கம்போடியாவில் எனது ஜீவ மரண போராட்டத்தின் நீண்ட பயணம்
வதனா மியஸ் என்பவரால் கூறப்பட்டது
கம்போடியாவில், 1974-ஆம் வருடம் கமெர் ரூஷை எதிர்த்து நான் போரிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது கம்போடியாவின் ராணுவத்தில் ஒரு அதிகாரியாக இருந்தேன். ஒரு யுத்தத்தின்போது நாங்கள் ஒரு கமெர் ரூஷ் சிப்பாயை சிறைபிடித்தோம். போல் பா, a எதிர்காலத்தில் என்ன செய்யப்போவதாக திட்டமிட்டு இருக்கிறார் என்பதை அந்தச் சிப்பாய் என்னிடம் கூறினார்; அது என்னுடைய வாழ்க்கையையே மாற்றி, சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிப்பதற்கு காரணமானது.
அந்த நீண்ட பயணத்தின் ஆரம்பத்திலிருந்து என்ன நடந்தது என்று உங்களுக்குச் சொல்கிறேன். நான் 1945-ஆம் ஆண்டு நோம் பென் என்ற இடத்தில், கமெர் மொழியில் கம்பூச்சியா (கம்போடியா) என்று அறியப்பட்டிருந்த தேசத்தில் பிறந்தேன். பின்னர், என் அம்மா ரகசிய போலீஸில் ஒரு முக்கிய பதவி வகித்தார். நாட்டை ஆண்ட இளவரசர் நாரடம் சிஹநுக் என்பவரின் ஒரு முக்கிய பிரதிநிதியாக செயலாற்றினார். அந்தச் சமயத்தில் அவர் தனியே என்னை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தமையாலும், ஆனால் அவரோ வேலையில் அதிக பிஸியாக இருந்தபடியாலும், என்னை ஒரு பௌத்த ஆலயத்தில் கல்வி பயிலுவதற்கு விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டது.
என்னுடைய புத்தமத பின்னணி
எட்டு வயதில், பிரதான புத்த பிட்சுவுடன் வாழ்வதற்காக சென்றேன். அந்த வருடத்திலிருந்து 1969-ஆம் ஆண்டுவரை நான் கோயிலிலும் வீட்டிலும் என என் வாழ்க்கையை கழித்தேன். கம்போடியாவில், அச்சமயம் வாழ்ந்த புத்தமதத் தொகுதியில் மிக உயர்ந்த அதிகாரத்தையுடையவராக இருந்த ச்சுன் நட் என்பவரை சேவித்து வந்தேன். கொஞ்ச காலத்திற்கு அவருடைய உதவியாளனாக பணி புரிந்தேன்; புத்த மத பரிசுத்த புத்தகமாகிய, “மூன்று கூடைகள்” (டிப்பிடாகா அல்லது சமஸ்கிருதத்தில் ட்ரிப்பிடகா) என்ற புத்தகத்தை, இந்தப் பூர்வீக இந்திய மொழியிலிருந்து கம்போடியன் மொழிக்கு மொழிபெயர்ப்பதில் அவருக்கு உதவினேன்.
நான் ஒரு புத்த பிட்சுவாக 1964-ஆம் ஆண்டு முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு 1969-வரை அதே ஸ்தானத்தில் தொடர்ந்து பணி புரிந்தேன். இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள், இவை எவ்விதம் ஆரம்பித்தன என்பவற்றைப் போன்ற ஏராளமான கேள்விகள் அந்தச் சமயத்தில் என்னை வாட்டின. ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை பிரியப்படுத்துவதற்காக செய்யும் ஏராளமான செயல்களை கவனித்தேன்; ஆனால் அந்தத் தெய்வங்கள் எவ்விதம் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போகின்றன என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. புத்தமத எழுத்துக்களில் இதற்கான திருப்தியளிக்கும் பதிலை என்னால் காண முடியவில்லை, மற்ற பிட்சுகளாலும் இது தொடர்பாக எனக்கு உதவமுடியவில்லை. எனவே மிகவும் ஏமாற்றமடைந்து கோயிலைவிட்டு வெளியேற முடிவு செய்தேன்; பிட்சுவாக வாழும் வாழ்க்கைக்கு முடிவு கட்டினேன்.
