உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆறு வழிகள்
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
வளரும் நாடுகளில் வாழ்பவர்களுள் ஏறக்குறைய 25 சதவீதத்தினர் பாதுகாப்பான தண்ணீர்வசதி இல்லாமல் இருக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கையிடுகிறது. 66 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள்—குறைந்தது 250 கோடி மக்கள்—போதுமான அளவு கழிவுநீக்க வசதியில்லாமல் இருக்கின்றனர். அதன் காரணமாக அநேகருக்கு ஏற்பட்ட விளைவுகள் வியாதியும் மரணமுமே.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சுத்தத்தைக் காத்துக்கொள்வது கடினம். ஆனாலும், தனிப்பட்ட சுத்தத்தை வாழ்க்கை முறையாகவே ஆக்கிக்கொண்டீர்களானால், அநேக வியாதிகளிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம். உங்கள் உடலுக்குள் சென்று நோய் ஏற்படுத்தக்கூடிய கிருமிகளிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எடுக்கக்கூடிய ஆறு படிகள் இதோ.
1. மலம் கழித்தபிறகும் உணவைத் தொடுவதற்கு முன்பும் சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள்.
உங்கள் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கைகளை கழுவுவதற்கு வசதியாக சோப்பும் தண்ணீரும் எப்போதும் கிடைக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்வது நோயை தடுப்பதற்கு ஒரு முக்கியமான வழியாகும். உணவிற்குள் அல்லது வாய்க்குள் செல்லக்கூடிய கிருமிகளை சோப்பும் தண்ணீரும் கைகளிலிருந்து நீக்கிவிடுகின்றன. சிறுபிள்ளைகள் தங்கள் விரல்களை அடிக்கடி வாயில் வைப்பதனால், அவர்களுடைய கைகளை அடிக்கடி—முக்கியமாக உணவு கொடுப்பதற்கு முன்பு—கழுவுவது நல்லது.
நீங்கள் மலம் கழித்த பிறகும் மலம் கழித்த குழந்தைக்கு அல்லது சிறுபிள்ளைக்கு கால் கழுவிய பிறகும் உணவை தொடுவதற்கு முன்பும் சோப்பால் உங்கள் கைகளைக் கழுவுவது மிகவும் முக்கியம்.
2. ஒரு கழிப்பிடத்தைப் பயன்படுத்துங்கள்.
கிருமிகள் பரவுவதைத் தடுக்க, மலத்தை சரியான விதத்தில் அப்புறப்படுத்துவது இன்றியமையாதது. முக்கியமாக வயிற்றுப்போக்கு போன்ற அநேக வியாதிகள் மனித மலத்திலுள்ள கிருமிகளிலிருந்துதான் வருகின்றன. குடிநீருக்குள், உணவிற்குள், கைகளில், உணவை சமைப்பதற்காக அல்லது பரிமாறுவதற்காக உபயோகிக்கும் பாத்திரங்களில் அல்லது அவற்றின் மேற்பரப்புகளுக்கு இந்தக் கிருமிகள் சென்றுவிடலாம். அதற்குப் பிறகு இந்தக் கிருமிகளை மக்கள் விழுங்கி, அதனால் நோய்வாய்ப்படலாம்.
இதைத் தவிர்க்க ஒரு கழிப்பிடத்தைப் பயன்படுத்துங்கள். மிருக மலங்கள், வீட்டிலிருந்தும் தண்ணீர் மூலங்களிலிருந்தும் தூரமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பெரியவர்களின் மலத்தைவிட, குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளுடைய மலம் அதிக ஆபத்தானது என்பதை அறிவது உங்களுக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம். ஆகவே சிறுவர்களுக்கும்கூட கழிப்பிடத்தை பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். வேறு இடத்தில் பிள்ளைகள் மலம் கழித்தாலும்கூட அவர்களுடைய மலம் உடனடியாக நீக்கப்பட்டு, கழிப்பிடத்திற்குள் போடப்பட அல்லது புதைக்கப்பட வேண்டும்.
கழிப்பிடங்கள் சுத்தமாகவும் மூடியும் வைக்கப்பட வேண்டும்.
3. சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
சுத்தமான குழாய்த்தண்ணீர் மிகுதியான அளவில் கிடைக்கும் குடும்பங்கள், அவை கிடைக்காத குடும்பங்களைவிட குறைவாகவே வியாதிப்படுகின்றன. குழாய்த்தண்ணீர் கிடைக்காதவர்கள், கிணறுகளை மூடிவைப்பதன் மூலமும் குடிக்க, குளிக்க அல்லது கழுவ உபயோகிக்கும் தண்ணீரிலிருந்து அழுக்குத் தண்ணீரை தூரமாக விலக்கிவைப்பதன் மூலமும் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். விலங்குகளை வீட்டிற்கு வெளியேயும் குடிநீரிலிருந்து தூரமாயும் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
தண்ணீர் எடுப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் உபயோகிக்கும் வாளிகள், கயிறுகள், பானைகள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்வதும் வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான மற்றொரு வழியாகும். உதாரணமாக, வாளியை தரையில் வைப்பதற்கு மாறாக அதை தொங்கவிடுவது நல்லது.
