தக் கணவாய்க்கு எதிர்ப்புறத்தில், நமக்கு முன்னால் இருப்பதுதான் மாட்டெரா நகரம். வேனிற்காலத்து பகட்டான வெளிச்சத்தில், பாறையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் வீடுகளை நாம் காண்கிறோம். அவை ஒன்றின்மேலொன்றாகக் கட்டப்பட்டதைப் போல் தோன்றுகின்றன. அவற்றுக்கு இடையிலான அந்தக் குறுகலான சாலைகள், அந்த இடுக்கமான பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதிவரை செல்கின்றன. அவ்வாறு முடிவடைவதானது, மிகப் பெரியதொரு வட்டரங்கத்தின் படிக்கட்டுகளைப் போன்றுள்ள, சிக்கு விழுந்த முடிச்சு ஒன்றை உண்டாக்குகிறது. நாம் பார்க்கும் அந்தப் பாறையின் வெளிப்பகுதியிலுள்ள பல துவாரங்கள், வீடுகளாய் இருக்கின்றன, அல்லது இருந்திருக்கின்றன. மொத்தத்தில், இவைதான் சாஸி; அதாவது, பாறையிலிருந்து உருவாக்கப்பட்ட குகை வீடுகள்!
கனவையொத்த ஒரு சூழ்நிலை
நாம் சாஸியை—மாட்டெராவின் பழைய நகர்ப்பகுதியை—சென்றடைவதற்கு, போக்குவரத்து நெரிசலோடு சேர்ந்த சந்தடியுடன், நவீன நகரின் வழியாக கடந்து செல்ல வேண்டும். பழைய நகருக்குள் நுழைவது, காலத்தின் விசித்திரமான போக்கில் (time warp) பின்னோக்கிச் செல்வதைப் போலிருக்கிறது; கனவையொத்த ஒரு சூழ்நிலைக்கு நாம் போய்ச்சேருகிறோம். அதில், நிகழ்காலத்துக் குழப்பமான நிலை, கடந்தகாலக் காட்சிகளுக்கென்று படிப்படியாக வழிவிடுகிறது.
குகை வீடுகளில் வசிப்பவர்கள் வெளிவருவதை இன்று எதிர்பார்க்காதீர்கள். இன்று, புராதன காலத்துக் குகைகளை நீங்கள் பார்ப்பது அரிது. ஏனெனில், முற்றுப்பெற்ற கட்டடங்கள் இல்லாவிட்டாலும், சுண்ணாம்புக் கற்களைக் கொண்ட முகப்புகளால் ஆன கட்டடங்கள் அந்தக் குகை வீடுகளுக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கின்றன. அவை, இடைக்கால, 17-ம் நூற்றாண்டு கலைப்பாணி கால, மற்றும் நவீன காலத்தைச் சேர்ந்தவையாய், வெவ்வேறு காலத்துப் பாணியில் கட்டப்பட்டுள்ளன. நாம் தொடர்ந்து போகையில், அந்தக் காட்சி நம் கண்களுக்கு முன்னால் தொடர்ந்து மாறுவதாய்த் தோன்றுகிறது.
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதன்படி, சில ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவேளை மேய்ப்பர்களாய் இருந்த நாடோடி வகுப்பினர் இந்தப் பகுதியில் குடியேறினர். இந்தப் பகுதியில் பரவலாய்க் காணப்பட்ட, இயற்கையிலேயே அமைந்திருந்த எண்ணற்ற குகைகள், கடும் வெப்பம், குளிர் ஆகிய காலநிலைகளிலிருந்தும் கொன்றுதின்னிகளிலிருந்தும் பாதுகாப்பை அளித்தன. விரைவில், பல குகைகளில் மக்கள் குடியேறினர். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்த பொருட்கள், அந்தக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் மக்கள் குடியேறினதைக் குறிப்பிட்டுக் காட்டுவதாகத் தோன்றுகின்றன.
