உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 7/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெருங்கடல்கள் ஆபத்தில்
  • உறுப்பு தானம் செய்பவர்கள்
  • ஜோதிடருக்கு வருடம் சரியில்லை
  • அதிக ஆபத்தான செக்ஸ்
  • குண்டாயிருப்பதும் இதய நோயும்
  • மறைந்துவரும் காடுகள்
  • உலகளாவிய பஞ்சத்தின் கணிப்பு
  • ஒரினாகோ அலிகேட்டர் மறைதல்
  • பிரமிப்பூட்டும் நட்சத்திர ஒளி
  • ஓட்டுவது, போன் பேசுவது—இரண்டும் சேர்ந்தால் ஆபத்து
  • குண்டுக் குழந்தைகள் என்ன தீர்வு?
    விழித்தெழு!—2009
  • உடல் பருமன் உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?
    விழித்தெழு!—2004
  • உடல் பருமன் உலகளாவிய கொள்ளைநோயா?
    விழித்தெழு!—2003
  • உடல் பருமன்—காரணங்கள் யாவை?
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 7/22 பக். 28-29

உலகை கவனித்தல்

பெருங்கடல்கள் ஆபத்தில்

பெருங்கடல்களைத் தொடர்ந்து சேதப்படுத்துவதிலிருந்து காப்பாற்றும்படி “நடவடிக்கை அழைப்பு” விடுக்க 65 நாடுகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட கடல் வள விஞ்ஞானிகளும் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்பதாக த ஜர்னல் ஆஃப் காமர்ஸ் அறிக்கை செய்கிறது. “உண்மையிலேயே கடல் ஆபத்தில் இருக்கிறது; நாம் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தில் இருக்கிறது” என கடல் சூழலியர் எலீயட் நார்ஸ் கூறுகிறார். இதற்கு ஓர் உதாரணமாக, மெக்ஸிகோ வளைகுடாவில் ஒரு பகுதி சுட்டிக்காட்டப்படுகிறது. இது சவமண்டலம் என அறியப்பட்டிருக்கிறது. இதன் பரப்பளவு 18,000 சதுரகிலோமீட்டர். அதன் பெயர் சுட்டிக்காட்டுவதற்கு ஏற்றவாறு, சவமண்டலத்தில் மீன், இறால், இன்னும் இதுபோன்ற பெரும்பாலான கடல் உயிரிகள் காணப்படுவதில்லை. இப்பகுதியிலுள்ள ஏராளமான ஆல்காக்களே (algae) இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை மிஸ்ஸிஸிபி ஆறு அடித்துக்கொண்டுவந்து சேர்க்கும் நீரில் மிகுந்திருக்கும் தாவரச்சத்தை உண்ணுகின்றன. இந்த ஆல்காக்கள் இறந்ததும், பெருங்கடலின் தரைக்குப் போய்ச் சேருகின்றன. பாக்டீரியா இறந்த ஆல்காக்களைச் சிதைக்க ஆரம்பிக்கையில், பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆக்ஸிஜன் பெருமளவு குறைந்துவிடுகிறது. “பெருங்கடலின் அடிப்பகுதியை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத எதுவும் காலப்போக்கில் செத்து மடிகிறது” என கடல் வள விஞ்ஞானி டாக்டர் நான்சி ராபலே கூறுகிறார்.

உறுப்பு தானம் செய்பவர்கள்

நீங்கள் இறக்க நேரிடுகையில், உங்கள் உடல் உறுப்புகளை எவருக்காவது தானமாக கொடுக்க விரும்புகிறீர்களா? இதுவே பிரேஸில் நாட்டவர்கள் எதிர்ப்பட்டுவரும் கேள்வியாகும்; ஏனென்றால் ஜனவரி 1, 1998-ல் ஒரு புதிய சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி, தங்கள் உடல் உறுப்புகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தஸ்தாவேஜுக்களில் கையெழுத்து இடவேண்டும். அவ்வாறு கையெழுத்து இடாமல் இருக்கும் பிரேஸில் நாட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருமே தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவோர் ஆகிவிட வேண்டிவரும். ஆனால், “பிரேஸில் நாட்டவர்களில் பெரும்பாலானோர், தாங்கள் இறந்தபிறகு தங்கள் உடல் உறுப்புகள் எதுவும் அகற்றப்படக்கூடாது என்றே விரும்புவர் என்பதற்கு ஏராளமான அறிகுறிகள் உள்ளன” என த மியாமி ஹெரல்ட் அறிக்கை செய்கிறது. “கடந்த ஆறு மாதங்களாக, ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களில் முக்கால்வாசி பேர் உடல் உறுப்பு தானம் வழங்குவதை நிராகரித்துள்ளனர்.” ஏன்? நோயாளிகளின் உடல் உறுப்புகளை எடுத்துக்கொள்வதற்காக அவர்கள் இறப்பதற்கு முன்னதாகவே அவர்களது மூளை இறந்துவிட்டதாக கோரும்படி மருத்துவர்கள் வற்புறுத்தப்படலாம் என்று சிலர் பயப்படுகின்றனர்.

