ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணிகள்—அவற்றின் செலவு எவ்வளவு அதிகம்?
“நோய் ஒவ்வொரு மனிதனுக்கும் எஜமானாக உள்ளது” என்று ஒரு டேனிஷ் பழமொழி சொல்லுகிறது. தீராத நோய்க்கு பலியாகியிருக்கும் ஒருவர் இந்த “எஜமான்” உண்மையில் எவ்வளவு கொடுமையானவன் என்பதை உடனடியாக சொல்லமுடியும்! இருப்பினும், நோய் அடிக்கடி ஒரு எஜமானாக இருப்பதைவிட அழைக்கப்பட்ட விருந்தாளியாக இருக்கிறது என்பதை அறிவதில் நீங்கள் ஆச்சரியமடையலாம். நோயாளிகள் மருத்துவமனைகளில் செலவிடும் நாட்களில் 30 சதவீதமானது தவிர்க்கமுடிந்த நோயாலும் காயங்களாலும்தான் என்று ஐ.மா.-வின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் காட்டுகின்றன. இதற்கு காரணம் என்ன? ஆரோக்கியமற்றதும் ஆபத்தானதுமான வாழ்க்கைப்பாணிகளே. சில உதாரணங்களை கவனியுங்கள்.
புகைபிடித்தல். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக புகைபிடித்து வருவதன் காரணத்தால் 53 வயதான ஐராவுக்கு எம்பசீமா என்ற காற்றுத்தேக்க வியாதி இருக்கிறது. அவருடைய வியாதிக்கு சிகிச்சையளிக்க, அடைக்கப்பட்ட பிராணவாயு அவருக்கு சீராக கொடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது; இதன் செலவு ஒரு மாதத்திற்கு 400 டாலர். 1994-ல் அவர் ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால், 18,000 டாலர் தொகையை கட்ட வேண்டியதாயிற்று. இது ஐராவின் உடல்நலத்திற்காக அந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட மொத்த தொகையை 20,000 டாலருக்கும் அதிகம் என்ற நிலைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையிலும், ஐரா புகைப்பதை நிறுத்துவதற்கான எந்த அவசரத்தையும் உணரவில்லை. “சொன்னா நம்பமாட்டீங்க, இன்னும் அதுமேல எனக்கு பயங்கர ஆசை இருக்கு” என்று அவர் சொல்கிறார்.
ஐரா மட்டும் இல்லை. இவரைப்போல் எத்தனையோ அநேகர் இருக்கிறார்கள். புகைபிடிப்பதினால் வரும் ஆபத்துகளை நன்கறிந்த போதிலும்கூட, உலகமுழுவதிலுமுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 கோடி சிகரெட்டுகளைப் பற்றவைக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் உடல் நலத்திற்கான வருடாந்தர செலவில் புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, 5,000 கோடி டாலர் செலவாகின்றது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 1993-ல் சராசரியாக, வாங்கப்பட்ட ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுக்காகவும் கிட்டத்தட்ட 2.06 டாலர், புகைப்பதோடு சம்பந்தப்பட்ட மருத்துவத்துக்கு செலவானது என்று அர்த்தப்படுத்துகிறது.
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே புகைப்பதோடு சம்பந்தப்பட்ட மருத்துவ செலவுகள் குவியத் தொடங்கக்கூடும். வெறும் ஒரு உதாரணத்தைக் காட்டுவதற்கு, புகைக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிளந்த உதடுகள் அல்லது மேல்வாயைக் கொண்டிருப்பதற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்றும், இந்நிலையால் இரண்டு வயதிற்குள்ளாக நான்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய தேவை ஏற்படலாம் என்றும் ஐக்கிய மாகாணங்களில் செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. இப்படிப்பட்ட நிலையால் ஒரு நபருக்காகும் வாழ்நாள் முழுவதுமான மருத்துவ கவனிப்பும் அது சம்பந்தமான செலவும் சராசரியாக 1,00,000 டாலராக உள்ளது. உண்மைதான், பிறப்பிலேயே உறுப்புக் கோளாறைக் கொண்டிருப்பதால் வரும் உணர்ச்சிரீதியிலான வேதனையை பணத்தால் அளப்பது கடினம்.