என்றாலும், சாஸி இருக்கும் இந்தப் பகுதியில் படிப்படியாகவே மக்கள் குடியேறினர். கிரேக்கரும் ரோமானியரும் ஆட்சிசெய்துவந்த காலங்களில், தற்காலத்தில் பழைய நகர்ப்பகுதியாய் இருக்கும் இடமான, பாறைகள் நிறைந்த ஒரு தனி மேட்டுப்பகுதியின் உச்சியில் ஒரு சிறிய குடியேற்றப்பகுதி இருந்தது. அந்தக் காலத்திலெல்லாம், சாஸியைப் பார்க்கும்போது, “மக்கள் வாழாத, பண்படாத இரண்டு பள்ளத்தாக்குகளாகவும், இரண்டு வடிநிலங்களாகவும் இருந்தன; அவை பழைய நகரின் குன்றுப் பகுதியின் பக்கங்களில் பரவியிருந்தன; அங்கிருந்து பார்த்தால் அந்தச் செங்குத்தான பள்ளத்தாக்கை நன்கு பார்க்க முடியும்; அவற்றில் ஆட்கள் குடியேறவில்லை; ஆனால் . . . அவை அடர்ந்த செடிகொடிகளால் மூடப்பட்டிருந்தன” என்று ராஃபாயெலே ஜூர்ரா லாங்கோ எழுதுகிறார். இடைக்காலங்களின் ஆரம்பப் பகுதியிலிருந்து, மிருதுவான சுண்ணாம்புக் கற்களை முறைப்படி தோண்டுவதும், தோண்டியெடுத்த பாறைகளைக் கொண்டு சாலைகள் போடுவதும், தெருச்சந்திகள் அமைப்பதும், வீடுகள் கட்டுவதுமாய் இருந்ததால், சாஸி அவற்றுக்கே உரித்தான தோற்றத்தைப் பெற்றன.
விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ச்சீஸ் தயாரிப்பதைப் போன்ற, கால்நடை வளர்ப்போடு தொடர்புடைய தொழில்களை நடத்தவும் வீடுகள் மற்றும் பிற இடங்களின் தேவை ஏற்பட்டது. என்றாலும் முக்கியமான தொழில் விவசாயமாகவே இருந்தது. சாஸியிலிருந்து பார்த்தால் நன்கு காண முடிந்த செங்குத்தான பள்ளத்தாக்கின் பக்கப் பகுதியைத் தோண்டுவதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட பரந்த வெளிநிலப்பகுதிகளில் காய்கறி தோட்டங்கள் போடப்பட்டன. வெளிநிலப்பகுதிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம். சமூக வாழ்வின் பெரும்பகுதி, பல வீடுகளால் சூழப்பட்ட முற்றங்களாய் இருந்த சுற்றுப்புறங்களை மையமாகக் கொண்டிருந்தது.
மனம்கவரும் நீர் சேமிப்பு திட்டம்
சாஸியின் வரலாறு, பாறையுடனும் நீருடனும் மனிதனுக்கிருக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய பிணைப்பைப் பற்றியதும், அவற்றுக்கெதிரான போராட்டத்தைப் பற்றியதுமான வரலாறாகும். வெள்ளப் பெருக்கெடுக்கும் அளவுக்குப் போய்விடாவிட்டாலும், மழைக்காலத்தில், அந்தக் கணவாயின் பக்கங்களில் வழிந்தோடும் மழைநீரானது, கடின உழைப்பால் ஏற்படுத்திய விளைநிலத்தை அரித்துச் சென்றது. ஆகவே, சாஸிவாசிகள் அந்த மழைநீரைக் கால்வாயாக மாற்றி அதைச் சேமிப்பதற்கான அவசியத்தைக் கண்டனர்.
ஆனால், அதை எப்படி சேமிப்பது? எங்கே சேமிப்பது? வெளிநிலப்பகுதிகளில், சேமிப்புத் தொட்டிகள் தோண்டப்பட்டு, நீர் கசியாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டன. கால்வாய்களையும் வாய்க்கால்களையும் கொண்ட அமைப்பானது, எவ்வளவு நீராயிருந்தாலும் அவ்வளவு நீரையும் இந்தச் சேமிப்புத் தொட்டிகளிடம் வழிநடத்தியது. ஆரம்பத்தில் இந்த நீர், மற்ற வேலைகளைக் காட்டிலும் விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. கட்டட நிபுணர் பியட்ரோ லௌரேயான்னோ கூறுவதன்படி, சேமிப்புத் தொட்டிகளின் எண்ணிக்கை, “குடியிருப்புக்கான குகைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அல்லது, குடிநீருக்குத் தேவைப்படும் சேமிப்புத் தொட்டியைக் காட்டிலும் அதிகமாய் இருந்ததானது, சாஸியின் சேமிப்புத் தொட்டிகள் ஆரம்பத்தில், நீர்ப்பாசனத்துக்கான மனம்கவரும் நீர் சேமிப்பு திட்டத்தைக் கொண்டிருந்ததற்கு” அத்தாட்சியாய் இருக்கிறது.
