ஐரோப்பிய நீதிமன்றம் திருத்திய தீர்ப்பு
கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
கிரீஸில் இராணுவ சேவை கட்டாயமாக செய்யப்படவேண்டும். ஏதாவது ஒரு காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், சுமார் 300 யெகோவாவின் சாட்சிகள் இராணுவ சேவை செய்ய மறுத்ததற்காக சிறையில் போடப்படுகின்றனர். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அவர்களை மனசாட்சி கைதிகளாக கருதுகிறது; அவர்களை விடுதலை செய்யும்படியும், தண்டனையற்ற, இராணுவம் சேராத சேவை செய்வதை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை இயற்றும்படியும் அடுத்தடுத்து வந்த கிரேக்க அரசாங்கங்களை அது அடிக்கடி துரிதப்படுத்தியுள்ளது.
1988-ல் இராணுவ சேவையைக் குறித்ததில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. மற்ற காரியங்களோடு, அது இவ்வாறும் நிர்ணயித்தது, “பின்வருபவர்கள் இராணுவ சேவை செய்யாமல் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்: . . . படையில் புதிதாக சேர்ந்துள்ள மத ஊழியர்கள், அறியப்பட்ட மதத்தின் துறவி அல்லது துறவிகளாக ஆவதற்கு பயற்சி எடுக்கிறவர்கள், இதிலிருந்து விலக விரும்பினால் விலகிக் கொள்ளலாம்.” கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மத ஊழியர்கள் இராணுவ சேவை செய்யாமல் இருப்பதற்கான அனுமதியை எப்போதுமே சிக்கலில்லாமல், எளிதாக பெறுகிறார்கள்; மேலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமலும், தங்களுடைய அடிப்படை மனித உரிமைகள் எவ்விதத்திலும் நசுக்கப்படாமலும் பெறுகிறார்கள். சிறுபான்மை மதத் தொகுதியின் ஊழியர்களும் இவ்விதமாகவே நடத்தப்படுவார்களா? நேரிட்ட கடினமான சோதனைக்கு சற்று கவனம் செலுத்தினால், இக்கேள்விக்கான விடை உடனே தெரியவரும்.
சட்ட விரோதமாக கைது செய்யப்படுதல்
திமிடிரியாஸ் ஸிர்லிஸும் டிமோதேயாஸ் கூலும்பாஸும் கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சென்ட்ரல் சபையின் நியமிக்கப்பட்ட மத ஊழியர்கள். இவர்கள் இச்சட்டத்திற்கு இசைவாக, 1989-ம் ஆண்டின் பிற்பகுதியிலும், 1990-ம் ஆண்டின் ஆரம்பத்திலும், இராணுவ சேவையிலிருந்து விலக்கும்படி கோரி அவரவருக்குரிய இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகங்களுக்கு விண்ணப்பித்தனர். தங்களுடைய விண்ணப்பங்களோடுகூட, தாங்கள் மத ஊழியர்களாக சேவிக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்கு தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். எதிர்பார்த்தபடியே, யெகோவாவின் சாட்சிகள், “அறியப்பட்ட மதத்தை” சேர்ந்தவர்கள் அல்லர் என்ற பொய்யான யூகத்தின் அடிப்படையில் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
சகோதரர்கள் ஸிர்லிஸும் கூலும்பாஸும் அவரவருக்குரிய இராணுவ பயிற்சி மையங்களில் ஆஜரானபோது, கீழ்ப்படியாமை என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு, ரிமாண்டில் வைக்கப்பட்டனர். அதற்குள்ளாக, இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் தீர்மானத்தைக் குறித்து எதிர்த்து இவர்கள் செய்த மேல்முறையீட்டை தேசிய பாதுகாப்பிற்கான பொது தலைமையகம் நிராகரித்தது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் புனிதப் பேரவை (Holy Synod) யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசம் அறியப்பட்ட மதத்தை சேர்ந்ததல்ல என தங்களிடம் தெரிவித்துள்ளது என்ற வாதத்தை இராணுவ அதிகாரிகள் முன்வைத்தனர்! யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் அறியப்பட்ட மதத் தொகுதியினர் என்பதாக எண்ணிக்கையற்ற சிவில் நீதிமன்றங்கள் அளித்திருந்த தீர்ப்புகளோடு இது முரண்பட்டது.
