அணைந்த தீபமான கலங்கரை விளக்க காவலர் பணி
கனடா நாட்டிலிருந்து விழித்தெழு! நிருபர்
“என்னதான் இருந்தாலும் எனக்கு இந்த வேலைதான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள் கலங்கரை விளக்கின் காவலர்கள். கனடா நாட்டு, டோரன்டோவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஒருவர் மேனேஜர் பதவியில் இருந்தார். 106 வருட பழமையான ஒரு கலங்கரை விளக்கத்திற்கு காவலராக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் தன் பதவியைக்கூட தூக்கி எறிந்துவிட்டார். தனக்கு அந்த வேலை கிடைத்ததால், “அப்பாடா, இப்போ எனக்கு ஒரு பத்து வயசு குறைஞ்சமாதிரி இருக்கு” என்றார்.
கலங்கரை விளக்க காவலர்களின் ரொம்ப முக்கியமான வேலை: கடலில் பயணம் செய்பவர்களுக்கு விளக்கு வெளிச்சம் பளிச்சென்று தெரிகிறதா என்று பார்த்துக்கொள்வது. மேகமூட்டமாக இருந்தால் அதை எச்சரிக்க அபாய சங்கை இயக்கி, தொடர்ந்து ஒலிக்கும்படி செய்வது. அதோடுகூட மீனவர்களுக்கும், அந்த வழியே போகிற கப்பல்களுக்கும் ரேடியோ கருவி மூலம் வானிலை அறிக்கையைத் தெரிவிக்க வேண்டும்.
முன்பெல்லாம், கலங்கரை விளக்க காவலர்கள் நிறைய எண்ணெய்யை தங்கள் வசம் ஸ்டாக் வைத்திருப்பார்கள். விளக்குத் திரிகளை ஏற்றி, கறும்புகை படியாமல் பளிச்சென்று இருக்கும் விளக்கு சிமினிகளை வைத்திருப்பார்கள். கலங்கரை விளக்கத்தில் உள்ள விளக்குகள் பழுதடைந்துவிடும். அவற்றை உடனே பழுதுபார்க்கவும் முடியாது. ஆனாலும் கப்பலை பாதுகாப்பாக கரை சேர்க்க அந்தக் காவலர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டு ஆட்டுவார்கள். அல்லது மேகமூட்டத்தை எச்சரிக்கும் கருவி பழுதடைந்துவிடும். அப்போது ஒரு சுத்தியலைக் கொண்டு எச்சரிக்கை மணியை ஓயாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இப்படி செய்வது ஒருநாளா இரண்டுநாளா, அடிக்கடி இப்படி செய்யவேண்டி வரும்!
புயலின் சீற்றம் கண்டும் தொடரும் சேவை
கடும் புயல்களே இவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தன. ஒருமுறை “பெரிய வெண் மேகமூட்டம்தான்” வருகிறது என்று காவலர் ஒருவர் நினைத்துக்கொண்டிருந்தார், ஆனால் வந்ததோ ஒரு பெரிய இராட்சத அலை! வந்த அலை 15 மீட்டர் உயரத்திற்கு எழும்பி, காவலர் குடியிருப்பின்மீது படார் என்று மோதிவிட்டு சென்றது. ஒரு முழு புயல் அடித்தால் எவ்வளவு நாசம் விளையுமோ அந்த அளவுக்கு அந்த ஒரேயொரு அலை நாசத்தை ஏற்படுத்திவிட்டு போனது.
இது இன்னொரு சம்பவம். நோவா ஸ்காடியாவிலுள்ள பப்னிகோ துறைமுகத்தில் ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது. அங்கு ஒருநாள் இராத்திரி முழுவதும் பேய் காற்று வீசியது. அலைகள் கலங்கரை விளக்கத்தின்மீது வந்து வந்து மோதிக்கொண்டே இருந்தன. காவலராலும் அவர் குடும்பத்தினராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் எப்போது பொழுது விடியுமோ என்று காத்திருந்தார்கள். காலையில் புயல் ஓய்ந்தது. ஆனால், அந்தக் காவலர் வெளியே வந்து பார்த்ததும் அவருக்கு ஒரே அதிர்ச்சி. கலங்கரை விளக்கத்தை சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு. ஐயோ பாவம், அவர்கள் நிலப்பரப்பிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டிருந்தார்கள்!