இந்த ஏற்பாடு, போதுமான அளவு குடிநீரையும் வழங்கியது; மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, இந்த அம்சம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றது. இந்தக் காரணத்துக்காக, புத்திநுட்பம் வாய்ந்த ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே மட்டத்திலிருந்தாலும் சரி, வெளிநிலப்பகுதியில், வெவ்வேறு மட்டத்திலிருந்தாலும் சரி, சேமிப்புத் தொட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. “அந்த நீர் ஒரு சேமிப்புத் தொட்டியிலிருந்து மற்றொரு சேமிப்புத் தொட்டிக்குச் செல்லும்போது, பிரமாண்டமான அளவில் வடித்தெடுக்கும் ஓர் ஏற்பாட்டைப் போன்று, அந்த நீர் படிப்படியாக தூய்மையாவதை அவை அனுமதித்தன.” பிறகு அந்த நீர், சாஸியில் எங்கும் காணப்படும் பல கிணறுகளில் ஏதாவது ஒரு கிணற்றிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இந்தக் கிணறுகள் சிலவற்றின் வாய்ப்பகுதிகளை இன்றும் காணலாம். பெரும்பாலும் வறட்சியாகவே இருக்கும் இந்தப் பகுதியில் இவ்வளவு நீர் நிரம்பியிருப்பது அரிது.
பாறையில் ஒரு வீடு
நாம் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று, இங்குமங்குமாய்ச் செல்லும் குறுகலான தெருக்களின் வழியே செல்லும்போது, இந்தப் பழைய சுற்றுப்புறங்கள், இறங்குவரிசையில் அமைக்கப்பட்டிருப்பதாக நமக்குத் தெரியவருகிறது. அதனால்தான், பெரும்பாலும் கீழேயிருக்கும் வெளிநிலப்பகுதிகளை நோக்கியவாறுள்ள கதவுகளைக் கொண்ட வீடுகளின் கூரைப்பகுதியின் மேல் நாம் நடந்துசெல்வதைக் காண்கிறோம். குறிப்பிட்ட சில இடங்களில், ஒன்றன்மேல் ஒன்றாக பத்து வரிசையில் வீடுகள் இருக்கின்றன. இங்கு, மனிதன் பாறையுடன் நெருங்கிய விதத்தில் தொடர்புகொண்டவனாய் வாழ்கிறான். 13-வது நூற்றாண்டு போன்ற ஆரம்ப காலப்பகுதியில், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்தச் சுற்றுப்புறங்களை “சாஸி” என்று அழைத்தன.
ஒரு வீட்டுக்கு வெளிப்புறத்தில் நாம் நிற்கிறோம். நுட்பமாகவும் ஓரளவு நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள கட்டட முற்பகுதி, நம்மை ஏமாற்றிவிடக் கூடாது. ஏனெனில், சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட சமீப கால வாசல், பழைய வாசலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாஸி வீட்டுக்கு ஒரு மாதிரி. வாசலைக் கடந்து சென்றபிறகு, ஒரு பெரிய அறையின் வரிசைவரிசையான படிக்கட்டின் வழியாக கீழே இறங்குகிறோம். அங்குத்தான் ஒரு சமயத்தில், அந்தக் குடும்பத்தின் வீட்டு வேலைகளில் பெரும்பாலானவை நடைபெற்றன. இன்னும் பல படிக்கட்டுகளின் வழியாக இறங்கிச்சென்று, இரண்டாவது அறையை அடைகிறோம்; அதையடுத்து, இன்னுமொரு அறையும் இருக்கிறது. சில அறைகள் பழைய சேமிப்புத் தொட்டிகளாய் இருந்தவற்றைக் கொண்டு தற்போது வசிப்பதற்கேற்றாற்போல கட்டப்பட்டவை. நீர் நுழைவதாய் இருந்த அவற்றின் மேற்புற வாய்ப்பகுதி அடைக்கப்பட்டது; பிறகு வெளிநிலப்பகுதியின் பக்கவாட்டில் தோண்டி, அந்த அறையின் நுழைவாயில் கட்டப்பட்டது. உட்புற அறைகள் சுமைகளைச் சுமந்து செல்லும் விலங்குகளுக்கானவையாய் மட்டுமே ஒரு சமயத்தில் இருந்தன. அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தினர் நுழைவாயிலுக்கு அருகில் வசித்துவந்தனர். வெளிச்சமும் காற்றும் வாசலுக்குச் சற்று மேலாக வைக்கப்பட்டுள்ள பெரிய திறப்பின்மூலம் கிடைத்தன. சாஸி வீடுகளில் வசிப்பவர்கள் சுமைகளைச் சுமந்து செல்லும் விலங்குகளைத் தங்கள் வீடுகளுக்கு உட்புறத்தில் இப்போதெல்லாம் வைத்துக்கொள்வதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை!
