உலகை கவனித்தல்
நம்பிக்கையிழந்த ஒரு சந்ததி
இன்றைய 15 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களின் மனநிலையை இரண்டு சந்ததிக்கு முன்பிருந்த இளைஞர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், குற்றச்செயல் விகிதம், தற்கொலை ஆகியவற்றில் அதிகரிப்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன என்று தி ஆஸ்திரேலியன் அறிவிக்கிறது. திட்டமிட்ட ஆராய்ச்சியாளரும் விஞ்ஞான எழுத்தாளருமான ரிச்சர்ட் எக்கர்ஷ்லி, இன்றைய அநேக இளைஞர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராய், “வாழ்க்கை துடிப்புள்ளதாகவும் சந்தோஷமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்றும்; தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும்; தாங்கள் விரும்பிய வாழ்க்கைமுறையை அனுபவிக்கவேண்டும் என்றும்; சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்தால் தீர்க்கமுடியாது என்றும்; சமூக நிலைமைகளை மாற்ற தங்களாலும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் இளைஞர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறினார். “அதிகரித்து வரும் ஜனத்தொகையால், குறைவான வேலைவாய்ப்புகள், குறைந்த வீட்டுவசதி, குறைவாக இருக்கும் எல்லாவற்றிற்காகவும் நாம் போட்டியிட வேண்டும்” என்று 15 வயதான பெண் ஷானு கூறினாள்.
விண்கலத்தில் குப்பை
பதினோறு வருடங்களுக்குப் பிறகு, ரஷ்ய விண்கலமான மிர்-ஐ உபயோகிப்பவர்கள் இப்போது, பூமியிலுள்ள அநேகருக்கு பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சினையை சமாளிக்க கற்றுவருகின்றனர்; அதாவது சேர்ந்துபோன சாமான்களை வைத்து என்ன செய்வது என்பதே. விண்வெளியின் எடையற்ற சூழலில், அத்தியாவசியப் பொருட்களாகிய விண்வெளி உடைகள், கம்ப்யூட்டர் கேபிள்கள், உணவுப் பொட்டலங்கள், மற்ற உதிரிப் பொருட்கள் யாவையும் தரைகள், கூரைகள், சுவர்கள் போன்றவற்றோடு சேர்த்து கட்டிவைக்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு பரப்பிலும் ஏறக்குறைய 30 சென்டிமீட்டருக்கு குப்பை சேர்ந்திருப்பதால், மிர்-ன் உட்பகுதிகள் குறுகி வருகின்றன. புதிய சர்வதேச விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்போது, குப்பைகளை ஒழிப்பதற்கு உள்ளேயே அமைக்கப்பட்ட கருவியை உடையவர்களாக விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கக்கூடும். இதுவரையாக, மிர்-லிருப்பவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு டப்பாக்களை நசுக்கி, காலியானவற்றை உணவு பெட்டிகளுக்குள் போட்டு, சுவர்களுடன் சேர்த்து கட்டி வைக்க வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள்; ஆகவே அது நிச்சயமாய் அதிகமாக போற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
போரிடும் பபூன்கள்
இந்த வருடத்தின் ஆரம்பத்தில், தென் ஆப்பிரிக்காவின் அதிக போக்குவரத்துள்ள நெடுஞ்சாலைகள் ஒன்றில் ஓட்டுநர்கள் வித்தியாசமான ஒரு ஆபத்தை—பபூன்களின் ஒரு தொகுதியால் வீசப்பட்ட கல்மழையை—எதிர்ப்பட்டனர். கேப் டௌனுக்கும் ஜோஹன்ஸ்பர்குக்கும் இடைப்பட்ட ரோட்டிலுள்ள ஒரு மலைப் பாதையில் இந்தப் பபூன்கள் வாகன ஓட்டுநர்களைத் தாக்கியதாக இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன் கூறியது. காயமடைந்ததாக அல்லது விபத்து ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் செய்யப்படாதபோதிலும், இந்தப் பாலூட்டிகளை நெடுஞ்சாலையிலிருந்து துரத்திவிடுவதற்காக போலீஸாரும் கற்களை வீசினர். போலீஸாருக்கும் பபூன்களுக்கும் மத்தியில் நடந்த இந்தக் கல்லெறியும் போராட்டத்தில், யார் வெற்றி பெற்றது என்பதைப் பற்றிய எந்த அறிக்கையும் இல்லை.
