பைபிளின் கருத்து
கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சிக்காரரை வெறுக்கவேண்டுமா?
ஓரினப்புணர்ச்சிக்காரர்களிடம் பகுத்தறிவற்ற பயத்தையோ அருவருப்பையோ வெளிக்காட்டுவதைக் குறிக்கும் வார்த்தை ஒன்று 1969-ல் ஆங்கில மொழியில் புனையப்பட்டது. அவ்வார்த்தை “ஹோமோபோபியா” என்பதே. அநேக மொழிகளில் இத்தகையதொரு குறிப்பிட்ட வார்த்தை இல்லை; இருப்பினும், ஆயிரக்கணக்கான வருடங்களாக, பல நாட்டினரும் மொழியினரும் ஓரினப்புணர்ச்சிக்காரர்களிடம் வெறுப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
இருப்பினும், மிகச் சமீப காலங்களில் ஓரினப்புணர்ச்சி பாலியல் வெளிக்காட்டின் ஒரு மாறுபட்ட வகையே என்பதாக பரவலாய் முன்னேற்றுவிக்கப்படுகிறது. “பேச்சளவில் ஓரினப்புணர்ச்சிக்கு, பொது மக்களின் அங்கீகாரமும் மதிப்பும் அதிகரித்துவருவதைக்” குறித்து சரித்திர ஆசிரியர் ஜெரி இசட். முல்லர் சமீபத்தில் எழுதினார். ஓரினப்புணர்ச்சிக்காரர்கள், “தங்களுடைய பழக்கம் மெச்சத்தக்கதென அறிவிப்பதற்கு அதிகளவில் ஒன்றுசேர்ந்துகொண்டு, மற்றவர்களும் தங்களைப்போல இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்” என்று அவர் விளக்கினார். குறிப்பாக இது மேற்கத்திய நாடுகளில் காணப்படுகிறது. இருந்தபோதிலும், உலகின் பெரும் பகுதிகளில், முற்போக்கானவையாக தங்களை அழைத்துக்கொள்ளும் நாடுகளிலும்கூட, அநேகர் இன்றும் ஓரினப்புணர்ச்சியை கண்டிக்கவும் வெறுக்கவும் செய்கிறார்கள்.
ஓரினப்புணர்ச்சிக்காரர்களும், அவ்வாறு கருதப்பட்டவர்களும் பெரும்பாலும் குத்தல் பேச்சுகளுக்கும், அலைக்கழிப்புக்கும், வன்முறைக்கும் இலக்காக்கப்படுகிறார்கள். மதத்தலைவர்களும்கூட இதற்கு தங்கள் வெறுப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள். சிலர் ஓரினப்புணர்ச்சிக்காரர்களை தாங்களாகவே எதிர்க்க ஆரம்பித்துவிட்டதுபோல தோன்றுகிறது. உதாரணமாக, கிரீஸ் தேசிய வானொலியில் சமீபத்தில் ஒலிபரப்பப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பிஷப்பின் கூற்றைச் சற்று கவனியுங்கள். “கடவுள் ஓரினப்புணர்ச்சிக்காரரை நரகத்தின் நெருப்புக்கடலில் என்றென்றுமாக எரிப்பார். அவர்களுடைய அசுத்தமான வாய்களிலிருந்து வரும் அலறல்கள் நித்திய காலத்துக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவர்களுடைய சீர்கெட்ட உடல்கள் தாங்கமுடியாத வேதனையை அனுபவிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். இது உண்மையில் சரிதானா? கடவுள் ஓரினப்புணர்ச்சிக்காரரை எப்படி கருதுகிறார்?
கடவுளின் நோக்குநிலை
சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டிய, கிறிஸ்தவர்களால் வெறுக்கப்படவேண்டிய ஒரு தொகுதியினர் என்ற கருத்தில் ஓரினப்புணர்ச்சிக்காரருக்கு பைபிள் தனிப்பட்ட கவனம் செலுத்துவதில்லை. கூடுதலாக, ஓரினப்புணர்ச்சிக்காரரானாலும்சரி, அல்லது அவருடைய எந்த சிருஷ்டிகளானாலும்சரி, எரியும் நெருப்பில் என்றென்றுமாக வாட்டுவதன்மூலம் அவர்களை கடவுள் தண்டிப்பார் என்று பைபிள் போதிக்கிறதுமில்லை.—ரோமர் 6:23-ஐ ஒப்பிடுக.
