குள்ளர்கள்—நடுக்காட்டில் வசிக்கும் மக்கள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்
பாபிங்காக்களை, அதாவது எங்கள் நாடாகிய மத்திய ஆப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த குள்ளர்களைக் காண வாருங்கள். இந்தக் குள்ளர்களைப் பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருப்பீர்கள், எதையாவது படித்திருப்பீர்கள், ஆனால் அவர்களில் எவரையும் நீங்கள் சந்தித்திருக்கமாட்டீர்கள். தலைநகராகிய பங்குய்க்கு நீங்கள் சென்றால், அங்கிருந்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு இரண்டு மணிநேரத்திற்குள் போய்விடலாம்.
எல்லா தேசத்தாருக்கும் குலத்தாருக்கும் இனத்தாருக்கும் வகுப்பாருக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஒரு முக்கிய செய்தியைச் சொல்கின்றனர். எங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில், எல்லா வித மக்களுக்கும் நாங்கள் பிரசங்கிக்கிறோம். இதில் குள்ளர்களும் அடங்குவர்.—வெளிப்படுத்துதல் 14:6.
ஆகவே எங்களுடன் சேர்ந்து, அவர்கள் எவ்வாறு வாழ்ந்துவருகின்றனர் என்பதையும் பூமியை பரதீஸாக மாற்றப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்திக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். அது உங்களுக்கு இனிய ஆர்வமூட்டும் நாளாக இருக்கும்.
அவர்களைப் பற்றிய ஆராய்ச்சி
அங்கு செல்வதற்குமுன், நாம் சந்திக்கவிருக்கும் மக்களைப் பற்றி கொஞ்சம் ஆராய்வது பொருத்தமாக இருக்கும். குள்ளர்களோடு மாதக்கணக்கில் தங்கி, அவர்களது கலாச்சாரத்தையும் மதத்தையும் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்த நபர்கள் எழுதிய புத்தகங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
சமாதானமும் சிநேகப்பான்மையும் நிறைந்த இந்த மக்களைப் பற்றி வாசித்தபின் அவர்களைச் சந்திக்கச் செல்வது இதுபோன்ற அநேக கேள்விகளுக்கு விடையளிக்கும்: குள்ளர்கள் எவ்வாறு தோன்றினர்? அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர்கள் எங்கு வாழ்கின்றனர்? மற்ற ஆப்பிரிக்க இனத்தவரிலிருந்து இவர்கள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றனர்? மற்றவர்களுடன் அவர்கள் எவ்வாறு பழகுகின்றனர்?
குள்ளர்கள், “ஆப்பிரிக்காவின் நிலநடுக்கோட்டில் வசிக்கும், ஒன்றரை மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள சிறுபான்மை மக்கள், . . . தங்களது அயலாரின் மொழிகளையே பேசுபவர்கள்.” ஆப்பிரிக்கக் குள்ளர்களின் துவக்கம், ஓசியானியாவையும் ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியையும் சேர்ந்த நீக்ரிட்டோவினரிலிருந்து (அர்த்தம், “சிறு நீக்ரோக்கள்”) வேறுபட்டது என்பதாக கருதப்படுகிறது என வெப்ஸ்டர்ஸ் தர்ட் நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி குறிப்பிடுகிறது.
குள்ளர்களுக்கான ஆங்கில வார்த்தையாகிய “பிக்மி” (pygmy) “முழங்கையிலிருந்து விரல் மூட்டுகள் வரையுள்ள தூரம்” என அர்த்தப்படுத்தும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. குள்ளர்கள், வேட்டையாடுவதிலும் உணவைச் சேகரிப்பதிலும் பெயர்பெற்றவர்கள். உலக முழுவதிலுமுள்ள குள்ளர்களின் எண்ணிக்கை 2,00,000-க்கும் சற்று அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
செர்ஷ் பாயூஷே மற்றும் கி ஃபிலிப்பார் டெ ஃப்வா என்பவர்கள், பிக்மீஸ்—பீபில் டெ லா ஃபேரெ (குள்ளர்கள்—காட்டுவாசிகள்) என்ற தங்களது புத்தகத்தில் ஆர்வத்தைத் தூண்டும் இன்னுமதிக விவரங்களை நமக்கு அளிக்கின்றனர். குள்ளர்கள், காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கபோன், காமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய இடங்களிலுள்ள காடுகளுக்குள்ளும் கிழக்குக் கோடியாகிய ருவாண்டாவிலும் புருண்டியிலும் காணப்படுகின்றனர் என்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
எங்கு, எப்பொழுது குள்ளர்கள் தோன்றினர் என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் தங்களையே “பிக்மி” என்பதாக ஒருபோதும் அழைத்துக்கொள்வதில்லை. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், அவர்கள் பொதுவாக பாபிங்கா என அழைக்கப்படுகின்றனர்; ஆனால் மற்ற நாடுகளில், பாகாலா, பாபாங்கா, பாக்கா, பாம்பென்ஜெலெ, பாட்வா, பாம்புட்டி என்றெல்லாம் அறியப்படுகின்றனர்.
