எய்ட்ஸ்—நோயாளிகளின் எதிர்காலம்?
ஹெச்ஐவியை குணமாக்கவோ தடுக்கவோ மருந்துகள் இல்லாததோடு, அதைக் கட்டுப்படுத்துவதில் வேறு சில முட்டுக்கட்டைகளும் உள்ளன. ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், நிறைய பேருக்கு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள விருப்பம் இல்லை. நோய் வந்தால் வரட்டும் என்று உயிரை துச்சமாய் மதிக்கிறார்கள். உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஹெச்ஐவி முற்றி, எய்ட்ஸ் நோயாளிகளாக ஆவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் ஹெச்ஐவி தொற்றுகிற ஆட்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இதற்கு அசோஸியேட்டட் பிரஸ் கூறும் காரணம்: “நோய் தடுப்பு எச்சரிப்புகளை நிறையப்பேர் கேட்பதில்லை.”
வளரும் நாடுகளில்தான் சுமார் 93% ஹெச்ஐவி நோயாளிகள் இருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு இந்நோயை எதிர்த்து போராடுவதில் வேறுசில பிரச்சினைகளும் உள்ளன. இவற்றில் அநேகம் ஏழைநாடுகள் என்பதால் அடிப்படை சுகாதார வசதிகள்கூட கிடையாது. இந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு புதிய மருந்துகள் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் அதை வாங்க வசதியில்லை. ஏனென்றால் இவர்கள் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தாலும் ஒரு வருடத்திற்கு ஆகும் மருத்துவ செலவை ஈடுகட்டமுடியாது!
சரி, நோயை உண்மையில் குணமாக்கக்கூடிய புதிய மருந்தை குறைந்தவிலையில் கண்டுபிடித்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இந்த மருந்து தேவைப்படுவோருக்கு எல்லாம் கிடைத்திடுமா? அநேகமாக கிடைக்காது. ஏனென்றால், ஒவ்வொரு வருடமும் சுமார் நாற்பது லட்சம் குழந்தைகள் ஐந்து வகையான வியாதிகளுக்கு இரையாகிறார்கள். இவ்வியாதிகளை தற்போது கிடைக்கும் மலிவான தடுப்பு மருந்துகளைக் கொண்டே தடுக்க முடியும் என்று அறிவிக்கிறது ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு (UNICEF).
வைத்தியத்திற்கு மருந்து கிடைக்காத நாடுகளில் உள்ள மக்கள் என்ன செய்யலாம்? கலிபோர்னியாவில், சாண்டாகுரூஸ் நகரில் இன்டர்நேஷனல் ஹெல்த் புரோகிராம்ஸ் என்ற அமைப்பு இயங்கிவருகிறது. இந்த அமைப்பு வளரும் நாடுகள் பலவற்றில் ஹெச்ஐவி தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டங்களை செயல்படுத்த உதவியிருக்கிறது. இந்த அமைப்பை சேர்ந்த ரூத் மோட்டா என்ற பெண்மணி இவ்வாறு கூறுகிறார்: “மருந்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்பிக்கையான மனநிலையும் முக்கியம் என்பதை அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டேன். எனக்கு தெரிந்த ஒருசிலர், ஹெச்ஐவி தொற்றி 10 முதல் 15 வருடங்கள் ஆகியும் உயிரோடு இருந்திருக்கிறார்கள். அவர்கள் மருந்தை தொட்டுக்கூட பார்த்ததில்லை. சிகிச்சைகள் நல்லதுதான். ஆனால் நோய் தீர வெறுமனே மாத்திரை மருந்துகளை விழுங்கினால் மட்டும் போதாது. உங்களது மனநிலையும், சமுதாயத்தின் ஆதரவும், ஆன்மீகமும், சத்துள்ள ஆகாரமும் அவசியம்.”
விடிவுகாலம் பிறக்கப்போகிறது
எய்ட்ஸ் இனி ஒழிந்துவிடும் என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. பலர் கர்த்தருடைய ஜெபம் அல்லது பரமண்டல ஜெபம் என்கிறார்கள். அதில் அடங்கியிருக்கும் வார்த்தைகள் சிறந்த நம்பிக்கையை அளிக்கின்றன. பைபிளில் மத்தேயு என்ற புத்தகத்தில் அந்த ஜெபம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கடவுளுடைய விருப்பம் (சித்தம்) பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படவேண்டும் என்று நாம் அந்த ஜெபத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம். (மத்தேயு 6:9, 10) கடவுள் இந்த ஜெபத்திற்கு பதிலளிப்பார். மனிதர்கள் வியாதிகளால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம் அல்ல. எனவே எய்ட்ஸை மாத்திரம் அல்ல மனித குலத்தை வாட்டிவதைக்கும் மற்ற எல்லா வியாதிகளையும் ஒரேடியாக ஒழித்துவிடுவார். அப்போது, “குடிமக்கள் யாரும், நான் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24, NW.
இதற்கிடையில், நோய் வரும் முன் காப்பதே நாம் எடுக்கும் சிறந்த நடவடிக்கை. பல நோய்களை எடுத்துக்கொண்டால்: ஒன்று அவற்றை தடுக்க முடியும் அல்லது அவற்றை குணமாக்க முடியும். ஆக இரண்டு தெரிவுகள் உள்ளன. ஆனால் இந்த ஹெச்ஐவியை பொருத்தமட்டில் தெரிவு என்பதே கிடையாது. அவற்றை தடுக்க முடியும், ஆனால் தற்போது குணமாக்க இயலாது. ஏன் வீணாக உங்கள் உயிரில் விளையாடுகிறீர்கள்? உண்மைதான் குணமாக்க முடியாதவரை வரும்முன் தடுப்பதே சிறந்த வழி.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“நோய் தீர வெறுமனே மாத்திரை மருந்துகளை விழுங்கினால் மட்டும் போதாது. உங்களது மனநிலையும், சமுதாயத்தின் ஆதரவும், ஆன்மீகமும், சத்துள்ள ஆகாரமும் அவசியம்.”—ரூத் மோட்டா
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
“சபையாரின் உதவியை மறக்கவே முடியாது”
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு செய்யும்படி சக கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) முதல் கட்டுரையில் பார்த்த கேரனுக்கும் பில்லுக்கும் ஹெச்ஐவி இருப்பதை அறிந்த உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறெல்லாம் உதவினார்கள் என்று கேரனின் அம்மா விளக்குகிறார்: “சபையாரின் உதவியை மறக்கவே முடியாது. பில்லுக்கு நிமோனியா வந்தது. அப்போது கேரனும் நோயுற்றிருந்தாள். தன்னுடைய நோயோடே பில்லையும், பிள்ளைகளையும் கவனிக்க போராடிக்கொண்டிருந்தாள். இவர்களுடைய வீட்டை சகோதரர்களே சுத்தம்செய்து, காரையும் ரிப்பேர் செய்து, துணிகளை எல்லாம் துவைத்து கொடுத்தார்கள். சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதிலும், வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு போவதற்கும் உதவினார்கள். இவர்களுக்காக சாப்பாட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்; சமையல் செய்தும் கொடுத்தார்கள். இவர்களுக்கு மன தைரியம் கொடுத்து, ஆன்மீக உதவியையும் பொருளாதார உதவியையும் மனதார செய்தார்கள்.”
[பக்கம் 8-ன் படம்]
ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்துவிட்டால் ஹெச்ஐவிக்கு இடம் ஏது?