பரிபூரண ஆரோக்கியம் வெறும் கனவா?
உங்களுக்கு எப்போதாவது கடுமையாக நோய் ஏற்பட்டிருக்கிறதா அல்லது எப்போதாவது ஒரு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அனுபவம் இருக்கிறதா? அப்படி ஒரு அனுபவம் இருந்தால், உங்கள் வாழ்க்கையை இப்போது அதிகமாகப் போற்றுவீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, பரிபூரண ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும் என்பதாக நினைக்கிறீர்களா? புற்று நோய் அல்லது இருதய நோய் இவ்வளவு பரவலாக இருப்பதை கவனிக்கும்போது, இப்படி நினைப்பது உண்மைக்குக் கண்களை மூடிக்கொள்வதாக ஒருவேளை தோன்றலாம். நம்மில் அநேகர் பலமுறை வியாதிப்படுகிறோம் என்பதும் உண்மைதான். ஆனாலும் முழுமையான ஆரோக்கியம் வெறும் ஒரு கனவல்ல.
நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கவே மனிதன் படைக்கப்பட்டான்; நோயோடும் மரணத்தோடும் போராடுவதற்காக அல்ல. எனவே, நோயையும் மரணத்தையும் முறியடிப்பதற்கு, பரிபூரண உடல் நலம் மற்றும் நித்திய ஜீவனுக்கான ஏற்பாட்டை இயேசு கிறிஸ்துவின் சமயீட்டு பலியின் அடிப்படையில் யெகோவா செய்திருக்கிறார். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) தேவன் வாக்குக்கொடுத்திருக்கும் புதிய உலகில் வாழ்பவர்கள் நோயுடனும் வயோதிபத்துடனும் போராடவேண்டிய அவசியமில்லை. அப்படியென்றால் வியாதிகளுக்கு என்ன நேரிடும்?
வியாதிகளிலிருந்து விடுதலை
இயேசு கிறிஸ்து எவ்விதம் வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார் என்பது நமக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சுகப்படுத்துதல்களைக் குறித்து இவ்விதம் சொல்லப்பட்டது: ‘குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறது.’ (மத்தேயு 11:3-5) ஆம், இயேசுவிடம் வந்த எல்லா வியாதியஸ்தரும் ‘முற்றுங் குணமானார்கள்.’ (மத்தேயு 14:36, தி.மொ) இதன் விளைவாக, “ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”—(மத்தேயு 15:31).
இதைப்போன்ற குணப்படுத்துதலை இன்று யாருமே செய்ய முடியாது என்பது உண்மையாக இருந்தாலும், தேவனுடைய ராஜ்யத்தில் மனிதவர்க்கம் பரிபூரணத்தை அடைந்து, எல்லா மன சம்பந்தப்பட்ட நோய்களும், உடல் நோய்களும் குணமாகும் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். கடவுளுடைய வாக்குறுதி வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் இவ்விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அறுவைச் சிகிச்சை, அல்லது நோய் சிகிச்சை போன்றவையே தேவையில்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்! மறுபடியுமாக ஸ்தாபிக்கப்படும் பரதீஸில் மனசோர்வு, மன வியாதிகள் போன்றவை மறைந்தே போயிருக்கும். வாழ்க்கை சந்தோஷமயமாக இருக்கும்; அங்கே மகிழ்ச்சியே நிலையான உணர்ச்சியாக இருக்கும். கடவுளுடைய எல்லையற்ற சக்தி உடலின் புதுப்பித்துக்கொள்ளும் திறமையை தூண்டுவிக்கும்; சமயீட்டு பலியின் நன்மைகள் பாவத்தின் மட்டுப்படுத்தும் குணத்தை நீக்கிவிடும். “‘நான் நோய்வாய்பட்டிருக்கிறேன்’ என்று அங்கே தங்கியிருக்கும் குடிகளில் ஒருவரும் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24, NW.
கடவுளுடைய ராஜ்யத்தில் பரிபூரண சரீர மற்றும் ஆவிக்குரிய நலத்தை அனுபவிப்பது என்பது எப்பேர்ப்பட்ட மகத்தான நம்பிக்கை! இப்பொழுது நீங்கள் ஒரு சமநிலையான ஆரோக்கிய வாழ்க்கைப் பாணியை கடைபிடித்து, அதே சமயத்தில் கடவுளுடைய புதிய உலகின் ஆசீர்வாதங்களை ஆர்வத்துடன் எதிர்பாருங்கள். ‘யெகோவா உங்கள் வாழ்க்கையை நன்மையால் திருப்தியாக்குவாராக.’ (NW) ‘கழுகுக்கு சமானமாக உன் வாலிபப் பருவம் திரும்ப வருகிறது’!—சங்கீதம் 103:5, திருத்திய மொழிபெயர்ப்பு.