பல் சீரமைப்பு என்ன உட்பட்டிருக்கிறது?
உங்களுடைய பற்கள் முக்கியமானவை! உண்டு களிக்கவும் பேசி மகிழவும் அவை உங்களுக்குத் தேவை; இனிதாய் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும்கூட அவை முக்கியமானவை.
கோணல்மாணலான பற்கள், உணவைச் சவைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்; அவை ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் காரணமாகலாம்; தெளிவற்ற பேச்சுகளுக்கும்கூட பொறுப்பாகலாம். சிலருக்கு, கோணல்மாணலான பற்கள், பொதுவான நலனைப் பாதிக்கும் குறையாக இருக்கலாம்; ஏனெனில், சிரிக்கும்போது கோணல்மாணலான பற்கள் யாவும் வெளியில் தெரிவதால், அது தங்கள் சிரிப்பையே கெடுப்பதுபோல் நினைத்துக்கொள்வதால், தங்குதடையின்றி பேசி மகிழ்வதில் அவர்களுக்குச் சிரமம் இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கண்டிருக்கின்றனர்.
உங்களுடைய பற்கள் சீராக இராவிட்டால் என்ன செய்வது? யார் உங்களுக்கு உதவுவது? எந்த வயதில் சரிசெய்வது? எப்படிப்பட்ட சிகிச்சை அளிப்பது? அது வேதனை தருமோ? எப்பொழுதுமே சரிசெய்ய வேண்டியது அவசியமா?
பல் மருத்துவத்தின் ஒரு பிரிவு
இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கையாளும் பல் மருத்துவப் பிரிவு, பல் சீரமைப்பு (orthodontics) என அழைக்கப்படுகிறது. இது கோணல்மாணலான பற்களைச் சீராக்கும் பணியை ஏற்கிறது.
பல் சீரமைப்பின் முக்கிய பணிகள் யாவை? பிரச்சினைகளைக் கண்டறிவதும் தடுப்பதும், பல் சீரமைக்கும் கருவிகள் செய்வதுமே இதன் முக்கிய பணியாகும்.
நெருக்கமான, கோணல்மாணலான, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள் ஆகியவற்றின் பிரச்சினை பண்டைய காலத்து மக்களுக்கும் இருந்தது; பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டிலிருந்தே இவற்றுக்கான சிகிச்சைக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. கிரேக்க மற்றும் இட்ருரிய புதைபொருள் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால பல் சீரமைப்பு கம்பிகளும் அடங்கியுள்ளது ஆச்சரியமூட்டுகிறது.
இன்று, உலகின் பெரும்பாலான பகுதிகளில், பல் சீரமைப்பு மருத்துவர்கள் என அழைக்கப்படும், நிபுணத்துவம் பெற்ற பல் மருத்துவர்கள், கோணல்மாணலான பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றனர். அவர்களுக்கு, பற்கள் மற்றும் தாடைகள், அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் திசுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியையும் சீரமைப்பையும் பற்றிய கணிசமான அறிவு தேவை.
பல் சீரமைப்பின் பணி
“பல் மற்றும் முகத் தோற்றத்தில் உட்பட்ட, வளர்ந்துவரும் மற்றும் வளர்ந்துமுடிந்த அமைப்புகளில், மேற்பார்வை, வழிகாட்டல், சீரமைத்தல் ஆகியவற்றுக்குத் தேவையான பணியைச் செய்யும் துறையே” பல் சீரமைப்பு என வரையறுக்கப்படலாம். இது, “விசைகளைச் செலுத்துவதன் மூலமாக, பற்களுக்கு இடையிலும், பற்களுக்கும் முக எலும்புகளுக்கும் இடையிலும் உள்ள உறவுகளை மாற்றியமைப்பதை, மற்றும்/அல்லது மண்டையறையோடு சேர்ந்திருக்கும் முகப் பகுதி அமைப்புக்குள் பணி செய்யும் ஆற்றல்களைத் தூண்டுவதை, திசைமாற்றத்தை ஏற்படுத்துவதை” உட்படுத்துகிறது. ஆம், இதுவே இத்துறையைப் பற்றிய வரையறை; என்றாலும் இது நுட்பமான வரையறை.
