இளைஞர் கேட்கின்றனர். . .
சத்தியத்தோடு ஒன்றிவிட நான் என்ன செய்ய வேண்டும்?
“நான் ஒரு யெகோவாவின் சாட்சியா வளர்ந்தேன். யெகோவாவின் சாட்சியாக வளர்ந்த எல்லாருக்கும் யெகோவாவை பற்றி உண்மையில் தெரிந்திருக்கும் என்று நான் இவ்வளவு நாளாக நினைச்சிருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்பு!”—ஆன்டொனெட்.
“சத்தியம் என்றால் என்ன?” என்ற புகழ்பெற்ற கேள்வியின் நாயகன் பொந்தியு பிலாத்து. இவர் இயேசுவுக்கு மரணதண்டனை விதித்த அதிகாரி. (யோவான் 18:38, NW) பிலாத்து இந்தக் கேள்வியை இளக்காரமாக கேட்டாரே ஒழிய, அதைப்பற்றி உண்மையில் பேச அவர் விரும்பவில்லை. ஏனென்றால், அவருக்கு உண்மையில் “சத்தியத்தில்” விருப்பம் இல்லை. ஆனால், சத்தியத்தை தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? சத்தியத்தில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?
சத்தியம் என்றால் என்ன என்பதை பல நூற்றாண்டுகளாகவே தத்துவ ஞானிகள் ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்தும், சிறிதளவு பலன் மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதில் கூட அவர்களுக்கு சந்தேகமே. ஆயினும் பிலாத்துவுடைய கேள்விக்கு உங்களால் விடை காண முடியும். கடவுளுடைய வசனமே சத்தியம் என்று இயேசு கற்பித்தார். இயேசு தன்னையே “சத்தியம்” என்றும் வர்ணித்தார். “சத்தியம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டானது” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (யோவான் 1:17; 14:6; 17:17) கிறிஸ்தவ போதனைகளின் முழு தொகுப்பும் “சத்தியம்” அல்லது ‘சுவிசேஷத்தின் சத்தியம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இத்தொகுப்பு பைபிளின் பாகமாக ஆனது. (தீத்து 1:13; கலாத்தியர் 2:14; 2 யோவான் 1, 2) இந்தக் கிறிஸ்தவ போதனைகளில், கடவுளுடைய தனிப்பட்ட பெயர், கடவுளுடைய ராஜ்யம் நிறுவப்பட்ட விவரம், இறந்தவர்கள் மறுபடியும் உயிர்ப்பெற்று வருதல், இயேசு தமது உயிரையே பலியாக கொடுத்தல் ஆகியவை அடங்கியுள்ளன.—சங்கீதம் 83:17; மத்தேயு 6:9, 10; 20:28; யோவான் 5:28, 29.
ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பைபிள் சத்தியத்தை அவர்களுடைய கிறிஸ்தவ பெற்றோர்களே சொல்லிக்கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் “சத்தியத்திலே நடக்கிறார்கள்” என்று சொல்லமுடியுமா? (3 யோவான் 3, 4) அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, இருபது வயது ஜெனிஃபர் சிறுபிள்ளையாக இருந்தபோது ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்டாள். அவள் இவ்வாறு ஞாபகப்படுத்தி கூறினாள்: “அம்மா என்னை சாட்சிகளின் மாநாடுகளுக்கு பலமுறை அழைத்துச் சென்றார். நான் முழுக்காட்டுதல் எடுப்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஜாடையாக எப்போதும் சொல்லுவார். நானோ இவ்விதம் நினைத்துக்கொள்வேன்: ‘நான் நிச்சயமா ஒரு சாட்சியாகப்போறதில்லை. நான் ஜாலியா இருக்கத்தான் விரும்பறேன்.’”
