உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 5/8 பக். 3-5
  • மழைக்காடுகளை மொட்டையடித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மழைக்காடுகளை மொட்டையடித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “பாலைவன மரங்கள்”
  • நிலம், மரம், மாட்டிறைச்சி சாண்ட்விட்ச்
  • காட்டைக் காக்க என்ன செய்வது?
  • மழைக்காட்டில் சோக மழை
    விழித்தெழு!—1997
  • மழைக் காடுகளை அழிப்பது யார்?
    விழித்தெழு!—1991
  • மழைக்காடுகளின் பயன்கள்
    விழித்தெழு!—1998
  • மழைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 5/8 பக். 3-5

மழைக்காடுகளை மொட்டையடித்தல்

முன்னொரு காலத்தில், பச்சைப்பசேல் என்று செழித்தோங்கிய ஒரு பகுதி, நம் கோளத்தை அணிகலனாய் அலங்கரித்தது; அங்கே எல்லாவிதமான மரங்களும் காணப்பட்டன. அகன்ற நதிகளோ, சரிகை போன்று அவ்வழகுக்கு அழகூட்டின.

அது, இயற்கையில் அமைந்துவிட்ட பிரமாண்டமான பசுமை வீட்டைப்போல (greenhouse), எழில்கொஞ்சும் பல்வகைமையின் ராஜ்யமானது. உலகிலிருந்த விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சியினங்கள் ஆகியவற்றில் பாதிக்குப்பாதி அங்குதான் உயிர்வாழ்ந்தன. அது, உலகிலேயே வளம் குன்றாத பகுதியாய் இருந்தபோதிலும், எளிதில் அழியத்தக்கதாகவே—எவரும் கற்பனை செய்ய முடியாத அளவு மிக எளிதில் அழியத்தக்கதாகவே—இருந்தது.

வெப்பமண்டல மழைக்காடு என நாம் இப்பொழுது அழைக்கும் அந்தப் பகுதி, பிரமாண்டமானதாயும், சொல்லப்போனால் அழிக்கப்பட முடியாததாயும் தோன்றியது. ஆனால், அது அவ்வாறு நிரூபிக்கவில்லை. முதன்முதலாக கரிபியன் தீவுகளிலிருந்த மழைக்காடு அழிய ஆரம்பித்தது. 1671-ம் ஆண்டு முதற்கொண்டே, அதாவது டோடோ பறவை இனம் மறைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பார்படாஸ் தீவுகளில் கரும்பு சாகுபடிக்காக காடுகள் அழிக்கப்பட்டன. a அப்பகுதியிலிருந்த மற்ற தீவுகளிலும் இதைப் போலவே மழைக்காடுகள் அழிக்கப்பட்டதானது, 20-ம் நூற்றாண்டில் உலகளாவிய விதத்தில் வெகுவாக காடுகள் அழிக்கப்படும் போக்கிற்கு ஓர் ஆரம்பமாகவே இருந்தது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்த வெப்பமண்டல மழைக்காடுகள், இன்று 5 சதவீதத்தை மட்டுமே அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், இங்கிலாந்தின் அளவைக் காட்டிலும் பரந்த நிலப்பரப்பு, அல்லது 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவான நிலப்பகுதி அழிக்கப்படுகிறது, அல்லது தீக்கிரையாக்கப்படுகிறது. இவ்வாறு, திகைக்க வைக்கும் வேகத்தில் இது அழிக்கப்படுவதானது, டோடோ பறவை இனத்துக்கு ஏற்பட்ட அவல முடிவைப் போலவே, மழைக்காடும்—அதை அண்டிப் பிழைக்கும் விலங்கினங்களோடு—மறைந்துவிடுமோ என்று நம்மைக் கலக்கமுறச் செய்கிறது. “இக்காடு இன்ன வருடத்தில் மறையும் என்று எவரும் உறுதியாக சொல்ல முடியாது; ஆனால், ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இக்காடு மறைந்துவிடும்” என எச்சரிக்கிறார் பிரேஸிலைச் சேர்ந்த மழைக்காட்டு ஆய்வாளர் ஃபிலிப் ஃபெர்ன்ஸைட். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது டையனா ஜீன் ஸ்கீமோ அறிக்கை செய்ததாவது: “பிரேஸிலில் இந்த ஆண்டு செய்யப்படும் கபளீகரம், இந்தோனீஷியாவுக்கு நேரிட்டிருப்பதைக் காட்டிலும் அதிகம்; அங்கு பெருநகரங்களை திக்குமுக்காடச் செய்த பின்னர், புகைமண்டலம் அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது என சமீபத்திய வாரப் பதிவு குறிப்பிட்டுக் காட்டுகிறது. . . . சாட்டிலைட் தகவலின்படி, அமேசான் பகுதியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகமாய் காடுகள் எரிக்கப்படுகின்றன; அத்துடன் 1991 முதல், காடழிப்புகள் 34 சதவீதம் அதிகரித்திருப்பதாக மிக சமீப அறிக்கையான, 1994-ல் கிடைத்துள்ள காடழிப்பு பற்றிய தகவல் காட்டுகிறது.”

