கோகோஸ் தீவு—அதன் புதையல்களைப் பற்றிய கதைகள்
கோஸ்டா ரிகாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கோஸ்டா ரிகாவின் தென்மேற்கு கடற்கரையோரப் பகுதியிலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தீவு இருக்கிறது. அதன் புதையல்களைப் பற்றிய கதைகளுக்கு அது பெயர்போனது. ராபர்ட் லூயஸ் ஸ்டீவன்ஸன் தன்னுடைய பிரசித்திபெற்ற புதையல் தீவு என்ற ஆங்கில புத்தகத்தை எழுதுவதற்கு இங்குப் புதைக்கப்பட்ட கடற்கொள்ளைப் பொருட்களைப் பற்றிய கதைகளையே அடிப்படையாகக் கொண்டார் என்று சிலரால் நம்பப்படுகிறது.
வரைபட வல்லுநர்களும் மாலுமிகளும், 16-வது நூற்றாண்டில் இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதை வெவ்வேறு பெயர்களால் அழைத்திருக்கின்றனர். ஸ்பானிஷ் மொழி பேசும் உள்ளூர்வாசிகளின் மத்தியில், இந்தத் தீவு இன்று இஸ்லா டெல் கோக்கோ [Isle of the Coconut (தென்னந்தீவு)] என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயரோ கோகோஸ் ஐலண்ட்.
கோஸ்டா ரிகாவுக்கும் கலாப்பகஸ் தீவுகளுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு நிலப்பகுதி இருக்கிறது; அதற்கு கோகோஸ் முகடு என்று பெயர். இந்த முகட்டில் எரிமலை வெடித்ததன் காரணமாக அதன் ஒரே தீவுப்பகுதி உருவானது. கிழக்கத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவுகளிலேயே மேடுபள்ளம் நிறைந்த இந்தச் சிறு நிலப்பகுதிதான் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டை ஆதரிப்பதற்குத் தேவையான மழையைப் பெறும் ஒரே பெரிய தீவு. ஒவ்வொரு ஆண்டும் இத் தீவு சுமார் 7,000 மில்லிமீட்டர் மழையைப் பெறுகிறது!
18-வது நூற்றாண்டு ஆங்கில கவிஞர் கோலரிட்ஜ், “எங்குப் பார்த்தாலும் தண்ணீர்மயம்; குடிப்பதற்கோ ஒரு துளிகூட இல்லை” என்ற பரிதாப நிலையில் இருந்த பண்டைய மாலுமியைப் பற்றி தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் விவரித்தார். என்றாலும், 17-வது, 18-வது நூற்றாண்டுகளின்போது, கோகோஸ் தீவைச் சென்றடைந்த மாலுமிகளுக்கு இந்தத் தீவின் நன்னீர் ஒரு சமுத்திரச்சோலையாய் விளங்கினது.
புதையலைப் பற்றிய கட்டுக்கதை
சர்வதேச தகவல்தொடர்பும் வணிகமும் கடல் பயணத்தை நம்பியிருந்த ஒரு சகாப்தத்தில், நடுக்கடலில் ஆயுதமணிந்து கொள்ளையடிப்பது, அல்லது கடற்கொள்ளையடிப்பது, சமுதாயத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாய் இருந்தது. கடற்கொள்ளைக்காரர்களும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாய் இருந்தனர்.
கடற்கரையோர சிறிய நகரமோ, அல்லது ஒரு கப்பலோ கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, கொள்ளைப்பொருட்கள் அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு, சட்டத்துக்கு விரோதமான முறையில் பெறப்பட்ட லாபத்தில் தன் பங்கை உடன் கொள்ளைக்காரர்களிடம் பறிகொடுப்பதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற குழப்பத்தை ஒவ்வொரு கடற்கொள்ளைக்காரனும் எதிர்ப்பட்டான். அவர்கள் தெரிவுசெய்துகொண்ட முறையானது, பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஓர் ரகசியமான இடத்தில் பங்கை ஒளித்துவைத்ததாகும். புதையல் வரைபடம், மறைத்து வைக்கப்பட்ட புதையலைக் கண்டுபிடிக்கத் தேவைப்படும் திறவுகோலானது; அது, ரகசியமான முறையில் திசைகாட்டும்படி வரையப்பட்ட ஒன்றாயும், அதை வரைந்தவரால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட முடிந்ததாயும் இருந்தது.