முதல் சந்திப்பு
அதிகாலை சுமார் ஏழு மணிக்கு, பங்குய் தலைநகரிலிருந்து ம்பாயிக்கி/மாங்கும்பாவிற்கு, லாண்ட் க்ரூஸர் வாகனத்தில் நாம் தென்நோக்கி செல்கிறோம். முதல் 100 கிலோமீட்டருக்குத்தான் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. முந்தின இரவு மழை பெய்திருந்ததால் சாலைகள் வழுக்கலாய் இருக்கின்றன; ஆகவே நான்கு-சக்கர இயக்குவிசைகொண்ட காரில் செல்வது நல்லது.
அடர்த்தியான காடுகளுள்ள பச்சைப்பசேலென்ற கிராமப்புறத்தின் வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் நாம் செல்கிறோம்; அக்கிராமத்துவாசிகள் பழங்களையும், பச்சை வாழைப்பழங்களையும், அன்னாசிப் பழங்களையும், கசாவா கிழங்குகளையும், மக்காச்சோளங்களையும், வெள்ளரிக்காய்களையும், நிலக்கடலைகளையும் சாலையோரமாய் சிறு மேஜைகளில் வைத்து விற்கின்றனர். பஞ்சம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. செழிப்பான நிலத்தினாலும் ஈரப்பதம் நிறைந்த வானிலையினாலும் விதவிதமான உணவுப்பொருட்கள் ஏராளமாக விளைகின்றன. பின், திடீரென, முதல் பாபிங்கா “கிராமத்திற்கு” அல்லது சரியாகச் சொன்னால் முகாமிற்கு வந்துசேருகிறோம்.
அவர்கள் ஆச்சரியப்படத்தக்க அளவில் சிறியதாயுள்ள, குவிமாடம்போன்ற குடிசைகளில் வாழ்கின்றனர்; அவற்றில், உள்ளே ஊர்ந்து செல்வதற்கு போதுமான இடைவெளியுள்ள ஒரு வாயில் இருக்கிறது. அருகிலுள்ள காடுகளிலிருக்கும் குச்சிகளையும் இலைகளையும் எடுத்துவந்து பெண்கள் குடிசைகளை அமைக்கின்றனர். சுமார் 10-லிருந்து 15 குடிசைகள் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வெறுமனே தூங்குவதற்கான குடியிருப்புகளாகவோ பலத்த மழையின்போது பாதுகாப்பு இடங்களாகவோதான் சேவிக்கின்றன. தினசரி வாழ்க்கை வெட்டவெளியில்தான்.
தங்கள் குழந்தைகளை இடுப்பில் சுமந்துவரும் சில பெண்களை சந்திக்க நாம் காரைவிட்டு இறங்குகிறோம். கார் சப்தம் கேட்டு, சில ஆண்கள், நாம் யார், எதற்கு வந்திருக்கிறோம் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஓடிவருகின்றனர். காவலுக்காக அவர்களுடன் அநேக நாய்கள் வருகின்றன, அவை ஒவ்வொன்றின் கழுத்திலும் ஒரு சிறிய மணி கட்டப்பட்டிருக்கிறது.