சில இளைஞர்கள், பெற்றோர்கள் போதித்ததையெல்லாம் நம்புகிறார்கள். ஆனால் பைபிள் உண்மையில் என்னதான் போதிக்கிறது என்பதை ஆழமாக புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். இதனால் என்ன ஆபத்து ஏற்படலாம்? இயேசு சிலரைக் குறித்து பேசுகையில், அவர்கள் “தங்களுக்குள்ளே வேர்கொள்ளாமலிருக்கிறார்கள்” என்று எச்சரித்தார். அப்படிப்பட்டவர்கள் “கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்.” (மாற்கு 4:17) ஒருசில இளைஞர்கள் பைபிள் அடிப்படையிலான தங்கள் நம்பிக்கைகளை ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வார்கள். ஆனால் இவர்களோ தனிப்பட்டவிதமாக கடவுளை முழுமையாக அறிந்திருக்கமாட்டார்கள். இளம் பெண்ணாகிய அனீசா இவ்வாறு சொல்கிறாள். “நான் சின்ன பெண்ணாயிருந்தபோது யெகோவா தேவனை நன்றாக அறிந்திருந்தேன் என்று சொல்ல முடியாது. என் பெற்றோர் கடவுளோடு நல்ல உறவு வைத்திருந்ததால், எனக்கும் கடவுளோடு நல்ல உறவு இருப்பதாக நினைத்தேன்.”
தனிப்பட்டவிதமாக நீங்கள் கடவுளை அறிந்திருக்கிறீர்களா? அல்லது யெகோவா வெறுமென உங்கள் பெற்றோரின் கடவுளாகத்தான் இருக்கிறாரா? பைபிள் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவே, நானோ உமது மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; நீரே என் கடவுள்.” (சங்கீதம் 31:14, NW) இவரைப் போல் உங்களாலும் சொல்ல முடியுமா? உண்மை சற்று கசக்கத்தான் செய்யும், அதை எதிர்ப்பட தைரியம் தேவை. இதற்காக, “முதலில் ஒருவர் தன்னையே நேர்மையாக சுய பரிசோதனை செய்ய வேண்டும்” என்கிறான் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன். உங்களையே நன்றாக பரிசோதனை செய்து பார்த்தபின்பு, சத்தியம் (கிறிஸ்தவ போதனைகளின் முழு தொகுப்பு) உங்கள் வாழ்க்கையின் பாகமாக ஆகவில்லை என்ற உண்மை தெரியவரலாம். அதனால் உங்கள் நம்பிக்கை ஆட்டம் கண்டு, வாழ்க்கையில் நோக்கமின்றி தள்ளாடும் நிலை ஏற்படலாம். உண்மையான வழிநடத்துதல் இன்றி, திக்குத்திசை தெரியாமல் தவிப்பீர்கள்.
யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய கிறிஸ்தவ கூட்டங்களில் “சத்தியத்தை உனதாக்கு”a என்ற பாடலை அடிக்கடி பாடுகின்றனர். அந்த அறிவுரை உங்களுக்கும் பொருந்தலாம். ஆனால் அதை நீங்கள் எவ்வாறு செய்ய முடியும்? முதல் கட்டமாக என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள்
‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியுங்கள்’ என்று கூறும் அப்போஸ்தலனாகிய பவுலின் அறிவுரையை ரோமர் 12:2-ல் நாம் பார்க்கிறோம். இதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? “சத்தியத்தின் திருத்தமான அறிவை” பெறுவதன் மூலம் செய்யலாம். (தீத்து 1:3, NW) பெரோயா பட்டணத்தில் வாழ்ந்த பூர்வ ஜனங்கள் தாங்கள் கேள்விப்பட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக “காரியங்கள் [அவர்கள் கற்றுக்கொண்டிருந்த விஷயங்கள்] இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்துபார்த்தார்கள்.”—அப்போஸ்தலர் 17:11.
வேதவாக்கியங்களை ஆராயவேண்டிய தேவையை எரின் என்ற இளம் கிறிஸ்தவ பெண் உணர்ந்தாள். அவள் நினைவுபடுத்தி சொல்கிறாள்: “நான் ஆராய்ச்சி செய்தேன். நான் என்னையே கேட்டுக்கொண்டேன், ‘இதுதான் உண்மையான மதம் என்று எப்படி நான் அறிந்து கொள்வது? யெகோவா என்ற பெயருள்ள ஒரு கடவுள் இருக்கிறார் என்று எப்படி தெரிந்துகொள்வது?’” நீங்களும் ஒரு தனிப்பட்ட படிப்பு திட்டத்தை ஏன் துவங்கக்கூடாது? நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவுb என்ற பைபிள் அடிப்படையிலான புத்தகத்திலிருந்து நீங்கள் படிக்க துவங்கலாம். அதை கவனமாக வாசியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் எடுத்துப் பாருங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களோடு, அந்த வசனங்கள் எவ்வாறு பொருந்துகிறது என்றும் பாருங்கள். இப்படி செய்யும்போது ‘நீங்கள் வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்து போதிக்கிறவனாயும்’ ஆவீர்கள். நீங்கள் இதுவரை சத்தியத்தைப் பற்றி நினைத்திருந்ததற்கும், உண்மையில் சத்தியம் என்ன என்பதை தெரிந்தபின் உள்ள வித்தியாசத்தையும் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்!—2 தீமோத்தேயு 2:15.
