உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/8 பக். 18-19
  • தனிமையின் இனிமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தனிமையின் இனிமை
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தனிமை—ஏன் மதிப்பு வாய்ந்தது?
  • கடவுளிடம் நெருங்க தனிமையை பயன்படுத்துங்கள்
  • சமநிலை தேவை
  • எலக்ட்ரானிக் சாதனங்களால் கற்றுக்கொள்ளும் திறன் பாதிக்குமா?
    விழித்தெழு!-2021
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • தியானம்
    விழித்தெழு!—2014
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/8 பக். 18-19

பைபிளின் கருத்து

தனிமையின் இனிமை

ஒரு சமயம் இயேசு, “தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.” (மத்தேயு 14:23) மற்றொரு சமயம், “பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.” (லூக்கா 4:42, பொது மொழிபெயர்ப்பு) ஆக, இயேசு கிறிஸ்துவுக்கும்கூட அவ்வப்பொழுது சற்று தனிமையாய் இருந்தது இனிதாகவும் மதிப்புடையதாகவும் இருந்தது என்பதை இந்த வசனங்கள் நிரூபிக்கின்றன.

இயேசுவைப் போலவே, மற்றவர்களும் தனிமையை மதிப்புடன் நோக்கினர் என்பதற்கு பைபிளில் உதாரணங்கள் இருக்கின்றன. சங்கீதக்காரனும் தனது மகத்தான சிருஷ்டிகரை நினைத்து இராச்சாமங்களில் தனிமையில் தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் விஷயத்தில், முழுக்காட்டுபவனாகிய யோவானின் மரண செய்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட உடனேயே அவர் “தனிமைக்காக தனிமையான ஓர் இடத்துக்குப் போனார்.”—மத்தேயு 14:13, NW; சங்கீதம் 63:6.

இன்று, சத்தம் சந்தடி நிறைந்த நவீன வாழ்க்கையில், தங்களுடைய சூழ்நிலையினாலோ, சொந்தத் தெரிவினாலோ, தனிமையை எவருமே முக்கியமாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் எப்பொழுது கடைசியாக தனிமையில் நேரத்தைச் செலவிட்டீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? “என் வாழ்க்கையில் நான் தனியாக இருந்ததேயில்லை” என்று திருமணமான ஓர் இளம் பெண் கூறுகிறார்.

ஆனால் தனிமை ஒருவருக்கு உண்மையிலேயே அவசியம்தானா? அப்படியானால், அமைதியான நேரத்தை பயனளிக்கும் விதத்திலும் பலனளிக்கும் விதத்திலும் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம்? தனிமையை நாடுவதில் சமநிலை வகிக்கும் பாகம் என்ன?

தனிமை—ஏன் மதிப்பு வாய்ந்தது?

கடவுள்பக்தியுள்ள பண்டைய மனிதரான ஈசாக்கு தனிமையை நாடி, ‘சாயங்காலவேளையிலே . . . வெளியிலே போ[னார்]’ என்று பைபிள் கூறுகிறது. ஏன்? “தியானம்பண்ண” என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 24:63) ஓர் அகராதியின்படி, தியானம்பண்ணுவது என்றால், “கருத்தூன்றி அல்லது ஆற அமர யோசிப்பது.” அது, “சீரியஸாகவும் நீண்ட நேரமாகவும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.” முக்கியமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவிருந்த ஈசாக்கு கவனச்சிதறல் இல்லாமல் தியானித்ததால், தெளிவாக சிந்திக்கவும், சிந்தனையை ஒழுங்குபடுத்தவும், எதை முதலில் செய்யவேண்டும் என்பதை மதிப்பிடவும் அப்படிப்பட்ட தியானம் அவருக்கு உதவியிருந்திருக்கும்.

‘அளவோடு தனிமையை விரும்பினால், அது நம் சிந்தனையை ஒழுங்குபடுத்தும், கவனத்தை ஒருமுகப்படுத்தும்’ என்று ஓர் மனநல நிபுணர் குறிப்பிடுகிறார். இது புத்துணர்ச்சி அளிப்பதாகவும், பலமளிப்பதாகவும், ஆரோக்கியமளிப்பதாகவும் இருப்பதற்கு பலர் சான்று அளிப்பர்.