குள்ளர்கள் நாய்களை மாத்திரமே வீட்டில் வளர்க்கின்றனர் என்பதை ஆராய்ச்சியிலிருந்து கற்றிருப்பது நம் நினைவுக்கு வருகிறது. அவை அவர்களது வேட்டைத் தோழர்கள். நிலத்திலிருந்து மர உச்சிவரை வேட்டையாட அவர்களுக்கு ஏராளம் இருக்கிறது. பிக்மீஸ்—பீபில் டெ லா ஃபேரெ புத்தகம் விளக்குகிறபடி, பறவைகளும் குரங்குகளும் யானைகளும் எருமைகளும் எலிகளும் மான்களும் காட்டுப் பன்றிகளும் அணில்களும் இன்னும் மற்ற அநேக மிருகங்களும் இதில் அடங்கும். ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும், நன்றியுள்ள ஒரு நாய் அவசியம் தேவை.
இந்த மக்களிடம் பேசுகையில், நாம் என்னுடைய பைபிள் கதை புத்தகம் மற்றும் பூமியில் வாழ்க்கையை என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்! a சிற்றேட்டைப் பயன்படுத்துகிறோம். விரைவில் இந்தப் பூமி, அழகான காடுகளுள்ள ஒரு பரதீஸாக மாறும் என்பதை இவை காட்டுகின்றன; அங்கு வியாதியோ மரணமோ இருக்காது. (வெளிப்படுத்துதல் 21:4, 5) இந்த இரு பிரசுரங்களுமே சாங்கோ மொழியில் அச்சிடப்பட்டிருக்கின்றன; குள்ளர்கள் உட்பட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பேசும் மொழி இது. இந்த சமாதானமுள்ள மக்கள், எங்கு வாழ்ந்தாலும், தங்களது ஆப்பிரிக்க அயலாரின் மொழியை ஏற்றுக்கொள்கின்றனர். இது அவசியம், ஏனெனில் இவர்கள் அவர்களோடு வாணிகம் செய்பவர்கள்.
சிறிது நேரத்திற்குள், அநேக ஆண்களும் பெண்களும் நம்மைச் சுற்றி நிற்கின்றனர்; சொல்லப்படும் விளக்கத்தைக் கேட்டவாறே படங்களை ஒன்றொன்றாக ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். சென்ற வருடங்களில் யெகோவாவின் சாட்சிகள் அங்கு சென்றிருப்பதால், நாம் யார் என அவர்கள் அறிவர். பிரசுரங்களைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனாலும், பிரச்சினை என்னவென்றால் அவர்களுக்கு படிக்கத் தெரியாது. அரசாங்கமும் மற்ற நிறுவனங்களும் படிக்கவும் எழுதவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க பல வருடங்களாக முயன்று வந்திருக்கின்றன, ஆனால் எந்தப் பிரயோஜனமுமில்லை. அவர்களது பிள்ளைகள் கல்வி பயில்வதற்காக பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. பள்ளிகள் சிறிது காலம் இயங்கின, ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் ஒருநாள் இல்லையேல் இன்னொரு நாள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர். வகுப்பில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் கற்கும் திறமையைக் காட்டினாலும், பள்ளிக்குச் சென்ற சில மாதங்களில் மாயமாய் மறைந்துவிடுகின்றனர் என குள்ளர்களுக்குக் கற்பித்த ஒரு ஆசிரியர் சொன்னார். ஆனாலும், முறைப்படியான போதனையளிக்க உள்ளூர் அதிகாரிகளாலும் மற்றவர்களாலும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
கடவுளுடைய வார்த்தையில் ஆர்வம் காண்பிப்போரை யெகோவாவின் சாட்சிகள் மறுபடியும் சந்திக்கின்றனர். ஆனால் திரும்பிப் போகையில், அதே பாபிங்காக்களைச் சந்திப்போமென நாம் எதிர்பார்ப்பதில்லை, ஏனெனில் வருடம் முழுவதுமாக அவர்கள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். காட்டுக்குள்ளிருக்கும் தங்கள் வீடுகளுக்கு ஒரேயடியாக மாதக்கணக்கில் சென்றுவிடுகின்றனர். நிரந்தரமாக அவர்களை ஓர் இடத்தில் குடியிருக்க செய்வதற்கான முயற்சிகள் வெற்றிபெறவில்லை. உண்மையிலேயே, அவர்கள் நடுக்காட்டில் வசிக்கும் மக்கள். இடம் மாறுவதும் வேட்டையாடுவதும்தான் அவர்களது வாழ்க்கை, அதை யாராலும் மாற்றமுடியாது.