கோகோஸ் தீவு பற்றிய கதைகள் ஒன்றின் பிரகாரம், மத்திப அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையோரத்தில் இருக்கும் கப்பல்களையும் நகரங்களையும் வெற்றிகரமாய் பலமுறை சூறையாடியதால் ஒரு கொள்ளைக் கூட்டத் தொகுதிக்கு ஏராளமான தங்கமும் நகைகளும் கிடைத்தன. அந்தத் தீவில் நன்னீரும் இறைச்சியும் (அங்கு 18-வது நூற்றாண்டின் இறுதியில் பன்றிகள் அறிமுகம் செய்யப்பட்டன) ஏராளமாய் கிடைத்ததால் அந்தக் கப்பல் தலைவன் கோகோஸ் தீவை தன் தொழிலுக்கு மையத்தலமாக்கிக்கொள்ள திட்டமிட்டான்.
இதைப் பற்றிய மற்றொரு கதையின்படி, கொள்ளைப்பொருட்களைப் பங்குபோட ஒரு முழுநாள் தேவைப்பட்டது. தங்கம் படிக்கணக்கில் அளந்துபோடப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த செல்வங்களை பேராசைமிக்க கூட்டாளிகளிடம் பறிகொடுத்துவிடுவதை எண்ணி பயந்து, கொள்ளைக்காரர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளின் பங்கை அந்தத் தீவிலேயே எங்காவது புதைத்துவிட விரும்பினர். அந்தத் தீவின் கடற்கரையோரப் பகுதியெங்கும் தென்பட்ட செங்குத்துப்பாறைகளில் கயிறுகளின் உதவியால் ஏறி, அந்த வெப்பமண்டலக் காட்டுக்குள் ஒவ்வொரு கொள்ளைக்காரனும் மறைந்துவிடுவான். சில கொள்ளைக்காரர்கள் தங்கள் நினைவாற்றலை நம்பினபோதிலும், மற்றவர்கள் தாங்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த வரைபடங்களை வைத்துக்கொண்டு திரும்பினர்; அந்த வரைபடங்கள், அவர்களுடைய கொள்ளைப்பொருள் வைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களை மறுபடியும் வழிநடத்திவிடும். என்றாலும், கடினமான இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போயின. தங்கள் பொருட்களைப் பதுக்கிவைத்த பின்பு, இன்னும் அதிக லாபத்தை ஈட்டும்படி அந்தக் கொள்ளைக்கூட்டத்தினர் தங்கள் கொள்ளைக் கப்பலில் பயணம் செய்தனர் என்று அந்தக் கதை தொடருகிறது. தங்களுடைய அடுத்த துறைமுகத்தை அடைந்தபோது, அந்தத் தலைவன், கலகத்துக்குப் பயந்து, சந்தேகத்துக்கேதுவான கலகக்காரரை கரையில் இறக்கிவிட்டு, கப்பலைச் செலுத்தினான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு தூக்கில் போடப்படுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்துவிட்டது. தன்னைப் பிடிக்க விரும்பிய அதிகாரிகளுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்யுமளவுக்கு தன்னுடைய கொள்ளைக்கூட்ட உறுப்பினர்களில் உயர்பதவியிலிருக்கும் இருவர் திறமைசாலிகளாய் இருப்பார்கள் என்பதை கப்பற்தலைவன் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கொள்ளைக் கப்பலைத் தொடர்ந்துபோய் பிடித்துவரும்படி பிரிட்டிஷ் கடற்படை ஒரு கப்பலை துரிதமாய் அனுப்பிவைத்தது. இது, அந்தக் கொள்ளைக்கூட்டத் தலைவனும் அவனுடைய கூட்டாளிகளும் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதில் விளைவடைந்தது.