கடைசியாக 1971-ஆம் வருடம் கம்போடிய ராணுவத்தில் சேர்ந்தேன். சுமார் 1971-பல் வியட்நாமுக்கு அனுப்பப்பட்டேன்; எனக்கு கல்வித் தகுதி இருந்தபடியால் இரண்டாவது லெப்டினன்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிறப்பு படைகளில் பணி புரியும்படி நியமிக்கப்பட்டேன். நாங்கள் கம்யூனிஸ்ட் கமெர் ரூஷ், வியட்காங்க் படைகளை எதிர்த்து போரிட்டோம்.
கம்போடியாவில் யுத்தமும் மாற்றங்களும்
நான் உணர்ச்சியில் கல்லாகிவிட்ட யுத்த வீரனானேன். அனுதினமும் மரணத்தைப் பார்த்து பார்த்து அது எனக்கு சகஜமாகிவிட்டது. நானே 157 போர்களில் பங்குகொண்டேன். ஒரு சமயம் நடுக்காட்டில், ஒரு மாதத்திற்கும் மேலாக கமெர் ரூஷ் படைவீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டோம். அதில் 700-க்கும் அதிகமான வீரர்கள் இறந்தனர். 15 பேர் மட்டுமே தப்பினோம்—அவர்களுள் நானும் ஒருவன், அதில் நான் காயமடைந்தேன். எப்படியோ உயிர் தப்பினேன்.
இன்னொரு சந்தர்ப்பத்தில், 1974-ஆம் ஆண்டு நாங்கள் கமெர் ரூஷ் சிப்பாய் ஒருவரை பிடித்தோம். விசாரித்தபோது போல் பா, எல்லா முந்திய அரசாங்க அதிகாரிகளையும், ராணுவத்தில் பணியாற்றியவர்களையும் கொல்ல திட்டமிட்டிருக்கிறார் என்று என்னிடம் தெரிவித்தார். எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய்விடும்படி எனக்கு ஆலோசனை சொன்னார். அவர் இவ்விதம் சொன்னார்: “உங்க பெயர அடிக்கடி மாத்திக்குங்க. நீங்க உண்மையில் யாருங்கறத யாருக்கும் சொல்லாதீங்க. ஒண்ணும் தெரியாத வெகுளிமாதிரியும் படிக்காத ஆள் மாதிரியும் நடிங்க. உங்க பழைய வாழ்க்கைய பத்தி யாருகிட்டேயும் மூச்சுக்காட்டாதீங்க.” அவரை வீட்டிற்கு செல்ல நான் விடுவித்தபின் அந்த எச்சரிப்பு என் மனதில் ஆழமாக பதிந்துபோனது.
சிப்பாய்களாகிய நாங்கள் எங்களுடைய நாட்டிற்காக போராடுவதாக சொல்லப்பட்டோம்; ஆனால் நாங்களோ கம்போடியர்களையே கொன்று குவித்துக்கொண்டிருந்தோம். அரசாங்கத்தை கைப்பற்றவேண்டும் என்று முயலும் கமெர் ரூஷ் என்ற கம்யூனிஸ்ட் பிரிவினர் எங்களுடைய ஜனங்களில் இருந்து வந்தவர்களே. உண்மையில், கம்போடியாவில் குடியிருக்கும் 90 லட்சம் ஜனங்களில் பெரும்பாலானோர் கமெர் என்ற பழங்குடியினரே; ஆனால் அதில் பெரும்பாலோர் கமெர் ரூஷின் அங்கத்தினர் அல்ல. இவ்விதம் செய்வது எனக்கு சரியென்று தோன்றவில்லை. நாங்கள் துப்பாக்கிகள் இல்லாத, போரில் எந்த நாட்டமும் இல்லாத அப்பாவி விவசாயிகளைக் கொன்று குவித்தோம்.
