நம்பிக்கையும் அன்பும் கிடைக்கையில்
தாங்களோ, இளைஞர்களோ, வேறு எவருமோ இந்த உலகை மாற்ற முடியாது என்பதை இளைஞர்களுடன் தொடர்புடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் அறிந்துள்ளனர். எவருமே தடுத்து நிறுத்த முடியாத பேரலை போன்ற வலிமைவாய்ந்த செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும், இளைஞர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகும் இயல்புடையவர்களாகவும் இருக்க நாம் அனைவருமே அதிகத்தைச் செய்யலாம்.
வருமுன் காப்பது சிறந்தது என்பதால், தங்களுடைய மனோபாவங்களும் பழக்கவழக்கங்களும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கைப் பாணியை எவ்வாறு வடிவமைக்கின்றன என்று பெற்றோர் கவனமாக ஆராய வேண்டும். வீட்டில் அன்பான, அக்கறை காட்டும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதால் தற்கொலையை மிகச் சிறந்த வகையில் தடுக்கும் பாதுகாப்பு பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது. இளைஞர்களுக்கு மிக அவசிய தேவைகளில் ஒன்று, அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்து கேட்பவர்கள்தான். பெற்றோர் அவ்வாறு கேட்காவிட்டால், கெட்டவர்களின் சகவாசம் ஏற்பட்டுவிடலாம்.
இன்றைய பெற்றோருக்கு இது எதைக் குறிக்கிறது? உங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்குங்கள். அவர்கள் இளைஞராய் இருக்கையில், முக்கியமாக, அவர்களுக்கு உங்கள் நேரம் தேவைப்படுகையில் அவ்வாறு ஒதுக்குங்கள். அநேக குடும்பங்களுக்கு இது எளிதல்ல. அவர்கள் வயிற்றுப்பாட்டுக்கே பெரும் பாடுபடுகின்றனர். தகப்பனும் தாயும் சேர்ந்து உழைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக விரும்பும் பெற்றோரும், தியாகங்கள் செய்யும் பெற்றோரும் பெரும்பாலும் அதன் நன்மையைப் பெற்றுள்ளனர். இப்படிப்பட்டவர்களின் மகன்களும் மகள்களும் தங்கள் வாழ்வில் சிறந்த வெற்றி காண்கின்றனர். என்றாலும், முன்பு குறிப்பிட்டபடி, பெற்றோர்கள் தங்கள் பங்கில் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்தாலும், பிள்ளைகளுக்கு பெரும்பெரும் பிரச்சினைகள் வரலாம்.
நண்பர்களும் முதியவர்களும் உதவலாம்
இளைஞரிடம் உண்மையிலேயே அக்கறையுள்ள பெரியவர்கள், போர்கள், கற்பழிப்பு, இளைஞரை தவறாக பயன்படுத்துதல் போன்றவற்றால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த பெருமுயற்சி எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களால் காயமுற்ற இளைஞர், தங்களுக்கு உதவுவதற்காக முயற்சி எடுக்கப்படுகையில் உடனே சாதகமாக பிரதிபலிக்காமலும்கூட இருக்கலாம். இதற்காக நீங்கள் நேரத்தையும் முயற்சியையும் பெருமளவில் முதலீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். நிச்சயமாகவே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்களை தரக்குறைவாக நடத்துவதோ நிராகரிப்பதோ ஞானமான மற்றும் அன்பான செயல் ஆகாது. நம் இதயத்தைத் திறக்க நாம் இன்னும் சற்று முயற்சி செய்து அபாயத்தில் இருப்பவர்களைச் சென்றெட்ட தேவைப்படும் தயவையும் அன்பையும் காட்ட முடியுமா?
பெற்றோர் மட்டுமல்ல, நண்பர்களும், உடன் பிறந்தவர்களும்கூட அவர்களோடு பழகுகையில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். அதாவது, இளைஞர்களிடம் பலவீனமான, ஒருவேளை சமநிலையற்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் இருக்கின்றனவா என கவனிக்க வேண்டும். (பக்கம் 8-ல் உள்ள, “நிபுணர்களின் உதவி அவசியம்” என்ற பெட்டியைக் காண்க.) இப்படிப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டால், காதுகொடுத்துக் கேளுங்கள். முடிந்தால், பாதிக்கப்பட்ட இளைஞர்களை மனந்திறந்து பேச வையுங்கள். இதைச் செய்வதற்கு அவர்களிடம் நீங்கள் தயவான கேள்விகள் கேட்கலாம். இதன் மூலம் நீங்கள் அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவலாம். நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களும் உறவினர்களும் சிரமமான சூழ்நிலைகளை சமாளிக்க பெற்றோருக்கு உதவலாம். ஆனாலும், அவர்கள் பெற்றோரின் பாகத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் கவனிக்கவில்லையே என்ற ஏக்கத்தின் காரணமாகவே பெரும்பாலும் இளைஞருக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன.
ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையே இளைஞருக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகும். இது உயிர்வாழத் தூண்டுகிறது. சீக்கிரத்தில் வரப்போகும் மேம்பட்ட உலகைப் பற்றிய பைபிள் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மையை அநேக இளைஞர் உணர்ந்திருக்கின்றனர்.
தற்கொலை செய்யப் போவதிலிருந்து மீட்பு
ஜப்பானிலுள்ள ஓர் இளம் பெண், தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி தீவிரமாக பலமுறை யோசித்துவந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “எத்தனை தடவை தற்கொலை செய்துகொள்ள நான் ஏங்கியிருக்கிறேன். நான் சிறுமியாய் இருந்தபோது, நான் நம்பியிருந்த ஒருவரால் பாலியல் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டேன். . . . ‘நான் சாக விரும்புகிறேன்’ என்று எத்தனையோ தடவை குறிப்புகள் எழுதியிருக்கிறேன். அவற்றின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. பிறகு நான் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனேன். இப்போது முழு நேர பிரசங்கியாக இருக்கிறேன். என்றாலும், இந்தத் தூண்டுதல் இன்னும் அவ்வப்போது வந்துபோகிறது. . . . ஆனால் யெகோவா தேவனோ, என்னைச் சாகவிடவில்லை. அவர் என்னிடம், ‘நீ உயிரோடேயே இரும்மா’ என கனிவாகச் சொல்வது போலிருக்கிறது.”
ரஷ்யாவிலுள்ள 15 வயது இளம்பெண் விளக்குவதாவது: “எனக்கு எட்டு வயதாய் இருந்தபோது, என்னை ஒருவருக்கும் பிடிக்கவில்லை என்ற உணர்வு எனக்குள் வந்தது. என்னுடன் பேச என் பெற்றோருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆகவே என் பிரச்சினையை நானே தீர்க்க முயன்றேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். என் உறவினர்களுடன் எப்பொழுது பார்த்தாலும் ஒரே சண்டைதான். பிறகுதான் தற்கொலை எண்ணம் என் மனதில் தோன்றியது. இப்படியெல்லாம் இருந்ததால் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன் என்பதில் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன்!”
ஆஸ்திரேலியாவில், இப்போது 35 வயதுக்குள் இருக்கும் கதியிடமிருந்து பின்வரும் மகிழ்ச்சிதரும் குறிப்புகள் வருகின்றன. இவை, ஏமாற்றம் எவ்வாறு மெய் நம்பிக்கையாக மாறலாம் என்பதைத் துல்லியமாக காட்டுகின்றன. அவள் உற்சாகப்படுத்தும் விதத்தில் சொல்வதாவது: “என் வாழ்க்கையை எந்தெந்த வழிகளிலெல்லாம் முடித்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியாக தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். புண்படுத்துதலும், கோபமும், சூனியமும் நிறைந்த இந்த உலகை விட்டுப் பறந்துசெல்ல விரும்பினேன். நான் சிக்கியிருந்ததாக நினைத்த ‘சிலந்தி வலையிலிருந்து’ வெளிவருவதை எனக்கிருந்த மனச்சோர்வு சிரமமாக்கிற்று. ஆகவே, அப்போதைக்கு தற்கொலை செய்துகொள்வதை விட்டால் வேறு வழியில்லை எனத் தோன்றியது.
“இந்தப் பூமி ஒரு பரதீஸாகப் போகிறது என்றும், அனைவருக்குமே சமாதானமும் சந்தோஷமும் கிடைக்கப்போகின்றன என்றும் முதன்முதலில் நான் கேள்விப்பட்டபோது, உண்மையிலேயே அதற்காக ஏங்கினேன். ஆனால் அது நனவாகாத கனவே என்று எனக்குத் தோன்றியது. என்றாலும், உயிரை யெகோவா எவ்வாறு கருதுகிறார் என்றும் அவரது கண்களில் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவர்கள் என்றும் படிப்படியாக புரிந்துகொள்ளத் தொடங்கினேன். ஒளிமயமான எதிர்காலம் ஒன்று நிச்சயமாக வரும் என்று நம்ப ஆரம்பித்தேன். இறுதியில், அந்த ‘சிலந்தி வலையிலிருந்து’ விமோசனம் கிடைத்தது. என்றாலும் அதைவிட்டு வெளியேறுவது மிகவும் சிரமமாய் இருந்தது. சில சமயங்களில் மனச்சோர்வு என்னைப் பிடித்து ஆட்டியது. ஆகவே எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. ஆனாலும், யெகோவாவே கதி என்று நினைத்ததால் அவரிடம் நெருங்கிவர முடிந்தது. இதனால் பாதுகாப்பாய் உணர்ந்தேன். யெகோவா எனக்குச் செய்திருக்கும் எல்லாவற்றுக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுகிறேன்.”