ஆகவே பல் சீரமைப்பில், பற்களின்மீது அல்லது அவற்றைச் சுற்றியுள்ள அமைப்புகளின்மீது விசைகள் செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நோயாளியின் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கும் ஏற்றவாறு, பற்களையோ, எலும்புகளையோகூட சரியான நிலைக்குள் அழுத்தி சீர்செய்யும், அவரவரது ஆர்டருக்கேற்ற கருவிகளின் மூலம் இவ்வாறு செய்யப்படுகிறது.
பற்களைச் சுற்றியுள்ள எலும்பில், அழிக்கும் செல்கள் என்று பொருள்படும் ஆஸ்டியோகிளாஸ்ட்டுகள் (osteoclasts) செல்களும், ஆக்கும் செல்கள் என்று பொருள்படும் ஆஸ்டியோபிளாஸ்ட்டுகள் (osteoblasts) செல்களும் உள்ளன. கம்பிகளால் உருவாக்கப்படும் விசைகளின் விளைவாக, அழிக்கும் செல்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது; அதாவது, அழுத்தப்படும் பகுதிகளில் எலும்புத் திசு அழிக்கப்படுகிறது. இழுக்கப்படும் பகுதிகளிலோ, இடையில் ஏற்படும் வெற்றிடம், ஆக்கும் செல்களின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய எலும்பால் மேவப்படுகிறது. இவ்வாறு, பற்கள் மெதுவாக நகருகின்றன.
கம்பி, ரெசின், ஒருவேளை எலாஸ்டிக்காலும்கூட செய்யப்பட்ட ஓர் அயல் உறுப்பை மாதக்கணக்கில் வாயில் பொருத்தியிருப்பது அசௌகரியமாய் இராதா? கருவிகள் பொருத்தப்படுகையில் அல்லது மாற்றி அமைக்கப்படுகையில், அவை ஆரம்பத்தில் ஓரளவு அசௌகரியத்தை ஏற்படுத்தும்; ஆனால், சிறிது காலத்துக்குப் பின்பு ஒருவருக்கு அது பழக்கமாகிவிடும். பொதுவாக, கம்பிகள் கட்டப்பட்ட எவருக்குமே நாளடைவில் அது பழக்கமாகிவிடும்.
எப்பொழுது ஒருவருக்கு சிகிச்சை தேவை?
சிறுவர்களில் காணப்படும் அசாதாரண கடிகளோ, தவறான அடைப்புகளோ, வளர்ந்தபிறகும் எல்லா சூழ்நிலைகளிலும் தொடருவதில்லை. சிலவகை சீரற்ற பல்வரிசைகள் தானாகவே சீரடையும் பாங்குள்ளவை. உண்மையில், உதிரும், அல்லது பால் பற்களிலிருந்து நிரந்தர பற்கள் தோன்றும் காலப்பகுதியின்போது, வாயின் முன்பகுதியிலிருக்கும் நிரந்தர பற்கள் பொதுவாக நெருக்கமாய் வளரும் பாங்குடையவை; ஏனெனில் மாற்றீடு செய்யும் பற்களைக் காட்டிலும் இவை பெரியவை.
என்றாலும், நிரந்தர ஈரிதழ் பற்கள் மாற்றீடு செய்யும் பற்களான, உதிரும் கடைவாய் பற்கள் விழுந்தபிறகு, அந்தந்தப் பற்களின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. பற்களைப் பயன்படுத்தும் அளவுக்கும், தசை அமைப்பின் செல்வாக்குக்கும் ஏற்ப, பற்கள் தங்களைத் தாங்களே சீராக அமைத்துக்கொள்ளும். ஆகவே, நீங்கள் ஒரு பெற்றோரானால், ஆரம்பத்தில் கோணல்மாணலாய் வளருவதாகத் தெரியும் உங்கள் பிள்ளையின் நிரந்தர பற்களைக் கண்டு பயந்துவிடாதீர்கள். ஏதாவது செய்யப்பட வேண்டுமா என்பதை பல் சீரமைப்பு மருத்துவரே தீர்மானிக்க வேண்டும்.
