நான்டெஸ் சாசனம்—சகிப்புத்தன்மைக்கு உத்தரவாதமா?
“என்னை சிலுவையில் அறைந்ததைப்போல் ஒரு வேதனை” என குறிப்பிட்டார் எட்டாம் போப் கிளமண்ட். பிரெஞ்சு அரசர் நான்காம் ஹென்றி 1598-ல் நான்டெஸ் சாசனத்தில் கையொப்பமிட்டதை எதிர்த்து அவர் புலம்பிய புலம்பலே இது. இப்பொழுதோ நானூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த சாசனம் இன்று மனக்கசப்பையோ எதிர்ப்பையோ கிளப்பிவிடவில்லை. அதற்கு மாறாக இது, சகிப்புத்தன்மைக்கான ஒரு நடவடிக்கையாகவும் எல்லாருடைய மத உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது. இதற்கு நினைவுவிழாவும் கொண்டாடப்படுகிறது. நான்டெஸ் சாசனம் என்றால் என்ன? இது உண்மையிலேயே சகிப்புத்தன்மைக்கு உத்தரவாதமளிக்கிறதா? இன்று நாம் இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
யுத்தத்தின் கோரப்பிடியில் ஐரோப்பா
சகிப்புத்தன்மையற்ற இரத்த வெறிகொண்ட மதப் போர்கள் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை கசக்கிப்பிழிந்து கொண்டிருந்தன. வரலாற்றாசிரியர் ஒருவர் தன்னுடைய கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்: “‘ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாய் இருங்கள்’ என்றார் இயேசு; பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்பு, இயேசுவின் இப்போதனையை கிறிஸ்தவர்கள் இவ்வளவு மோசமாக கேலிக்கூத்தாக்கவில்லை.” ஸ்பெய்ன், இங்கிலாந்து போன்ற சில நாடுகள் மத சிறுபான்மையினரை ஈவிரக்கமின்றி கொடுமையாக வேட்டையாடின. நாட்டை ஆள்பவரே அதன் மதத்தையும் தீர்மானிக்கிறார் என அர்த்தப்படுத்தும் “க்யூஸ் ரெகியோ, அயுஸ் ரெலிகியோ” என்ற தத்துவத்தை ஜெர்மனியை போன்றே மற்ற நாடுகளும் பின்பற்றின. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி பலவந்தப்படுத்தப்பட்டனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருப்பதற்கு சாத்தியமில்லாததாலும் அல்லது அப்படிப்பட்ட முயற்சியை யாரும் எடுக்காததாலும், மதங்களை பிரித்துவைத்தே யுத்தம் தவிர்க்கப்பட்டது.
பிரான்ஸ் தேசமோ தனக்கென்று தனி பாணியை பின்பற்றியது. வடஐரோப்பாவில் புராட்டஸ்டண்டினரும் தெற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்கரும் பெரும்பான்மையினராக இருந்தனர். பிரான்சு இவ்விரு நாடுகளுக்கிடையே அமைந்துள்ளது. 1500-களின் மத்திபத்தில் இக்கத்தோலிக்க நாட்டில் புராட்டஸ்டண்டினர் குறிப்பிடத்தக்க வகையில் சிறுபான்மையினராகி விட்டனர். தொடர்ச்சியான மதயுத்தங்கள் இந்தப் பிரிவினைக்கு காரணமாக இருந்தன.a அனேக சமாதான ஒப்பந்தங்களும், ‘கொந்தளிப்பை அடக்கும் சாசனங்கள்’ என்பதாக அழைக்கப்பட்டவையும், சமாதானமாக வெவ்வேறு மதங்கள், அருகருகே இருக்கும் நிலைமையை ஏற்படுத்துவதில் வெறும் வெத்துவேட்டுக்களாகத்தான் நிரூபித்தன. ஐரோப்பாவில் இருந்த மற்ற அண்டை நாடுகளைப் பின்பற்றாமல் பிரான்ஸ் ஏன் சகிப்புத்தன்மை எனும் பாதையை தெரிந்தெடுத்தது?