ஆசியாவில் புகைப்பவர்கள்
வியட்நாமிலுள்ள மொத்த ஆண்களில் ஏறக்குறைய 73 சதவீதத்தினர் புகைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. “உலகத்திலேயே, ஆண்கள் மத்தியில் நிலவும் மிக அதிகமான புகைக்கும் விகிதம்” இது என்று த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆராய்ச்சி அறிவிக்கிறது. ஒப்பிடுகையில், வியட்நாமின் பெண்களில் 4 சதவீதத்திற்கும் சற்று அதிகமானோரே புகைப்பதாகத் தோன்றுகிறது. பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள மற்ற ஆசிய நாடுகளிலும் நிலைமை இவ்வாறே இருக்கிறது. உதாரணமாக, இந்தோனீஷியாவில், 53 சதவீத ஆண்களும் 4 சதவீத பெண்களும் புகைக்கின்றனர். அதேசமயம் சீனாவில், 61 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகைக்கின்றனர்.
செக்ஸ் கட்டுப்பாட்டை இறையியல் கல்லூரி தளர்த்துகிறது
வர்ஜீனியாவிலுள்ள எப்பிஸ்கோப்பல் சர்ச்சின் இறையியல் கல்லூரி ஒன்று “அதன் மாணவர்களும் ஆசிரியர்களும் விவாகத்திற்குப் புறம்பாக செக்ஸ், ஓரினப்புணர்ச்சி ஆகியவற்றில் ஈடுபடுவதைத் தடைசெய்த 25 வருட கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்கிறது” என்று த கிறிஸ்டியன் சென்ட்சுரி பத்திரிகை அறிவிக்கிறது. அந்த மன்றத்தின் தலைவரான பீட்டர் ஜெ. லீ, “இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 30 அல்லது 40 வயதுடையவர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கு கன்னிமடத் தலைவிகளும் இல்லை; இரவுநேர சோதனைகளும் இல்லை” என்று கூறினார். இறையியல் கல்லூரியில் சேருபவர்களின் எண்ணிக்கை கடந்த 11 வருடங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது. மேலுமாக, கடந்த 25 வருடங்களில், இங்கு சேருபவர்களின் சராசரி வயது 27-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. “மன்றத்தின் தலைவராக நான் செய்ய நினைப்பதெல்லாம், தன் காதலியோடு செக்ஸ் ஈடுபாடு வைத்துக்கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக 28 வயது ஆணுக்கு அட்மிஷன் மறுக்கப்படுவதை தடுக்கவே” என்று லீ கூறினார்.
