பூச்சி பறப்பதன் புதிர் விடுவிக்கப்பட்டது
பூச்சிகள் தங்களுடைய கனத்த உடலுடனும் மெல்லிய இறக்கைகளுடனும் ஆகாயத்தில் எப்படி பறக்க முடியும் என்று நெடுங்காலமாக விஞ்ஞானிகள் சிந்தித்திருக்கின்றனர். இம் மிகச்சிறிய உயிரினங்கள், வழக்கமான வான்வழி இயங்கியல் (aerodynamics) விதிகளைப் புறக்கணிப்பதாக தோன்றுகிறது. சாத்தியமற்றதுபோல் தோன்றும் இவ்வித்தையை பூச்சிகள் எவ்வாறு நடத்துகின்றன என்பதை இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
பூச்சி பறப்பதை ஆய்வு செய்வதற்காக, விஞ்ஞானிகள் ஹாக்மாத் (hawkmoth) எனப்படும் அந்துப்பூச்சியை ஒரு பருத்தி நூலைக் கொண்டு கட்டிவிட்டு, அதை ஒரு காற்றுச் சுரங்கத்துடன் இணைத்துக் கட்டினர். நச்சுத்தன்மையற்ற புகையை அந்தக் குழாயின் வழியாக பம்ப் செய்து, அந்த அந்துப்பூச்சி அதன் இறக்கைகளை அடிக்கும்போது புகை எந்தப் பக்கமாய் செல்கிறது என்பதைக் குறித்துக்கொண்டனர். பிறகு, 10 மடங்கு பெரிதானதும் 100 மடங்கு மிகவும் மெதுவாக இறக்கைகளை அசைத்ததுமான ஓர் இயந்திர மாடலை அமைத்தனர். அதன் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் அளவிலான விளைவுகளைக் கவனித்தனர். அந்துப்பூச்சியின் இறக்கை கீழ்நோக்கி அடிக்கப்படும்போது, அதன் உடலுடன் இணைக்கப்பட்ட இறக்கை பாகத்தில் ஒரு சுழி, அல்லது காற்றுச்சுழல் உருவாவதைக் கண்டுபிடித்தனர். அதன் விளைவாக இறக்கையின் மேற்புறத்தில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமானது, மேலெழும்பல் விசையை (lift) ஏற்படுத்துகிறது; அதுவே அந்தப் பூச்சியை மேல்நோக்கி இழுக்கிறது. அந்தச் சுழி நின்றுவிட்டால், மேலெழும்பல் விசையை இழந்து, பூச்சி தரையில் விழுந்துவிடும். அதற்கு மாறாக, அந்தக் காற்றுச்சுழல், அதன் இறக்கைகளின் விளிம்புப் பகுதியினூடே கடந்துசென்று இறக்கையின் நுனிப்பகுதியை அடைகிறது; இவ்வாறு, கீழ்நோக்கி இறக்கையை அடிப்பதால் ஏற்படுத்தப்பட்ட அந்த மேலெழும்பல் விசை, அந்தப் பூச்சியின் எடையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான எடைக்குச் சமமாகிறது; அது, பூச்சி எளிதில் பறக்கும்படி செய்கிறது.
டெல்ட்டா-இறக்கை வானூர்தி (அந்த இறக்கை கிரேக்க எழுத்தான Δ-ஐ ஒத்திருப்பதால் அப்பெயரைப் பெற்றிருக்கிறது), அதன் இறக்கைகளின் நுனிப்பகுதியில் சுழிகளை ஏற்படுத்துகிறது என்பதும், அந்தச் சுழி மேலெழும்பல் விசையை உருவாக்குகிறது என்பதும் வானவூர்தியியல் பொறியியலாளர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்பொழுதோ, தங்களுடைய இறக்கைகளை கீழ்நோக்கி அடிக்கும் பூச்சிகளுக்கு சுழிகள் எவ்வாறு மேலெழும்பல் விசையை உருவாக்கித் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்துகொண்டிருப்பதால், இந்த இயல் நிகழ்ச்சியைச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு, புரொபெல்லர்களையும் ஹெலிகாப்டர்களையும் எவ்வாறு வடிவமைப்பது என்று ஆய்வு செய்ய அவர்கள் விரும்புகின்றனர்.