தினசரி வாழ்க்கை, திருமணம், குடும்பம்
அடிப்படையில், ஆண்கள் வேட்டையாடுகின்றனர், பெண்கள் உணவு சேகரிக்கின்றனர்; காளான்கள், கிழங்குகள், பெர்ரிகள், இலைகள், பருப்புகள், பூச்சிகள், கறையான்கள், காட்டுத் தேன், மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்கு பிரியமான கம்பளிப்புழுக்கள் என காட்டினுள் எது விளைந்தாலும் அதை எடுத்துவந்து சேகரிக்கின்றனர். இவை அனைத்தும் உணவுக்காகவும் வணிகத்திற்காகவும் தேவைப்படுகின்றன. குள்ளர்களின் ஆப்பிரிக்க அயலகத்தார், பெரும்பாலும் லெ க்ரான்ஸ் நவார் (உயரமான கறுப்பர்கள்) என அழைக்கப்படுவோர், இந்தப் பொருட்களுக்காக இவர்களையே பெரிதும் சார்ந்திருக்கின்றனர். பண்டமாற்றுப் பொருட்களாக, அவர்கள் பானைகள், வாணலிகள், வெட்டுக்கத்திகள், கோடாரிகளையும் கத்திகளையும்போன்ற கருவிகள், உப்பு, பாமாயில், கசாவா கிழங்கு, பச்சை வாழைப்பழங்கள் ஆகியவற்றோடுகூட, வருந்தத்தக்க விதமாக, புகையிலையையும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மதுவையும் கஞ்சாவையும் அளிக்கின்றனர். இந்தத் தாழ்மையுள்ள மக்களுக்கு கடைசி மூன்று பொருட்கள் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாயிருக்கின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலும் அவர்கள் கடன்வாங்குகின்றனர்; இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்க்கை சீரழிகிறது.
ஆண்கள் பொதுவாக ஒரு மனைவியையே வைத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எளிதில் விவாகரத்து செய்துவிடுகின்றனர் அல்லது இன்னொரு பெண்ணுடன் வாழ்வதற்காக பிரிந்துசென்றுவிடுகின்றனர். தகப்பன் அல்லது முகாமிலுள்ள மூத்தவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். அவர் உத்தரவுகள் இடாதபோதிலும் அவரது ஆலோசனை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குள்ளர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிப்பதை நீங்கள் காண்பீர்கள். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி தங்கள் குழந்தையை சுமந்துசெல்வர். பெற்றோர் இருவருமே, எங்கு சென்றாலும், வேலை செய்தாலும்சரி வேட்டையாடினாலும்சரி அல்லது நடனம் ஆடினாலும்சரி, என்ன செய்தாலும் இந்தச் சின்னஞ்சிறுசுகளை எப்போதுமே தங்களுடனேயே வைத்துக்கொள்கின்றனர்.
இரவில் குழந்தை தாய் தகப்பனுக்கு நடுவே தூங்குகிறது. பகலில், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மாமன்கள், தாத்தா பாட்டிமார் ஆகியோர் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கின்றனர்; அதுமட்டுமா, முழு முகாமே அவர்களை கவனித்துக்கொள்கிறது. பெற்றோர்களும் உறவினர்களும் மிக அடிக்கடி சந்தித்துக்கொள்கின்றனர். இவை அனைத்தும் குடும்ப உறவுகளை பலப்படுத்துகின்றன. மேற்கத்திய நாகரிகத்தில் குடும்ப உறவுகள் பெரும்பாலும் தளர்வுறுகின்றன அல்லது முறிந்துவிடுகின்றன, ஆனால் இங்கேயோ நிலைமை மிகவும் வித்தியாசமாய் இருக்கிறது.