வீட்டிலிருக்கும் குடிநீர், மூடப்பட்ட சுத்தமான பாத்திரத்தில் வைக்கப்பட வேண்டும். அந்தப் பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுப்பதற்கு சுத்தமான தம்ளரை அல்லது நீண்ட கைப்பிடியுள்ள கரண்டியை பயன்படுத்த வேண்டும். குடிநீருக்குள் கை வைப்பதற்கோ அல்லது தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து நேரடியாக குடிப்பதற்கோ ஆட்களை அனுமதிக்காதீர்கள்.
4. பாதுகாப்பான குழாய்த்தண்ணீராக இருந்தாலொழிய தண்ணீரை காய்ச்சிக் குடியுங்கள்.
குழாயிலிருந்து வரும் தண்ணீர்தான் அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கும். பார்ப்பதற்கு சுத்தமாக தெரிந்தாலும், மற்ற ஊற்று மூலங்களிலிருந்து வரும் தண்ணீரில் கிருமிகள் இருப்பதற்கு அதிக சாத்தியமிருக்கிறது.
தண்ணீரைக் காய்ச்சுவது கிருமிகளைக் கொன்றுவிடுகிறது. ஆகவே குளங்கள், ஓடைகள் அல்லது தொட்டிகளிலிருந்து நீங்கள் தண்ணீர் எடுத்தால், அதைக் குடிப்பதற்கு முன் கொதிக்க வைத்து ஆறவிடுவது நல்லது. நோய் எதிர்ப்புசக்தி, பெரியவர்களைவிட குழந்தைகளுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு கிருமியில்லாத தண்ணீர் மிகவும் முக்கியமானது.
குடிநீரை காய்ச்ச வாய்ப்பில்லையென்றால், மூடியுள்ள சுத்தமான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் அதை சேமித்து வையுங்கள். அந்தப் பாத்திரத்தை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்தப்பிறகு தண்ணீரை உபயோகியுங்கள்.
5. உங்கள் உணவை சுத்தமாக வையுங்கள்.
பச்சையாக சாப்பிடவேண்டிய உணவுப்பொருட்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும். மற்ற உணவுகள், முக்கியமாக ஆட்டுக்கறியும் கோழிக்கறியும், நன்றாக சமைக்கப்பட வேண்டும்.
சமைக்கப்பட்ட உடனேயே உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது; அப்போதுதான் அது கெட்டுப்போவதற்கு வாய்ப்பிருக்காது. சமைத்த உணவை ஐந்துமணி நேரத்திற்குமேல் வைக்க நேரிட்டால், அதை சூடாக அல்லது குளிரூட்டி வைக்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன் அதை மறுபடியும் நன்றாய் சூடாக்க வேண்டும்.
சமைக்கப்படாத கறியில் அநேகமாக கிருமிகள் இருக்குமாதலால் சமைக்கப்பட்ட உணவில் படும்படி அதை வைக்கக்கூடாது. கறியை சமைத்துவிட்ட பிறகு அதை வைத்த பாத்திரங்களையும் சமையலறை மேடையையும் சுத்தம் செய்யுங்கள்.
உணவைத் தயாரிக்கும் சமையலறை மேடைகள் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். உணவை மூடி, ஈக்கள், எலிகள், சுண்டெலிகள், மற்ற பிராணிகள் போன்றவற்றிற்கு எட்டாதபடி வைக்கவேண்டும்.
6. வீட்டு குப்பைகளை எரித்துவிடுங்கள் அல்லது புதைத்துவிடுங்கள்.
கிருமிகளைப் பரப்பும் ஈக்கள், குப்பைக்கூளங்களில் இனப்பெருக்கம் செய்ய விரும்புகின்றன. ஆகவே வீட்டு குப்பைகளை தரையில் போடக்கூடாது. புதைத்தல், எரித்தல் அல்லது மற்ற விதங்களில் அவை தினமும் நீக்கப்பட வேண்டும்.
இந்த வழிக்காட்டுக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, குடற்காய்ச்சல், புழுக்கள் தொற்றுவது, உணவு நச்சு, இன்னும் மற்ற அநேக வியாதிகளிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள்தாமே உதவலாம்.
[படத்திற்கான நன்றி]
மூலம்: ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி, ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு மற்றும் WHO கூட்டாக சேர்ந்து பிரசுரித்த வாழ்க்கையின் உண்மைகள் (ஆங்கிலம்) என்பதிலிருந்து.