ஜோதிடருக்கு வருடம் சரியில்லை

ஜெர்மனி நாட்டு ஜோதிடர்கள் அனைவரின் ஞானக்கண்ணுமே 1997-ல் “குருடாகிவிட்டன” என ஃப்ராங்க்ஃபர்ட்டில் பிரசுரிக்கப்படும் நாஸௌஷி நாயி பிரஸ்ஸி செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சுமார் 70 ஜோதிடங்களில், ஒன்றுகூட பலிக்கவில்லை என்பது, அசோஸியேஷன் ஃபார் சயன்டிஃபிக் ரிசர்ச் இன் டு த பாராசயன்சஸ் (GWUP) என்ற நிறுவனம் செய்த ஆய்விலிருந்து தெரிகிறது. புலனாகாதவற்றைக் காணும் திறனுடையவர்களின் கண்களுக்கு, 1997-ம் ஆண்டு நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் தெரியாமல் போய்விட்டன. உதாரணமாக, ஒரு ஜோதிடர்கூட, இளவரசி டயனாவின் திடீர் இறப்பை முன்னதாக அறுதியிட்டுக் கூறவில்லை. அநேக ஜோதிடர்கள் மிகவும் ஜாக்கிரதையாகிவிட்டார்கள்; ஆகவே பொருளாதார, அரசியல் தொல்லைகளின் போக்கு எப்படி மாறும் என்று மட்டுமே முன்னதாக கூற முயலுகின்றனர். இவற்றைத்தான் “செய்தித்தாள் வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாமே” என GWUP-ஐச் சேர்ந்த எட்கர் வுண்டர் கூறுகிறார்.

அதிக ஆபத்தான செக்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ரோட் ஐலேண்ட் மற்றும் போஸ்டன் சிட்டி மருத்துவமனைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1994 முதல் 1996 வரையில், எச்ஐவி நோய் தொற்றப்பட்டிருந்த 203 நோயாளிகளிடம் அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி வினவினர். அந்தச் சுற்றாய்வு என்ன காட்டியது? “எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில், பத்துக்கு நான்கு என்ற விகிதத்தினர், தங்கள் செக்ஸ் பார்ட்னரிடம் தங்களுக்கு எச்ஐவி இருப்பதாக தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்காதவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் எல்லா சந்தர்ப்பங்களிலும் உறையைப் பயன்படுத்தவில்லை” என த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. எச்ஐவி இருப்பதை தெரிவிக்காமல் மறைக்கும் பழக்கம் பொதுவானதே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். “இது ஒன்றும் அறியாமை பிரச்சினை அல்ல; எச்ஐவி பிறருக்குத் தொற்றும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்கள் [அவர்களுக்குத்] தெரியாததல்ல. இது அவரவர் பொறுப்பு சம்பந்தப்பட்டது” என ரோட் ஐலேண்ட்டின் புரொவிடென்ஸிலுள்ள பிரௌன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மிக்கல் ஸ்டீன் கூறுகிறார்.

குண்டாயிருப்பதும் இதய நோயும்

“வயதுவந்தவர்களுக்கு சிஏடி [இதயத் தமனி நோய் (CAD)] வராமல் தடுப்பதற்குரிய வெகு பயனுள்ள திட்டம், பிள்ளைப் பருவத்திலேயே உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்வதுதான்” என ஆங்கில அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை அறிக்கை செய்கிறது. சில காலமாக உடல்நல அதிகாரிகளுக்குத் தெரிந்தவரை, சிறுபருவத்தில் கொழுப்பு சேர்ந்தால், அது மிகை இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஹைப்பர்லைப்பீமியா (இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து), இதயத் தமனி நோய், இன்னும் பிற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதன் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் கொழுப்புப் பதார்த்தங்களைக் குறைக்கும்படியும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்யும்படியும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறபோதிலும், வட அமெரிக்கர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. “கவனமான உணவுத்திட்டத்தையும் உடற்பயிற்சியையும் நம் பிள்ளைகளுக்கு வலியுறுத்துவதன் மூலம் குண்டாகாமல் தடுப்பதற்கென ஒரு சமுதாயமாக சேர்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக, நமக்கு இன்னும் எவ்வளவு தகவல்தான் வேண்டும்?” என சிகாகோவிலுள்ள வடமேற்கு மருத்துவக் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லின்டா வான் ஹார்ன் வினவுகிறார். “இவ்வாறு செய்வதன் மூலம் பெறவிருக்கும் நன்மைகள் ஏராளமானவை. எடையைக் குறைக்காததன் காரணமாக ஏற்படும் இதய நோய்கள், முன்னதாகவே சொல்லிவிடக்கூடிய இயல்புடையவையாயும், ஊனத்தை ஏற்படுத்துபவையாயும், சிகிச்சைக்கென அதிக செலவுபிடிப்பவையாயும் உள்ளன.” என்றாலும், த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்த, வெகு சமீபத்திய ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவிலிருந்து, அதிக எடையினால் ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதளவே அபாயம் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், அதிக எடையினால், “வயதுக்கு முன்னதாகவே இறப்பு நேரிடும் சாத்தியம் அதிகமாய் இருப்பதாகவும், ஆனாலும் அது மருத்துவத்துறை நிபுணர்கள் நினைத்த அளவுக்கு இல்லை” எனவும் அந்த ஆய்வு காட்டியதாய் த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.

