இளைஞர் கேட்கின்றனர் . . .
என் சகோதரனுக்கு மட்டும் ஏன் அதிக கவனிப்பு?
“என்னோட சகோதர சகோதரிகள் தவறா நடந்துகிட்டா, நல்நடத்தையானாலும் சரி கெட்ட நடத்தையானாலும் சரி அவங்களுக்குதான் அதிகமான கவனம் கிடைக்குதுங்கிறதுதான் எனக்கு கஷ்டமா இருக்குது. ஆனா நான் கீழ்ப்படிதல் உள்ளவளா இருக்கிறதனால, அசட்டை செய்யப்படறேன்.”—18 வயதான கே. a
என்னோட சகோதர சகோதரிகளுக்கு ரொம்ப கவனிப்பு; என்னவிட நல்லவிதமா நடத்தப்படறாங்க. எனக்கு கிடைக்கிற கவனம் எல்லாம் அநேகமாக ஆலோசனையாதான் இருக்கும். அவங்களுக்கும் ஆலோசனை கிடைக்குதுன்னு தெரிஞ்சா எனக்கு நல்லா இருக்கும்.”—15 வயதான ரூத்.
என்னோட அண்ணன்களுக்கும் அக்காக்களுக்கும் நிறைய சலுகைகளும் கவனிப்பும் கிடைக்குதுன்னு எனக்கு தோனுது.”—13 வயதான பில்.
நாம் பிறந்த அன்றிலிருந்தே நம் எல்லாருக்கும் பெற்றோரின் கவனிப்பு தேவை. உங்களுக்கு நியாயமானபடி கிடைக்கவேண்டிய அந்தக் கவனிப்பு கிடைக்கவில்லையென்று நீங்கள் நினைத்தால், புண்பட்டவராகவும் கோபமாகவும் உணர்வது புரிந்துகொள்ளத்தக்கதே. மூத்த, இளைய, நல்நடத்தையுள்ள அல்லது கீழ்ப்படியாத உங்கள் உடன்பிறந்த ஒருவர் எப்போதும் முக்கிய கவனத்தைப் பெறுவதாக தோன்றினால் அவ்வாறு உணருவது அதிக சாத்தியம். “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன்” என்று எழுதியபோது சங்கீதக்காரன் உணர்ந்த விதமாகவே நீங்களும் உணரலாம்.—சங்கீதம் 31:12.
உங்களுக்கு கிடைக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் கவனிப்பை உங்கள் உடன்பிறந்த ஒருவர் பெறுவதை பார்ப்பது அதிக கடினமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அன்புகூரப்படவில்லை என்பதை அது கட்டாயம் குறிக்கிறதா? நிச்சயமாக இல்லை. இளைஞர்கள் தனிச்சிறப்புவாய்ந்த திறமைகள் அல்லது நட்பு ரீதியான ஆளுமைகள் உடையவர்களாக இருப்பதால் சில சமயங்களில் அவர்கள் அதிக கவனத்தைப் பெறலாம். 11 வயதான கெனத் கூறுகிறான்: “என்னோட தம்பி ஆர்தர் மூனாவதுதான் படிச்சாலும், ஐந்தாவது படிக்கிற மாணவர்களுக்கான இசைக்குழுவுல அவன் இசைக்கருவி வாசிக்கிறான். விளையாட்டுலையும் கணக்குலையும்கூட அவன் கெட்டிக்காரன். ஸ்கூல்ல எல்லா கிளாஸ்லையும் ‘ஏ’ கிரேட் வாங்குறான். சில சமயங்கள்ல அவனைப் போன்றவங்க என்னைவிட அதிக திறம்பட்டவங்கன்னு நான் நெனப்பேன், ஆனா அவனைப் பத்தி பொறாமபடமாட்டேன். ஆனாலும், கொஞ்சம் பொறாம இருக்குதுதான்.”
வெறுமனே அவர்கள் மூத்த பிள்ளையாகவோ இளைய பிள்ளையாகவோ இருப்பதால் தங்கள் பெற்றோரின் நேரத்தில் அதிகப்படியானதை பெறுவதாக தோன்றும் இளைஞர்களும் இருக்கின்றனர். இளம் மனிதனாகிய யோசேப்பை பற்றி பைபிள் சொல்கிறது: “இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்[தான்].” (ஆதியாகமம் 37:3, 4) மறுபட்சத்தில், 18 வயதான டாட் தன் சகோதரன் மூத்தவனாக இருந்ததால் அதிக கவனிப்பை பெற்றான் என்று நினைத்தான். அவன் நினைவுபடுத்திக் கூறுகிறான்: “ஒருதடவ ஸ்கூல் புராஜக்ட்டுக்காக எங்களோட அழகான குழந்தைப்பருவ ஃபோட்டோவ கொண்டுவரும்படி சொல்லப்பட்டோம். வீட்டில என்னோட படங்கள் கொஞ்சம்தான் இருந்தத நான் கவனிச்சேன்; ஆனா என் அண்ணனோட படங்கள் நிறைய இருந்துச்சு. அது ஏன் அப்படியிருந்துச்சுன்னு என்னை யோசிக்க வச்சுது.”