இருந்தபோதிலும், வேதவசனங்களில் நம்முடைய சிருஷ்டிகரின் ஒழுக்க தராதரங்கள் அடங்கியிருக்கின்றன. இவை அடிக்கடி ஒழுக்கத்தைக் குறித்த நவீன கால மனப்பாங்கோடு முரண்படுகின்றன. ஓரினப்புணர்ச்சி செயல்கள், திருமணமாகாத ஆட்கள் பல நபருடன் பாலுறவு கொள்ளுதல், மிருகப்புணர்ச்சி ஆகிய அனைத்துமே பைபிளில் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. (யாத்திராகமம் 22:19; எபேசியர் 5:3-5) கடவுள், சோதோமையும் கொமோராவையும் இத்தகைய ஒழுக்கயீன பழக்கவழக்கங்களுக்காகவே அழித்தார்.—ஆதியாகமம் 13:13; 18:20; 19:4, 5, 24, 25.
ஓரினப்புணர்ச்சி பழக்கங்களைப் பொருத்தமட்டில், கடவுளுடைய வார்த்தை நேரடியாகவே இவ்வாறு பதிலளிக்கிறது: “இது வெறுக்கத்தக்க செயல்.” (லேவியராகமம் 18:22, த நியூ ஜெரூசலம் பைபிள்) இஸ்ரவேலருக்கான கடவுளுடைய சட்டம் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்தது: “ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம்செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.” (லேவியராகமம் 20:13) மிருகப் புணர்ச்சி, முறைதகாப் புணர்ச்சி, விபசாரம் போன்றவற்றை செய்கிறவர்களுக்கும்கூட இத்தகைய தண்டனையே குறிப்பிடப்பட்டது.—லேவியராகமம் 20:10-12, 14-17.
ஓரினப்புணர்ச்சி செயல்களை, ‘இழிவான இச்சைரோகங்கள்,’ “சுபாவத்துக்கு விரோதமான”வை என்ற வார்த்தைகளில் விவரிக்கும்படியாக அப்போஸ்தலனாகிய பவுல் ஏவப்பட்டார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.”—ரோமர் 1:26-28.
ஓரினப்புணர்ச்சி பழக்கங்கள், விபசாரம், வேசித்தனம் ஆகிய அனைத்துமே கடவுளுடைய பார்வையில் அருவருப்பானவையாக உள்ளன; வேதவசனங்கள் இவற்றிற்கு எந்தவிதமான சாக்குப்போக்குகளையோ, சலுகைகளையோ, தெளிவற்ற நிலையையோ அளிப்பதில்லை. அவ்விதமாகவே, மெய் கிறிஸ்தவர்களும், அதிக பிரபலமாக வேண்டும் என்பதற்காகவோ நவீன கலாச்சாரத்தால் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவோ ‘இழிவான இச்சைரோகங்களிடமான’ பைபிள் நோக்குநிலையின் வலிமையைக் குறைத்துவிடுவதில்லை. ஓரினப்புணர்ச்சியை ஒரு சாதாரணமான வாழ்க்கைப்பாணியாக முன்னேற்றுவிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்கிற எந்த அமைப்போடும் அவர்கள் ஒத்துப்போவதும் இல்லை.
“தீமையை வெறுத்துவிடுங்கள்”
பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” (சங்கீதம் 97:10) எனவே, கிறிஸ்தவர்கள் யெகோவாவுடைய சட்டங்களை மீறுகிற எந்தவொரு பழக்கத்தையுமே வெறுக்கும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். சில ஆட்கள், ஓரினப்புணர்ச்சியை இயற்கைக்கு மாறான முறைதகா பாலுறவு பழக்கம் என கருதி, மற்ற வகையான ஒழுக்கயீன செயல்களைக் காட்டிலும் இதற்கு எதிராக கடும் வெறுப்பையோ அருவருப்பையோகூட காட்டலாம். இருந்தபோதிலும், இப்படிப்பட்ட காரியங்கள் செய்கிறவர்களை கிறிஸ்தவர்கள் வெறுக்கவேண்டுமா?