“பாலைவன மரங்கள்”

நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நிஜமாகவே கைபடாமலிருந்த மழைக்காடுகள், ஏன் இத்தனை சீக்கிரம் அழிக்கப்பட்டு வருகின்றன? பூமியின் 20 சதவீத நிலப்பரப்பிலுள்ள மிதவெப்பமண்டல காடுகள், கடந்த 50 ஆண்டுகளில் இந்தளவுக்கு குறிப்பிடத்தக்க வகையில் அழிக்கப்படவில்லை. எது இந்த மழைக்காடுகளை அவ்வளவு எளிதில் தாக்கப்படும் ஒன்றாக ஆக்குகிறது? இதற்கான பதில் அவற்றின் ஒப்பற்ற இயல்பிலேயே அடங்கியுள்ளது.

மழைக்காடு, “பாலைவன மரங்கள்” என்று பொருத்தமாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது என ட்ராப்பிகல் ரெய்ன்ஃபாரஸ்ட் என்ற தனது புத்தகத்தில் ஆர்னல்ட் நியூமேன் கூறுகிறார். அமேசான் நதிப்படுகையின் சில பகுதிகளிலும், போர்னியோவிலும், “பெருங்காடுகளுக்கு, ஆச்சரியப்படும் வகையில் பெரும்பாலும் வெள்ளை மணல் மாத்திரமே பிழைத்துக்கொள்ளப் போதுமானதாக உள்ளது” என அவர் விளக்குகிறார். பெரும்பாலான மழைக்காட்டு மரங்கள் மணலில் வளராவிட்டாலும், கிட்டத்தட்ட அனைத்துமே, வறண்டதும், மிகமிகக் குறைவானதுமான மேற்பரப்பு மண்ணின் மீதுமே வளர்ந்திருக்கின்றன. மிதவெப்பமண்டல காட்டில் அமைந்துள்ள மேற்பரப்பு மண் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு இருக்கும் அதே சமயத்தில், ஒரு மழைக்காட்டிலோ, ஐந்து சென்டிமீட்டர் ஆழத்துக்கும் அதிகமாவது அரிது. குறைந்தளவு மண்ணுள்ள இப்படிப்பட்ட பகுதியில் பூமியிலுள்ள தாவரங்கள் பச்சைப்பசேலென்று எவ்வாறு வளர முடியும்?

1960 மற்றும் 70-களில் இந்தப் புரியாப் புதிரைத் துலக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். இக்காடு, உண்மையில் தன்னைத்தான் போஷித்துக்கொள்கிறது என அவர்கள் கண்டறிந்தனர். தாவரங்களுக்குத் தேவையான சத்துகளில் பெரும்பாலானவை, காட்டின் தரையிலிருக்கும் மரக்குச்சிகளாலும் இலைதழைகளாலுமே வழங்கப்படுகின்றன; தொடர்ந்து இருக்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் உதவியால் கறையான்கள், பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் இவற்றைத் தீவிரமாய் சிதைக்கின்றன. எதுவுமே வீணாக்கப்படுவதில்லை; எல்லாமே மறு உபயோகம் செய்யப்படுகின்றன. மழைக்காட்டிலுள்ள மரங்களின் உச்சிப்பகுதியிலுள்ள மரக் கிளைகளிலிருந்து நீர் கசிவதாலும் ஆவியாவதாலுமே, மழைக்காட்டிற்குக் கிடைக்கும் மழையில் 75 சதவீதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பிறகு, இம்முறையில் உருவாகும் மேகங்கள் காட்டில் மீண்டும் மழையாகப் பெய்கின்றன.

ஆனால் அருமையான இந்த ஏற்பாடு, பலவீன கட்டத்தை எட்டுகிறது. இது அளவுக்கு மிஞ்சி சேதமடைகையில் தானாகவே சரிப்படுத்திக் கொள்ள முடியாது. மழைக்காட்டின் ஒரு சிறு பகுதியை வெட்டி வீழ்த்தினால், சில ஆண்டுகளுக்குள் தானாகவே அது புதுப்பித்துக் கொள்ளும்; ஆனால், பெரும்பகுதியைத் தரைமட்டமாக்கினால் அதால் ஒருபோதும் புதுப்பித்துக் கொள்ளவே முடியாது. சத்துப்பொருள்களை கனத்த மழை அடித்துச் சென்றுவிடுகிறது; அத்துடன், சூரிய வெப்பத்தால் மேற்பரப்பு மண்ணின் மெல்லிய அடுக்கு பொசுக்கப்பட்டு விடுவதால், முடிவில் காட்டுப்புல்லின் சாம்ராஜ்யங்களாகின்றன.

