உலகை கவனித்தல்
அழிந்துவரும் உயிரினங்கள்
ஜெர்மனியில், அதன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஏன்ஜலா மெர்கெல், அழிந்துவரும் உயிரினங்களின் சதவீதம், அத்தேசத்தில் உயர்ந்திருப்பதைக் குறித்து வெளிப்படையாக கவலை தெரிவித்தார். அத்துறையினரால் பிரசுரிக்கப்பட்ட சுற்றுச்சூழலைப் பற்றிய ஒரு புத்தகத்தின் வெளியீட்டை அறிவித்தபோது, மெர்கெல் கவலைதரும் சில புள்ளிவிவரங்களை குறிப்பிட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த சில முதுகெலும்புள்ள பிராணிகளில், “அனைத்து பாலூட்டிகளிலும் 40 சதவீதம், ஊர்வனவற்றில் 75 சதவீதம், நில நீர்வாழ் உயிரினங்களில் 58 சதவீதம், நன்னீரில் வாழும் மீன்களில் 64 சதவீதம், பறவைகளில் 39 சதவீதம் அழிந்துவரும் உயிரினங்களாக இருக்கின்றன” என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர் என்று ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. தாவரங்களும் இதே கதியில்தான் இருக்கின்றன; அவற்றின் அனைத்து இனங்களிலும் 26 சதவீதம் அழியும் தருவாயில் உள்ளன. இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு வரும் ஆபத்துக்களைக் குறைப்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை. “இயற்கையை பாதுகாப்பதற்கு புதிய திட்டங்கள் தேவை” என்று மெர்கெல் வேண்டுகோள் விடுக்கிறார்.
பிள்ளை பிடிப்பவர்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல்
ஜெர்மனியிலுள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பைக் குறித்து அதிகமாக கவலைப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக அந்நாட்டில் சிறுமிகளைக் கடத்துவது சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. நாசௌஸி நாயி பிரெஸி-யின் பிரகாரம், பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஜெர்மானிய சங்கத்தில் வாழ்வியல் நிபுணரான யூலியஸ் நிபெர்கா, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருக்கிறார். உதாரணமாக, பிள்ளைகள் ஒரு அவசர நிலையில் இருக்கையில் உதவியை நாடிச் செல்வதற்காக, ஸ்கூலுக்கு போய் வரும் வழியில் ஒரு கடை அல்லது வீட்டை போன்ற குறிப்பிட்ட சில இடங்களை பெற்றோர் அவர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும். அறிமுகமில்லாதவர்களோடு பேசக்கூடாது, தங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதையும்கூட சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். பெரியவர்களிடமும்கூட “வேண்டாம் என்று சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என்பதை நிபெர்கா வலியுறுத்தினார். முக்கியமாக, பிள்ளைபிடிப்பவன் பயமுறுத்தும்போது, பிள்ளைகள் மற்றப் பெரியவர்களிடம் உதவியைக் கேட்க வேண்டும். “என்னைக் காப்பாத்துங்க; எனக்கு இந்த ஆளப் பாத்தா பயமா இருக்கு” என்று சொல்லும்படியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
முரட்டுத்தனமான பயணிகள்
கோபமான பயணிகளின் முரட்டுத்தனமான நடத்தையில் ஒரு பெரும் அதிகரிப்பு இருப்பதாக வர்த்தக ஏர்லைன்ஸ் அறிக்கை செய்கிறது. விமானம் தாமதமாக வருவது, பொருட்கள் காணாமல்போவது போன்ற காரியங்களால் எரிச்சலடைந்து, பயணிகள், “விமான பணியாட்கள்மீது காறித்துப்புகிறார்கள், உணவுத்தட்டை வீசியெறிகிறார்கள், மேலும் சிலசமயங்களில் ஊழியர்களை அடிக்கவும்கூட செய்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், விமான ஓட்டிகளையும்கூட தாக்குகிறார்கள்” என்று த நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. விமானம் பறந்துகொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட தாக்குதல்கள் ஏற்படுவதைக் குறித்ததில் அதிகாரிகள் முக்கியமாக கவலைப்படுகின்றனர்; ஏனெனில் இவை விமானம் விபத்துக்குள்ளாவதில் விளைவடையலாம். ஒவ்வொரு மாதமும் வாய்வார்த்தையால் அல்லது உடல்ரீதியில் தாக்கப்படுவதைப் பற்றி சுமார் நூறு சம்பவங்களை ஒரு ஏர்லைன் குறிப்பிட்டது. த டைம்ஸ் இவ்வாறு சொல்லுகிறது, “நாசம் விளைவிக்கும் பயணிகளில் ஆண்கள், பெண்கள் என்றோ, எந்த இனம், என்ன வயது என்றோ வித்தியாசம் இல்லை; எகானமி வகுப்பு, பிஸினஸ் வகுப்பு, முதல் வகுப்பு என்று எந்த வகுப்பில் இருந்தாலும்சரி, எல்லாரும் தீங்கிழைப்பவர்களாகவே உள்ளனர். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் குடிபோதையிலிருக்கிறார்.”