இளைஞர் மரணம் இனி இராது
பைபிளைப் படிப்பதன் மூலம் மேம்பட்ட ஒன்றை எதிர்பார்க்கலாம் என்பதை ஓர் இளைஞர் புரிந்துகொள்ள முடியும். அதைத்தான், அப்போஸ்தலன் பவுல், ‘உண்மையான ஜீவன்’ (NW) என்று குறிப்பிட்டார். அவர் இளைஞனாய் இருந்த தீமோத்தேயுவுக்கு பின்வருமாறு புத்திமதி கூறினார்: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் [“உண்மையில் ஜீவனாயிருப்பதைப்,” திருத்திய மொழிபெயர்ப்பு] பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.”—1 தீமோத்தேயு 6:17-19.
மொத்தத்தில், நாம் மற்றவர்களுடன் நன்றாகப் பழகவும், எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையைப் பெற அவர்களுக்கு உதவவும் வேண்டும் என்பதை பவுலின் ஆலோசனை அர்த்தப்படுத்துகிறது. ‘உண்மையில் ஜீவனாயிருப்பது’ என்பது, ‘புதிய வானமும் புதிய பூமியுமான’ யெகோவா வாக்கு கொடுத்திருக்கும் புதிய உலகம் ஆகும்.—2 பேதுரு 3:13.
போதைப் பொருள் துர்ப்பிரயோகம், ஒழுக்கக்கேடான வாழ்க்கைப் பாணிகள் ஆகியவை மரணத்துக்கு வழிநடத்தும் பாதையே, ஆனால் அவையெல்லாம் சுற்றி வளைந்து செல்லும் நீண்ட பாதை என்பதையும், அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தற்கொலை குறுக்கு வழி என்பதையும், முன்பு அபாயத்தில் இருந்த அநேக இளைஞர் புரிந்துகொண்டுள்ளனர். போர்கள், பகைமை, தவறான பழக்கவழக்கங்கள், அன்பற்ற செயல்கள் இவை யாவும் நிறைந்த இந்த உலகம் சீக்கிரம் அகன்றுவிடும் என அவர்கள் அறிந்திருக்கின்றனர். இந்த உலகம் மீட்க முடியாத நிலையில் இருப்பதை அவர்கள் கற்றறிந்துள்ளனர். ஆகவே, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஒரே மெய்யான நம்பிக்கை என அவர்கள் உறுதியாய் நம்புகின்றனர். ஏனெனில் அதுவே இளைஞர் மட்டுமின்றி கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதகுலமும் இறக்கத் தேவையில்லாத, ஏன் இனி இறக்கவும் விரும்பாத ஓர் புதிய உலகிற்கு வழிநடத்திச் செல்லும்.—வெளிப்படுத்துதல் 21:1-4.
[பக்கம் 8-ன் பெட்டி]
நிபுணர்களின் உதவி அவசியம்
“90 சதவீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள், மனநோய்கள் காரணமாக ஏற்படுகின்றன” என்று அமெரிக்க மருத்துவ கழக மருத்துவ கலைக்களஞ்சியம் கூறுகிறது. அப்படிப்பட்ட நோய்களை அது பின்வருமாறு பட்டியலிடுகிறது: கடும் மனச்சோர்வு (சுமார் 15 சதவீதம்), உளச்சிதைவு (ஸ்கீஸோஃபிரீனியா, சுமார் 10 சதவீதம்), மதுபானத்திற்கு அடிமையாதல் (சுமார் 7 சதவீதம்), சமூகவிரோத ஆளுமை கோளாறுகள் (சுமார் 5 சதவீதம்), சில வகை நியூரோஸிஸ் (5 சதவீதத்திற்கும் குறைவு). அது கூறும் ஆலோசனை என்னவென்றால்: “தற்கொலை முயற்சிகள் எதையுமே அசட்டை செய்யக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு முயற்சி செய்பவர்களில் 20 முதல் 30 சதவீதத்தினர் ஒரு வருடத்திற்குள்ளாக மறுபடியும் முயற்சிக்கின்றனர்.” டாக்டர் ஜான் ஃபாஸட் எழுதுகிறார்: “[ஐக்கிய மாகாணங்களில்] தற்கொலை செய்துகொள்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்ததே கிடையாது.” மற்றொரு புத்தகம் கூறுகிறது: “அடிப்படைக் காரணமான மனச்சோர்வைத் தீர்த்துக்கொள்வதற்காக, ஒருவர் வெகு சீக்கிரத்தில் மனநல மருத்துவரைச் சந்திப்பதே சிகிச்சையின் மிக முக்கிய அம்சமாகும்.”