பைபிளில் உள்ள சில விஷயங்கள் ‘புரிந்து கொள்கிறதற்கு கடினமாய் இருக்கிறது’ என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார். (2 பேதுரு 3:16 NW) இதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் எப்பேர்ப்பட்ட கடினமான காரியங்களையும் கிரகித்துக்கொள்வதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவி செய்யும். (1 கொரிந்தியர் 2:11, 12) எதையாவது புரிந்து கொள்வதில் பிரச்சினைகள் இருக்குமானால் கடவுளுடைய உதவிக்காக ஜெபம் செய்யுங்கள். (சங்கீதம் 119:10, 11, 27) காவற்கோபுர சங்கத்தின் பிரசுரங்களில் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எவ்வாறு ஆராய்ச்சி செய்வது என்பது தெரியவில்லையென்றால் உங்கள் பெற்றோரிடம் அல்லது கிறிஸ்தவ சபையில் உள்ள முதிர்ச்சியுள்ள அங்கத்தினர்களிடம் உதவி கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
நீங்கள் படிப்பது பெருமை அடித்துக்கொள்வதற்காக அல்ல என்பதை நினைவில் வையுங்கள். காலின் என்ற இளம் பெண் சொல்வதைப்போல் “யெகோவாவின் குணங்களை அறிந்துகொள்ள” நாம் படிக்கிறோம். நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். அப்போது அது உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிந்து விடும்.—சங்கீதம் 1:2, 3.
கிறிஸ்தவ கூட்டங்களில் சபை அங்கத்தினர்களோடு கூட்டுறவு கொள்வதும் உங்களுக்கு உதவும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதுபோல் சபையானது “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 3:15) சில இளைஞர்கள் கிறிஸ்தவ கூட்டங்கள் ‘போரடிப்பதாக’ குறை கூறுகிறார்கள். “ஆனால் நீங்கள் கூட்டங்களுக்கு தயாரிக்கவில்லையென்றால் கூட்டங்களிலிருந்து நீங்கள் அதிக நன்மையை பெறப்போவதில்லை” என்கிறாள் காலின். எனவே கூட்டத்திற்கான பகுதிகளை நீங்கள் முன்கூட்டியே தயாரியுங்கள். கூட்டங்களில் வெறும் பார்வையாளராக உட்காராமல், அவற்றில் பங்கு கொண்டால் உங்களுக்கு கூட்டங்கள் ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும்.
படிக்கிறதுக்கெல்லாம் ஏது நேரம்?
பள்ளிப் படிப்பு, வீட்டு வேலைகள் எக்கச்சக்கமாக இருக்கும்போது படிப்பதற்கு நேரம் கிடைப்பது கஷ்டம்தான். “கூட்டங்களுக்கு தயாரிக்க வேண்டும், தனியா நேரம் ஒதுக்கி பைபிளையும், பைபிள் பிரசுரங்களையும் படிக்க வேண்டும் என்று நான் பல வருடங்களாக முயற்சி செய்தேன். ஆனாலும் தோல்வியே மிஞ்சியது” என்று எழுதுகிறாள் இளம் பெண் சூசன்.
சூசன் அனாவசியமான வேலைகளிலிருந்து ‘நேரத்தை வாங்க,’ அதாவது நேரத்தை மிச்சப்படுத்த கற்றுக்கொண்டாள். (எபேசியர் 5:15, 16) முதலாவது, என்னென்ன படிக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை போட்டாள். பின்பு, அவைகளை படித்து முடிப்பதற்காக நேரத்தை ஒதுக்கினாள். அவளுடைய அட்டவணையில் பொழுதுபோக்கிற்காகவும் சிறிது நேரத்தை சேர்த்துக்கொண்டாள். அவள் தரும் ஆலோசனை இதோ: “எல்லா நேரத்தையும் பட்டியலிடாதீர்கள். நம் அனைவருக்கும் ஓய்வு எடுக்க சிறிது நேரம் தேவை.” இப்படிப்பட்ட ஓர் அட்டவணையைப் போட்டு, அதன்படி செய்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும்.