மறைந்துவரும் காடுகள்

மனிதர் காடுகளை அழிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு பூமியில் நிறைந்திருந்த காடுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு காடுகள் இப்போது மறைந்துவிட்டன என்பதாக உலகளாவிய இயற்கை நிதியம் [World Wide Fund for Nature (WWF)] கூறுகிறது. இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்ட மனிதன் கடினமாய் முயற்சி செய்தபோதிலும், சமீப ஆண்டுகளில் காடழிப்பு மிகவும் அதிகரித்துவிட்டது. அதன் காரணமாக, சீக்கிரமே அநேக நாடுகளில் எந்தவிதமான இயற்கைக் காடுகளும் இல்லாமல் போய்விடலாம். மரத்திற்காகவும் விளைநிலங்களுக்காகவும் காட்டுப் பகுதிகளை அழிப்பது தாவர மற்றும் விலங்கினங்களை பெருவாரியாக நாசமாக்கிவிடுகிறது. அதோடு, மரங்களை எரிப்பது, பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது; இது உலகளாவிய வெப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என அநேகர் பயப்படுகின்றனர். உலகமுழுவதிலுமுள்ள எல்லா விதமான காடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீதத்தையாவது 2000-மாவது ஆண்டுக்குள் காப்பாற்ற வேண்டும் என உலகளாவிய இயற்கை நிதியம் உந்துவிப்பதாக லண்டனின் கார்டியன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.

உலகளாவிய பஞ்சத்தின் கணிப்பு

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, “ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தவோ பண்ணை விளைச்சலை வெகுவாக அதிகரிக்கவோ செய்யாவிட்டால், 2025-ம் ஆண்டுக்குள், இவ்வுலக ஜனத்தொகையாக கணிக்கப்படும் சுமார் 800 கோடி மக்களுக்கு போதியளவு உணவு கிடைக்காது” என அசோஸியேட்டட் பிரஸ் செய்தியறிக்கை கூறுகிறது. “குத்துமதிப்பாக, ஒரு பெண்ணுக்கு இரண்டே குழந்தைகள் என குழந்தை பிறப்பு வீதம் குறையாவிட்டால்,” மக்கள் ஆரோக்கியமாய் உயிர்வாழ்வதற்கு, 2025-ம் ஆண்டுக்குள் “போதியளவு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவை கிடைக்கச் செய்வதற்காக” உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டியதிருக்கும் என இந்த ஆய்வாளர்கள் முன்கணிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு, நிலம் மாசுறுதல், மண் அரிப்பின் காரணமாக தொடர்ச்சியாக ஏற்படும் மேல்மண் இழப்பு, காலநிலை மாறுபாடுகள் ஆகிய பிரச்சினைகளும் இருக்கின்றன. இன்றும்கூட, பூமியில் வாழும் கிட்டத்தட்ட 600 கோடி மக்களை ஆதரிக்க தேவையான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், ஆண்டுக்கு சுமார் 1.8 கோடி மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்.