பெண்ணுக்கு சுன்னம் செய்தல் தொடர்கிறது
பெண் இனப்பெருக்க உறுப்பை அறுப்பது (Female genital mutilation [FGM]) அநேக நாடுகளில், முக்கியமாக ஆப்பிரிக்காவில் தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்துவருகிறது என்று ஐக்கிய நாடுகளால் பிரசுரிக்கப்படும் வருடாந்தர அறிக்கையான த புரோகிரஸ் ஆஃப் நேஷன்ஸ் 1996 குறிப்பிடுகிறது. அநேக நாடுகள் இந்தக் கொடூரமான பழக்கத்துக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளபோதிலும்கூட, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பெண்பிள்ளைகள் உறுப்பறுக்கப்படுகிறார்கள். இதற்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் 4-ல் இருந்து 12 வயதுக்கு இடைப்பட்டவர்கள். “உடனடியாக ஏற்படும் பயத்தோடும், வேதனையோடும்கூட, நீடிக்கும் இரத்தப்போக்கு, நோய்த்தாக்கம், மலட்டுத்தன்மை, மரணம் ஆகியவற்றையும்கூட பின்விளைவுகள் உட்படுத்தக்கூடும்” என்று அந்த அறிக்கை சொல்கிறது. (FGM-ஐ குறித்த கூடுதலான தகவலுக்கு, விழித்தெழு! ஏப்ரல் 8, 1993 ஆங்கிலப் பிரதியில், பக்கங்கள் 20-3-ஐக் காண்க.)
வலிப்பு நோயாளிகளுக்கு நாய்களின் உதவி
நேரிடவிருக்கிற ஒரு வலிப்பைக் குறித்து வலிப்பு நோயாளிகளுக்கு எச்சரிப்பதற்காக இங்கிலாந்தில் நாய்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நோயாளிகள் இத்தாக்குதலை சமாளிக்க தங்களைத் தயாராக்கிக் கொள்வதற்கு இது போதுமான நேரத்தை அனுமதிக்கிறது என்று லண்டனின் த டைம்ஸ் அறிவிக்கிறது. ஊனமுற்றோருக்கு உதவி செய்ய நாய்களைப் பயிற்றுவிப்பதில் விசேஷ கவனம் செலுத்தும் தர்ம ஸ்தாபனத்தின் மேனேஜர் இவ்வாறு விளக்குகிறார்: “நாய், வலிப்பு ஏற்படுவதற்கு முன்பு குரைத்ததால் அதைத் தட்டிக்கொடுத்து, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தியதன் விளைவாக, வலிப்பு ஏற்படுவதற்கு முன்னமே நோயாளியிடமிருந்து வெளிப்படும் அடையாளங்களுக்கும் அறிகுறிகளுக்கும் அது பழகிக்கொள்கிறது. இத்தகைய செயல் தனக்கு ஏதாவது கிடைக்கச் செய்யும் என்று அந்த நாய் அறிந்திருக்கும்போது, இப்படிப்பட்ட அறிகுறிகளுக்கு கூரான உணர்ச்சியுள்ளதாக இருக்கிறது.”
ஜப்பானில் புதிய மனப்பான்மைகள்
ஜப்பானிய இளைஞர் கழகம், சமீபத்தில் 1,000 உயர்நிலைப்பள்ளி மாணவர்களை வைத்து ஒரு சுற்றாய்வை நடத்தியது என்று த டெய்லி யொமியூரி குறிப்பிடுகிறது. மாணவர்களில் 65.2 சதவீதத்தினர் வகுப்புகளை கட்டடிப்பதில் ஒரு தவறும் இல்லையென்று நினைப்பதாக அந்தச் சுற்றாய்வு வெளிப்படுத்தியது. கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படியாமல் போவதைக் குறித்தும் இந்தவிதமாகவே உணருகின்றனர்; சுமார் 85 சதவீத மாணவர்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியாதிருப்பதை ஒரு பெரிய விஷயமாக எண்ணக்கூடாது என்கின்றனர். த டெய்லி யொமியூரி-ன் பிரகாரம், பள்ளியில் படிக்கும்போது விபச்சாரத்தில் ஈடுபடுவது அவரவருடைய தனிப்பட்ட தெரிவுக்குரிய விஷயம் என்று 25.3 சதவீத பெண் பிள்ளைகள் நினைப்பதாக அதே சுற்றாய்வு காட்டியது.