இராணுவ கோர்ட்டும்கூட, ஸிர்லிஸையும் கூலும்பாஸையும் கீழ்ப்படியவில்லை என்று குற்றம்சாட்டி நான்கு ஆண்டுகால சிறை தண்டனை விதித்தது. இரண்டு சகோதரர்களும் இத்தீர்ப்புகளை இராணுவ மேல்முறையீடு கோர்ட்டில் முறையீடு செய்தனர்; ஆனால், அது பல்வேறு காரணங்களுக்காக அவர்களுடைய முறையீட்டின் விசாரணையை மூன்று தடவை ஒத்திவைத்தது. எனினும், மறுவிசாரணை கோருவோர், சிறையிலிருந்து தற்காலிகமாக விடுதலையாவதை கிரேக்க சட்டம் அனுமதித்த போதிலும்கூட, அத்தகைய உத்தரவளிக்க அது ஒவ்வொரு முறையும் மறுத்தது.
இந்த இடைக்காலத்தில், மற்ற இரண்டொரு வழக்குகளை விசாரிப்பதன் மூலமாக சுப்ரீம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே அறியப்பட்ட மதத்தினர் என்பதன் அடிப்படையில், தேசிய பாதுகாப்பிற்கான பொது தலைமையகத்தின் தீர்ப்பை செல்லாததாக்கிற்று.
இந்த 15 மாதங்களும், ஸிர்லிஸும் கூலும்பாஸும் அவ்லோனா என்ற இடத்தில் இராணுவ சிறையிலிருந்த மற்ற சாட்சி கைதிகளுடன்கூட, மனிதத்தன்மையற்ற விதத்திலும் இழிவாகவும் நடத்தப்பட்டனர். “[கைதிகளான யெகோவாவின் சாட்சிகள்] அனுபவித்து வந்த படுமோசமான சிறை நிலைமைகளைப் பற்றி” அச்சமயத்தில் வெளிவந்த ஒரு அறிக்கை இவ்வாறு சொல்லியது: “பெரும்பாலும் கெட்டுப்போன இறைச்சி, எலி வால் ஆகியவற்றுடன் சேர்ந்து பரிமாறப்பட்ட உணவு, நிர்வாகம் தன் இஷ்டம்போல் திடீர் திடீரென்று குறைத்திடும் பார்வையாளர் நேரம், எக்கச்சக்கமான கைதிகள் அடைக்கப்பட்டதால் சிறை அறைகளின் இடப்பற்றாக்குறை போன்ற மிகக் கடுமையான தண்டனைகள் மனசாட்சியினிமித்தம் இராணுவ சேவையை ஏற்காத கைதிகளுக்கு கொடுக்கப்பட்டன.”
கடைசியில், இராணுவ மேல்முறையீடு கோர்ட், சகோதரர்கள் ஸிர்லிஸையும் கூலும்பாஸையும் விடுதலை செய்தது; ஆனால் அதே சமயத்தில், அவர்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டதற்காக அத்தேசம் எந்தவொரு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை, ஏனெனில் “விண்ணப்பதாரர்களுடைய ஒட்டுமொத்த அலட்சியத்தால்தான் ரிமாண்டில் வைக்கப்பட்டனர்” என்று அது சொன்னது. இது சட்டத்துறையில் முக்கியமான கேள்விகளை எழுப்பியது: ஒட்டுமொத்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பாளி? சாட்சிகளா, இராணுவ கோர்ட்டுகளா?
சகோதரர்கள் உடனடியாக சிறையிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, மத ஊழியர்கள் என்ற அடிப்படையில் இராணுவ படையிலிருந்தும் கடைசியாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது, திமிடிரியாஸ் ஸிர்லிஸும் டிமோதேயாஸ் கூலும்பாஸும் விடுதலை செய்யப்பட்டதை மிகவும் வரவேற்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிவித்தது. மேலும், கிரேக்க சட்டத்திலுள்ள சலுகைகளுக்கு இசைவாக எதிர்காலத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியர்கள் இராணுவ சேவை செய்யாமல் இருப்பதற்கான அனுமதியை பெறுவார்கள் என்ற தன் நம்பிக்கையையும் அது தெரிவித்தது. எனினும், சீக்கிரத்தில் அந்நம்பிக்கை தவிடுபொடியானது.