சமூக பாதுகாப்பு பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு புகைபிடிப்பவர்கள் நெடுநாள் வாழ்வதில்லை என்பதால் புகைப்பதால் ஏற்படும் உச்சளவு உடல்நல கவனிப்புச் செலவு ஈடுசெய்யப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். இருந்தாலும், த நியூ இங்கிலாண்ட் ஜர்னல் ஆப் மெடிசின் குறிப்பிடுகிறது, “இந்த முடிவு சர்ச்சைக்குரியதாக உள்ளது; அதுமட்டுமல்லாமல், புகைப்பதால் அகால மரணங்கள் என்பது உடல்நல பராமரிப்பு செலவைக் கட்டுப்படுத்துவதற்கான மனிதாபிமான வழிகளாக இல்லை என்பதை அநேகர் ஒத்துக்கொள்வார்கள்.”
மதுபான துர்ப்பிரயோகம். மதுபான துர்ப்பிரயோகம் கல்லீரல் இறுகுநோய், இதய நோய், இரைப்பை அழற்சி, அல்சர்ஸ், கணைய அழற்சி போன்ற எண்ணற்ற உடல்நலக் கோளாறுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் இது நிமோனியா போன்ற தொற்றக்கூடிய வியாதிக்கு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் ஒருவரை வைக்கிறது. டாக்டர் ஸ்டன்டன் பீல் சொல்லுகிறபடி, ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆண்டும், “குடியைக் கட்டுப்படுத்தாத ஆட்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 1,000 கோடி டாலர் பயன்படுத்தப்படுகிறது.”
மதுபானம் கருப்பையிலுள்ள கருவையும் அடிக்கடி பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே ஆயிரக்கணக்கான குழந்தைகள், தங்களுடைய தாய்மார்கள் கர்ப்பமாக இருந்தபோது குடித்ததால் கோளாறுடன் பிறக்கிறார்கள். இத்தகைய சிசுக்கள் சிலவற்றில் ஃபெட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம் (FAS) இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; மேலும் இவை அடிக்கடி உடல் மற்றும் மனக்கோளாறுகளால் துன்பப்படுகின்றன. ஒவ்வொரு FAS குழந்தைக்கும் வாழ்நாள் முழுவதும் ஆகும் மருத்துவச்செலவு சராசரியாக 14 லட்சம் டாலரென்று கணக்கிடப்பட்டுள்ளது.
மதுபானம் உணர்ச்சி வேகத்தின் கட்டுப்பாட்டைக் குறைப்பதால், மிதமிஞ்சி குடிப்பது வன்முறை வெடித்தெழுவதில் அடிக்கடி பங்கு வகிக்கிறது. இது மருத்துவ கவனிப்பை தேவைப்படுத்தும் காயங்களில் விளைவடைகிறது. இன்னும்கூட, குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்கிறவர்களால், கட்டுப்படுத்த முடியாதளவு ஆபத்து ஏற்படுத்தப்படுகிறது. எட்டு வயது பெண்ணான லின்சீக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனியுங்கள். குடிபோதையில் வண்டி ஓட்டிவந்த ஒரு பெண் இவளுடைய அம்மாவின் காருடன் மோதியபிறகு, இவளை அந்தக் காரின் பின்சீட்டிலிருந்து நெம்புகோலால் விடுவிக்க வேண்டியிருந்தது. லின்சீ ஏழு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தாள்; மேலும் அவளுக்கு அநேக அறுவைசிகிச்சை செய்வதும் தேவைப்பட்டன. அவளுடைய மருத்துவ செலவுகள் 3,00,000 டாலரையும் தாண்டியது. சந்தோஷகரமாக, கடைசியில் அவள் உயிர்பிழைத்துக் கொண்டாள்.