தின்பண்டங்களும் பல் சொத்தையும்
அதிக சர்க்கரையுள்ள தின்பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைப்பது, பல் சொத்தையை தடுக்க உதவும் என்பது நீண்ட காலமாக அறியப்பட்டிருக்கிறது. என்றாலும், நீங்கள் எப்போது, எவ்வளவு தின்பண்டங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பதே அதிக முக்கியமானது என்று உங்கள் குடும்பத்தை புன்சிரிப்புடன் வைக்க (ஆங்கிலம்) என்ற குடும்ப பல் மருத்துவக் கையேடு ஒன்று அறிவிக்கிறது. இனிப்புகள் அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்துகள் உங்கள் பற்களிலுள்ள ப்ளாக்-ல் படும்போது, அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் உங்கள் பல்லின் மேற்பகுதியை ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு தாக்குகிறது என்று அச்சிற்றேடு கூறுகிறது. இச்சமயத்தில் பற்குழிகள் தோன்றலாம். அதுமட்டுமல்ல, “நீங்கள் இனிப்பு அல்லது மாவுப்பொருள் நிறைந்த தின்பண்டத்தை சாப்பிடும் ஒவ்வொரு சமயமும் இவ்வாறு ஏற்படலாம்.” ஆகவே நீங்கள் தின்பண்டம் சாப்பிடுவதாக இருந்தால் உங்கள் பற்களை ஒரு தடவை மாத்திரம் அமிலம் தாக்கும்படி, “முழுவதையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடுவது நல்லது.” இல்லையென்றால், அதே தின்பண்டத்தை நீண்டநேரம் கொறித்துக்கொண்டிருப்பது அமிலம் அதிக நேரம் தாக்குவதில் விளைவடையும். பல் சொத்தையை தடுக்க, ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். பல் நூல் (dental floss) கொண்டு உங்கள் பற்களுக்கிடையில் தினந்தோறும் சுத்தம் செய்யவும் மறந்துவிடாதீர்கள்.
விஞ்ஞானிகளின் கடவுள் நம்பிக்கை
தற்செயலாய் தெரிவு செய்யப்பட்ட 1,000 விஞ்ஞானிகளிடம், அவர்கள் கடவுளில் நம்பிக்கை வைத்தார்களா என்று 1916-ல் அமெரிக்க உளவியல் நிபுணர் ஜெம்ஸ் லாபா கேட்டார். அவர்களுடைய பதில் என்ன? பதில் சொன்ன விஞ்ஞானிகளில் 42 சதவீதத்தினர் கடவுளில் நம்பிக்கை வைத்ததாக தெரிவித்தனர் என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. கல்வியறிவு அதிகரிக்கையில் கடவுளில் நம்பிக்கை குறைந்துவிடும் என்று லாபா முன்னறிவித்தார். 80 வருடங்கள் கழித்து, தற்போது லாபாவுடைய புகழ்பெற்ற ஆராய்ச்சியை ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் லார்சன் மறுபடியும் செய்தார். அதே கேள்விகளையும் முறைகளையும் அவர் உபயோகித்து, மனிதவர்க்கத்தோடு உயிர்ப்புடன் தொடர்புகொள்ளும் ஒரு கடவுளில் அவர்கள் நம்பிக்கை வைத்தார்களா என்று உயிரியல் நிபுணர்கள், இயற்பியலர்கள், கணிதவியல் நிபுணர்கள் ஆகியோரிடம் கேட்டார். ஏறக்குறைய அதே அளவான விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர், இன்றும் கடவுளில் நம்பிக்கை வைக்கின்றனர் என முடிவுகள் சுட்டிக்காண்பிக்கின்றன. “மனிதனின் மனதை அல்லது மனிதனுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்வதற்கான அறிவியலின் திறமையை லாபா தவறாக கணித்துவிட்டார்” என்று டாக்டர் லார்சன் கூறுகிறார்.
உலகம் சுற்றும் வைரஸ்கள்
வைரஸ்களை கொல்லுவதற்காக விமானக் கழிவுத்தொட்டிகள் ரசாயனங்களை கொண்டிருக்கும்; ஆனால் சில வைரஸ்கள் இந்தக் கிருமி நாசினிகளுக்கு தப்பிவிடுகின்றன என்று நியூ ஸையன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. வட கரோலினா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழியல் விஞ்ஞானியாக இருக்கும் மார்க் சாப்ஸி, ஐக்கிய மாகாணங்களில் தரையிறங்கிய சர்வதேச விமானங்களின் கழிவுப்பொருட்களை ஆராய்ச்சி செய்தார்; அவற்றுள் ஏறக்குறைய பாதியில் உயிருள்ள வைரஸ்கள் இருப்பதைக் கண்டார். ஐக்கிய மாகாணங்களில், விமானங்களிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருட்கள் அநேகமாக பொது கழிவுநீர் மையங்களில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் நிலத்தில் கொட்டப்படும். இப்படியாக, இந்த வைரஸ்களில் சில, கல்லீரல் வீக்க நோய் ஏ மற்றும் ஈ, மூளை உறை வீக்க நோய், போலியோ போன்ற வியாதிகளை பரப்பிவிடும் அபாயம் இருக்கிறது. “இந்த உலகின் விமானப் போக்குவரத்தால் கடத்தப்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை, கவலை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது” என்று சாப்ஸி தொடர்ந்து கூறுகிறார்.