சமாதானத்திலும் அரசியலின் செல்வாக்கு
இந்த சமயத்தில் சகிப்புத்தன்மையின்மை கொடிகட்டி பறந்தது உண்மைதான். ஆகிலும் சமாதானமும், மத ஒற்றுமையும் ஒரே இடத்தில் ஐக்கியமாக இருக்க முடியும் என்ற எண்ணம் வளர்ந்தது. பொதுவாக சொல்லப்போனால், அந்த சமயத்தில் சமுதாயப் பற்றோடு மதவிசுவாசத்தை பிரிக்க முடியாது என்ற நிலை கேள்விக்கிடமாக இருந்து வந்தது. பிரெஞ்சு நாட்டவராக இருந்துகொண்டு அதேசமயம் கத்தோலிக்கராயிராமல் இருக்க முடியுமா? சிலர் முடியும் எனக் கருதியதாகத் தெரிகிறது. 1562-ல் பிரான்ஸின் அரசியல் வல்லுநர் மிஷல் டி லோஸ்பிடல் எழுதினார்: “ஒருவர் சர்ச்சிலிருந்து விலக்கப்பட்டாலும்கூட நாட்டின் குடிமகனாகவே தொடர்ந்து இருக்கிறார்.” லா பாலிடிக் (அரசியல் சார்ந்த) என்ற கத்தோலிக்க பிரிவும் இதே கருத்தில் வாதாடியது.
பிரான்ஸில் கையொப்பமிடப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் பயனற்றவையாக இருப்பினும் அவற்றில் புதிய கருத்துக்கள் இருந்தன. நடந்ததை மறப்போம்; அதன் மூலம் எதிர்காலத்தை கட்டிக்காப்போம் என்ற கருத்தை பாலூட்டி வளர்த்தன. உதாரணமாக 1573-ன் பலோன் சாசனம் குறிப்பிட்டது: “அந்தக் கடந்தகாலச் செயல்கள் . . . வெறும் கனவாகவே இருக்கட்டும். அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று நினைப்போமாக.”
பிரான்ஸுக்கு மறப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. 1589-ல் நான்காம் ஹென்றி அரசராவதற்கு முன்பு, காலாகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஒப்பந்தம் எட்டே ஆண்டுகளில் பஸ்பமாகிப்போனது. பிரான்ஸ் மக்களுடைய பொருளாதார, சமூக வாழ்க்கை சரிந்தது. உள்நாட்டு ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டதால் துரிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான்காம் ஹென்றி, அரசியலையும் ஆன்மீகத்தையும் கரைத்துக்குடித்தவர். அனேக தடவை புராட்டஸ்டண்டிலிருந்து கத்தோலிக்கத்துக்கும் கத்தோலிக்கத்திலிருந்து புராட்டஸ்டண்டிற்கும் மாறியவர். 1597-ல் ஸ்பானியர்களோடு சமாதான உறவை ஏற்படுத்திக்கொண்டு, 1598-ல் உள்நாட்டில் எழுந்த கருத்துவேறுபாடுகளை களைந்தார். இதனால் புராட்டஸ்டண்டினருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையேயான உட்பூசலை தீர்ப்பதற்கு வழிவகுத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதயுத்தத்தினால் பிரான்ஸ் சீர்குலைந்து போயிருந்ததால், நான்காம் ஹென்றி கடைசியாக 1598-ல் நான்டெஸ் சாசனத்தில் கையொப்பமிட்டார்.
“அ லா ப்ரான்செஸ் ஓர் உரிமை மசோதா”
ஹென்றி கையொப்பமிட்ட நான்டெஸ் சாசனம் நான்கு முக்கிய பாகங்களை உள்ளடக்கியது. இதில், பிரதானமான பாகம் 92 அல்லது 95 ஒப்பந்த விதிகளும் புராட்டஸ்டண்டுகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் குறிப்பிடும் இரகசிய அல்லது “விசேஷ” ஒப்பந்த விதிகள் 56-ம் இருந்தன. நான்டெஸ் சாசனத்தின் மூன்றில் இரண்டு பங்கு விதிமுறைகள், முன்னாள் சமாதான ஒப்பந்தங்களிலிருந்து கடன்வாங்கப்பட்டவை. இவையே இச்சாசனத்திற்கு அஸ்திவாரமாய் அமைந்தன. இருப்பினும் முன்னாள் ஒப்பந்தங்களை போல இல்லாமல், இந்த சாசனத்தை உருவாக்குவதற்கு நீண்ட காலமெடுத்தது. இது மிகப்பெரியதாக இருந்ததற்கான காரணம் பிரச்சினைகளை நன்கு துருவித்துருவி ஆராய்ந்து, படிப்படியாக, எளிதாக தீர்ப்பதற்கு வகை செய்தது. இதில் என்ன உரிமைகள் கொடுக்கப்பட்டன?