போதைப்பொருள் துர்ப்பிரயோகம். அமெரிக்காவில் போதைப்பொருள் துர்ப்பிரயோகத்தால் ஆகும் வருடாந்தர செலவு 6,700 கோடி டாலர் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கணக்கிட்டார். நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்திலுள்ள அடிமைப்படுத்தக்கூடிய பொருட்களின் துர்ப்பிரயோகம் என்ற மையத்தின் இளநிலை தலைவரான ஜோசப் ஏ. கலபானோ இந்தப் பிரச்சினையின் மற்றொரு செலவுபிடிக்கும் அம்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: கிரேக் என்ற போதைப் பொருளை உட்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளால் சிசுபராமரிப்பு வார்டுகள் முழுவதும் நிறைந்திருப்பதால், ஒரு நாளுக்கு 2,000 டாலர் செலவாகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு இது அபூர்வமாக இருந்தது. . . . உயிர் பிழைக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பெரியவராக்குவதற்கு 10 லட்சம் டாலர் செலவாகலாம்.” கலபானோ கூடுதலாக சொல்கிறார், “போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்காக, 1994-ல் மருத்துவ நிதிதிட்டத்திலிருந்து செலவழிக்கப்பட்ட 300 கோடி டாலரில் பெரும் பகுதி, கர்ப்பமான தாய்மார்கள் பிரசவத்திற்கு முந்திய காலங்களில் கவனமாயிருக்கத் தவறியதாலும், போதைப்பொருட்களை நிறுத்தத் தவறியதாலும், செலவழிக்கப்பட்டுள்ளது.”
இந்த துர்நடத்தைக்கு மனிதர்கள் செலுத்தும் எண்ணிலடங்கா விலையை சிந்தித்தால், இந்தச் சூழ்நிலையின் அவல நிலை இன்னும் அதிகரிக்கிறது. திருமணத்தில் சச்சரவு, கைவிடப்பட்ட பிள்ளைகள், பொருளாதாரத்தில் வெறுமையாக்கப்பட்ட நிலை ஆகியவையே போதைப்பொருளால் தகர்க்கப்படும் குடும்பங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளாக உள்ளன.
முறைகேடான பாலுறவு. ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பால்வினை நோய்களைப் (Sexually Transmitted Diseases [STD]) பெறுகின்றனர். இது முன்னேறிய நாடுகளிலேயே ஐக்கிய மாகாணத்தை STD-யில் உயர்ந்த விகிதத்தில் வைக்கிறது. சுகாதாரம் மற்றும் பொது ஆரோக்கியத்திற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பள்ளியைச் சேர்ந்த டேவிட் செலன்டானோ இதை “தேசியளவில் தர்மசங்கடமான நிலை” என்றழைக்கிறார். எய்ட்ஸை உட்படுத்தாமல் இந்த வியாதிகளுக்கு மட்டுமே நேரடியாக ஆகும் செலவு வருடத்திற்கு 1,000 கோடி டாலராக உள்ளது. பருவ வயதினர்களே விசேஷமாக ஆபத்தில் இருக்கின்றனர். மேலும் அது ஆச்சரியத்துக்குரியதாக இல்லை! ஒர் அறிக்கை குறிப்பிடுகிறபடி, 12-ம் வகுப்பிற்குள்ளாக, அவர்களில் 70 சதவீதமானோர் உடலுறவு கொண்டிருந்திருக்கின்றனர்; மேலும் 40 சதவீதத்தினர் குறைந்தது நான்கு பேர்களோடாவது இருந்திருக்கின்றனர்.