யுத்தத்திற்குப்பின் வீடு திரும்புவது என்பது ஒரு கடுந்துயர் நிறைந்த அனுபவம். தங்கள் கணவரோ அல்லது தந்தையோ உயிரோடு திரும்புவாரா என்ற ஆவலில் மனைவிகளும் பிள்ளைகளும் காத்திருப்பார்கள். அநேகரிடத்தில் அவர்களுடைய குடும்ப அங்கத்தினர் கொல்லப்பட்டதை சொல்ல நேரிட்டது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் புத்தமதத்திலிருந்து கற்றுக்கொண்ட காரியங்கள் எந்த ஆறுதலையும் எனக்கு அளிக்கவில்லை.
நிலைமைகள் எவ்விதம் கம்போடியாவில் மாற்றமடைந்தன என்பதை நான் இப்பொழுது நினைவுபடுத்தி பார்க்கிறேன். 1970-ஆம் ஆண்டிற்கு முன்பாக ஓரளவிற்கு சமாதானமும் பாதுகாப்பும் நிலவின. பெரும்பாலோரிடம் துப்பாக்கி கிடையாது; ஒருவர் லைசன்ஸ் இல்லாமல் அதை வைத்திருந்தால், அது சட்டப்படி குற்றம். கொள்ளை அல்லது திருட்டு மிகக்குறைவே. போல் பாவும் அவரது படையும் கலகம் செய்து உள்நாட்டு போர் ஆரம்பித்தவுடன் நிலைமைகள் எல்லாம் தலைகீழானது. எங்கும் துப்பாக்கிமயம். 12 அல்லது 13 வயது பிள்ளைகள்கூட ராணுவ பயிற்சி பெற்று எவ்விதம் சுடுவது, கொல்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையே கொல்லும் அளவிற்கு, போல் பாவின் ஆட்கள் அவர்களது மனதை மாற்றினார். சிப்பாய்கள் பிள்ளைகளிடத்தில் இவ்விதம் சொல்வர்: “உங்களுக்கெல்லாம், உங்க நாட்டு மேல அன்பிருந்துச்சுன்னா உங்க எதிரிகள வெறுக்கணும். உங்க அப்பா, அம்மா அரசாங்கத்துக்காக வேலை செய்றாங்கன்னா, அவங்கதான் நம்மோட எதிரிங்க, அதனால அவங்கள நீங்க கொல்லணும்—அல்லது நீங்கல்லாம் கொல்லப்படுவீங்க.”
போல் பாவும் வேண்டாதவர்களை அழிக்கும் கொள்கையும்
1975-ஆம் ஆண்டு, போல் பா யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் கம்போடியா ஒரு கம்யூனிஸ நாடானது. போல் பா எல்லா மாணவர்களையும், ஆசிரியர்களையும், அரசாங்க அதிகாரிகளையும், கல்வி கற்ற எல்லாரையும் அழிக்க ஆரம்பித்தார். நீங்கள் ஒருவேளை கண்ணாடி அணிபவராக இருந்தால் படித்தவர் என்று எண்ணப்பட்டு அதனால் கொல்லப்படலாம்! போல் பாவின் ஆட்சி, பெரும்பாலான ஜனங்கள் மாநகரங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வெளியேறி கிராமத்திற்கு சென்று அங்கே விவசாயம் செய்ய கட்டாயப்படுத்தியது. எல்லாரும் ஒரே விதமாகவே உடையுடுத்தவேண்டும். போதிய உணவின்றி, மருந்துகளின்றி, உடையின்றி ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கவேண்டும்; வெறும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே உறங்கவேண்டும். வெள்ளம் தலைக்குமேல் போவதற்கு முன் என் சொந்த நாட்டைவிட்டு ஓடிவிட முடிவு செய்தேன்.