ஆனால், அநேகமாக, உடன்பிறந்த ஒருவருக்கு பிரச்சினைகள் இருப்பதனால்தான் கூடுதல் கவனிப்பு கொடுக்கப்படுகிறது; ஒருவேளை நீங்கள் அறியாத பிரச்சினைகளாக அவை இருக்கலாம். இப்போது 22 வயதாக இருக்கும் கஸ்ஸாண்ட்ரா இவ்வாறு விளக்குகிறாள்: “எனக்கு 16 வயதா இருந்தப்போ என் அண்ணன் கஷ்டமான ஒரு சமயத்த எதிர்ப்பட்டான். அவன் யெகோவாவை உண்மையிலேயே சேவிக்கணுமா என்பதைப் பற்றி தெளிவில்லாதவனாக இருந்தான்; அதனால என்னுடைய பெற்றோர் ஏறக்குறைய தங்களோட முழு கவனத்தையுமே அவனுக்கு கொடுத்தாங்க. அந்த சமயத்துல அத என்னால் புரிஞ்சுக்க முடியிலை. என்ன பத்தி அவங்களுக்கு கவலையே இல்லை என்பதுபோல நான் உணர்ந்தேன். அது என்ன கவலையுள்ளவளாகவும் அசட்டை செய்யப்பட்டவளாவும், கோபமுள்ளவளாவும் உணரவச்சுது.”
ஏன் தனிச்சலுகை காண்பிக்கின்றனர்
என்றபோதிலும், சில சமயங்களில் பெற்றோர் வெளிப்படையாகவே தனிச்சலுகை காண்பிக்கும் தவறை செய்கின்றனர். ஒரு தாய் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “எங்களுடைய மகளைப் பற்றி நாங்கள் எவ்வளவு அதிகமாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம் என்பதை அறிந்த என் மகன் பால் அதிக கஷ்டமாக உணருவான் என்று எனக்குத் தெரியும். அவன் எங்களிடம் நேரடியாகவே, ‘லிஸ் ஏதாவது சொல்லும்போதெல்லாம் நீங்களும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் கண்ணோடு கண் பாத்துக்குறீங்க’ என்று சொல்லியிருக்கிறான். முதலில் அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று எங்களுக்குப் புரியவில்லை. பிறகுதான், ‘இவள் எவ்வளவு புத்திசாலி’ என்பதை அடிக்கடி பார்வையிலேயே நாங்கள் பரிமாறிக்கொண்டதை உணர்ந்தோம். அவன் அதைப் பற்றி எங்களிடம் சொன்னபடியால், அதை மறுபடியும் செய்துவிடக்கூடாது என நாங்கள் அதிகக் கடினமாக முயற்சிக்கிறோம்.”
ஆனால் பெற்றோர் ஏன்தான் தனிச்சலுகைக் காட்டுகின்றனர்? அவர்கள்தானே வளர்க்கப்பட்ட விதம் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, உங்கள் தாய் கடைசி பிள்ளையாக வளர்ந்திருந்தால், தன்னுடைய கடைசி பிள்ளையிடம் அவர்களுக்கு அதிக பாசம் இருக்கலாம். தன்னையறியாமலேயே தன் கடைசி பிள்ளையை ஆதரிக்கலாம். அல்லது ஒரு பெற்றோர், தன்னைப்போன்ற அதே மாதிரியான மனநிலை அல்லது அக்கறை கொண்ட ஒரு பிள்ளையிடம் அதிகமாக ஈர்க்கப்படலாம். தங்களுடைய இரட்டை குமாரர்களான யாக்கோபு மற்றும் ஏசாவை பற்றி ஈசாக்கும் ரெபெக்காளும் எவ்வாறு உணர்ந்தார்கள் என்று பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.”—ஆதியாகமம் 25:27, 28.