இந்த சாசனம் பிரெஞ்சு புராட்டஸ்டண்டினருக்கு, அவர்களுடைய மனசாட்சியின்படி தீர்மானமெடுக்க சுதந்திரமளித்தது. அது அவர்களுக்கு உரிமைகளுடன் வாய்ப்புகளையும் அளித்து, மரியாதையோடு நடத்தப்பட வேண்டிய சிறுபான்மையினர் என அவர்களை அங்கீகரித்தது. அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுகையில் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதாகவும் சாசனத்தின் ஒரு இரகசிய பிரிவு உறுதியளித்தது. அதோடு புராட்டஸ்டண்டினருக்கு சமுதாயத்தில் கத்தோலிக்கரைப்போலவே சம அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அரசு பதவிகளும் அளிக்கப்படலாம் என்று உறுதி அளித்தது. அப்படியானால், இந்த சாசனம் மதசகிப்புத்தன்மைக்கு உண்மையில் உத்தரவாதம் அளித்ததா?
சாசனம் அனுமதித்த சகிப்புத்தன்மை
அந்த சமயத்தில், மதசிறுபான்மையினரை மற்ற நாடுகள் எவ்வாறு நடத்தின என்பதை கவனிக்கையில், நான்டெஸ் சாசனம் “அரியதொரு அரசியல் ஞானத்தின்” ஆவணம் என்பதாக வரலாற்றாசிரியர் எலிசபெத் லப்ரூஸ் குறிப்பிடுகிறார். புராட்டஸ்டண்டினர் கத்தோலிக்கர்களாக மதம்மாற வேண்டும் என்பதே ஹென்றியின் அடிப்படையான விருப்பமாக இருந்தது. அது வரையாக, வேற்று மதத்தினர் உடனிருப்பது என்பது ஒரு விட்டுக்கொடுக்கும் நிலையே. இதன் மூலம் மட்டுமே “நாட்டின் குடிமக்கள் எல்லாரும் ஜெபம் செய்து கடவுளை வணங்க முடியும்” என ஹென்றி கூறினார்.
உண்மையில், இந்த சாசனமானது கத்தோலிக்கருக்கு சாதகமாயிருந்தது. இது கத்தோலிக்க மதத்தை முதன்மையான மதம் என்றும் அதை மீண்டும் தேசம் முழுவதிலும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தது. புராட்டஸ்டண்டினர் கத்தோலிக்க சர்ச்சிற்கு பதின்மைவரி செலுத்த வேண்டும். கத்தோலிக்க புனித நாட்களை அனுசரிக்க வேண்டும். திருமணத்தில் கத்தோலிக்கருடைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எத்தனையோ அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள். புராட்டஸ்டண்டினருடைய மதசுயாதீனம் குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு மாத்திரம் பொருந்துவதாக இருந்தது. இந்த சாசனம், புராட்டஸ்டண்டினர் மற்றும் கத்தோலிக்கர் அருகருகே இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது. மற்ற சிறுபான்மையான மதப்பிரிவுகள் இதில் உள்ளடங்கவில்லை. எடுத்துக்காட்டாக முஸ்லீம்கள் பிரான்ஸிலிருந்து 1610-ல் வெளியேற்றப்பட்டார்கள். மெச்சிக்கொள்ளும் அளவுக்கு சகிப்புத்தன்மை இல்லாத இந்த சாசனத்திற்கு இன்று ஏன் இந்தளவுக்கு புகழ்மாலை சூட்டப்படுகிறது?