குள்ளர்கள் தங்களது ஆப்பிரிக்க அயலகத்தாரிடமிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்தாலும், அவர்களோடு பொருளாதார தொடர்புகளை வைத்திருக்கின்றனர். வணிகத்திற்காக தவறாமல் தொடர்புகொள்வதோடுகூட, அவர்கள் அடிக்கடி காபி மற்றும் கொக்கோ பண்ணைகளில் கூலியாட்களாக வேலைசெய்யும்படி அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சில வாரங்களுக்கு வேலைசெய்து, கூலியைப் பெற்றுக்கொண்டு, பின் வெகு காலத்திற்கு காட்டிற்குள் சென்று மறைந்துவிடலாம். இன்று காலை நீங்கள் அருந்திய காபி ஒருவேளை மத்திய ஆப்பிரிக்கக் குள்ளர்களின் கை பட்டு வந்திருக்குமோ என்னவோ, யாருக்குத் தெரியும்?
மதம்
பாபிங்காக்கள் மதப்பற்றுள்ள மக்கள்; ஆனால் அவர்களது மத வாழ்க்கையில் மூடநம்பிக்கையும் பாரம்பரியமும் தலைதூக்குகின்றன. தங்களது சடங்குகளை இசையோடும் பாட்டோடும் (இசையிழுப்புப் பாட்டு) நடனத்தோடும் அவர்கள் நடத்துகின்றனர். எட்னி—ட்ரவா ட லாம் ஏ போபல் ஆட்டோக்ரான் (இன வகுப்புகள்—மனித உரிமைகளும் உள்நாட்டு மக்களும்) என்ற புத்தகம் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது: “நடுக்காட்டில் வசிக்கும் மக்களுக்காக கடவுள் உலகை, அதாவது காட்டைப் படைத்தார். முதல் மனிதத் தம்பதியினரை படைத்த பிற்பாடு . . . அவர் பரலோகத்தில் ஓய்வெடுப்பவராய் மனித விவகாரங்களில் அக்கறை இழந்துவிட்டார். இப்போது ஓர் உன்னத ஆவியான, காட்டு தேவன், அவருக்காக செயல்படுகிறார்.” சந்தேகமில்லாமல் இது, கடவுளைப் பற்றியும் அவரது நோக்கத்தைப் பற்றியும் பைபிளில் காணப்படும் விளக்கத்திலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது.—ஆதியாகமம், அதிகாரங்கள் 1, 2; சங்கீதம் 37:10, 11, 29.
புத்திக்கூர்மையுள்ள மக்கள்
குள்ளர்களை மதிப்பு குறைவானவர்களாகவும் அதிக அறிவில்லாதவர்களாகவும் எடைபோட்டு, அவர்களை மட்டம்தட்டிப் பேசுவது அல்லது கீழானோராக பார்ப்பதும்கூட சிலருக்கு சகஜமாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் யூனிவர்ஸிட்டியைச் சேர்ந்த ஸைக்கோஃபிசிக்ஸ் பேராசிரியரான பாட்ரிக் மெரிடித் இவ்வாறு சொன்னார்: “குள்ளர்கள் எவ்வாறு அவர்களது இயற்கைச் சூழலில், நாரினால் மேம்பாலங்கள் அமைக்கின்றனர் என்பதையும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதையும் நீங்கள் பார்த்தால், உங்கள் அபிப்பிராயத்தின்படி புத்திக்கூர்மை என்பது என்ன என நீங்கள் ஒருவேளை கேட்பீர்கள்.”
மனிதவர்க்கம் முழுவதும் முதல் மனிதத் தம்பதியினரான ஆதாம் ஏவாளிலிருந்து வந்தவர்கள் என நமக்குத் தெரியும். அப்போஸ்தலர் 17:26 சொல்கிறது: ‘[கடவுள்] மனுஷஜாதியான சகல ஜனங்களையும் . . . ஒரே இரத்தத்தினாலே [ஆதாமிலிருந்து] தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்.’ மேலும், ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, ஆனால் எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்’ என அப்போஸ்தலர் 10:34, 35 குறிப்பிடுகிறது. ஆகவே, இந்த மக்களுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்ல நாம் விரும்புகிறோம்; இவ்வாறு, அநேக அடர்ந்த காடுகள் நிறைந்த ஓர் அழகான பரதீஸாக இந்த முழு பூமியும் மாறப்போகும் அந்தச் சமயத்தில் வாழும் எதிர்பார்ப்பை அவர்களும் பெறுவார்கள்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் படம்]
1. குள்ளர்களுடன் பைபிள் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்; 2. மரவேலை செய்யும் குள்ளர்; 3. குள்ளரின் குடியிருப்பு