எய்ட்ஸ் தானே உடல்நலத்திற்கு மகா கேடுவிளைவிக்கிறது. 1996-ன் ஆரம்பங்களில் கிடைக்கப்பெற்ற அதிக ஆற்றல் வாய்ந்த சிகிச்சைமுறைகளில்—பழைய தரமான மருந்துகளோடு இணைந்த புரத நொதிப்பு தணிப்பான்கள்—ஒரு நபருக்கு ஒரு ஆண்டில் 12,000 டாலரிலிருந்து 18,000 டாலர் செலவாகியுள்ளது. இது எய்ட்ஸுக்காகும் மறைமுகமான செலவுகளில் வெறும் ஒரு பின்னமாகவே உள்ளது. இச்செலவுகள் இதற்கு பலியான அந்த நபருடைய, மற்றும் அவரை கவனித்துக்கொள்வதற்காக வேலை அல்லது பள்ளியிலிருந்து விடுப்பிலிருப்பவருடைய உற்பத்தித் திறனை இழப்பதையும் உட்படுத்துகிறது. வருடம் 2000-ற்குள்ளாக ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ், உலகமுழுவதுமாக 35,600 கோடி டாலரிலிருந்து 51,400 கோடி டாலர் வரையாக சுரண்டிவிட்டிருக்கும்; இது ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவின் முழு பொருளாதாரத்தையும் துடைத்தழிப்பதற்கு சமமாய் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வன்முறை. ஜாஸ்லின் எல்டர்ஸ் என்பவர் தான் யூ.எஸ். மூத்த மருத்துவ அதிகாரியாக இருந்தபோது, வன்முறைக்கான மருத்துவச் செலவு 1992-ல் 1,350 கோடி டாலராக இருந்தது என்று அறிக்கையிட்டார். ஐக்கிய மாகாணத்தின் ஜனாதிபதி பில் கிளின்டன் பின்வருவதைக் கவனித்தார்: “அமெரிக்காவில் உடல்நலத்திற்காக ஆகும் செலவு மிக அதிகமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய மருத்துவமனைகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் வெட்டப்பட்டவர்களாலும் சுடப்பட்டவர்களாலும் நிறைந்திருப்பதே.” சரியான காரணத்துடனே, அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழ் (ஆங்கிலம்) ஐக்கிய மாகாணத்திலுள்ள வன்முறையை “பொதுமக்களின் உடல்நல அவசரநிலை” என்று அழைக்கிறது. அந்த அறிக்கை தொடர்கிறது: “வன்முறை உண்மையில் வியாதியாக இல்லாவிட்டாலும்கூட, தனிநபர் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தின் மீது அது கொண்டுள்ள பாதிப்பு அநேக உடலியல் வியாதிகளைப் போல அவ்வளவு ஆழமானதாக உள்ளது—ஒருவேளை அதிகமாகவும்கூட.”
கொலராடோவிலுள்ள 40 மருத்துவமனைகளின் அறிக்கை சொல்லுகிறபடி, 1993-ல் முதல் ஒன்பது மாதங்களின்போது வன்முறைக்கு பலியான ஒவ்வொருவருக்குமான செலவு சராசரியாக 9,600 டாலராக இருந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாதிக்கும் மேலானோர் உடல்நல இன்சூரன்ஸ் செய்யாதவர்களாகவும், தங்களுக்கான செலவை செலுத்த இயலாதவர்களாக அல்லது மனமற்றவர்களாக இருந்தனர். இத்தகைய சூழ்நிலை வரி அதிகரிப்புக்கும், இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகரிப்பதற்கும், மருத்துவமனை கட்டணங்கள் அதிகரிப்பதற்கும் வழிநடத்துகின்றன. கொலராடோ மருத்துவமனைச் சங்கம் அறிவிக்கிறது: “இதற்காக நாம் எல்லாருமே செலவழிக்கிறோம்.”
வாழ்க்கைப்பாணியில் மாற்றம்
மனித நோக்குநிலையிலிருந்து பார்த்தால், ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணி பாதையிலிருந்து மாறுவது என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையற்றதாக உள்ளது. “அமெரிக்கா ஏதேன் தோட்டம் கிடையாது, எனவே நாம் ஒருபோதும் இத்தகைய பொருட்களின் துர்ப்பிரயோகத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது, ஆனால் இத்தகைய துர்ப்பிரயோகத்தை நம்மால் முடிந்தளவு தடுத்தால், ஆரோக்கியமான பிள்ளைகள், குறைந்தளவான வன்முறை மற்றும் குற்றச்செயல், குறைவான வரிகள், குறைந்தளவான, உடல்நல பராமரிப்பு செலவுகள் அதிகளவான லாபம், கல்வியறிவில் சிறந்த மாணவர்கள் மற்றும் சில எய்ட்ஸ் நோயாளிகளே என்ற சிறந்த அறுவடையை அறுப்போம்” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஒரு அறிக்கை சொல்லுகிறது.