உங்கள் உடன்பிறந்த ஒருவருக்கு உங்கள் பெற்றோர் தனிச்சலுகைக் காட்டுவதாக தோன்றினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? b அமைதியான, குற்றஞ்சாட்டாத முறையில் உங்கள் பெற்றோருடன் அதைப் பற்றி நீங்கள் பேசலாம். (நீதிமொழிகள் 15:22) மரியாதையோடு அவர்களுக்கு செவிகொடுப்பதன் மூலம், நீங்கள் அவர்களுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்க்க முடியலாம். இது உங்கள் ஏமாற்றத்தைக் குறைக்க உதவலாம். (நீதிமொழிகள் 19:11) ஒரு பருவ வயதினர் இவ்வாறு சொல்கிறார்: “என்னோட அம்மா என்னவிட என் தம்பிகிட்ட அதிகமா அன்புகாட்டுனது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அத பத்தி நான் கேட்டப்போ, அவன் அப்பாவப்போல அதிகம் இருக்கிறதனால அவன்கிட்ட ஈர்க்கப்பட்டதா சொன்னாங்க. நான் அம்மாவப்போல அதிகம் இருக்கிறதனால அப்பா என்கிட்ட ஈர்க்கப்படுறார். அதேபோல, அம்மாவும் நானும் ஒரேமாதிரி இருக்கிறதனால எங்க மத்தியில அடிக்கடி எரிச்சல் ஏற்படுது. அப்பாவும் தம்பியும் ஒரேமாதிரி இருக்கிறதனால அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துப்போறதில்ல. அதப்பத்தி எனக்கு அதிக சந்தோஷம் இல்லாட்டிகூட, அந்த விதமா அவங்க விளக்கின பிறகு என்னால அத ஏத்துக்க முடிஞ்சுது.”
சமமற்றவிதத்தில் நடத்துவது—நியாயமற்றதா?
பெற்றோர் ஏன் எல்லாரையும் ஒரேவிதமாக நடத்தக்கூடாது? இப்போது 18 வயதாக இருக்கும் பெத் கூறுகிறாள்: “எனக்கு ஏறக்குறைய 13 வயசு இருந்தப்போ நானும் என் தம்பியும் சரிசமமா, ஒரேமாதிரியா, நடத்தப்படனுன்னு விரும்புனேன். ஆனா எப்போதுமே நான்தான் திட்டு வாங்குவேன், அவன கண்டுக்கவேமாட்டாங்க. அதுமட்டுமா, கார் வேலை செய்றதுல அவன் அப்பாவோட நிறைய நேரம் செலவிடுவான். அது சரியே இல்லன்னு தோனுச்சு.”
ஆனால் சமமற்றவிதமாக நடத்துவது எப்போதுமே நியாயமற்றதல்ல. இயேசு கிறிஸ்து தம் சீஷர்களை எவ்வாறு நடத்தினார் என்பதை கவனியுங்கள். 12 பேரிலும் அவர் அன்புகூர்ந்தார் என்பதில் சந்தேகமில்லை; என்றபோதிலும், யவீருவின் மகளுடைய உயிர்த்தெழுதலும், அவருடைய மறுரூபக்காட்சியும் உட்பட சில விசேஷித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அவர்களில் மூன்று பேரை மட்டுமே அழைத்தார். (மத்தேயு 17:1; மாற்கு 5:37) அதுமட்டுமல்ல, அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். (யோவான் 13:23; 19:26; 20:2; 21:7, 20) இது சமமற்ற விதமாக இருந்ததா? நிச்சயமாக ஆம். அது நியாயமற்றதாக இருந்ததா? இல்லவேயில்லை. இயேசு சிலரிடம் அதிகமாக கவரப்பட்டபோதிலும், தன்னுடைய மற்ற சீஷர்களின் தேவைகளை அவர் அசட்டை செய்யவில்லை.—மாற்கு 6:31-34.
அதேவிதமாகவே, உங்கள் உடன்பிறந்தவர்களுள் ஒருவர் தனக்கிருக்கும் திறமைகள், ஆளுமை அல்லது தேவைகளின் காரணமாக அதிகமான கவனிப்பைப் பெறலாம். இதைப் பார்ப்பது அதிக கஷ்டமாக இருக்கலாம் என்பது மெய்யே. ஆனால் கேள்வி என்னவென்றால், உங்களுடைய தேவைகள் உண்மையிலேயே புறக்கணிக்கப்படுகின்றனவா? உங்கள் பெற்றோருடைய ஆலோசனை, உதவி அல்லது ஆதரவு உங்களுக்கு தேவைப்படும்போது, உங்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்களா? அப்படியென்றால், உண்மையிலேயே நீங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுகிறீர்கள் என்று சொல்லமுடியுமா? “அவர்களுடைய தேவைகளுக்கு தக்கதாக” மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:13, NW) நீங்களும் உங்கள் உடன்பிறந்தவரும் வித்தியாசப்பட்ட தேவைகளையுடைய தனிநபர்களாக இருப்பதால், எப்போதும் உங்களை ஒரேவிதமாக நடத்துவது உங்கள் பெற்றோருக்கு முடியாத காரியம்.