தியானம் செய்வதனால் ஏற்படும் நற்பயன்களில், வார்த்தைகளிலும் செயல்களிலும் அமைதிகாத்து, அடக்கமாய் இருத்தலும் அடங்கும். இக்குணங்கள், ஞானமாக பேசவும் செயல்படவும் உதவும். இதன் காரணமாக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் சுமுகமான உறவைக் காத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, தியானம் செய்ய கற்றுக்கொள்ளும் ஒருவரால், எப்பொழுது அமைதியாய் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும். அவசரப்பட்டு எதையாவது பேசிவிடுவதற்கு மாறாக, தன் வார்த்தைகள் எதில் விளைவடையும் என்பதை அவர் எண்ணிப் பார்ப்பார். “தன் வார்த்தைகளில் பதற்றமடைகிற மனுஷனை பார்த்திருக்கிறாயா?” என்று ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர் கேட்கிறார். “அவனைவிட மூடனுக்கு அதிக நம்பிக்கையிருக்கிறது” என்று அவர் முடிக்கிறார். (நீதிமொழிகள் 29:20, NW) இவ்வாறு நாவைத் தவறாக பயன்படுத்துவதற்கு மாற்று மருந்து என்ன? பைபிள் சொல்வதாவது: “நீதிமானுடைய இருதயம் பதில் சொல்வதற்காக தியானிக்கும்.”—நீதிமொழிகள் 15:28, NW; சங்கீதம் 49:3-ஐ ஒப்பிடுக.

ஒரு கிறிஸ்தவன் ஆவிக்குரிய முதிர்ச்சியடைவதற்கு, தனிமையில் அமைதியாக தியானம் செய்வது மிக முக்கிய அம்சமாய் விளங்குகிறது. அப்போஸ்தலன் பவுலும் பொருத்தமாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:15.

கடவுளிடம் நெருங்க தனிமையை பயன்படுத்துங்கள்

ஓர் ஆங்கில பதிப்பாசிரியர் இவ்வாறு கூறினார்: “தனிமை என்பது, கடவுளிடம் நாம் ஏற்பாடு செய்துகொள்ளும் கலந்துரையாடும் இடம்.” சில சமயங்களில், தம் உடன் மனிதரைவிட்டுப் பிரிந்து தனிமையில் கடவுளிடம் ஜெபிக்க வேண்டிய தேவையை இயேசு உணர்ந்தார். இதற்கு ஓர் உதாரணம் பைபிளில் இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது: “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான [தனிமையான, NW] ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.”—மாற்கு 1:35.

சங்கீதங்களில், கடவுள் சம்பந்தப்பட்ட தியானம் பலமுறை குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. யெகோவாவிடம் வேண்டுதல் செய்த தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: ‘உம்மைத் தியானிக்கிறேன்.’ அந்தக் கருத்திலேயே ஆசாப்பின் வார்த்தைகளும் பின்வருமாறு உள்ளன: ‘உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.’ (சங்கீதம் 63:6; 77:12) இவ்வாறு, தெய்வீக குணங்களையும் செயல் தொடர்புகளையும் குறித்து தீவிரமாக யோசிப்பது அளவிலா பலன்களைத் தரும். அது ஒருவர் கடவுளிடம் நன்றி மதித்துணர்வைக் காட்ட உதவும்; அவரிடம் நெருங்கி வரவும் உதவும்.—யாக்கோபு 4:8.

சமநிலை தேவை

தனிமையை மிதமாகவே நாட வேண்டும். தனிமை என்னும் இடத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்வது நல்லது; அங்குத் தங்கிவிடுவதோ ஆபத்து என்பதாக தனிமையை விவரிக்கலாம். தன்னைத்தான் அதிகமாய் பிரித்து வைத்துக்கொள்வது என்பது, அடிப்படை மனிதத் தேவைகளான, கூட்டுறவு, பேச்சுத் தொடர்பு, அன்பு ஆகிய பண்புகளை வெளிக்காட்டுவதற்கு முரணாக அமைந்து விடுகிறது. மேலுமாக, தனிமை என்னும் மண்ணில் மடமை, சுயநலம் போன்ற களைகள் வளரக்கூடும். பைபிள் நீதிமொழிகள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 18:1) தனிமையைத் தேடுவதில் சமநிலையுடன் இருக்க, பிரிந்துசெல்வதனால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இயேசுவையும் பைபிள் காலங்களில் வாழ்ந்த ஆவிக்குரிய மற்ற மனிதர்களையும் போலவே, இன்றைய கிறிஸ்தவர்களும் தனிமையாய் இருக்கும் சந்தர்ப்பங்களைப் பெரிதும் போற்றுகின்றனர். ஏராளமான பொறுப்புகள், கவலைகளின் மத்தியிலும், தனிமையில் தியானிக்க நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனாலும், உண்மையில் மதிப்புமிக்க பொருட்களை நாம் வாங்குவதைப் போலவே, ‘நேரத்தை விலைக்கு வாங்க வேண்டும்.’ (எபேசியர் 5:15, 16, NW) அப்போது சங்கீதக்காரனைப் போலவே, நம்மாலும் இவ்வாறு சொல்ல முடியும்: “என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”—சங்கீதம் 19:14.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்