இளம் நோயாளிகளுக்கு எப்பொழுது சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தில் பல் சீரமைப்பு மருத்துவர்கள் வேறுபடுகின்றனர். சின்னஞ்சிறு வயதில் (4-6 வயது) சிகிச்சை அளிக்கலாம் என சிலர் சொல்கின்றனர். வளர்ச்சியின் முடிவுகட்டமான, பருவ வயதை அடையும் காலப்பகுதியின்போது (12-15 வயது) சிகிச்சை அளிக்கலாம் என மற்றவர்கள் சொல்கின்றனர். இன்னும் பிறர், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோவொரு வயதில் சிகிச்சை அளிக்க வேண்டும் என நம்புகின்றனர்.
சிறுவர்களுக்கு மட்டுமல்ல
என்றாலும், பல் சீரமைப்பு வெறுமனே சிறுவர்களுக்கு மட்டுமே உரியதல்ல. வயது வந்தவர்களுக்கும்கூட கோணல்மாணலான பற்களால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பற்களும் அவற்றைத் தாங்கியுள்ள அமைப்புகளும் ஆரோக்கியமாய் இருக்கும் பட்சத்தில், நீங்கள் சிரிக்கும் விதத்தை எந்த வயதிலும் சீர்செய்யலாம்.
கோணல்மாணலான பற்களால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன? குறைந்தபட்சம் மூன்று விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவையாவன: (1) தோற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்; (2) செய்யும் பணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்; இவை, தாடை அசைவுகளில் சிரமங்களையும் (வலியாலும் தசை ஒத்திசைவு இல்லாததாலும் ஏற்படுபவை) உட்படுத்துகின்றன; அத்துடன், சவைப்பதில் பிரச்சினைகள், மேலும் வார்த்தையை உச்சரிப்பதிலும் பேச்சை உருவாக்குவதிலும் ஏற்படும் பிரச்சினைகள்; (3) வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்களால் ஏற்படும் காயங்களின் மிகப் பெரிய அபாயமும், பல்லைச் சுற்றியிருப்பவற்றின் நோய் (ஈறு சம்பந்தப்பட்ட நோய்) ஏற்படும் மிகப் பெரிய அபாயமும், தவறான அடைப்புகளால் ஏற்படும் பூச்சிப் பல் மற்றும் பற்சிதைவு, பல்தேய்வு ஆகியவற்றின் அபாயமும்.
அத்துடன், முதுகெலும்பின் (குறிப்பாக கழுத்து பாகம்) நிலையாலும், உடலின் பிற பகுதியில் தசைகளின் பணியில் ஏற்படும் பிரச்சினையாலும் தவறான அடைப்புகள் தோன்றுவதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது? அது எவ்வளவு காலம் நீடிக்கிறது?
சிகிச்சை காலமும் முறைகளும்
உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளில் எவருக்கோ, பல் சீரமைப்பு மருத்துவரின் தேவை ஏற்பட்டிருப்பதாக நினைத்தால், நீங்கள் நம்பத்தகுந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். பிரச்சினை எந்தளவுக்கு இருக்கிறதோ அதற்கேற்பவும், பயன்படுத்தும் முறைக்கேற்பவும் சிகிச்சைக் காலம் மாறுபடும்; ஆனால் ஒருவேளை அது பல மாதங்களுக்கோ, பல ஆண்டுகளுக்கோகூட நீடிக்கும்.