சரிசமமாக நடத்துவது எப்போதுமே சரியாக இருக்காது என்றும், சரியாக நடத்துவது எப்போதுமே சரிசமமாக இருக்காது என்பதை முன்பு சொன்ன பெத் உணர்ந்துகொண்டாள். அவள் கூறுகிறாள்: “நானும் என் தம்பியும் வித்தியாசமான விதங்களில் நடத்தப்பட வேண்டிய ரெண்டு வித்தியாசமான ஆட்கள் என்பத நான் மதித்துணர ஆரம்பிச்சேன். பழச யோசிக்கும்போது, சின்னபிள்ளையா இருந்தப்ப இத என்னால் ஏன் புரிஞ்சுக்கமுடியல என்பத நம்பவே முடியல. அந்த வயசுல காரியங்கல ஒருத்தர் எப்படி பார்க்கிறார் என்பதுதான் இதுக்கு காரணம்ன்னு நெனக்கிறேன்.”
பகுத்துணர்வுடன் நடக்க கற்றுக்கொள்ளுதல்
ஆம், உங்கள் சூழ்நிலைக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பது “காரியங்கல ஒருத்தர் எப்படி பார்க்கிறார்” என்பதன் பேரிலேயே அதிகம் சார்ந்திருக்கிறது. மங்கலான மூக்குக்கண்ணாடி வழியாக பார்ப்பதுபோல, உங்கள் உணர்ச்சிகள் காரியங்களின் தோற்றத்தை பாதிக்கக்கூடும். மேலும், பெற்றோரின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறவிரும்பும் உணர்ச்சிப்பூர்வ தேவை அதிக சக்திவாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களான ஸ்டீவன் பாங்கும் மைக்கல் கானும் இவ்வாறு கூறுகிறார்கள்: “வெகுவாக வித்தியாசப்படும் தங்களுடைய குழந்தைகளை பட்சபாதமில்லாமல் நடத்தும் நிறைவேறமுடியாத அந்தக் கனவை பெற்றோர் அடையமுடிந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர் மற்றொரு குழந்தைக்குத்தான் தனிச்சலுகை காட்டுகிறார்கள் என்றே கருதும்.”
உதாரணமாக, கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட மூன்று வாலிபர்கள் கூறியதை மறுபடியும் கவனியுங்கள். பின்வரும் ஒரு காரியம் உண்மை இல்லையென்றால் அவர்கள் சூழ்நிலை நம்பிக்கையற்றதாக தோன்றும்: அவர்கள் உடன்பிறந்தவர்கள்! ஆம், மற்றவர்கள்தான் அதிக கவனத்தை பெறுவதாகவும் தான்தான் அசட்டை செய்யப்படுவதாகவும் ஒவ்வொருவரும் கற்பனை செய்துகொள்கின்றனர்! ஆகவே, அடிக்கடி காரியங்களை நாம் பார்க்கும்விதம் கொஞ்சம் சிதைவுறுகிறது. “பகுத்துணர்வுள்ளவன் குளிர்ந்த மனமுள்ளவன்” என்று நீதிமொழிகள் 17:27 (NW) சொல்கிறது. பகுத்துணர்வுடன் இருப்பது என்பது காரியங்களை உணர்ச்சிப்பூர்வமாக அல்ல மாறாக நேர்மையாகவும் உள்ளதை உள்ளவாறே நோக்குவதிலும் சார்ந்திருக்கிறது. உங்கள் எல்லாரையும் உங்கள் பெற்றோர் ஒரேவிதமாக நடத்தாதபோதிலும், உங்கள் எல்லாருடைய நலனிலும் அவர்களுக்கு அக்கறை இருப்பதை உணர பகுத்துணர்வு உங்களுக்கு உதவும்! இதை உணருவது நீங்கள் கோபமடைவதையும் விரக்தியடைவதையும் தவிர்க்க உதவும்.
நியாயமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய சரியான அளவு கவனிப்பு கிடைக்கவில்லையென்று உங்களுக்கு தோன்றினால் அப்போது என்ன? நீங்கள் என்ன செய்யலாம்? விழித்தெழு!-வின் இனிவரும் இதழ் இதைப் பற்றி கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b தனிச்சலுகையை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி இனிவரும் ஒரு கட்டுரை அதிக முழுமையாக ஆராயும்.
[பக்கம் 26-ன் படம்]
சமமற்றவிதமாக நடத்தப்படுவது சரியில்லாததாக தோன்றலாம்