இந்த விஷயத்தின்பேரில் சங்கீதக்காரனாகிய தாவீது சங்கீதம் 139:21, 22-ல் அறிவொளியூட்டுகிறார்: “கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.” யெகோவாவுக்கும் அவருடைய நியமங்களுக்குமான நம்முடைய உண்மைத்தன்மை, வேண்டுமென்றே யெகோவாவுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடமாகவும், கடவுளுடைய எதிரிகள் என்ற நிலையை எடுத்தவர்களிடமாகவும் கடும் வெறுப்பை நம்முள் உருவாக்கவேண்டும். இத்தகைய எதிரிகளில் சாத்தானும் பேய்களும் சந்தேகத்துக்கிடமின்றி இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சில மனிதர்களும்கூட சேர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், ஒரு கிறிஸ்தவர், இப்படிப்பட்ட நபர்களை தோற்றத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்வது அதிக கடினமாக இருக்கலாம். இருதயங்களை நம்மால் அறியமுடியாது. (எரேமியா 17:9, 10) அவனோ அவளோ தவறை பழக்கமாக செய்வதனால் அத்தகைய நபரை திருத்தமுடியாத கடவுளுடைய எதிரியாக கருதுவது தவறாக இருக்கக்கூடும். அநேக சமயங்களில் தவறிழைப்பவர் வெறுமனே கடவுளுடைய தராதரங்களை அறியாதவராக இருக்கிறார்.
எனவே, பொதுவாக, கிறிஸ்தவர்கள் உடன் மனிதரை வெறுப்பதில் தாமதமாகவே இருக்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வாழ்க்கைப்பாணிகளிடமாக பலமான வெறுப்புணர்ச்சி உடையவர்களாய் இருக்கிறபோதிலும்கூட, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கவோ, அவர்களிடமாக வன்மத்தையும் குரோதத்தையும் பேணுவதோ கிடையாது. மாறாக, கிறிஸ்தவர்கள், ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கும்படி’ பைபிள் அறிவுரை கூறுகிறது.—ரோமர் 12:9, 17-19.
“கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல”
ஒரு நபர் எத்தகைய ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டு வந்திருந்தாலும்கூட, அவர் உண்மையில் மனந்திரும்பினால், யெகோவா அவரை மன்னிப்பார். ஒரு வகையான ஒழுக்கக்கேட்டை மற்றொன்றைக் காட்டிலும் அதிக மோசமானதாக யெகோவா கருதுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல.” (அப்போஸ்தலர் 10:34, 35) உதாரணமாக, கொரிந்துவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையைக் கவனியுங்கள். அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: ‘அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.’ சில முன்னாள் வேசிமார்க்கத்தாரும், விபச்சாரக்காரரும், ஓரினப்புணர்ச்சிக்காரரும், திருடரும் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர் என்பதை பின்பு பவுல் வெளிப்படையாக தெரிவித்தார். அவர் இவ்வாறு விளக்கினார்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
உண்மைதான், தம்முடைய பரிபூரண ஒழுக்க தராதரங்களிடமாக காட்டப்படும் எந்தவொரு தொடர்ச்சியான, விடாப்பிடியான மீறுதலையும் யெகோவா பொறுத்துக்கொள்ளமாட்டார். தம்முடைய ஒழுக்க சட்டங்களை பிடிவாதமாக அவமதிக்கிறவர்களை அவர் நிச்சயமாகவே வெறுக்கிறார். இருந்தபோதிலும், ஒப்புரவாவதற்கான வாசலை அவர் திறந்துவைக்கிறார். (சங்கீதம் 86:5; ஏசாயா 55:7) இதற்கு இசைவாக, கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சிக்காரரானாலும்சரி எத்தகையவரானாலும்சரி, அவர்களை வன்மத்திற்கோ, அவதூறுக்கோ, அலைக்கழிப்பிற்கோ இலக்காக்குவதில்லை. உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய உடன் மனிதரை கிறிஸ்துவின் எதிர்கால சீஷர்களாக கருதி, மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்துகின்றனர். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.”—1 தீமோத்தேயு 2:3, 4.
