தால்லையற்ற பரதீஸ்—சீக்கிரத்தில் சத்தியமாகும்
நீ பரதீசிலிருப்பாய்.” குற்றவாளியாயிருந்த அந்த மனிதனுக்கு அந்த வார்த்தைகள் எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இருந்திருக்கும்! தான் மரித்தப்பிறகு எரியும் நரகத்தை தப்பித்து பரலோகத்திற்கு போவான் என்று அவன் நிச்சயமாகவே நினைக்கவில்லை. மாறாக, பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும்போது, தான் அதில் உயிர்த்தெழுப்பப்படுவான் என்ற நம்பிக்கையில் இயேசுவுக்கு அருகிலிருந்த திருடன் ஆறுதலை கண்டடைந்தான். பரதீஸைப்பற்றி இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூற்றை சொன்னது யார் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்—கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே.—லூக்கா 23:43.
பரதீஸை பற்றிய இயேசுவின் வாக்குறுதியை எது தூண்டியது? “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று அந்தத் திருடன் வேண்டியிருந்தான். (லூக்கா 23:42) இந்த ராஜ்யம் என்பது என்ன, அதற்கும் ஒரு பூமிக்குரிய பரதீஸுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அந்தப் பரதீஸ் தொல்லையற்றதாக இருக்கும் என்பதற்கு இது எவ்வாறு உத்தரவாதமளிக்கிறது?
பரதீஸைக் கொண்டுவரும் அந்த வல்லமை
தற்போதைய எல்லா தொல்லைகளும் இல்லாமற்போனால்தான் பூமியில் ஒரு உண்மையான பரதீஸ் வரமுடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். வரலாறு போதியளவு நிரூபிக்கும் வண்ணம், அவற்றை நீக்குவதற்கான மனிதனுடைய முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்திருக்கின்றன. எபிரெய தீர்க்கதரிசி எரேமியா இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “கர்த்தாவே, . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) அப்படியென்றால், தற்போதைய எல்லா தொல்லைகளையும் யாரால்தான் நீக்கமுடியும்?
மிதமிஞ்சிய வானிலையும் தூய்மைக்கேடும். ஒரு படகு அமிழ்ந்துவிடத்தக்கதாக பெரிய அலைகளை உண்டுபண்ணிய கடுமையான புயற்காற்று கலிலேயாக் கடலில் வீசியபோது, தங்களுடன் பிரயாணம் செய்த, தூங்கிக்கொண்டிருந்தவரை அந்தப் படகோட்டிகள் எழுப்பினர். அவரோ கடலைப் பார்த்து: “இரையாதே, அமைதலாயிரு” என்று மட்டுமே சொன்னார். என்ன நடந்தது என்பதை மாற்குவின் சுவிசேஷப்பதிவு சொல்கிறது: “அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” (மாற்கு 4:39) அவர்களுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தவர் இயேசுவேயல்லாமல் வேறுயாருமல்ல. வானிலையை கட்டுப்படுத்தும் வல்லமை அவருக்கு இருந்தது.
இந்த இயேசுவே, “பூமியைக் கெடுத்தவர்களைக்” கடவுள் கெடுக்கப்போகும் காலம் வருகிறது என்று அப்போஸ்தலனாகிய யோவான் மூலம் முன்னறிவித்தார். (வெளிப்படுத்துதல் 1:1; 11:18) நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தில், தேவபக்தியற்ற மனிதர்கள் நிறைந்த முழு உலகத்தையும் அழித்தவருக்கு இது ஒன்றும் கடினமான காரியமல்ல.—2 பேதுரு 3:5, 6.
வன்முறையும் குற்றச்செயலும். பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9, 11) மறுபடியுமாக, எல்லா வன்முறையையும் குற்றச்செயலையும் நீக்குவதாக வாக்குக்கொடுத்து, பரதீஸை சாந்தகுணம் உள்ளவர்களுக்கு கொடுப்பதாக கூறுவது யெகோவா தேவனே.
ஏழ்மையும் பசியும். தற்போதைய அநீதி, உலகத்தின் ஒரு பகுதியிலிருக்கும் அரசாங்கங்கள் அளவுக்கதிகமான உணவுப் பொருட்களை “மலைபோல்” சேர்த்துவைக்கும்படியும், அதே சமயத்தில் ஏழை நாடுகள் ஏழ்மையில் தவித்துக்கொண்டே இருக்கும்படியும் செய்கிறது. உலகமுழுவதிலுமுள்ள அக்கறையுள்ள மக்களால் ஆதரிக்கப்பட்ட இடருதவி நிறுவனங்கள், அடிப்படை தேவைகளை விநியோகிக்க முயலுகின்றன; ஆனால் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதன் விளைவாக அவர்களுடைய விநியோகிப்பு திட்டங்கள் சீர்குலையும்போது அடிக்கடி தோல்வியடைகின்றன. ஏசாயா தீர்க்கதரிசி பதிவு செய்ததோடு இதை வேறுபடுத்திப் பாருங்கள்: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.” (ஏசாயா 25:6) பசியும் பஞ்சமும் இனிமேலும் இருக்காது என்பதை இது அர்த்தப்படுத்தவில்லையா? நிச்சயமாகவே.