படித்ததை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்
படித்ததை அப்படியே பொருத்தினால், அது உங்கள் வாழ்க்கையின் பாகமாகிவிடும். வேறொரு நபருக்கு கற்பிக்க முயற்சி செய்யுங்கள். “என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்” என்று சங்கீதக்காரன் சொன்னார்.—சங்கீதம் 49:3.
நீங்கள் நற்செய்தியைக் குறித்து வெட்கப்படவில்லையென்றால், உங்கள் பள்ளி தோழர்களுக்கும், நீங்கள் சந்திக்கும் மற்றவர்களுக்கும் அதைப் பற்றி சொல்ல தயங்கமாட்டீர்கள். (ரோமர் 1:16) சத்தியத்தையும் நீங்கள் படித்த விஷயங்களையும் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களோடு பேசினால் சத்தியம் உங்கள் இருதயத்திலும் மனதிலும் பதிந்துவிடும்.
யாரோடு பழகுகிறீர்கள் என்று ஜாக்கிரதையாய் இருங்கள்!
முதல் நூற்றாண்டிலிருந்த சில கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய விதத்தில் நன்றாக முன்னேற்றம் செய்தனர். ஆனாலும் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களிடம் இவ்வாறு கேட்டு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. “சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?” (கலாத்தியர் 5:7) அலெக்ஸ் என்ற பையன் “கெட்ட நண்பர்களோடு சேர்ந்து தனது நேரத்தை செலவழித்ததால்” அவன் கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நாசமடைந்தன என்று தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான். உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காக, நீங்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்.
நிச்சயமாகவே நல்ல கூட்டுறவுகள் நீங்கள் முன்னேற்றமடைய உதவி செய்யும். “இரும்பை இரும்பு கருக்கிடும், அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்” என்று நீதிமொழிகள் 27:17 சொல்கிறது. தங்கள் சொந்த வாழ்க்கையில் சத்தியத்தை பொருத்துவதில் நல்ல முன்மாதிரிகளாக இருக்கும் ஜனங்களை கண்டுபிடியுங்கள். உங்கள் வீட்டிலேயேகூட அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். இளம் ஜெனிஃபர் இவ்வாறு ஞாபகப்படுத்தி சொல்கிறாள், “என்னுடைய தாத்தா எனக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை சபையில் நடக்கும் காவற்கோபுர படிப்பிற்காக அவர் எப்பொழுதும் மூன்று மணி நேரம் தயாரிப்பார். அந்தப் படிப்புக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேத வசனத்தையும் வித்தியாசமான பைபிள் மொழிபெயர்ப்புகளில் எடுத்துப்பார்த்து, வார்த்தைகளின் அர்த்தத்தை தன்னுடைய அகராதியிலும் பார்ப்பார். பைபிளில் உள்ள சிறிய சிறிய விஷயங்களிலும் அவர் படு அறிவாளி. நீங்கள் அவரிடம் எதை பற்றியாவது கேள்வி கேட்டால், அதற்கான பதிலை கண்டுபிடித்து தருவார்.”
சத்தியத்தோடு நீங்கள் ஒன்றிவிடும்போது அதை விலைமதியா பொக்கிஷமாக கருதுவீர்கள். என்ன வந்தாலும்சரி, எந்த விலை கொடுத்தாலும்சரி, அதை இழக்க விரும்பமாட்டீர்கள். எனவே சத்தியத்தை ஒருபோதும் “என் பெற்றோரின் மதம்” என்று கருதாதீர்கள். ‘என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்’ என்று சொன்ன சங்கீதக்காரனைப்போல் திட தீர்மானமாக இருங்கள். (சங்கீதம் 27:10) பைபிள் போதிப்பது என்னவென்று உண்மையில் அறிந்துகொண்டு, அதை நம்பி, மற்றவர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நம்புவதற்கிசைய வாழ்வதன் மூலம் சத்தியத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாக ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டலாம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
b உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 13-ன் படம்]
சத்தியத்தோடு ஒன்றிவிட்டீர்களா என்பதை தெரிந்துகொள்ள பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நீங்களாகவே படித்து ஆராய்ச்சி செய்யுங்கள்