அடிக்கடி கைது செய்யப்படுதல்
இதே காரணத்துக்காக, யெகோவாவின் சாட்சிகளின் மற்றொரு நியமிக்கப்பட்ட மத ஊழியர் சற்றே வித்தியாசமான சோதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. 1991-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதி ஆனாஸ்டாஸ்யாஸ் யார்யாதிஸ் என்பவர் இராணுவ சேவையிலிருந்து தன்னை விலக்கும்படி இதே விதமாக விண்ணப்பம் செய்தார். ஆறு நாட்கள் கழித்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் புனிதப் பேரவை யெகோவாவின் சாட்சிகளை அறியப்பட்ட மதமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அதே காரணத்திற்காக, இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தது. சுப்ரீம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட் ஸிர்லிஸ், கூலும்பாஸ் ஆகியோருடைய வழக்குகளில் அளித்த அழுத்தந்திருத்தமான தீர்ப்பின் மத்தியிலும் அது இவ்வாறு செய்தது!
தேசிய பாதுகாப்பிற்கான பொது தலைமையகம் எழுதப்பட்ட தன்னுடைய பதிலில் இவ்வாறு சொன்னது: “யெகோவாவின் சாட்சிகளுடைய மதத்தை அறியப்பட்ட மதமாக கருதாத கிரேக்க சர்ச்சின் புனிதப் பேரவையினுடைய அனுபவமிக்க கருத்தின் அடிப்படையில், நிர்வாகம் [யார்யாதிஸின்] விண்ணப்பத்தை பொருத்தவரையில் சாதகமற்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறது.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
நாப்லியான் பயிற்சி முகாமிற்கு ஜனவரி 20-ம் தேதி யார்யாதிஸ் சென்றபோது, உடனடியாக அங்குள்ள ஒழுக்கவியல் சிறையில் (disciplinary cell) போடப்பட்டார். பிறகு அவர் அவ்லோனா இராணுவ சிறைக்கு மாற்றப்பட்டார்.
1992-ம் வருடம் மார்ச் 16-ம் தேதி, ஆதன்ஸிலுள்ள இராணுவ கோர்ட் யார்யாதிஸை நிரபராதியென அறிவித்தது. யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே அறியப்பட்ட மதத் தொகுதியினர் என்பதை கிரீஸிலுள்ள ஒரு இராணுவ கோர்ட் ஒத்துக்கொண்டது இதுவே முதல் தடவை. அவ்லோனா இராணுவ சிறையின் டைரக்டர் அவரை உடனடியாக விடுதலை செய்தார்; ஆனால், நாப்லியான் இராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் வேலைக்காக ஏப்ரல் 4-ம் தேதி மறுபடியும் ஆஜராகும்படி கட்டளையிட்டார். அன்று, யார்யாதிஸ் மறுபடியும் படையில் சேர மறுத்தார்; அதனால் மீண்டும் கீழ்ப்படியாமை குற்றச்சாட்டின் பேரில், இரண்டாவது முறையாக ரிமாண்டில் வைக்கப்பட்டார்; மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
1992-ம் வருடம் மே மாதம் 8-ம் தேதி, ஆதன்ஸிலுள்ள இராணுவ கோர்ட், இந்தப் புதிய குற்றவியல் வழக்கை விசாரித்து அவரை நிரபராதியென தீர்ப்பளித்தது; ஆனால், அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டதற்காக எந்தவிதமான நஷ்ட ஈடும் கொடுக்கப்படாது என்றும் அது தீர்மானித்தது. யார்யாதிஸ், அவ்லோனா இராணுவ சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்; ஆனால் மூன்றாவது தடவையாக நாப்லியான் இராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் வேலைக்காக, 1992-ம் வருடம் மே மாதம் 22-ம் தேதி, ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டார்! இராணுவத்தில் சேர மீண்டும் அவர் மறுத்தபோது மூன்றாவது முறையாக கீழ்ப்படியாமை குற்றச்சாட்டின் பேரில், ரிமாண்டில் வைக்கப்பட்டார்.
1992-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி, சுப்ரீம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே அறியப்பட்ட மதத் தொகுதியினர் என்பதன் அடிப்படையில், செப்டம்பர் 1991-ல் தேசிய பாதுகாப்பிற்கான பொது தலைமையகம் எடுத்த தீர்மானத்தை செல்லாததாக்கிற்று. 1992-ம் வருடம் ஜூலை 27-ம் தேதி, யார்யாதிஸ் கடைசியாக தெஸ்ஸலோனிகி இராணுவ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1992-ம் வருடம் செப்டம்பர் 10-ம் தேதி, தெஸ்ஸலோனிகியிலுள்ள இராணுவ கோர்ட் யார்யாதிஸை நிரபராதியென தீர்ப்பளித்தது; ஆனால் அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டது ‘அவருடைய ஒட்டுமொத்த அலட்சியத்தால்தான் நேர்ந்தது’ என்று மறுபடியும் கூறி நஷ்ட ஈட்டை அவர் பெறமுடியாமல் செய்தது.