இத்தகைய இலக்கை அடைவதற்கு பைபிளை ஒரு மிகச் சிறந்த உதவியாக யெகோவாவின் சாட்சிகள் கண்டிருக்கின்றனர். பைபிள் ஒரு சாதாரணமான புத்தகம் இல்லை. அது மனிதனின் சிருஷ்டிகரான யெகோவா தேவனால் ஏவப்பட்டது. (2 தீமோத்தேயு 3:16, 17) ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறவர்’ அவர் தான். (ஏசாயா 48:17) பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்கள் ஆரோக்கியத்துக்கேதுவானவை, மேலும் அதனுடைய ஆலோசனைகளின்படி நடப்பவர்கள் அதிகமான நன்மையை அடைவார்கள்.
உதாரணமாக, எஸ்தர் ஒரு சமயத்தில் மிதமிஞ்சி புகைப்பவளாக இருந்தாள்.a யெகோவாவின் சாட்சிகளோடு அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபிறகு, அவளுடைய பைபிள் ஆசிரியை அவளை நியூ யார்க், புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தைக் காண்பதில் ஒரு நாளை கழிக்கலாம் என்று அழைத்தார். முதலில் எஸ்தர் தயங்கினாள். யெகோவாவின் சாட்சிகள் புகைக்க மாட்டார்கள் என்று அவள் அறிந்திருந்ததால், ஒரு நாள் முழுவதுமாக அவர்களுடன் தன்னால் எப்படி புகைபிடிக்காமல் இருக்கமுடியும் என்று எண்ணினாள். எனவே, புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டால், வெறுமனே ஒரு கழிப்பறைக்குள் மெதுவாக நழுவிக் கொள்ளலாம் என்று எண்ணி, தன்னுடைய பர்ஸில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டாள். ஒரு பகுதியைச் சுற்றிப் பார்த்தபிறகு, எஸ்தர் தான் திட்டமிட்டபடியே, பெண்கள் கழிவறை ஒன்றுக்குள் சென்று தன்னுடைய சிகரெட்டை எடுத்தாள். ஆனால் அப்போது அவள் ஏதோவொன்றைக் கவனித்தாள். அந்த அறை சிறு அழுக்குகூட இல்லாமல் சுத்தமானதாகவும், அங்கேயிருந்த காற்று தூய்மையாகவும் இருந்தது. “அந்த சிகரெட்டை புகைப்பதன்மூலம் அந்த இடத்தை அசுத்தமாக்க என்னால் முடியவில்லை, அதனால் அதை டாய்லெட்டுக்குள் போட்டு ஃபிளஷ் செய்துவிட்டேன். அதுவே நான் தொட்ட கடைசி சிகரெட்டாக இருந்தது!” என்று எஸ்தர் நினைவுகூருகிறாள்.
உலகமுழுவதிலுமுள்ள, எஸ்தரைப் போன்ற லட்சக்கணக்கானோர் பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ கற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்களும் நன்மை அடைகிறார்கள், மேலும் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் பெரும் சொத்தாக ஆகிறார்கள். மிக முக்கியமாக, தங்களுடைய சிருஷ்டிகரான யெகோவா தேவனுக்கு புகழைக் கொண்டு வருகிறார்கள்.—நீதிமொழிகள் 27:11-ஐ ஒப்பிடுக.
மனிதனின் சிறந்த முயற்சிகள் “ஒரு ஏதேன் தோட்டத்தைப்” தோற்றுவிக்க முடியாத போதிலும்கூட, கடவுள் அதைக் கொண்டுவருவார் என்று பைபிள் சொல்லுகிறது. “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” என்று 2 பேதுரு 3:13 சொல்லுகிறது. (ஏசாயா 51:3-ஐ ஒப்பிடுக.) அந்தப் புதிய பூமியில் உடல் நலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் ஒருபோதுமிருக்காது. ஏனென்றால் கடவுள் ஆதியில் நோக்கம் கொண்ட விதமாக, மனிதவர்க்கம் வாழ்க்கையை பரிபூரண சுகநலத்துடன் அனுபவித்து மகிழும். (ஏசாயா 33:24) கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சியடைவார்கள்.
[அடிக்குறிப்பு]
a அவளுடைய உண்மைப் பெயர் அல்ல.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
© 1985 P. F. Bentley/Black Star