முக்கியமான விளைவுகள்
வரலாற்றின் கால ஓட்டத்தில் இந்த சாசனத்தைக்குறித்து அதிகமாக ஒன்றும் சொல்லப்படவில்லை. வரலாற்றாசிரியர்கள் இதை “முக்கியமற்ற சம்பவம்” என்றே குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்த சாசனம், அரசியலில் தலைசிறந்த சாணக்கிய தந்திரம் என்பதாக இப்பொழுது கருதப்படுகிறது. நான்டெஸ் சாசனம் புராட்டஸ்டண்ட் மதத்தை திருச்சபையின் எதிரி என்று அழைப்பதற்கு பதில் ஒரு மதம் என்று அழைத்தது. கத்தோலிக்க மதத்தையல்லாமல் வேறு மதத்தை ஏற்றுக்கொள்வது அநேக மதங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான கதவை திறந்து வைத்தது. “மதவெறி கொள்கைகளில் கத்தோலிக்கரைப் புராட்டஸ்டண்டினர் பின்பற்றிவிடாதபடிக்கு அவர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த சாசனம் உதவியது” என்பதாக ஒரு சரித்திராசிரியர் குறிப்பிடுகிறார். அரசாங்கத்திடமும் நாட்டினிடமும் மக்கள் இராஜபக்தியோடு இருக்கிறார்களா இல்லையா என்பதை மதம் தீர்மானிக்க முடியாது என நான்டெஸ் சாசனம் ஒப்புக்கொண்டது. கூடுதலாக, குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டும்; மாறாக, மதத்தைக் காரணங்காட்டி ஒரு நபரை சட்டப்படி தண்டிக்கக் கூடாது என்பதாகவும் குறிப்பிட்டது. இப்படிப்பட்ட கருத்துக்கள் பெரிய மாற்றங்களை பிரதிபலித்தன.
சாசனத்தில் கையொப்பமிடும்போது, உள்நாட்டு ஒற்றுமையே அரசராகிய ஹென்றியின் மனதில் மேலோங்கி இருந்தது. ஆகவே இதை உறுதிப்படுத்துவதற்கு இச்சாசனம் உள்நாட்டு ஒற்றுமையை மத ஒற்றுமையிலிருந்து பிரித்துவிட்டது. “இது மதசார்பற்ற நடவடிக்கைகளுக்கு கதவை திறந்துவைத்தது . . . , தேசமும் மதமும் ஒரே அர்த்தத்தைக்கொடுக்கும் இரண்டு வார்த்தைகள் என்று இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக்கியது” என்பதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். கத்தோலிக்க சர்ச் ஓரளவுக்கு அதிகாரம் செலுத்திவந்தது; அதிகாரத்தைப் பொருத்தவரை அரசுடைய கைதான் அதிகமதிகமாக ஓங்கியது. நாட்டின் சச்சரவுகளை தீர்ப்பதற்கு மன்னருக்கே முழு அதிகாரம் இருந்தது. மதப்பிரச்சினைகளுக்கு அரசியல் அல்லது சட்டப்படியான தீர்வு காண்பதில் மதத்திற்கு அல்ல, அரசாங்கத்திற்கே உரிமையிருந்தது என்றால் அரசியலுக்கு மதத்தின்மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைக் குறித்தது. இதன் காரணமாகவே “சர்ச்சின் மீது அரசியல் சக்திகளின் மாபெரும் வெற்றி” என இச்சாசனத்தை வரலாற்றாசிரியர் ஒருவர் வர்ணித்தார். மற்றொருவரோ “நாகரிக அரசு உருவாகும் சரியான காலப்பகுதியை இச்சாசனம் குறித்துக்காட்டியது” என்பதாக கூறினார்.
இன்றைய நிலை
நான்டெஸ் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில கொள்கைகள், மற்ற அரசாங்கங்களாலும் பின்பற்றப்பட்டன. இச்சமயத்தில், அனேக நாடுகள் மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவைக்குறித்து புதுவிளக்கமளித்தன. அவை அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு புதிய அஸ்திவாரத்தையும் போட்டன. காலப்போக்கில் (1905-ல்) மதத்திலிருந்து அரசியலை முற்றிலுமாக பிரிப்பதற்கு பிரான்ஸ் வழிவகுத்தது. வரலாறு மற்றும் சமூகவியலின் பிரபல பேராசிரியர் ஸான் பொபேரோ, இந்த ஏற்பாடு, “சிறுபான்மையினருக்கு மிகச்சிறந்த பாதுகாப்பளித்தது” என்பதாக குறிப்பிட்டார். ஏனெனில் அந்த சமயத்தில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துக்கொண்டே வந்தது. மற்ற நாடுகள் மதசார்புடைய ஆட்சிமுறையை பின்பற்றினாலும் அனைவருக்கும் மதசுதந்திரத்தை உறுதியளித்தன. மேலும் எல்லா மக்களுக்கும் தங்களுடைய அரசியலமைப்பு சட்டத்தில் சம உரிமையையும் வாக்களித்தன.