எங்குப் பார்த்தாலும் எதிர்ப்பு அலைகள்
யார்யாதிஸின் வழக்கின்பேரில் கருத்து தெரிவிப்பதாய், ஐரோப்பிய நாடாளுமன்றம் இவ்வாறு அறிவித்தது: “சட்டத்துக்கு முன்பாக சமத்துவ கோட்பாடு, சமமாக நடத்தப்படுவதை அனுபவிக்கும் உரிமை என்பவற்றைப் பொருத்தமட்டில், இவ்வழக்கு மத ஊழியர்களான யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுகிறது.”
பிப்ரவரி 1992-ல் அம்னெஸ்டி இண்டர்நேஷனல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியருக்கு எதிராக இராணுவ அதிகாரிகளின் பாகுபாட்டின் அடிப்படையில்தானே “[ஆனாஸ்டாஸ்யாஸ் யார்யாதிஸ்] கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றுதான் நம்புவதாகவும், ஆனால் மனசாட்சியினிமித்தம் கைது செய்யப்பட்டிருப்பவரை உடனடியாக, எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கவேண்டும்” என்றும் அது கேட்டுக்கொண்டது.
யார்யாதிஸின் வழக்கு விசாரணையிலிருந்த ஒரு இராணுவ வழக்கறிஞரும்கூட இவ்வாறு சொல்லும்படியாக உந்தப்பட்டார்: “ஒரு சமூகத்தின் கலாச்சார முன்னேற்றம், அதனுடைய குடிமக்கள் உட்பட்ட சில சூழ்நிலைமைகளை அது எவ்வாறு கையாளுகிறது என்பதன்பேரில்தான் வெளிக்காட்டப்படுகிறது. கிரீஸிலிருக்கும் நாம் நம்முடைய கலாச்சார முன்னேற்றம் ஐரோப்பிய தராதரங்களுக்கு இசைவாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாலோ, முன்னேற விரும்பினாலோ சர்வதேச சட்டத்திட்டங்களோடு ஒத்துப்போகவும், தப்பெண்ணங்களை நம்மைவிட்டு ஒழிக்கவும் வேண்டும். குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கான மதிப்பில்தான் இது முனைப்பாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், உண்மையில் நடப்பவையும், நிர்வாகத்தின் யுக்திகளும், சிறுபான்மை மதத் தொகுதியினருக்கு எதிராக நிலவும் தப்பெண்ணத்தையும் மத சகிப்புத்தன்மையற்ற நிலையையும் தெளிவாக காட்டுகின்றன. இந்த வழக்கில் இது மட்டுக்குமீறி செல்கிறது.”
இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அங்கத்தினருமான இயன் வைட் இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் ‘அறியப்பட்ட மதத்தை’ சேர்ந்தவர்கள் அல்ல என்ற எண்ணம் இந்தத் தேசத்தில் அநேகருக்கு சிரிப்பை வரவழைக்கும். உண்மையில், ஓரளவுக்கு குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும்கூட, சாட்சிகள் இத்தேசத்தில் நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் அடிக்கடி வீடு வீடாக வந்து சந்திக்கிறார்கள்.” கிரீஸில் 26,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிரசங்கிக்கையில், அவர்கள் ‘அறியப்படாத மதத்தினராக’ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!
யார்யாதிஸின் வழக்கின் பேரில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பத்து அங்கத்தினர்கள், கிரீஸில் மனித உரிமைகள் இந்தளவுக்கு மீறப்படுவதைக் குறித்து தாங்கள் “அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக” எழுதியிருந்தனர்.
மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு
நிரபராதிகளென தீர்க்கப்பட்டு, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மத சம்பந்தமான பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தார்மீக முறையில் கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தார்கள். சட்டத்துக்கு முரணாக, அநியாயமாக அவர்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட மன சம்பந்தமான, உடல் ரீதியிலான சித்திரவதைகள், நீண்ட காலத்துக்கு மீண்டும் மீண்டுமாக அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டதால் விளைந்த ஒழுக்கரீதியிலான, சமூக ரீதியிலான கடும் விளைவுகள் ஆகியவை இந்த முறையீட்டிற்கு காரணமாக இருந்தன. இத்தகைய காரணங்களுக்காக அவர்கள் நியாயமான, தகுதியான நஷ்ட ஈட்டை பெறும்படி நாடினார்கள்.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கமிஷன், ஸிர்லிஸ் மற்றும் கூலும்பாஸின் வழக்கில், சுதந்திரத்திற்கும் நபரின் பாதுகாப்புக்கான உரிமை மீறப்பட்டிருக்கிறது, ரிமாண்டில் வைத்தது சட்டத்துக்கு விரோதமானது, நஷ்ட ஈட்டை பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது மற்றும் விசாரணை மன்றம் பாகுபாடற்ற முறையில் அவர்களை விசாரிக்கவில்லை என்று ஒருமனதாக முடிவு செய்தது. யார்யாதிஸுடைய வழக்கிலும்கூட இதே தீர்ப்பை கமிஷன் வழங்கியது.
அநீதி திருத்தப்படுகிறது
1997-ம் வருடம் ஜனவரி மாதம் 21-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. உள்ளூர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பத்திரிகை நிருபர்கள், கிரீஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த யெகோவாவின் சாட்சிகள் பலரும் நீதிமன்றத்தில் கூடியிருந்தார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் என்ற “ஒரு சிறுபான்மை மதத் தொகுதியினரை அங்கீகரிக்கக்கூடாது என்ற கிரேக்க அதிகாரிகளின் வரட்டு பிடிவாதத்தையும் விடாப்பிடியான மனநிலையையும்” பற்றி சாட்சிகளுக்காக வாதிட்ட வழக்கறிஞரான மிஸ்டர் பானாஸ் பிட்ஸாச்சிஸ் பேசினார். சாட்சிகளை பிரதானமாக எதிர்க்கிற கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினுடைய நோக்குநிலையில் அதிகாரப்பூர்வமாக செயலாற்றும் இந்தக் கிரேக்க அதிகாரிகளின் பழக்கத்தை அவர் நேரடியாகக் கண்டித்தார்! அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “இன்னும் எவ்வளவு தூரத்திற்குத்தான் இப்படி அனுமதிப்பது? . . . இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி அனுமதிப்பது?” அவர் பேசும்போது, “குறிப்பிட்ட மதத் தொகுதியை அங்கீகரிக்க மறுத்ததையும், இந்த மறுப்பு நேரடியாகவும், பகிரங்கமாகவும், எந்தக் காரணமில்லாமலும், சட்டத்துக்கு விரோதமாகவும், சுப்ரீம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட்டின் டஜன்கணக்கான தீர்மானங்களுக்கு எதிராகவும் இருக்கிறதென்றால் இது எந்தளவுக்கு அர்த்தமற்றது என்பதை நீங்களே அறிவீர்கள்” என்றார்.
கிரேக்க அரசாங்கத்தின் பிரதிநிதி கிரேக்க அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான மனநிலையை இவ்வாறு சொல்வதன்மூலம் உறுதிப்படுத்தினார். “உண்மையில், கிரீஸ் தேசத்தின் ஒட்டுமொத்த ஜனத்தொகையும் நூற்றாண்டுக் கணக்காக ஆர்த்தடாக்ஸ் சர்ச்சையே சேர்ந்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் சர்ச்சின் அமைப்பும், அதனுடைய ஊழியர்களின் அந்தஸ்தும், சர்ச்சில் அவர்களுடைய பங்கும் தெளிவாகத் தெரிவது இயற்கையே. . . . யெகோவாவின் சாட்சிகளுடைய சர்ச்சிலுள்ள ஊழியர்களின் நிலை அந்தளவுக்கு தெளிவாக இல்லை.” கிரீஸில் சிறுபான்மை மதத் தொகுதியினரை ஒருதலைப்பட்சமாக நடத்துவதைப் பற்றி எத்தகைய பகிரங்கமான ஒப்புதல் இது!