கமெர் ரூஷ் சிப்பாய் சொன்ன அறிவுரை என் நினைவிற்கு வந்தது. என்னுடைய எல்லா புகைப்படங்கள், ஆதாரச்சான்றுகள் போன்றவை என்னை சிக்கவைக்கும் என்பதால் அவற்றை தூக்கி எறிந்துவிட்டேன். ஒரு குழிதோண்டி சில ஆவணங்களைப் புதைத்தேன். இதன் பிறகு மேற்கே தாய்லாந்தை நோக்கிப் பயணம் செய்தேன். அது ஆபத்தான பயணம். நான் செல்லும்போது தெருக்களில் இருக்கும் தடைகளை தவிர்க்கவேண்டும், ஊரடங்கு உத்தரவு சமயங்களில் மிக ஜாக்கிரதையாக இருந்தாகவேண்டும், ஏனென்றால் அலுவலக அனுமதியுள்ள கமெர் ரூஷ் சிப்பாய்கள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.
ஒரு பகுதிக்கு சென்று அங்கிருக்கும் நண்பருடன் கொஞ்ச காலம் தங்கினேன். பிறகு கமெர் ரூஷ் அப்பகுதியிலிருந்த எல்லாரையும் ஒரு புதிய இடத்திற்கு மாற்றினர். அவர்கள் ஆசிரியர்களையும் மருத்துவர்களையும் கொல்ல ஆரம்பித்தனர். மூன்று நண்பர்களுடன் அந்த இடத்தைவிட்டு தப்பினேன். நாங்கள் காட்டில் ஒளிந்திருந்து அங்கே என்ன பழங்கள் கிடைக்குமோ அவற்றை உண்டோம். பிற்பாடு என் நண்பர் ஒருவர் வாழ்ந்துவந்த பட்டம்பங் என்ற பகுதியிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு வந்தேன். அங்கே ஆச்சரியப்படும் விதமாக, எவ்விதம் தப்பிக்கவேண்டும் என்று எனக்கு முன்பு அறிவுரை கொடுத்த சிப்பாயைக் கண்டேன்! நான் அவரை விடுவித்ததற்கு நன்றிக்கடனாக என்னை மூன்று மாதம் ஒரு குழியில் ஒளித்து வைத்தார். அவர், குழிக்குள் எட்டிப்பார்க்காமல் எனக்கு உணவு வழங்க ஒரு பிள்ளையிடம் ஏற்பாடு செய்தார்.
கொஞ்ச காலத்திற்குப்பின் என்னால் தப்பியோட முடிந்தது; தாய்லாந்தின் எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவையும், சித்தியையும், தங்கையையும் கண்டுபிடித்தேன். எனக்கு அது வேதனை மிகுந்த நேரம். என் அம்மா நோய்வாய்ப்பட்டிருந்தார், பிற்பாடு நோயினாலும் உணவு பற்றாக்குறையாலும் ஒரு அகதிகள் முகாமில் இறந்து போனார். ஆனாலும், அச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கை சுடர் வீசும் ஓர் ஒளி கீற்று என் வாழ்க்கையில் உதித்தது. நான் ஸோஃபி உம் என்ற பெண்ணை சந்தித்தேன்; அவள் பின்னர் என் மனைவியானாள். நாங்கள் இருவரும், சித்தி, தங்கை ஆகியோரோடு சேர்ந்து தாய்லாந்தின் எல்லையைக் கடந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாமுக்குத் தப்பி வந்தோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப்போர் என் குடும்பத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இதனால், என்னுடைய தம்பியும் அவனுடைய மனைவியும் உட்பட, எங்கள் குடும்ப அங்கத்தினரில் 18 பேரை இழந்தோம்.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் புதிய வாழ்க்கை
அகதிகள் முகாமில் எங்கள் பின்னணி விபரங்கள் சரிபார்க்கப்பட்டன; ஐநா எங்களுக்காக ஒரு ஆதரவாளரை கண்டுபிடிக்க முயற்சி செய்தது; அந்த முயற்சி வெற்றிபெற்றால் நாங்கள் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்குச் செல்ல முடியும். கடைசியாக வெற்றி கிடைத்தது! 