காபா—நேர்த்தியான ஆப்பிரிக்க உடைபாணி
கானாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
காபா—இது இங்கு கானாவிலும் அடுத்திருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் எங்குப் பார்த்தாலும் பரவலாக இருப்பதை நீங்கள் காணலாம். இது சவ அடக்க நிகழ்ச்சிகள் முதல் சந்தோஷமான கிறிஸ்தவக் கூட்டங்கள் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் அணியப்படுகிறது. காபா வெவ்வேறு பாணிகளிலும் நிறங்களிலும் வருகிறது.
காபா என்பதுதான் என்ன? இது, பெண்கள் உடையில் பிரபலமான ஒரு பாணி. கழுத்தின் கீழ்பாகத்திலிருந்து இடுப்பு வரையிலும் நீண்டிருக்கும் ஒரு மேலாடைக்கே இந்தப் பெயர். என்றாலும், இது தனியாக அணியப்படுவதில்லை. தரத்தைப் பொருத்து, வேக்ஸ் பிரிண்ட் அல்லது ஜாவா பிரிண்ட் என்று இங்குப் பிரபலமாக அழைக்கப்படும் இரண்டு மீட்டர் நீள துண்டுத்துணி அத்துடன் சேர்த்து அணியப்படுகிறது. இடுப்பைச் சுற்றி ஆரம்பித்து கணுக்கால் வரையில் தொங்கும் இந்த உடைக்கு ஆஸடாம் என்று பெயர். இந்த இரண்டு உடைகளோடு இங்கூஸோ என்ற மற்றொரு இரண்டு கஜ நீளத் துணியுடன் சேர்த்து சுற்றப்படும்போதுதான் முழுமையாகிறது. இங்கூஸோ என்பது பல்வேறு பயன்களையுடையது; இதை மேட்சிங் முண்டாசாகவோ, பின்புறத்தில் ஒரு குழந்தையை வைத்துச் சேர்த்துக் கட்டிக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு துணியாகவோவும்கூட பயன்படுத்தலாம்.
காபா ஆப்பிரிக்காவின் பிரத்தியேகமான ஓர் ஆடை; ஆனால், இந்தக் கண்டம் முழுவதிலும் இது பல பெயர்களில் அறியப்பட்டிருக்கிறது. லைபீரியாவைச் சேர்ந்தவர்கள் இதை லாப்பா சூட் என்று அழைக்கின்றனர். பெனினில் இதற்கு ஜென்வூ என்று பெயர். சியர்ரா லியோனைச் சேர்ந்தவர்கள் இதை டாக்கட் மற்றும் லாப்பா என்று அழைக்கின்றனர். என்றாலும், சமீப காலம்வரை, காபா என்பது ஆப்பிரிக்க நாடுகளில் அறியப்படாமல் இருந்தது. உதாரணமாக, இங்கு கானாவில் டான்ஸின்கிரான் பாணி, ஆக்கன் மொழி பேசும் பெண்களுக்கு மத்தியில் பிரபலமாய் இருந்தது. இது இரண்டு தனித்தனி துண்டுகளாக இருக்கும்; சில சமயங்களில் ஒரே பிரிண்ட்டிலிருந்தும் வெட்டப்பட்டிருக்கும். ஒரு துண்டு இடுப்பைச் சுற்றிலும் சுற்றப்பட்டு ஒரு கச்சையினால் கட்டப்பட்டது. பொதுவாக பெரிதாய் இருக்கும் இரண்டாவது துண்டு, இடது தோளின்மேலிருந்து மார்பின் குறுக்காய் முதுகுப்பக்கம் வரை அணியப்பட்டது. இந்த வகை ஆடை அணியும்போது டான்ஸின்கிரான் என்றும் அழைக்கப்படும் ஒருவகை விசேஷ சிகையலங்காரம் செய்யப்பட்டது.
என்றாலும், தையல் மிஷினைக் கண்டுபிடித்ததிலிருந்து, மேற்கத்திய சட்டையைப் போன்ற உடைகளை சில ஆப்பிரிக்கப் பெண்கள் தைக்க ஆரம்பித்தனர். மேற்கத்திய பெண்கள் மூடுவதைப் போல தோள்களை மூடிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாய் இருந்தது. “தோள்களை மூடுவது” என்ற சொற்றொடரை உச்சரிப்பதில் சிலருக்கு சிரமம் இருந்ததாக ஒரு கதையும் இருக்கிறது. “மூடுவது” என்று அர்த்தமுள்ள “கவர்” என்ற வார்த்தை இவ்வாறு காபா என்றானது.
காபா ஃபாஷனாகிறது
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முதல் பண்ணையில் பணிபுரியும் பெண்கள்வரை, காபாவைத் தொடர்ந்து அணிகின்றனர். சொல்லப்போனால், இது ஏற்றுமதிப்பொருளாகவும் ஆகியிருக்கிறது! என்றபோதிலும், அந்தளவுக்குப் பிரபலமடைந்திருப்பது சமீப காலத்தில்தான்.