யுத்தம். தேசிய எல்லைகள் கடந்த ஒரு அதிகாரத்தால் இந்த உலகத்தை ஆட்சிசெய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன. 1920-ல் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கம் இரண்டாவது உலக யுத்தத்தை தடுக்கமுடியாமல் அழிந்துபோனது. சமாதானத்திற்கான மிகச்சிறந்த நம்பிக்கையாக அடிக்கடி போற்றப்படும் ஐக்கிய நாட்டு சங்கம், போர் நடக்கும் இடங்களில் சண்டையிடும் இருதரப்பினரையும் விலக்கிவைக்க பெரும்பாடுபடுகிறது. அதன் விளம்பரப்படுத்தப்பட்ட சமாதான முயற்சிகள் மத்தியிலும், உள்நாட்டு, இன அல்லது சமூக யுத்தங்கள் அதிகரிக்கின்றன. சண்டை செய்யும் இன்றைய பிரிவுகளை அழித்து, அதன் குடிமக்களை சமாதான வழிகளில் போதிக்கப்போவதாக கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம் உறுதியளிக்கிறது.—ஏசாயா 2:2-4; தானியேல் 2:44.
குடும்பமும் ஒழுக்க சீர்குலைவும். குடும்ப சிதைவு அதிகமாக பரவியிருக்கிறது. இளைஞர் குற்றச்செயல் அதிகரிக்கிறது. ஒழுக்கக்கேடு மனித சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் பாதித்திருக்கிறது. என்றபோதிலும், கடவுளுடைய தராதரங்கள் ஆரம்பத்திலிருந்தே மாறாமல் இருந்திருக்கின்றன. “இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் . . . ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று சொன்னபோது இயேசு இதை உறுதிப்படுத்தினார். (மத்தேயு 19:5, 6) யெகோவா தேவன் மேலுமாக கட்டளையிட்டார்: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (எபேசியர் 6:2, 3) கடவுளுடைய ராஜ்யத்தில் அப்படிப்பட்ட தராதரங்கள்தான் பூமியெங்கும் நிலைத்திருக்கும்.
வியாதியும் மரணமும். “கர்த்தர் . . . நம்மை இரட்சிப்பார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதியளித்தார்; மேலும் “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:22, 24) “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொண்டார்; “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”—ரோமர் 6:23.
தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் பொறுப்பிலுள்ள தம்முடைய பரலோக அரசாங்கத்தின் மூலம் யெகோவா தேவன் இந்த எல்லாத் தொல்லைகளையும் நீக்கிவிடுவார். என்றபோதிலும், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: ‘இந்த வர்ணனை ஒரு இலட்சிய உலக கனவுபோல் இருக்கிறதே. இது நடந்தால் நிச்சயமாகவே சந்தோஷமாக இருக்கும், ஆனால் இது நடக்குமா?’
ஒரு தற்கால உண்மை
இதே பூமியில் தொல்லையற்ற பரதீஸில் வாழும் வாய்ப்பை அநேகர் நம்பமுடியாதளவு உண்மையான ஒன்று என நினைக்கலாம். நீங்கள் அவ்வாறு உணருகிறீர்கள் என்றால், இது நிச்சயமாக நடக்கும் என்பதற்கான அத்தாட்சியை ஆராய்ந்து பாருங்கள்.
233 நாடுகளில் பரவியுள்ள 82,000 சபைகளில் தங்கள் மத்தியில் ஓரளவு தொல்லையற்ற சூழலை அனுபவிக்கும் 50 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் தற்கால சர்வதேச சமுதாயமாக இருக்கிறார்கள். அவர்களுடைய சிறிய அல்லது பெரிய கூட்டங்களில் ஏதாவதொன்றுக்கு நீங்கள் சென்றால், அங்கு எதை காண்பீர்கள்?