இருப்பினும், மதசுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இன்னுமதிகமான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என சிலர் கருதுகின்றனர். “நான்டெஸ் சாசனத்திற்கு நூற்றாண்டுக்கு ஒருமுறை நினைவுவிழாக் கொண்டாடுகின்றனர் மற்ற சமயங்களில் எல்லாம் அதை மீறியே நடக்கின்றனர்” என்பதாக பத்திரிகையாளர் ஆலன் டுயூமெல் புலம்புகிறார். உதாரணமாக, விஷயமறிந்த சில கருத்துரையாளர்கள் பின்வருமாறு கோடிட்டுக்காட்டினார்கள்: எல்லா சிறுபான்மை மதத்தினரையும் இச்சாசனம் மனம்போனபோக்கிலே வேறுபடுத்தியது. சிறுபான்மை மதத்தினரை “பிரிவுகள்” என முத்திரையிடுவதன் மூலம் தனது சகிப்புத்தன்மையின்மையை வெளிக்காட்டியது. ஜனங்கள் 400 வருடங்களுக்கு முன்பாக கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடம் இதுவே: சமாதானத்தோடு தப்பெண்ணமில்லாமல் வேற்று மதத்தினரோடு கூடி வாழ்வதே சிறந்தது. ஆனால் இப்பாடம் இன்றும்கூட பொருந்தும்.
ஊசலாடும் விவாதங்கள்
விதிமுறைகளுக்கு எதிராக, மற்ற மதங்களை விட்டுவிட்டு, சில மதங்களுக்கு மாத்திரம் சலுகை காட்டுவது மதசுதந்திரத்தை அர்த்தப்படுத்தாது. பிரான்ஸில், நிர்வாகத்தினர் சிலர், யெகோவாவின் சாட்சிகளை மத அமைப்பாக அங்கீகரிக்கும்போது, மற்றவர்கள் வேறுவிதமாக கருதுவதேன்? எது மதம், எது மதமல்ல என்பதை ஒரு மதச்சார்பற்ற நாடு வரையறுத்து சொல்லுவதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்த நடவடிக்கை, வேறுபடுத்துவதில் ஆரம்பித்து துன்புறுத்தலுக்கு வழிநடத்தும். மேலுமாக, “இந்நடவடிக்கை மற்ற நாடுகளுக்கும் பல்வேறு மத அமைப்புகளுக்கும் பரவுவதற்கு ஒரு முன்மாதிரியாகி விடும்” என்பதாக ஐரோப்பிய பார்லிமெண்டின் உறுப்பினர் ரிமோ இலஸ்கிவி கூறுகிறார். அதனால்தான் சட்ட விரிவுரையாளர் ஜீன்-மார்க் ஃப்ளோரன்ட் தனது முடிவுரையில், “பிரான்ஸிற்கும் அதன் மதசுதந்திரத்திற்கும் இது படுமோசமான வீழ்ச்சி. இந்நடவடிக்கை ஒரு கத்தோலிக்கனாக என்னை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்குகிறது” என்பதாக கூறுகிறார். கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் வரலாறு பாடம் கற்பிக்க முடியுமே தவிர எல்லாருக்குமல்ல.
சமீபத்தில் ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம் நடத்திய மாநாட்டில் ஒரு பேச்சாளர் “நம்முடைய நாட்களில் மதத்திற்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதே நான்டெஸ் சாசனத்தை போற்றுவதற்கான ஒரு வழியாகும்” என்பதாகக் குறிப்பிட்டார். உண்மையில், எல்லாருடைய மதசுதந்திரமும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்; இதுவே நான்டெஸ் சாசனத்திற்கு மிகச்சிறந்த முறையில் நினைவுவிழாக் கொண்டாடுவதாகும்!
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு!, ஏப்ரல் 22, 1997, பக்கங்கள் 3-9-ஐ பாருங்கள்.