தனிமையும் சலிப்பும்
இப்படி தனியா இருக்கிறது இவர்களுக்கு கஷ்டமா இருக்காதா என்று கேட்டபோது, காவலர் ஒருவர் மெல்ல சிரித்தவாறு இவ்வாறு சொன்னார்: “ஜனங்க எங்கள பார்த்து, ‘அம்மாடியோ, எப்படித்தான் உங்களாலே இப்படி தனியா இருக்க முடியுதுனு?’ கேட்பாங்க. அதற்கு நாங்களும் அவங்கள பார்த்து, ‘ஒரே கூச்சலும் குழப்பமும் இருக்கிற அந்த நகரத்தில நீங்க எப்படித்தான் இருக்கீங்களோனு?’ திருப்பி கேட்போம்.”
அந்தக் காலத்திலே அமெரிக்க மாநிலங்களில் இப்படி ரொம்ப தூரத்தில் இருந்த கலங்கரை விளக்கங்களுக்கு புத்தகங்களை கொடுத்து, சின்ன சின்ன நூல்நிலையங்கள் அமைத்து கொடுத்தார்கள். இப்படியாக, 1885-ல் 420 நூல்நிலையங்கள் இயங்கின. அப்படியென்றால் கலங்கரை விளக்க காவலர்கள் எல்லாம் நல்ல வாசகர்களாக ஆனார்கள்.
அணைந்த தீபமான தொழில்
கல், மண், காரை என்று கட்டப்பட்ட கோபுரத்தில், மனிதன் விளக்கேற்றி வைத்த கலங்கரை விளக்கங்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் கண்கூச செய்யும் அபார சக்தியுள்ள விளக்குகளோடு ஸ்டீலால் செய்யப்பட்ட உயரமான கோபுரங்களே காட்சியளிக்கின்றன. கடலில் பயணிக்கும் ஆட்கள் இனி இருட்டிலே தலையை நீட்டி, எங்கேயாவது மங்கலா ஒளியைப் பார்க்க முடிகிறதா அல்லது மேகமூட்டத்திற்கு இடையே கொஞ்சமாவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று சக்திவாய்ந்த டங்ஸ்டன் ஹெலஜன் (tungsten halogen) விளக்குகள் ஜகஜோதியாய் எரிகின்றன. மேகமூட்டத்தை ஊடுருவி சென்று, பெரும் ஒலி எழுப்பும் கருவிகளும் வந்து விட்டன. இவையெல்லாம் கடல் பயணிகளை கடல் ஆபத்துகளிலிருந்து எச்சரிக்கின்றன.
மேகமூட்டம் எவ்வளவுதான் அடர்த்தியாய் இருந்தாலும் இத்தகைய ஒளி நிலையங்களில் (light stations) இருந்து சிக்னல்களை பெற்று, நிலவரத்தை அறிந்துகொள்ளும் வசதி இன்று கப்பல்களில் உள்ளது. பயங்கரமான மணல் திட்டுகள், ஆபத்தான கடற்பாறை தொடர்கள் (reefs), கடற்கரையருகில் மறைந்திருக்கும் பாறைகள் ஆகியவற்றை தவிர்த்து தன்னால் கப்பலை பத்திரமாக கரைசேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இன்றைய நவீன தொழில்நுட்பம் கப்பலோட்டிக்கு தந்துள்ளது. அவரும் பல கடற்கரைகளைத் தொட்டுவிட்டு வருகிறார்.
நவீன தொழில்நுட்பத்தின் வருகையால் கலங்கரை விளக்க காவலர் பணி கிடுகிடுவென்று மறைந்து வருகிறது. 25 வருடங்களாக குடியிருந்த தீவை விட்டு வரவேண்டிய நிலை கலங்கரை விளக்க காவலர் ஒருவருக்கு ஏற்பட்டபோது, அவர் தன் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயமே நிரந்தரமாக முடிந்துவிட்டதாக நினைத்தார். அவர் தன் வருத்தத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்: “இங்கே நாங்க ரொம்ப திருப்தியான வாழ்க்கையை அனுபவிச்சோம். விட்டுவர எங்களுக்கு மனசே இல்ல.”