மனந்திரும்புகிறவர்களை கிறிஸ்தவர்கள் வரவேற்கிறார்கள்
கடவுள் மன்னிக்கிறவர் என்று பைபிள் மீண்டும் மீண்டுமாக தெரிவிக்கிறது. அது அவரை ‘வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவன்’ என்று வர்ணிக்கிறது. (நெகேமியா 9:17; எசேக்கியேல் 33:11; 2 பேதுரு 3:9) தன்னுடைய சுதந்தரத்தை தூரதேசத்தில் சிற்றின்பங்களில் அழித்துப்போட்ட கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமையில் வரும் தகப்பனுக்கு ஒப்பாக அவரை பைபிள் இணைத்துப் பேசுகிறது. அந்த மகன் கடைசியில் உணர்வடைந்து, மனந்திரும்பி, தன்னுடைய குடும்பத்துக்கும் வீட்டுக்கும் திரும்பி வந்தபோது, அத்தகப்பன் தன் மகனை வரவேற்பதற்கு கரம் விரித்துக் காத்திருந்தார்.—லூக்கா 15:11-24.
ஆம், தவறிழைத்தவர் மாறுவதற்கு சாத்தியம் உள்ளது. பழைய ஆளுமையை களைந்து போட்டு புதியதை தரித்துக்கொள்ளவும், ‘மனதை உந்துவிக்கும் சக்தியை புதிதாக்கவும்’ மக்களை உற்சாகப்படுத்துவதன்மூலம் வேதவசனங்கள் இதை ஒப்புக்கொள்கின்றன. (எபேசியர் 4:22-24) ஓரினப்புணர்ச்சிக்காரர் உட்பட, தவறை பழக்கமாக செய்பவர்கள், தங்களுடைய சிந்திக்கும் முறையிலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தை செய்யமுடியும்; உண்மையில் அநேகர் இத்தகைய மாற்றத்தை செய்வதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். a இயேசு தாமேயும்கூட இப்படிப்பட்டவர்களிடம் பிரசங்கித்தார்; மனந்திரும்புதலைக் காட்டுவதன்மூலம், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.—மத்தேயு 21:31, 32.
கிறிஸ்தவர்கள், பல்வேறுபட்ட சமூக அந்தஸ்துகளிலிருந்து வருகிற மனந்திரும்பிய மக்களை வரவேற்கிறார்கள். எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான பழக்கங்களாயினும், அவற்றை விட்டுவிட்டபிறகு, அனைவருமே கடவுளுடைய மன்னிப்பின் முழு நன்மையையும் அனுபவிக்கமுடியும்; ஏனென்றால் “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.”—சங்கீதம் 145:9.
ஓரினப்புணர்ச்சி மனச்சாய்வோடு இன்னும் போராடுபவர்களுக்கும்கூட, தேவையான ஆவிக்குரிய ஆதரவளிக்க கிறிஸ்தவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கின்றனர். இது கடவுளுடைய அன்பின் சொந்த வெளிக்காட்டுதலுக்கு ஒத்திசைவாக இருக்கிறது; ஏனென்றால் பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”—ரோமர் 5:8.
[அடிக்குறிப்பு]
a மார்ச் 22, 1995 விழித்தெழு! இதழில், “இவ்வுணர்ச்சிகளை எவ்வாறு நான் போக்க முடியும்?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 17-ன் படம்]
கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சியைக் குறித்த பைபிள் நோக்குநிலையின் வலிமையைக் குறைத்துவிடுவதில்லை
[படத்திற்கான நன்றி]
Punch