1980-ஆம் ஆண்டு மினிசோட்டாவிலுள்ள செ. பால், என்ற இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். என்னுடைய புதிய நாட்டில் நான் முன்னேற வேண்டுமென்றால் வெகு சீக்கிரத்தில் ஆங்கிலம் கற்றாக வேண்டும். என்னுடைய ஆதரவாளர் சில மாதங்களுக்கு மட்டுமே என்னை பள்ளிக்கு அனுப்பினார், ஆனால், நான் இன்னும் அதிக காலம் படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதில் அவர் ஒரு ஹோட்டலில் வாயில் காப்பாளனாக எனக்கு வேலை வாங்கி கொடுத்தார். ஆனால், எனக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவாக இருந்தமையால் அநேக சிரிப்பை ஏற்படுத்தும் தவறுகளை செய்ய நேரிட்டது. முதலாளி என்னை ஏணியை கொண்டுவரச் சொன்னால் நான் குப்பையைக் கொண்டுவருவேன்!
ஒரு திகிலுண்டாக்கும் வருகை
1984-ஆம் ஆண்டு இரவு ஷிப்டில் பணி செய்ததால் பகலில் தூங்கினேன். நான் வாழ்ந்தப் பகுதியில் ஆசியாவிலிருந்து வந்தவர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையே அதிக பிரச்சினையிருந்து வந்தது. குற்றச் செயலும் போதைப்பொருட்களும் சாதாரண விஷயங்களாகக் கருதப்பட்டன. ஒருநாள் காலை பத்து மணியளவில் என் மனைவி என்னை எழுப்பி கறுப்பு நிறத்தவர் ஒருவர் வாசல் கதவருகே வந்திருக்கிறார் என்று கூறினாள். அவள் பயந்திருந்தாள், ஏனென்றால் அவர் திருட வந்திருப்பதாக எண்ணினாள். நான் கதவு துவாரத்தின் வழியே பார்த்தேன், நன்றாக உடை உடுத்தி கையில் ஒரு சிறிய பெட்டியுடன் ஒரு கறுப்பரைம் அவரோடு ஒரு வெள்ளையரையும் அங்கே நிற்க கண்டேன். ஒரு குழப்பமும் இருக்க முடியாது என்பதாக எனக்கு தோன்றியது.
நான் அவரிடம் என்ன விற்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை என்னிடம் காட்டினார். அவர் சொன்ன விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. அவற்றை வேண்டாம் என்று மறுக்க முயன்றேன், ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு புராட்டஸ்டன்ட் விற்பனையாளன் ஐந்து புத்தகங்களுக்கு 165 டாலர் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டிருந்தார். ஆனால், அந்தக் கறுப்பர் அந்தப் பத்திரிகையிலிருந்த படங்களை சுட்டிக்காட்டினார். படங்கள் அவ்வளவு அருமையாகவும் அழகாகவும் இருந்தன! அவர் முகத்தில் அருமையான நட்பின் புன்னகை தவழ்வதைக் கண்டேன். எனவே ஒரு டாலர் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து பத்திரிகைகளை வாங்கிக்கொண்டேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் மறுபடியும் வந்து என்னிடம் கம்போடியன் பைபிள் இருக்கிறதா என்று கேட்டார். நசேரின் சர்ச்சில் பெற்றுக்கொண்ட ஒரு பைபிள் என்னிடம் வீட்டில் இருந்தது என்னவோ உண்மைதான்; ஆனால், அதைப் படித்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை. வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த இருவர் என் வீட்டிற்கு ஒன்றாக சேர்ந்து வந்ததைக்குறித்து ஆச்சரியப்பட்டேன். பின்னர் அவர் என்னிடம், “உங்களுக்கு ஆங்கிலம் கத்துக்க ஆசையிருக்கா?” என்று கேட்டார். உண்மையில் எனக்கு விருப்பமிருந்தது, ஆனால் பாடம் கற்றுக்கொள்ள பணம் என்னிடம் இல்லை என்று அவரிடம் விளக்கினேன். அவர், பைபிள் அடிப்படையான பிரசுரங்களின் உதவியோடு எனக்கு இலவசமாகவே ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதாக சொன்னார். அவர் எந்த மதத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது என்றாலும், நான் இவ்விதம் யோசித்தேன்: ‘பணம் கொடுக்காமலே ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கலாமே.’