நிலம், மரம், மாட்டிறைச்சி சாண்ட்விட்ச்

குறைவான விளைநிலங்களையுடைய வளரும் நாடுகள், எவர் கையும் படாத காட்டு நிலப்பகுதிகளைத் தாங்கள் சுரண்டிக்கொள்வதற்கு ஏற்றவையாய்க் கண்டன. நிலமில்லாத ஏழை உழவர்கள் காட்டுப்பகுதிகளை திருத்தி, எல்லைக்கம்பு நாட்டும்படி—ஐரோப்பிய குடியேறிகள் மேற்கு அமெரிக்காவில் குடியேற்றப் பகுதிகளைப் பெற்றது போலவே—அவர்களை உற்சாகப்படுத்துவதே “சுலபமான” தீர்வாக இருந்தது. என்றாலும் இதனால் ஏற்பட்ட விளைவுகள் காட்டுக்கும் உழவர்களுக்குமே கேடு விளைவிப்பவையாக இருந்தன.

பச்சைக் கம்பளம் விரித்தது போலிருக்கும் மழைக்காடு, எதுவும் அங்கு விளையும் என்ற எண்ணத்தைத் தரலாம். ஆனால், மரங்களை வெட்ட ஆரம்பித்துவிட்டாலோ, வாரிவழங்கும் வளம் என்ற எண்ணம் தவிடுபொடியாகிவிடும். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணான விக்டோரியா, சமீபத்தில் காட்டைத் திருத்தி நாடாக்கி ஒரு சிறிய பிளாட்டில் பயிர்செய்து வருகிறார். அவர் இந்தப் பிரச்சினையை இவ்வாறு விளக்குகிறார்.

“என் மாமனார் காட்டின் இந்தப் பகுதியிலுள்ள மரங்களை சமீபத்தில்தான் வெட்டி எரித்திருக்கிறார். ஆகவே கிழங்குகளையும், மரவள்ளியையும், சிலவகை வாழைகளையும் சாகுபடி செய்ய முடிகிறது. இந்த வருடத்தில் அமோக விளைச்சல் இருக்கும்; ஆனால் இரண்டு மூன்று வருடத்துக்குள், மண் சாரமற்றுப்போகும். அப்போது, இன்னொரு பகுதியை திருத்திச் சாகுபடி செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த வேலை கொஞ்சம் கஷ்டமானதுதான், ஆனால் இதை விட்டால் வேறு வழியே இல்லை.”

விக்டோரியாவையும் அவரது குடும்பத்தினரையும் போல், மரங்களை வெட்டி எரித்து பின் பயிர் செய்யும் விவசாயிகள் கிட்டத்தட்ட 20 கோடி பேர் உள்ளனரே! ஓர் ஆண்டில் வெட்டப்படும் மழைக்காடுகளில் 60 சதவீதத்துக்கு அவர்களே காரணர். இந்த நாடோடி சாகுபடியாளர்கள் இதைவிட எளிய விவசாய முறையை விரும்பினாலும், அவர்களுக்கு வேறு வழியில்லை. அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் அவர்கள், மழைக்காட்டின் பாதுகாப்பு ஓர் ஆடம்பரம் என்றும் அது தங்களுக்கு ஒத்துவராது என்றும் நினைக்கின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் சாகுபடிக்காக காட்டை அழிக்கும் அதே சமயத்தில், மற்றவர்கள் அங்கு மாடுகளை மேய விடுகின்றனர். மத்திப மற்றும் தென் அமெரிக்க மழைக்காடுகளில் மாட்டுப் பண்ணை, காடுகளின் பேரழிவுக்கு மற்றொரு பெரிய காரணமாகும். இந்த மாடுகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, பொதுவாக வட அமெரிக்காவுக்குப் போய்ச் சேருகிறது. அங்கே, துரித உணவு கடைக்காரர்களிடம் (fast-food chains) மாட்டிறைச்சி சாண்ட்விட்ச்சுகளுக்கோ அதிக மவுசு இருக்கிறது.