எளிதாக்கும்பொருட்டு, சிகிச்சைக்கான கருவிகளை இரு தொகுதிகளாக பிரிக்கலாம். அவையாவன: நீக்கத்தக்க கருவிகள், நிலையான கருவிகள். நீக்கத்தக்க கருவிகளை நோயாளி வெளியே எடுத்துவிட்டு பிறகு மறுபடியும் பொருத்திக்கொள்ளலாம்; நிலையான கருவிகளோ, பற்களுடன் சொல்லர்த்தமாகவே சிமெண்டு பூசப்பட்டதைப்போல் பொருத்தப்பட்டு, மிகவும் சிக்கலான பல் அசைவுகளையும் செயல்படுத்துகின்றன.
அழகியல் கோட்பாடு துறையில், ஆராய்ச்சி மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது; ஆகவே இன்று அநேக “இயல்பான தோற்றத்தைக் கொடுக்கும்” கருவிகள் உள்ளன. சிலவற்றைக் காணமுடியாது; ஏனெனில் அவை பற்களின் நிறத்திலேயே இருக்கின்றன; மற்றவை நாக்குப் பகுதி எனப்படும், நாக்கையடுத்த பக்கங்களில் உட்புறமாக பொருத்தப்படுகின்றன, ஆகவே வெளியில் தெரிவதில்லை. இப்படிப்பட்ட முறைகள், காண இயலா பல் சீரமைப்பு என அழைக்கப்படுகின்றன.
மிக சிரமமான பல் நோய்களில், கம்பிகளின் உதவியால் எதிர்பார்க்கப்பட்ட விளைவைப் பெற முடியாமல் இருக்கையில், பல் சீரமைப்பு மருத்துவர், வாய் மற்றும் முகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அறுவை மருத்துவரின் உதவியைக்கூட நாடலாம். முகத்தை வடிவமைக்கும் எலும்புகளை சொல்லர்த்தமாகவே நகர்த்தும் ஓர் அறுவைசிகிச்சையை அவர் செய்யலாம்.
இன்று, பல் சீரமைப்பு, பல் மற்றும் தாடை பிரச்சினை உடையோரது பல தேவைகளைத் திருப்தி செய்யலாம்; தங்கள் பற்கள் வெளியே தெரிந்துவிடுமோ என அஞ்சி சிரிக்காமல் இருந்திருப்பவர்களும்கூட நன்றாக சிரிக்கக்கூடியவாறு செய்யப்படும் மருத்துவமும் இதில் அடங்கும். உண்மையில், ஒருவருக்கு பல் சீரமைப்பு மருத்துவம் தேவையா இல்லையா என்பது அவரவர் செய்யும் தீர்மானமே.
தற்போதைக்கு, உடல்ரீதியில் அபூரணத்தைக் கருத்தில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இவற்றுள் சில, சீரமைப்பு மருத்துவத்தின் மூலம் சரிசெய்யப்படலாம். இருந்தபோதிலும், கடவுளுடைய புதிய உலகில், வாய் சார்ந்த நோய் உட்பட, முற்றிலுமாகவும் நிரந்தரமாகவும் அபூரணத்தின் விளைவுகள் நீக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கலாம். அதன் பிறகு, பரிபூரண ஆரோக்கியத்தையுடைய அந்தப் புதிய ஒழுங்குமுறையில், நாம் ஒவ்வொருவருமே, சந்திக்கும் அனைவரிடமும், நம்பிக்கையுடன் ஓர் இனிய, சிநேகப்பான்மையான சிரிப்பைச் சிந்த முடியும்.
அந்தக் காலத்தைப் பற்றி பைபிள் பின்வருமாறு முன்னுரைக்கிறது: “பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.” (ஏசாயா 14:7) நிச்சயமாகவே, அப்படிப்பட்ட மகிழ்ச்சியுடனும் களிப்புடனும், அழகிய புன்னகைகளும் பூக்கும்!
[பக்கம் 25-ன் படம்]
(1) கடைவாய் பற்களைப் பின்னோக்கி நகர்த்துவதற்கெனவும் (2) தாடை வளர்ச்சியைத் தூண்டுவதற்கெனவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் காட்சி
1
2
[பக்கம் 26-ன் படம்]
கடிக்கும்போது மூடும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்ட கம்பிகள்