ஒரினாகோ அலிகேட்டர் மறைதல்

வெனிசுவேலாவின் ஒரினாகோ நதியில் வசிக்கும் அலிகேட்டர்கள் (முதலை இனத்தைச் சேர்ந்தவை) ஆபத்தில் உள்ளன என்பதாக காரகாஸின் எஸ்டாம்ப்பாஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. இப்பிராணிகள் 1930 முதல் அவற்றின் தோலுக்காக வேட்டையாடப்பட்டு வந்திருக்கின்றன. அந்தச் சமயத்தில், “வெனிசுவேலாவில் இருந்த அலிகேட்டர்களின் எண்ணிக்கை மனிதரின் எண்ணிக்கையைவிட அதிகமாய் இருந்தது” என்று அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால் 1931-க்கும் 1934-க்கும் இடையில், கிட்டத்தட்ட 15 லட்சம் கிலோகிராம் எடையுள்ள அலிகேட்டர் தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, குறைந்தபட்சம் 45 லட்சம் அலிகேட்டர்கள் கொல்லப்படுவதைக் குறிக்கிறது. 1950 வாக்கில், “வருடக்கணக்கில் விடாமல் வேட்டையாடின பிறகு,” அலிகேட்டர்களின் எண்ணிக்கை வெகுவாய் குறைந்துவிட்டிருந்ததால், 30,000 கிலோகிராம் “மட்டுமே” ஏற்றுமதி செய்யப்பட முடிந்தது. இன்று, 3,000-க்கும் குறைவான ஒரினாகோ அலிகேட்டர்கள் மட்டுமே மீந்துள்ளன; மேலும், அலிகேட்டர்களும் அவற்றுடன், வெனிசுவேலாவில் வசிக்கும் மற்ற 312 வகை விலங்குகளும் மனிதரின் காரணமாய் மறைந்துவிடும் அபாயத்தில் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரமிப்பூட்டும் நட்சத்திர ஒளி

ஹபிள் விண்வெளி தொலைநோக்கியிலிருந்து சமீபத்தில் பெறப்பட்ட ஓர் உருவம், “ஒளிவீசும் நீலநிற மாறுபடும் நட்சத்திரம்” என அழைக்கப்படும் ஓர் அரிய நட்சத்திரம், நமது ஆகாய கங்கையில் (galaxy) இருப்பதற்கு கூடுதலான அத்தாட்சியைத் தருகிறது. வானியல் ஆராய்ச்சியாளர்களின்படி, ஒளிவீசும் இந்த நட்சத்திரமும் இதைச் சுற்றியுள்ள நட்சத்திர மேகக் கூட்டமும் சேர்ந்து ஒரு துப்பாக்கியைப் போன்ற காட்சியைத் தருவதால், இதற்கு கைத்துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கைத்துப்பாக்கி நம் சூரியனைவிட குறைந்தபட்சம் 60 மடங்கு பெரியதும் கிட்டத்தட்ட ஒரு கோடி மடங்கு ஒளிமிக்கதுமாய் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, “ஆகாயமண்டலத்திலேயே மிக அதிக ஆற்றல்மிக்க நட்சத்திரமாய்” இருக்கக்கூடும் என சயன்ஸ் நியூஸ் பத்திரிகை கூறுகிறது. ஆனால் தூசுமண்டலம் நிறைந்திருப்பதால், இந்த நட்சத்திரத்தை அகச்சிகப்பு விளக்குக் கருவிகளின் (infrared detectors) உதவியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால்தான், பூமியிலிருந்து 25,000 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்தக் கைத்துப்பாக்கி 1990-களின் முற்பகுதி வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இதுபோன்ற வெறும் ஆறு நட்சத்திரங்கள் மட்டுமே நம் ஆகாய கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஓட்டுவது, போன் பேசுவது—இரண்டும் சேர்ந்தால் ஆபத்து

போனில் பேசும் கார் டிரைவர்கள் தங்களுக்குத் தெரியாமலே படுமோசமான தவறுகளைச் செய்துவிடலாம். இதுவே ஜெர்மனியைச் சேர்ந்த ஜெனரல் ஆட்டோமொபைல் கிளப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து பெறப்பட்ட முடிவு. ஒரு சோதனை ஓட்டத்தில், மூன்று தடவை ஓட்டிக் காட்டும்படியாக டிரைவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. முதல் தடவை ஓட்டியபோது அவர்கள் போன் பேசவில்லை. இரண்டாவது தடவை ஓட்டியபோது கையில் பிடித்துக்கொள்ள அவசியமில்லாத போனில் பேசினார்கள். மூன்றாவது தடவை கையில் பிடித்துக்கொண்டு போனில் பேசினார்கள். ஆய்வில் உட்பட்டிருந்த டிரைவர்கள் எவ்வளவு நன்றாக ஓட்டினார்கள்? சராசரியாக, ஓட்டுகையில் போன் பேசாத டிரைவர்கள் பிரேக் பிடிப்பதிலும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட கோட்டிலேயே ஓட்டிச்செல்வதிலும் 0.5 தவறுகளை மட்டுமே செய்தார்கள்; கையில் பிடித்துக்கொள்ள அவசியமிராத போனில் பேசிய டிரைவர்கள் 5.9 தவறுகளைச் செய்தார்கள்; கையில் பிடித்துக்கொண்டு போன் பேசிய டிரைவர்களோ 14.6 தவறுகளைச் செய்தார்கள். எனவே, ஓட்டுகையில் போனை கையில் பிடித்துக்கொண்டு போன் பேசுவது “மிகப் பெரிய ஆபத்து” என்பதாக அந்த ஆய்வு இறுதியில் கூறியது என ஸ்யூட்டாய்ச்ச ட்சைட்டுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்