ஆபத்தான ஓட்டும் பழக்கங்கள்
● “பிரேஸிலில் நிகழும் அனைத்து சாலைவிபத்து மரணங்களிலும் ஐம்பது சதவீதம் குடிபோதையினால் ஏற்படுகிறது” என்று குரிடிபா, பிரேஸிலிலுள்ள செய்தித்தாளான காஸிட்டா டோ போவு அறிக்கை செய்கிறது. குடிபோதையில் வண்டியோட்டுவது, “ஒவ்வொரு ஆண்டும் 26,000-க்கும் மேலான மரணங்களுக்கு” காரணமாயிருக்கிறது. இத்தகைய விபத்துக்கள், “பெரும்பாலும் சிறுதூர பயணங்களின்போதும் நல்ல சீதோஷணத்திலும் ஏற்படுகின்றன.” குடிபோதையிலிருக்கும் டிரைவர் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக உணர்ந்தாலும்கூட, விரைவாக செயல்படுவதற்கான அவருடைய ஆற்றல் குறைந்திருக்கிறது; இது அவருடைய மற்றும் சாலையிலுள்ள மற்றவர்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தாகிறது. மதுபானங்களின் செல்வாக்கில் எதிர்பாராத சூழ்நிலைமைகளைக் கையாளுவது கடினமானதாகவும், சிறிதுகூட சாத்தியமற்றதாகவும் உள்ளது” என்று சோதனைகள் காண்பிக்கின்றன. அந்தச் செய்தித்தாளின்படி, உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றத்தின் மூலம் மதுபானம் வெளியேறுவதற்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரங்கள் எடுக்கலாம்; ஸ்ட்ராங்கான காபியோ அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதோ பாதுகாப்பாக ஓட்டுவதற்கு ஒரு குடிபோதையிலிருக்கும் டிரைவருக்கு உதவிசெய்யாது.
● ஒரு பிரிட்டிஷ் சுற்றாய்வின் பிரகாரம், சாதாரணமாக வாகனத்தை ஓட்டுபவர், ஒவ்வொரு வாரமும் 50 பெரும் தவறுகளை செய்கிறார். ஒட்டுமொத்தமாக, சுற்றாய்வு செய்யப்பட்ட 300 டிரைவர்களுமே, தங்களுடைய 98 சதவீத பயணங்களில் குறைந்தது ஒரு தடவையாவது கவனமில்லாமல் இருந்திருப்பதாக ஒத்துக்கொண்டார்கள் என்று லண்டனின் த டைம்ஸ் தெரிவிக்கிறது. ஒவ்வொரு இரண்டு பயணங்களில் ஒன்று என்ற வீதத்தில் கோபமாக இருந்திருக்கிறார்கள். வேகமாக ஓட்டுவதே அநேக டிரைவர்கள் எடுக்கும் ரிஸ்க். மேலும் பாதிக்கும் மேலானோர் ஒரு விபத்திலாவது மாட்டிக்கொண்டதாக கூறினார்கள். ஓட்டும்போது, செல்லுலார் போன்களைப் பயன்படுத்தும் டிரைவர்களுக்கு, விபத்துக்குள்ளாவதற்கான சாத்தியம் நான்கு மடங்கு அதிகம் இருக்கிறது என்று கனடாவிலுள்ள டோரன்டோவில் செய்யப்பட்ட ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஒரு டெலிபோன் அழைப்பைப் பெற்ற முதல் பத்து நிமிடங்களில் ஆபத்து அதிகமாக இருக்கிறது; இது ஏனென்றால், டிரைவரின் கவனம் சிதறப்பட்டிருக்கிறது, மேலும் அவர் செயல்படும் நேரமும் அதற்கு ஏற்றாற்போல் மெதுவாக இருக்கிறது.
சமையல்—அழிந்து வரும் கலையா?