ஆங்கிலத்தையும் பைபிளையும் கற்றுக்கொள்ளுதல்
முன்னேற்றம் ஆமை வேகத்தில் இருந்தது. அவர் பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தைக் காட்டுவார், அதற்கு நான் கம்போடிய மொழியில், “லொ கா பட்” என்று சொல்வேன். அவர், “பைபிள்” என்று சொல்வார், நான் அதற்கு “கம்ப்பீ” என்பேன். முன்னேற்றமடைவதை நானே கவனித்தபோது அதிகம் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஆங்கில-கம்போடியன் அகராதி, ஒரு காவற்கோபுர பத்திரிகை, ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், என்னுடைய கம்போடியன் பைபிள் ஆகியவற்றை நான் வேலைக்கு செல்லும்போது கூடவே எடுத்து செல்வேன். இடைவேளையின்போது பிரசுரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நான் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகக் கற்றுக்கொண்டேன். இப்படிப்பட்ட மெதுவான முன்னேற்றத்தோடு, வாராந்திர பாடங்களையும் படிப்பதற்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக ஆனது. ஆனால், கடைசியாக என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடிந்தது!
என் மனைவி இன்னமும் புத்தமத கோயில்களுக்குச் சென்று முன்னோர்களுக்கு உணவினை படைத்தாள். இதனால் ஈக்களுக்கே படுகொண்டாட்டம்! ராணுவத்திலிருந்தபோதும் புத்தமதத்திலிருந்தபோதும் பழகிக்கொண்ட அநேக கெட்ட பழக்கங்கள் என்னிடம் இருந்தன. நான் ஒரு பிட்சுவாக இருந்தபோது ஜனங்கள் படைக்கும் பொருட்களோடு சிகரெட்டுகளையும் கொண்டுவருவார்கள். பிட்சு சிகரெட்டை புகைத்தாரென்றால் அவர்களுடைய முன்னோரே புகைத்ததாக அவர்கள் நம்பினர். இதனால் நிக்கோட்டினுக்கு அடிமையானேன். அதேபோல் ராணுவத்திலும் மிக அதிகமாக குடிப்பதும் தைரியத்திற்காக அபினி புகைப்பதும் என் பழக்கமாயின. ஆகவே பைபிளை படிக்க ஆரம்பித்தபோது நான் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் ஜெபம் எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். சில மாதங்களுக்குள்ளாகவே என்னுடைய கெட்ட பழக்கங்களை விட்டொழித்தேன். மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியளித்தது!