சுழல் விளக்குகள், துணை விளக்குகள் (subsidiary lights), அவசர விளக்குகள், எச்சரிக்கை ஒலி கருவிகள், ரேடார் ஒலி கருவிகள் என்று எத்தனையோ வந்துவிட்டாலும், இவற்றிற்கும் அவ்வப்போது சர்வீஸிங் தேவை. ஒளி நிலையங்களையும் பராமரிக்க வேண்டும். இப்போதெல்லாம் டெக்னீஷியன்கள் வருவார்கள், ஒளி கோபுரங்களை சர்வீஸிங் செய்வார்கள், போய்விடுவார்கள்.
அகஸ்டா, மெய்ன் என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் தன் சோகத்தை இவ்வாறு வெளிக்காட்டினார்: “கலங்கரை விளக்கத்தில் முன்பு இருந்த அந்தப் பழையதோற்றம் இனி எங்கே வரப்போவுது. அப்போ மனுஷன் இருந்து விளக்கேத்தி வச்ச கலங்கரை விளக்கத்திலே இனி கம்ப்யூட்டர் இருந்து இயக்கப் போகிறது.” கலங்கரை விளக்க காவலர்களாக பல வருடம் பணியாற்றியவர்களின் சேவையை மதிக்கும் ஆட்கள் நிச்சயம் இவரது சோகத்தை உணர்ந்து கொள்வார்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி]
முதல் கலங்கரை விளக்கம்
எகிப்தின் இரண்டாம் தாலமி என்பவரது ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கலங்கரை விளக்கமே முதன் முதலாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கலங்கரை விளக்கம். அது சுமார் பொ.ச.மு. 300-ல் கட்டப்பட்டது. ஃபாரஸ் என்ற தீவில், அதாவது இப்போதுள்ள அலெக்ஸாந்திரியா துறைமுகத்தின் முகப்பில் அது நிறுவப்பட்டது. அதை கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆயின; ஆன செலவோ 25 லட்சம் அமெரிக்க டாலர்.
அதன் உயரம் சுமார் 150 மீட்டர் இருந்தது என்ற விவரம் வரலாற்று பதிவிலிருந்து தெரியவருகிறது. அதன் உச்சி அடுக்கில் கடலை நோக்கிய வண்ணம் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. கண்ணாடிக்கு பின்னால் எரிக்கப்பட்ட விறகுகள் அல்லது ஒருவேளை தீ பந்தங்கள் உமிழ்ந்த வெளிச்சம் 50 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் வரை தெரிந்தது என்ற விவரத்தை ஜோஸிபஸ் அறிவிக்கிறார்.
கல்லால் ஆன இந்தப் பிரமாண்டமான கோபுரம், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அதன் பிரகாசமான நெருப்பு, 1,600 வருடங்களுக்கு எச்சரிக்கை அளித்து வந்தது, ஆனால் கடைசியில், அழிந்து போனது. அநேகமாக பூமி அதிர்ச்சிதான் அதை விழுங்கிவிட்டிருக்க வேண்டும்.
நூற்றாண்டுகள் கடந்து செல்ல செல்ல, உலகெங்கும் வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் ஆயிரக்கணக்கான கலங்கரை விளக்கங்கள் துறைமுகங்களில் தோன்றின. கல், மண், காரை என்று கட்டப்பட்ட அந்தக் காலத்து கலங்கரை விளக்கங்கள் இன்றும் அருங்காட்சியகங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேசிய பூங்கா, மாநிலப் பூங்கா, நகரப் பூங்கா என விதவிதமான பூங்காக்களில் அவை காணப்படுகின்றன. இவற்றை லட்சக்கணக்கான மக்கள் வந்து சந்தோஷமாய் பார்த்துவிட்டு போகிறார்கள்.
[பக்கம் 10-ன் படம்]
கனடா, நியூபௌண்ட்லாந்திலுள்ள கேப் ஸ்பியர் கலங்கரை விளக்கம்