ஆஸ்திரேலியாவிலுள்ள க்வீன்ஸ்லாந்து மாகாணத்தில், சாப்பிடும் பழக்கங்களைக் குறித்து செய்யப்பட்ட 12 மாத ஆய்வு காட்டுகிறபடி, சமைப்பது அழிந்துவிடும் கலையாக ஆகக்கூடும். 25 வயதுக்கும் கீழேயுள்ள அதிகமான ஆட்கள், தங்களுக்கு வேண்டிய உணவை சமைத்துக் கொள்வதற்கும்கூட திறமையற்றவர்களாக இருக்கின்றனர் என்று த கூரியர் மெயில் தெரிவிக்கிறது. பொது உடல்நல விரிவுரையாளரும், இந்த ஆய்வைப் பற்றிய நூலாசிரியருமான மார்கரட் விங்கட் சொல்லும்போது, முன்பெல்லாம் இளைஞர்கள், அதிலும் முக்கியமாக பெண்பிள்ளைகள், தங்கள் தாய்மாரிடமிருந்து வீட்டிலோ அல்லது பள்ளியிலோ சமைப்பதற்கு கற்றுக் கொள்வார்கள். ஆனால் இப்போதோ, பெண்பிள்ளைகளும் உட்பட, பெரும்பாலான இளைஞர்கள், சமைக்கத் தெரியாதவர்களாகவும், அதைக் கற்றுக் கொள்வதற்கு ஆர்வமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதைப்போல தோன்றுகிறது. பேக் செய்யப்பட்ட உணவுகளை அல்லது ரெடிமேட் உணவு வகைகளையே அநேகர் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்கள், மிகை அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்றவை அதிகரிப்பதற்கு வழிநடத்தலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
கதிரியக்கமுடைய கட்டிடங்கள்
ஏசியாவீக் பத்திரிகையின்படி, வடக்கு தைவானில் கதிரியக்கத்தால் “1,249 குடியிருப்புகளைக் கொண்ட 105 கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.” தன்னுடைய மகனுக்கு கதிர்வீச்சு மானிட்டர் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்த மின் நிலைய ஊழியர் ஒருவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுடைய சமையலறையில் ஒரு அளவீட்டை எடுத்துக் கொண்டிருக்கையில், அந்த மானிட்டர் அபாய எல்லையைக் காட்டுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கூடுதலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அந்தக் குடியிருப்பும் மற்றவையும் பாதிக்கப்பட்டிருக்கிறதை உறுதிசெய்தன. கதிர்வீச்சு, அந்தக் கட்டடத்தின் சுவர்களை பலப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டிருந்த ஸ்டீல் கம்பிகளிலிருந்து (steel reinforcing bars [rebars]) கசிந்து வந்திருக்கிறது என்று சோதனைகள் காட்டியுள்ளன. இந்த ஸ்டீல்களுக்குள்ளே கதிரியக்கம் எப்படி வந்தது என்பதைக் குறித்து அதிகாரிகளே மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றனர்.
திருட்டுக்கு எதிரான உயர் தொழில்நுட்பக் கருவிகள்
முன்பு ரகசிய செய்திகளை அனுப்புவதற்கு உளவாளிகளால் பயன்படுத்தப்பட்ட மைக்ரோடாட், இப்போது பிரிட்டனில் திருட்டைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. முற்றுப்புள்ளியைவிட சிறிதான இந்த டாட்டுகள் ஒவ்வொன்றும், ஒரு வீட்டின் தபால் எண்ணை 60 அல்லது 70 தடவை கொண்டிருக்கின்றன; திருடர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த டாட்டுகள், “நகப்பாலிஷ் பாட்டிலைப்போல, பிரஷ் உள்ள ஒரு பாட்டிலில், கெட்டியாக ஒட்டிக்கொள்ளும் பசையுடன் அடைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் ஏறக்குறைய 1,000 மைக்ரோடாட்டுகளைக் கொண்டிருக்கிறது. பொருளை வாங்குபவர் இந்தப் பசையின் ஒரு துளியை தன்னுடைய பொருளில் இடலாம் அல்லது தனக்கு இஷ்டமான விதத்தில் அந்தப் பொருளின்மீது இதைப் பூசிவிடலாம்” என்று லண்டனின் த டைம்ஸ் தெரிவிக்கிறது. திருடவேண்டும் என்று நினைப்பவன் நன்றாகத் தெரியும் ஒரு லேபிளால் எச்சரிக்கப்படுகிறான்; மேலும் மறைந்திருக்கும் எல்லா டாட்டுகளையும் நீக்கிவிட்டதாக அவன் ஒருபோதும் நிச்சயமாயிருக்க முடியாது. அதைப்போலவே, வியட்நாம் போர்விமானத்தில், போரில் காயப்பட்டவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சிப், இப்போது ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது பர்னிச்சர்களைக்கூட அடையாளம் காண்பிக்கிறது. ஒரு அரிசிப்பருக்கை அளவுக்குக்கூட இல்லாத இந்த சிப், உள்ளே பொருத்தப்படும்போது, கண்டுபிடிக்க முடியாதென்று நிரூபித்து, அதன் சொந்தக்காரருடைய உரிமை, விவரம், பெயர், இத்தகைய தகவல்களை கொண்டிருக்கிறது; இவை ஸ்கேனரில் படிக்கப்படலாம். திருடர்களின் கையிலுள்ள பொருட்களுக்கு சரியான சொந்தக்காரர் யார் என்பதை கண்டறிய இத்தகவல்கள் உதவியளிக்கின்றன என்று த டைம்ஸ் தெரிவிக்கிறது.