(1) இன்பமான, சுத்தமான சூழ்நிலை. இங்கிலாந்திலுள்ள நார்விச்சில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டைப் பற்றி அந்தக் கால்பந்தாட்ட அரங்கின் மேனேஜர் இவ்வாறு கூறினார்: “கடந்த நான்கு நாட்களாக நிலவும் அமைதியான சூழ்நிலை . . . தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது. நம்மை சுற்றியுள்ள விறுவிறுப்பான வியாபார உலகிலும் நமது அன்றாட வாழ்க்கையிலும் நாம் எதிர்ப்படும் எந்த நான்கு நாட்களைக் காட்டிலும் நேர் எதிர்மாறானதாக இருக்கும் தனிப்பட்ட அமைதியை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். சாட்சிகள் உண்மையிலேயே வித்தியாசப்பட்டவர்கள், அவர்களை அவ்வாறு ஆக்குவது எது என்பதை விளக்குவதும் கடினம்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய லண்டன் அலுவலகங்களை பார்வையிட்ட கட்டுமானத் தொழில் பயிற்சி ஆலோசகர் ஒருவர், “நான் பார்த்தவற்றாலும் கேட்டவற்றாலும் அதிகம் கவரப்பட்டேன். உங்கள் கட்டடங்களில் மாத்திரமல்ல, [ஆண்கள் மற்றும் பெண்கள்] மத்தியிலும் காணப்பட்ட சமாதானமான, அமைதியான சூழ்நிலையில் நான் மூழ்கிப்போனேன். உங்கள் வாழ்க்கைமுறையும் சந்தோஷமும், தொல்லை நிறைந்த இந்த உலகத்திற்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
(2) பாதுகாப்பும் சமாதானமும். கனடாவிலுள்ள ஷூர்னல் ட மோன்ரேயால்-ன் பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சியல்ல. ஆனால் திறமைக்கும் நன்னடத்தைக்கும் அத்தாட்சியாக சாட்சிகள் இருக்கின்றனர் என்ற உண்மைக்கு நான் சாட்சி. . . . இந்த உலகத்தில் அவர்கள் மட்டுமே இருந்தால், நாம் இரவு நேரங்களில் கதவை பூட்டி எச்சரிக்கை முன்னேற்பாடுகள் செய்யவேண்டிய அவசியமே இருக்காது.”
(3) கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்திற்கான உண்மைப்பற்றுறுதி சாட்சிகளை அடையாளம் காட்டுகிறது. அவர்களுடைய நடுநிலை சிலரை குழப்புகிறது; ஆனால் அதற்கு அவசியமேயில்லை. தற்கால அரசியல் திட்டங்களில் அவர்கள் பங்குகொள்ளாததற்கு காரணம், சமுதாய முன்னேற்றத்தில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லாததால் அல்ல. மாறாக, ஒரு பரலோக அரசாங்கத்தின் மூலம் ஆளுகை செய்யும் பூமியின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை பிரியப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள விரும்புவதனாலேயே.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் முழுவதுமாக ஆதாரங்கொண்ட சாட்சிகளுடைய நம்பிக்கை, மத உட்பிரிவாக அல்லது ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவாக ஆவதிலிருந்து அவர்களை தடைசெய்கிறது. எந்த மத நம்பிக்கைகளை உடையவர்களாக இருந்தாலும்சரி, எல்லாரிடத்திலும் அவர்கள் தயவான அக்கறை காண்பிக்கின்றனர். தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்துவதில்லை. தங்கள் தலைவராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றி, பூமியில் சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்படப்போகிற தொல்லையற்ற பரதீஸை பற்றிய வேதப்பூர்வ அத்தாட்சியை கொடுக்க முயலுகின்றனர்.—மத்தேயு 28:19, 20; 1 பேதுரு 2:21.
(4) ஆவிக்குரிய நலமும் சந்தோஷமும். இப்பொழுதே எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் உரிமைபாராட்டுவது கிடையாது. ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் அடையாளத்தை கொண்டுள்ள மனிதர்களுக்கு இது சாத்தியமற்றது. ஆனால் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியுடன், “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற தனிப்பட்ட குணங்களை வளர்க்க அவர்கள் முயலுகின்றனர். (கலாத்தியர் 5:22, 23) இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவாவை வணங்குவதுதானே அவர்களை ஒன்றாக இணைத்து, அவர்களுடைய நம்பிக்கைகளை உயிருள்ளதாக வைக்கிறது.
உள்ளூரில் சாட்சிகளுடைய கூட்டம் நடக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று பார்ப்பது, கடவுள் இந்த பூமியை சொல்லர்த்தமான பரதீஸாக மாற்றுவார் என்பதை நம்பும்படிசெய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தற்கால தொல்லைகள் இல்லாமல் போய்விட்டிருக்கும். கிறிஸ்துவின் கிரயபலியின் நன்மைகள் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு பொருத்தப்படும்போது, தொடர்ந்திருக்கும் அபூரணமும்கூட கொஞ்சம் கொஞ்சமாக மறையும். ஆம், பரிபூரண ஆரோக்கியமும் சந்தோஷமும் அடைவீர்கள்.
சில எளிய தயாரிப்புகள் செய்வது, இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அனுபவிக்க உங்களுக்கு உதவும். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு a என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை சாட்சிகளிடமிருந்து கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இதன்மூலம், நீங்களும்கூட தொல்லையற்ற ஒரு பரதீஸில் என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவித்து மகிழ கடவுள் உங்களிடம் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை குறுகிய காலத்திற்குள் கற்றுக்கொள்ளலாம்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
பைபிளில் முழுவதுமாக ஆதாரங்கொண்ட சாட்சிகளுடைய நம்பிக்கை, மத உட்பிரிவாக அல்லது ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவாக ஆவதிலிருந்து அவர்களை தடைசெய்கிறது
[பக்கம் 8,9-ன் படங்கள்]
தொல்லையற்ற பரதீஸிற்கான அஸ்திவாரம் இப்பொழுதே போடப்படுகிறது
சீக்கிரத்தில் ஒரு நிஜமான பரதீஸ் உலகளவில் வியாபித்திருக்கும்