ஆர்கிட்டுகளுக்கு ஆபத்தா?
ஆர்கிட்டுகள் இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மையுள்ளவை. அவை தரையிலும், மரங்களிலும் ஏன் பாறைகளிலும்கூட வளருகின்றன. ஆனாலும், தனிச்சிறப்பு வாய்ந்த இந்தத் தாவரங்களின் சுற்றுச்சூழல் தொடர்ந்து கெடுக்கப்பட்டு வந்தால் அவை காட்டிலிருந்தே காணாமல் போகலாம் என உலக இயற்கை வளவாய்ப்பு பாதுகாப்பு யூனியன் [International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)] எச்சரிக்கிறது. ஐயூசிஎன்-ஐச் சேர்ந்த வென்டீ ஸ்ட்ராம் கூறுகிறார்: “வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்களால் மகரந்தச் சேர்க்கைக்கு காரணமான பூச்சிகள் முற்றிலும் அழிந்துபோகலாம் அல்லது வேறு இடத்திற்கு சென்றுவிடலாம். இதன் விளைவாக ஆர்கிட்டுகள் இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போகிறது.”
ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதும் விற்பனையாகும் ஐம்பது லட்சம் ஆர்கிட்டுகளில் சுமார் 20 சதவிகிதம் காட்டிலிருந்து எடுக்கப்படுவதாக கணிக்கப்படுகிறது. இதனால் அந்த அழகான செடியை நல்லவிதமாக பாதுகாப்பது கடினமாகிறது என ஐயூசிஎன் கூறுகிறது. ஆகவே, ஆர்கிட்டுகள் வேண்டுமென விரும்புபவர்கள் காட்டிலிருந்து பிடுங்கிச் செல்வதற்கு பதிலாக, கிரீன்ஹௌஸில் வளர்ந்தவற்றை வாங்கிச்செல்ல வேண்டும் என ஐயூசிஎன் கூறுகிறது.
ஆர்கிட்டுகளில் குறைந்தபட்சம் 20,000 வகைகளை மனிதன் அறிந்திருக்கிறான். அவற்றில் சில 0.6 சென்டிமீட்டர் உயரம் உள்ள செடிகள்; இன்னும் சில 30 மீட்டர் நீளமான கொடிகளாகும். ஆர்கிட்டுகளில் பெரும்பாலானவை, அதிகளவான மழைபெய்யும், வெதுவெதுப்பான வெப்பமண்டல நிலங்களில் செழித்தோங்குகின்றன. ஆனால், உயிர்வாழ்வதற்கு அவை இயற்கையின் மிக நுணுக்கமான சமநிலையில் சார்ந்திருக்கின்றன.
மனிதர்களின் அறியாமையாலும் அசட்டை மனப்பான்மையாலும் சுற்றுச்சூழல் தொடர்ந்து கெடுக்கப்பட்டு வருகிறது என்பது வருந்தத்தக்கதே. இதன் காரணமாக, ஆர்கிட்டுகள் உட்பட அதிகமதிகமான தாவரங்கள் ஆபத்திற்குள்ளாகி வருகின்றன. ஆனால் இது இன்னும் அதிக நாட்கள் நீடிக்காது. கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகத்தில் மனிதன் இயற்கையோடு ஒத்திசைவாக வாழ்வான். அந்தச் சமயத்தில் சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகள் நிறைவேறும்: “திறந்தவெளியும் அதிலுள்ள யாவும் மகிழ்ந்து களிகூரட்டும். அதேசமயம் காட்டிலுள்ள மரங்கள் யாவும் சந்தோஷத்தில் பாடட்டும்.”—சங்கீதம் 96:12, NW.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Jardinería Juan Bourguignon
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Jardinería Juan Bourguignon