ஒரு விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தி பிரபலமாய் இருந்த காபாவின் பாணிகளை எல்லா பெண்களும் விரும்பவில்லை. ஆக்நெஸ் என்ற 62 வயதான, ஓய்வுபெற்ற ஒரு சமூக சேவகி, அந்தப் பழங்காலத்து பாணிகள் சில “கேலிக்குரியவையாய்” இருந்தனவென்று விழித்தெழு!-விடம் கூறினார். மற்ற பெண்களுக்கு, ஆஸடாம் மற்றும் இங்கூஸோ ஆகியவற்றுடன் காபாவை சரியான விதத்தில் அணிவதற்கு மிகுந்த பொறுமையும் கலைநயமும் தேவைப்பட்டன. ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தும் எலிசபெத் நினைவுகூருவதாவது: “எங்களைப்போன்ற இளம் பெண்களுக்கு, ஆஸடாம் மற்றும் இங்கூஸோவை அணியும் கலைகளில் தேர்ச்சிபெறுவது சிரமமாய் இருந்தது. அதை அணியும் கலையில் நான் தேர்ச்சிபெறவே இல்லை” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
வகுப்பு வாதங்களும் இந்த உடைபாணியின் பிரபலத்தைக் குறைப்பதில் ஒரு பங்கை வகித்திருக்கின்றன. சமீபகாலம் வரையில், மேற்கத்திய பாணி உடை படித்தவர்களுக்கு உரியதென்றும், காபா படிக்காதவர்களுக்கு உரியதென்றும் பலர் உணர்ந்தனர் என சீவா என்ற 65 வயது பெண், விழித்தெழு! நிருபரிடம் கூறினார்.
என்றாலும், ஒரு புதிய கலாச்சார விழிப்புணர்ச்சி, பல ஆப்பிரிக்கப் பெண்கள் காபாவை அணிவதைப் பற்றி மறுபடியும் நினைத்துப்பார்க்கும்படி செய்திருக்கிறது. ஃபாஷன் டிசைனர்களும் இந்த ஆடையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க விதத்தில் கைகொடுத்திருக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால், ஸ்லிட் என்றழைக்கப்படும் ஒரு புதுவித உடையைத் தயாரித்தனர். ஒரு பாவாடையைப் போன்ற டிசைனில் இருந்த, ஆனால் கணுக்கால் வரை நீளமுள்ள அது, ஆஸடாம் மற்றும் இங்கூஸோவை சரியாக சுற்றுவதில் சில பெண்களுக்கிருந்த பிரச்சினையைத் தீர்த்துவைத்தது. கண்காட்சிகளும் ஃபாஷன் ஷோக்களும்கூட, காபாவை பெரிய ஃபாஷனாக முன்னேற்றுவிப்பதில் ஒரு பெரும்பங்கை வகித்திருக்கின்றன.
என்றபோதிலும், இன்று பல நாடுகளில் ஃபாஷனாக இருப்பதைப்போலவே காபாவின் வெகுசமீபத்திய பாணிகள் சில ஆபாசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் சந்தேகமில்லை. அங்கங்களை வெளிக்காட்டும் அப்படிப்பட்ட ஆடைகள், “தோள்களையும்கூட மூடுவது” என்றிருந்த “காபாவின் மூல நோக்கத்தை” மாற்றிவிடுவது போல் தோன்றுவதாக கிளாரா என்ற 69 வயது பெண் கூறுகிறார். ஆகவே, கிறிஸ்தவப் பெண்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் புத்திமதியை மனதில் கொள்கின்றனர்: “ஸ்திரீகளும் . . . தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும் [“அடக்கத்தோடும்,” NW], தெளிந்த புத்தியினாலும் . . . தங்களை அலங்கரிக்கவேண்டும்.”—1 தீமோத்தேயு 2:9, 10; 1 கொரிந்தியர் 10:29.
அடக்கமான பாணியைத் தெரிவுசெய்யும் பெண்களுக்கு, காபா ஒரு நேர்த்தியான மற்றும் நடைமுறையான பாணி உடையாக இருக்கலாம். மேலும், பாரம்பரிய ஆப்பிரிக்க உடையின் பாணிகள் பல மலையேறிவிட்ட சமயத்தில், ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும் சூழலையும் இனிமையாகவும் நேர்த்தியாகவும் எடுத்துக்காட்டும் ஒரு பாணியாக காபா எப்படியோ இன்றுவரை தப்பித்துவிட்டிருக்கிறது.
[பக்கம் 24-ன் படங்கள்]
இங்கூஸோ, இங்கு முண்டாசாக பயன்படுத்தப்படுகிறது
[பக்கம் 25-ன் படங்கள்]
இங்கூஸோ, குழந்தையைத் தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படுகிறது