நான் 1989-ஆம் ஆண்டு மினிசோட்டாவில் ஒரு சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றேன். கலிபோர்னியாவில் லாங் பீச் என்ற இடத்தில் கம்போடிய மொழி பேசும் ஒரு தொகுதியினர் இருப்பதாக அப்போது கேள்விப்பட்டேன். நானும் என் மனைவியும் இதைப்பற்றி கலந்து பேசியபின் நாங்கள் லாங் பீச்சுக்கு செல்வதற்குத் தீர்மானித்தோம். இந்த மாற்றம் ஒரு பெரிய நன்மையில் விளைவடைந்தது! முதலாவது என் சகோதரி முழுக்காட்டப்பட்டாள், அதைத் தொடர்ந்து என் சித்தியும் (இப்பொழுது அவருக்கு 85 வயது), பின்னர் என் மனைவியும் முழுக்காட்டுதல் பெற்றனர். என் மூன்று பிள்ளைகளும் அதே பாதையைத் தொடர்ந்தனர். பின்னர் என் தங்கை ஒரு சாட்சியை மணந்துகொண்டாள்; அவர் இப்போது சபையில் ஒரு மூப்பராக சேவை செய்கிறார்.
இங்கே அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் நாங்கள் அநேக சோதனைகளை அனுபவித்தோம். மிக அதிக பணக்கஷ்டத்தை அனுபவித்தோம்; நோய்வாய்ப்பட்டோம், ஆனால் பைபிளின் நியமங்களை கடைப்பிடித்ததன் மூலம் நாங்கள் யெகோவாவின்மேல் இருக்கும் நம்பிக்கையை காத்துக்கொண்டோம். ஆவிக்குரிய வயலில் நான் செய்த வேலைகளை அவர் ஆசீர்வதித்திருக்கிறார். 1992-ஆம் வருடம் நான் சபையில் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டேன், 1995-ஆம் வருடம் லாங் பீச்சில் மூப்பராக நியமிக்கப்பட்டேன்.
நான் ஒரு புத்த பிட்சுவாகவும், அதைத் தொடர்ந்து கம்போடிய போர்க்களத்தில் ஒரு ராணுவ அதிகாரியாகவும் இருந்தபோது ஆரம்பித்த அந்த நீண்ட பயணம், சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் எங்கள் புதிய வீட்டிலும், நாட்டிலும் ஒரு முடிவுக்கு வந்தது. அதோடுகூட நாங்கள் யெகோவா தேவனிலும் கிறிஸ்து இயேசுவிலும் புதிதாக விசுவாசத்தை வளர்த்துக்கொண்டோம். கம்போடியாவில் ஜனங்கள் இன்றும் ஒருவரையொருவர் கொன்று குவிக்கிறார்கள் என்று கேள்விப்படுவது எனக்கு வேதனை அளிக்கிறது. இப்படிப்பட்ட காரியங்கள், புதிய உலகத்தை எதிர்பார்க்கவும் அதைப்பற்றி மற்றவர்களிடம் எடுத்துரைக்கவும் இன்னும் வலுவான காரணத்தை எனக்கு அளிக்கிறது; அங்கே எல்லா யுத்தங்களும் முடிவிற்கு வரும்; அங்கு உண்மையாகவே, எல்லா ஜனங்களும் தங்களைப்போலவே தங்களுடைய அயலகத்தார் மீதும் அன்பு காட்டுவார்கள்!—ஏசாயா 2:2-4; மத்தேயு 22:37-39; வெளிப்படுத்துதல் 21:1-4.
[அடிக்குறிப்புகள்]
a போல் பா அந்தச் சமயத்தில் கமெர் ரூஷ் படையின் கம்யூனிஸ தலைவராக இருந்தார்; அந்தப் படை யுத்தத்தை வென்று கம்போடியாவைக் கைப்பற்றியது.
[பக்கம் 16-ன் வரைப்படம்/படம்]
புத்த பிட்சுவாக நான் வாழ்ந்த சமயத்தில்
வியட்நாம்
தாய்லாந்து
கம்போடியா
பட்டம்பங்
நோம் பென்
லாவோஸ்
[பக்கம் 18-ன் குறிப்பு]
ராஜ்ய மன்றத்தில் என் குடும்பத்தாருடன்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.