மத சுயாதீனம் நிலைநிறுத்தப்படுகிறது
மே மாதம் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதித்துறை பிரஸிடென்ட் மிஸ்டர் ரால்ப் ரூய்ஸ்டால் தீர்ப்பை வாசித்தார்: ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கோர்ட், ஐரோப்பிய அவையின் 5, 6 விதிகளை கிரீஸ் மீறியிருந்ததை ஒருமனதாக ஒத்துக்கொண்டது. நஷ்ட ஈடாகவும் செலவுகளுக்காகவும் சுமார் 72,000 டாலரை விண்ணப்பதாரர்களுக்கு கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மிக முக்கியமாக, மதசம்பந்தமான சுயாதீனத்தின் சார்பாக அநேக குறிப்பிடத்தக்க வாதங்களை உடையதாய் இருந்தது.
சுப்ரீம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட் தீர்ப்பின்படி கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள், “அறியப்பட்ட மதத் தொகுதியினராக” அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மையை “இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே அசட்டை செய்திருக்கின்றனர்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அது மேலும் இவ்வாறு குறிப்பிட்டது: “யெகோவாவின் சாட்சிகளை, ‘அறியப்பட்ட மதத்தினராக’ அங்கீகரிக்கக்கூடாதென்கிற குறிப்பிட்ட அதிகாரிகளின் பிடிவாதமும், விண்ணப்பதாரரின் சுதந்திரத்திற்கான உரிமையை அசட்டை செய்ததும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ஊழியர்கள் இராணுவ சேவை செய்யாமல் இருப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் விதத்தோடு ஒப்பிடுகையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.”
இவ்வழக்கை கிரீஸ் நாட்டு மீடியா மிகப் பரவலாக விளம்பரப்படுத்தியது. ‘யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமையைக் குறித்து கிரீஸை ஐ[ரோப்பிய] கோர்ட் வன்மையாக சாடுகிறது’ என்று ஆதன்ஸ் நியூஸ் குறிப்பிட்டது. ஸிர்லிஸ் மற்றும் கூலும்பாஸ் மற்றும் யார்யாதிஸ் vs. கிரீஸ் வழக்கின் தீர்ப்பானது ஐரோப்பிய கோர்ட்டின் தீர்ப்புக்கு இசைவாக கிரேக்க தேசம் தன்னுடைய சட்டத்தை அமைக்குமென்றும், அதனால் கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நிர்வாகம், இராணுவம், சர்ச் ஆகியவற்றினுடைய தலையீடில்லாமல் மத சுயாதீனத்தை அனுபவிக்கலாமென்றும் நம்பிக்கை அளிக்கிறது. கூடுதலாக, மத சுயாதீனத்தோடு தொடர்புடைய விஷயத்தில் இது ஐரோப்பிய நீதிமன்றத்தால் கிரீஸ் நீதித்துறைக்கு எதிராக கொடுக்கப்பட்ட மற்றொரு தீர்ப்பாகும். a
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சுயாதீனத்தை போற்றுகிறார்கள்; அதை கடவுளை சேவிப்பதற்கும் தங்களுடைய அயலாருக்கு உதவுவதற்கும் பயன்படுத்த முயலுகிறார்கள். இந்த மூன்று மத ஊழியர்களும் பொருள் சம்பந்தமான லாபத்திற்காக அல்ல, ஆனால் முற்றுமுழுக்க ஒழுக்க மற்றும் தார்மீக காரணங்களுக்காகவே மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் தங்களுடைய வழக்கைத் தொடர்ந்தனர். எனவே, தங்களுக்கு கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையை யெகோவாவின் சாட்சிகளுடைய கல்விபுகட்டும் வேலையை முன்னேற்றுவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த மூவருமே தீர்மானித்திருக்கிறார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a முதல் தீர்ப்பு, கோக்கீனாக்கீஸ் vs. கிரீஸ் என்ற வழக்கில் 1993-ம் ஆண்டில் வழங்கப்பட்டது; இரண்டாவது தீர்ப்பு மானூஸாகிஸ் மற்றும் மற்றவர்கள் vs. கிரீஸ் என்ற வழக்கில் 1996-ம் ஆண்டு வழங்கப்பட்டது.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐயும் விழித்தெழு! மார்ச் 22, 1997, பக்கங்கள் 14-16-ஐயும் காண்க.
[பக்கம் 20-ன் படக்குறிப்பு]
எஸ்தர் மற்றும் திமிடிரியாஸ் ஸிர்லிஸ்
[பக்கம் 21-ன் படக்குறிப்பு]
டிமோதேயாஸ் மற்றும் நாப்ளிகா கூலும்பாஸ்
[பக்கம் 22-ன் படக்குறிப்பு]
ஆனாஸ்டாஸ்யாஸ் மற்றும் கௌலா யார்யாதிஸ்