[பக்கம் 20, 21-ன் பெட்டி/படங்கள்]
இன்றைய பிரான்ஸில் மதசுதந்திரம்
கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் சிலசமயங்களில் மறக்கப்பட்டுவிடுகின்றன. “கத்தோலிக்கர், ஹியூகநாட்டுகள் என்ற வேறுபாடு இனிமேலும் இருக்கக் கூடாது” என நான்டெஸ் சாசனத்திற்கு ஆதரவாக வாதாடிய நான்காம் ஹென்றி அறிவித்தார். 1905-லிருந்து, பிரான்ஸில் “சட்டம் எல்லா மதங்களையும் நம்பிக்கைகளையும் பிரிவுகளையும் சமமாகவே கருதிவருகிறது” என்பதாக பாரீஸ்-XII யுனிவர்சிட்டியின் மூத்த சட்ட ஆசிரியரான ஸான்-மார்க், பிரெஞ்சு செய்தித்தாளாகிய லா ஃபிகாரோவில் விளக்கினார். வேறுபாடுகளும் தப்பெண்ணமும் கடந்த காலச் செயல்களாக இருக்கவேண்டும்.
அனைத்து மதங்களுக்கும், மக்களுக்கும் சம உரிமையை வாக்களிக்கும் நான்டெஸ் சாசனம் 1998-ல், தனது நான்காவது நூற்றாண்டை நிறைவு செய்தது. இருப்பினும், இச்சாசனத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மறக்கப்பட்டு விட்டன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. யெகோவாவின் சாட்சிகள், பிரான்ஸில் மூன்றாவது பெரிய கிறிஸ்துவ மத அமைப்பாக இருக்கிறார்கள். இவர்கள் பிரான்ஸில் ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தங்களது மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும் பிரான்ஸ் பார்லிமெண்டின் அறிக்கை யெகோவாவின் சாட்சிகளை ஒரு சட்டப்படியான மதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பிரான்ஸிலுள்ள சில அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளை வழக்கமாக ஓரம்கட்டுகின்றனர். உதாரணமாக பிள்ளையை யார் பராமரிப்பது என்ற விவாதம் எழும்பும்போது, யெகோவாவின் சாட்சியாக இருக்கும் பெற்றோர் தங்களுடைய பிள்ளையை பராமரிக்க அனுமதிக்க வேண்டுமா என்பதாக பிரான்ஸின் நீதிபதிகள் அடிக்கடி சந்தேகம் எழுப்புகிறார்கள். வெறுமனே பெற்றோரின் மதப்பின்னணியே இதற்கு காரணம். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரே காரணத்தால் தங்களுடைய பராமரிப்பிலுள்ள வளர்ப்பு பிள்ளைகளை இழக்கவேண்டிய நிலையும் சில பெற்றோருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகள் தங்களது சபைகளுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக வரியை விதிக்கபோவதாக பிரான்ஸின் வருமானவரித்துறை அதிகாரிகள் அச்சுறுத்தியிருக்கின்றனர். எல்லையில்லா மனித உரிமைகள் என்ற அரசாங்க சார்பற்ற பொதுத்தொண்டு நிறுவனம் குறிப்பிட்டது, இது மிகவும் “ஆபத்தான நடவடிக்கைக்கான முதற்கட்டம்.” இது மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய நீதிமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறுகிறது. உண்மையில் ஐரோப்பிய யூனியன் மத சுதந்திரத்தை உறுதியளிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளை ஐரோப்பிய நீதிமன்றம் “அறியப்பட்ட மதமாக” மீண்டும் மீண்டும் அங்கீகரித்திருக்கிறது. இது பிரான்ஸுடைய சில அதிகாரிகளின் நடவடிக்கையை புரிந்துகொள்வதை இன்னும் கடினமாக்குகிறது.
பிரான்ஸில், ஏறக்குறைய 100 ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள்
மேலே வலது: பிரான்ஸில் தலைமுறை தலைமுறையாக அனேக குடும்பங்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்
மேலே இடது: 1913-ல் ருபே சபை
கீழே இடது: 1922-ல் வடக்கு பிரான்ஸிலுள்ள சாட்சிகள்
[பக்கம் 19-ன் படம்]
பிரான்ஸின் அரசர், நாலாம் ஹென்றி
[படத்திற்கான நன்றி]
© Cliché Bibliothèque Nationale de France, Paris