என்றாலும், மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுக்கோ, சிறு பண்ணையாளர்களுக்கு இருக்கும் அதே பிரச்சினை இருக்கிறது. மழைக்காட்டை அழித்த பின்பு அந்தச் சாம்பலில் முளைக்கும் புல், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிப்பதில்லை. மழைக்காட்டை மாட்டிறைச்சி சாண்ட்விட்ச்சாக மாற்றுவது சிலருக்கு கொழுத்த லாபம் தருவதாய் இருந்தாலும், மனிதன் கண்டுபிடித்திருப்பதிலேயே பெருமளவு ஊதாரித்தனமாக உணவு தயாரிக்கும் முறையாகவே அதைக் கருத வேண்டும். b

மழைக்காட்டை அச்சுறுத்தும் மற்றொரு முக்கிய காரணம், மரம் அறுத்தல். மரம் அறுத்தலால் மழைக்காடு அழிக்கப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. காடு மீண்டும் வளரும் வகையில், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டுகின்றன. ஆனாலும், மரம் அறுக்கும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் 45,000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காட்டில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில், அவ்வளவு அதிகமாய் மரங்கள் வெட்டப்படுவதால், அக் காட்டு மரங்களில் ஐந்தில் ஒரு பாகமே எந்தச் சேதமுமின்றி மறுபடியும் தழைக்கிறது.

“வரம்பில்லாத அளவுக்கு மரம் அறுப்பதனால், என் கண் காண, அருமையாய் இருந்த காடு இப்போது உருக்குலைந்து வருவதை நினைத்தால் என் நெஞ்சமே வெடிக்கிறது” என தாவரவியலர் மான்வெல் ஃபிடால்கோ வெம்புகிறார். “சுத்திகரிக்கப்பட்ட பரப்பில் மற்ற தாவரங்களும் மரங்களும் வளரலாம் என்றாலும், புதிதாய் வளருவது இரண்டாந்தர காடே—வெகு குறைவான மர வகைகளே—ஆகும். முன்னாள் காடு மீண்டும் தலைதூக்க வேண்டுமென்றால், நூற்றுக்கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கான ஆண்டுகள்வரைகூட எடுக்கும்.”

மரம் அறுக்கும் நிறுவனங்கள் மற்ற வழிகளிலும் காடு அழிக்கப்படுவதை துரிதப்படுத்துகின்றன. மாட்டைக் கிடைபோட்டு மேய விடுபவர்களும், நாடோடி விவசாயிகளும் மரம் வெட்டுபவர்கள் வகுத்த பாதைகளையே பயன்படுத்திக்கொள்கின்றனர். சில சமயங்களில், மரம் வெட்டுபவர்கள் விட்டுச் சென்ற மரக்கட்டைகளே காட்டுத்தீக்கு எண்ணெய் வார்ப்பவையாய் ஆகிவிடுகின்றன; இது, மரம் வெட்டுபவர்களால் அழிக்கப்படும் காட்டைக் காட்டிலும் அதிகத்தை விழுங்கிவிடுகிறது. போர்னியோவில், 1983-ல் ஒரு தடவை இப்படி ஏற்பட்ட தீ விபத்து, 30 லட்ச ஏக்கர் பரப்புள்ள காட்டை சாம்பலாக்கியது.

காட்டைக் காக்க என்ன செய்வது?

இப்படிப்பட்ட அச்சுறுத்தலால், மீந்துள்ள காடுகளைக் காக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவோ, இமாலய வேலையாகும். தேசிய பூங்காக்கள் மழைக்காட்டின் சிறுசிறு பகுதிகளைக் காக்கலாம்; ஆனால், வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், காட்டை திருத்தி விவசாயம் செய்தல் ஆகியவை பூங்காக்களையும் விட்டபாடில்லை; பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வளர்ந்துவரும் நாடுகளுக்கு, பூங்காவை நிர்வகிக்க மிகக் குறைந்த பணவசதியே உள்ளது.

மரம் வெட்டும் உரிமத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பதில் கிடைக்கும் ஏராளமான பணத்தால், பணத் தட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் எளிதில் வசீகரிக்கப்படுகின்றன. சில சமயங்களில், வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு இவ்வரசுகளுக்கு இருக்கும் ஒரு சில தேசிய சொத்துக்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் லட்சக்கணக்கான நாடோடி விவசாயிகளுக்கு, மழைக்காடுகளை தொடர்ந்து ஆக்கிரமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இத்தனை பிரச்சினைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில், மழைக்காடுகளைப் பாதுகாப்பது அத்தனை முக்கியமா? அவை அழிந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட நஷ்டத்தை நாம் சந்திக்க இருக்கிறோம்?

[அடிக்குறிப்புகள்]

a டோடோ என்பது, பெரியதும் கனத்ததும் பறக்க முடியாததுமான பறவை இனமாகும்; இது 1681-ல் மறைந்தது.

b எங்குப் பார்த்தாலும் போராட்டம் நடத்தப்படுவதால், துரித உணவு கடைக்காரர்கள் வெப்பமண்டல நாடுகளிலிருந்து குறைந்த விலையில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்