கடந்த நூற்றாண்டினூடாக, இந்தக் கட்டுக்கதை, புதையல் வேட்டைக்காரர்களின் நம்பிக்கையைத் தூண்டியிருக்கிறது. ஆனால், பின்வரும் சம்பவத்தில் காட்டப்படுவதன்படி, புதையல் வேட்டைக்குச் செல்பவர்கள் கோகோஸ் தீவில் தோண்டி ஆய்வுசெய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 14, 1892 தேதியிட்ட த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை, 6,00,00,000 டாலர் பெறுமான தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் ஆகியவை அடங்கிய ஒரு புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கச் சென்ற கேப்டன் ஆகஸ்ட் கிஸ்லர் எவ்வாறு பிரயாசப்பட்டார் என்பதை விவரித்தது. கிஸ்லரின் புதையல் வேட்டை, நகர்ப்புற சூழ்நிலையிலிருந்து தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொள்வதையும், குடியேற்றப்படாத காட்டுத் தீவின் கடும் சூழ்நிலைகளை சகித்துக்கொள்வதையும் உட்படுத்தியது. அவர் தன் சொந்தப் பணத்திலிருந்து குறைந்தபட்சம் 50,000 டாலர் செலவழித்தார்; மேலும் புதையலைத் தேடுவதில் 19-க்கும் மேற்பட்ட ஆண்டுகளைச் செலவிட்டார். 1908-ல், கிஸ்லர் முதலீடு செய்த பணத்தையெல்லாம் இழந்துவிட்டு, விரக்தியுடன், தான் எடுத்த அத்தனை முயற்சிகளின் மத்தியிலும் ஒரு பொட்டுப் புதையலைக்கூட கண்டுபிடிக்காமல் கோகோஸ் தீவை விட்டுச்சென்றார்.
புதையலைக் கண்டுபிடிப்பதில் கிஸ்லர் தோற்றுவிட்டார் என்ற உண்மை, எல்லாரையுமே நம்பிக்கையிழக்கும்படி செய்யவில்லை. இந்தத் தீவில் ஆய்வுப்பயணம் மேற்கொள்வதற்கென 500-க்கும் மேலான ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் சென்றுவந்திருக்கின்றன. கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், அந்தக் கதையில் கூறப்பட்ட செல்வத்தை எவருமே கண்டுபிடிக்கவில்லை.
கோகோஸ் தீவில் இயற்கையின் புதையல்கள்
சமீபகாலத்தில், ஒரு வித்தியாசமான புதையல் வேட்டைக்காரர் கோகோஸ் தீவிற்குச் செல்லும்படி வசீகரிக்கப்பட்டிருக்கிறார். சூழலியல் ஆர்வமுள்ள சுற்றுப்பயணிகளும் இயற்கை விரும்பிகளும் மற்ற விஞ்ஞானிகளும் இந்தத் தீவின் தாவரவகைகளாலும் விலங்குவகைகளாலும், அதைச் சுற்றியுள்ள நீரில் காணப்படும் கடல்வாழ் உயிரிகள் அடங்கிய புதையல்களாலும் ஈர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தத் தீவு, செழித்து வளர்ந்துள்ள வெப்பமண்டல தாவரவகைகளால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 450 வகையான பூச்சிகளும் கணுக்காலிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; என்றாலும், இந்தத் தீவில் 800-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேடுபள்ளமான நிலப்பகுதியைச் சுற்றி, வளைந்து நெளிந்து பாயும் 28 ஆறுகள் இங்கு இருக்கின்றன; இவை, கம்பீரமாய் நிற்கும் செங்குத்தான பாறைகளின் வழியே, பிரமாண்டமான நீர்வீழ்ச்சிகளாய் விழுகின்றன.
இத் தீவில் இருக்கும் 97 பறவையினங்களில் ஒன்றுதான் வெண்ணிற டெர்ன் பறவை. இவற்றுக்கு இருக்கும் ஒரு வேடிக்கையான பண்பு என்னவென்றால், இவை மக்களின் தலைக்குச் சற்று மேலேயே ஆகாயத்தில் வட்டமிடும்; இதைப் பார்க்கையில், இந்தத் தீவுக்குப் பார்வையிட வரும் மனிதரைக் கண்டு இவற்றுக்கு பயமே இல்லை என்று நினைக்கத் தோன்றும். மகிழ்வூட்ட விரும்பும் இச்செயலால் இப் பறவைக்கு இஸ்பிரித்து சாந்து, அல்லது பரிசுத்த ஆவி, என்ற ஸ்பானிஷ் பட்டப்பெயர் கிடைத்திருக்கிறது. இது, இயேசுவின் முழுக்காட்டுதலின்போது நடந்த நிகழ்ச்சியைப் பற்றி பைபிளில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.—மத்தேயு 3:16-ஐக் காண்க.