வற்றிவரும் கங்கை
வட இந்தியர்களால் கங்கா என்றழைக்கப்படும் கங்கை நதி கோடிக்கணக்கான இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கங்கை நதி, அது செல்லும் வழி முழுவதும் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் இருக்கிறது. ஆனால் இப்போது அதன் தண்ணீர் வேகமாக குறைந்து, ஆற்றுக்கும் அதன் முந்தைய கரைக்கும் இடையில் மிகப் பரந்த உலர்ந்த மண்தரைகளை ஏற்படுத்துகிறது என்று இந்தியா டுடே அறிவிக்கிறது. குறைவான மழையும், அதன் மூலத்திற்கு அருகில் நீர்பாசனத்திற்கு அதிகமான தண்ணீர் உபயோகிக்கப்படுவதுமே குறைந்துவரும் தண்ணீருக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. தண்ணீர் குறைவாக இருப்பதனால் ஏற்படும் வண்டலானது, அந்தப் பகுதியில் விவசாயத்தை பாதிப்பதோடுகூட கல்கத்தாவின் துறைமுகத்தை பயன்படுத்த முடியாமல் போகும்படி செய்யக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடற்கொள்ளை அதிகரிக்கிறது
கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் அதிகரித்து வருவதாக சர்வதேச கடலாண்மைத் துறை கூறுகிறது; 1994-ல் 90 சம்பவங்களிலிருந்து இரண்டே வருடங்கள் கழித்து 226-ஆக அதிகரித்திருக்கிறது. பத்து மடங்குக்கும் மேலான இந்த அதிகரிப்பு, வியாபார கப்பற்படை அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவலையை அதிகரித்திருக்கிறது. “அதைப் பின்தொடரும் விசாரணைகள் தாமதமேற்படுத்தி பெரும் நஷ்டத்தை விளைவிக்கக்கூடும் என்பதால் கப்பல் முதலாளிகளில் அநேகர் இந்தச் சம்பவங்களை அறிக்கை செய்வதில்லை”; ஆகவே உண்மையான எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கலாம் என்று லண்டனின் த ஸண்டே டெலிகிராஃப் கூறுகிறது. அல்பேனியா, லிபியா ஆகியவற்றிற்கு அருகிலுள்ள மத்தியதரைக் கடலும் தென் சீனக் கடலுமே சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஆபத்தானவையாக இருந்திருக்கும் பகுதிகளாகும். இந்தக் கடற்கொள்ளையர்களை முறியடிக்க, ஐநா சர்வதேச செயற்குழு ஒன்றை ஏற்படுத்துவதில் பிரிட்டன் முன்னின்று செயல்படும்படி பிரிட்டிஷ் வியாபார கப்பற்படை பிரதிநிதி ஒருவர் கேட்டுக்கொண்டார். ஆனால் கப்பல் முதலாளிகளுக்கான பிரதிநிதி ஒருவர், “பெரும்பாலான இத்தாக்குதல்கள் பிராந்திய அதிகாரத்திற்குட்பட்ட தண்ணீரிலேயே ஏற்படுவதால் இந்தப் பிரச்சினையை கையாள ஐநா செயற்குழு எதுவும் செய்யமுடியாது எனத் தான் நினைத்ததாக கூறினார்” என்று அந்தச் செய்தித்தாள் அறிவித்தது.