இவ் வீடுகளில் பல, தெருமட்டத்திற்கும் கீழாக இருக்கின்றன. ஏன்? ஏனெனில், சூரியனின் கதிர்களை தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் வாசற்பகுதியும் குகை வீடுகளில் சிலவும் சற்று சரிவான பகுதியில் தோண்டப்பட்டன. குளிர்காலத்தில், சூரியன் அடிவானத்தின் கீழ்ப்பக்கத்தை அடைகையில், அதன் கதிர்கள் வீட்டுக்குள் நுழைய முடியும். அதன் மூலம் அதற்கு வெளிச்சமும் வெப்பமும் கிடைக்கும்; கோடையில், சூரியனின் கதிர்கள் வாசலைத் தாண்டி உள்ளே வருவதில்லை, ஆதலால் உள்ளறைகள் குளிர்ச்சியாகவும் சற்று ஈரமாகவும் இருக்கும். நாம் சென்றுள்ள குகையின் பின்பக்கத்துச் சுவரில் பல “அலமாரித் தட்டுகள்” கொண்ட ஒரு செதுக்கப்பட்ட உட்குழிவைக் காண்கிறோம். அது, ஒரு சூரிய கடிகாரம்; ஆண்டு முழுவதும் சூரியனின் சுழற்சியைச் சுட்டிக்காட்டும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் வெளியில் வரும்போது, ஒரு வினோதமான உணர்வு ஏற்படுகிறது. அந்தக் குகையின் குளுமை, வெளியிலுள்ள கோடையின் வெப்பத்தை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிடச் செய்திருந்தது!
சிதைவும் புதுப்பித்தலும்
அசாதாரணமான சூழ்நிலையைத் தவிர, பல்வேறு மாற்றங்களுக்கு சாஸி உட்பட்டிருக்கின்றன. அவை, ஒற்றுமையாயும், ஒப்பிடுகையில் பயன்தரும் நகர்ப்புற மையப்பகுதியாயும் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தபோதிலும், 18-வது நூற்றாண்டின்போது, மாற்றம் ஏற்பட்டது. பயன்தரும் வகையிலமைந்திருந்த நீர் வழங்கீட்டு ஏற்பாட்டைப் புதிய கட்டடங்களும் தெருக்களும் தடுத்ததால், கழிவுப்பொருட்களை அகற்றும் ஒழுங்கமைப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக, நோய் அதிகரித்தது. மேலும், அந்தப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால், நெரிசல் நிறைந்ததாய் மாறிக்கொண்டிருந்த சாஸியைச் சேர்ந்த விவசாய குடும்பங்களுக்கு மத்தியில் வறுமை அதிகரித்தது.
ஒரு காலத்தில் அழகாய் இருந்த இந்தப் பகுதியில் படிப்படியான சிதைவு தவிர்க்க முடியாததாய்த் தோன்றியது. ஆகவே இந்தப் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு காணும் திட்டத்துடன், ஆரம்ப 1950-களில், சாஸியைக் காலி செய்யும்படி அதிகாரப்பூர்வ தீர்மானம் செய்யப்பட்டது. இங்கு வசித்துவந்தவர்களாய் இருந்த, மாட்டெராவின் 15,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு, அது உண்மையிலேயே மனமுறிவை ஏற்படுத்துவதாய் இருந்தது. குறிப்பாக, சுற்றுப்புறங்களில் அவர்கள் முயன்று ஏற்படுத்திக்கொண்டிருந்த நெருங்கிய சிநேகம் முறிவடைந்ததால் சமூக நோக்கில் பார்க்கையில் அவ்வாறு இருந்தது.
என்றாலும், இந்த ஆச்சரியமான நகர்ப்புறக் காட்சி மறையக்கூடாது என்று பலர் நம்புகின்றனர். இவ்வாறு, புதுப்பித்தல் சம்பந்தமான கடின உழைப்பின் பயனாக, சாஸி மெல்லமெல்ல திரும்பப் பெறப்பட்டு குடியேற்றப்படுகின்றன. இன்று, இங்குமங்குமாய் இருக்கும் சாஸியின் புராதனச் சாலைகளுக்கும், வளைந்துசெல்லும் சந்திகளுக்கும் மத்தியில் இருக்கும் இந்தச் சூழ்நிலையைச் சுற்றுப்பயணிகள் பலர் காண விரும்புகின்றனர். உலகின் இந்தப் பகுதிக்கு நீங்கள் எப்போதாவது சென்றால், பாறையிலிருந்து வளர்ந்த, நூற்றாண்டுகள்-பழமையான இந்த நகரைப் பார்த்துவரும்படி சென்றாலென்ன?
[பக்கம் 16, 17-ன் படம்]
1. மாட்டெராவைச் சேர்ந்த சாஸியின் பரந்த காட்சி; 2. படத்தின் இடது முன்புறத்தில் கிணற்றுடன், “சுற்றுப்புறங்கள்;” 3. மாதிரி குகை வீட்டின் உட்புறம்; 4. சூரிய கடிகாரமாகப் பயன்படுத்தப்பட்ட உட்குழிவு; 5. சேமிப்புத் தொட்டிகளுக்கு நீரை எடுத்துச்செல்ல ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட கால்வாய்.