கோகோஸ் தீவைச் சுற்றியுள்ள நீருக்கு அடியில், வெகு ஆழத்தில், இயற்கைப் புதையல்கள் நிறைந்துள்ள ஓர் உலகம் இருக்கிறது. இத் தீவைப் பார்வையிட வரும் சூழலியல் சுற்றுப்பயணிகளில் ஸ்க்யூபா முக்குளிப்போரும் அடங்குவர்; இவர்கள் சுத்தியல் தலைச் சுறா மீன்கள் ஏராளமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர். சுத்தியல் தலை மற்றும் வெள்ளை நுனி சுறா மீன்கள் அடிக்கடி இந்நீரில் காணப்படுகின்றன; மேலும் இவை 40 முதல் 50 வரையில் கூட்டங்கூட்டமாய் நீந்திச்செல்வது காணப்பட்டிருக்கிறது. இந்நீர் குறிப்பிடத்தக்க அளவுக்கு தெளிவாய் இருப்பதைக் கண்டும் முக்குளிப்போர் மனம்கவரப்படுகின்றனர். வெப்பமண்டல மீன்கள், பாசிகளையும் மிதவை உயிரிகளையும் தேடி மேயும்போது காணப்படும் வண்ண நிறங்கள் இவர்களின் கண்களைக் கவர்ந்துள்ளன.
கோஸ்டா ரிகா நாடு, அதன் ஏராளமான உயிரியல் புதையல்களை பாரம்பரியமாகவே உயர்வாக கருதிவந்திருக்கிறது. இப்போது, அதன் நிலப்பரப்பில் 18 சதவீதம், தேசிய பூங்காவாகவும், காப்பிடமாகவும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 1978-ல், கோகோஸ் தீவு அந்தப் பூங்கா அமைப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது; நாட்டில் தற்போது அந்தப் பூங்கா அமைப்பில் 56 காப்பிடங்கள் இருக்கின்றன. 1991-ல், அந்தக் காப்பிடம், இத் தீவைச் சுற்றிலும் 24 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பாதுகாப்பு எல்லையையும் உள்ளடக்கியது. கடல்வாழ் உயிரிகளின் சுற்றுச்சூழலை வணிக ரீதியில் மீன்பிடிப்பவரிடம் இருந்து காவல் காப்பதும் பாதுகாப்பதும் ஒரு சவாலாய் இருக்கிறது. கட்டுக்கடங்காமல் மீன்பிடிப்பது, இத்தீவைச் சுற்றி அமைந்துள்ள கடலுக்கடியில் இருக்கும் மென்மையான சூழல் அமைப்புகளைச் சேதப்படுத்தலாம் என சுற்றுச்சூழலியலாளர்கள் பயப்படுகின்றனர்.
இப்போதுவரையாக, துஷ்டத்தனமான கடற்கொள்ளைக்காரர்களையும் அவர்களுடைய புதையல்களையும் பற்றிய கதைகளுக்கு கோகோஸ் தீவு பெயர்போனதாய் தொடர்ந்து இருக்கிறது. அது இன்னும் உலகமுழுவதிலுமுள்ள புதையல் வேட்டைக்காரர்களின் ஆவலைத் தூண்டவும் அவர்களை ஈர்க்கவும் செய்கிறது. என்றபோதிலும், இத்தீவின் மிகப் பெரிய செல்வமானது, அதன் இயற்கை வளங்களில் புதைந்திருக்கிறது.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 25-6-ன் படங்கள்: Courtesy of José Pastora, Okeanos
[பக்கம் 26-ன் படங்கள்]
வெள்ளை நுனி சுறா (1) மற்றும் சுத்தியல் தலைச் சுறா (2, 3) கோகோஸ் தீவைச் சூழ்ந்திருக்கும் நீரில் 40 முதல் 50 வரையில் கூட்டங்கூட்டமாக நீந்திச் செல்கின்றன