சாப்பிடுவதில் கோளாறுகள்—தீர்ப்பது எப்படி?
உங்களுடைய மகளுக்கு சாப்பிடுவதில் கோளாறு இருக்கிறதா? அவளுக்கு உதவி தேவை. எல்லாம் போகப்போக தானாகவே சரியாகிவிடும் என தப்புக்கணக்கு போட்டு காலம் கடத்தாதீர்கள். இது சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட அம்சங்களை உட்படுத்தும் சிக்கலான நோய்.
சாப்பிடும் பழக்கத்தில் உள்ள இக்கோளாறுகளை தீர்ப்பதெப்படி? குழப்பமூட்டும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். சிலர் மருந்து மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மற்றவர்களோ மனோதத்துவ முறையை பரிந்துரை செய்கின்றனர். பெரும்பான்மையர் இந்த இரண்டு முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிப்பது சிறந்த பயனளிக்கிறது என்று கூறுகின்றனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர் இன்னும் குடும்பத்தோடு வசித்து வந்தால் குடும்ப ஆலோசனை முறை உதவும் என்பதாக சிலர் சொல்லுகின்றனர்.a
இந்நோய்கள் சம்பந்தமாக வல்லுனர்கள் தங்களுடைய அணுகுமுறையில் வித்தியாசப்படுகிறார்கள் என்பது உண்மைதான். இருப்பினும் சாப்பிடுவது சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினை, உணவை மட்டுமே சார்ந்ததாயில்லை என்பதை அவர்களில் பெரும்பான்மையோர் ஒத்துக்கொள்கிறார்கள். பசியில்லா உளநோயாலும் பெரும்பசி நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நாம் உதவ வேண்டும். இதை செய்வதற்கு முதலாவதாக இப்பிரச்சினைக்கு பின்னால் ஆழமாக மறைந்திருக்கும் சில அம்சங்களை ஆராய்ந்து பார்ப்போமாக.
கட்டழகு—சரியான கண்ணோட்டம்
“எனக்கு சுமார் 24 வயதானபோது ஃபேஷன் பத்திரிக்கைகளை வாங்குவதை சுத்தமா நிறுத்திட்டேன். ஏன்னா மாடல்களோடு என்னை ஒப்பிட்டு பார்க்கிறதே ரொம்ப தப்பு. இது தேவையில்லாத உணர்ச்சிகளை தூண்டுகிறது” என ஒரு பெண் சொல்லுகிறாள். நாம் ஏற்கனவே பார்த்தபடி அழகு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிப்பது சம்பந்தமாக, மீடியா இளம் பெண்களுடைய மனதை கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும் வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடுவதில் கோளாறுள்ள ஒரு சிறுமியின் தாய் இவ்வாறு கூறுகிறாள்: “நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள், டிவி . . . எல்லாத்திலேயும் எப்பப் பாத்தாலும் ஸ்லிம் புயூட்டி . . . ஸ்லிம் புயூட்டின்னு விளம்பரம் செஞ்சுகிட்டே இருக்காங்க. எனக்கும் என்னோட மகளுக்கும் ஒல்லியா இருப்பது பிடிக்கும். ஆனா, எப்பப்பார்த்தாலும் ஒல்லியா இருக்கறத பத்தியே விளம்பரத்தைப் பாக்கும்போது வாழ்க்கையில எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமான விஷயம் இதுதான் அப்படீன்னு ஆயிடுது.” இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. சாப்பிடுவதில் உள்ள கோளாறுகளைக் களைய வேண்டும் என்று விரும்பினால், உண்மையான அழகில் அடங்கியுள்ள புதிய நோக்குநிலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக பைபிள் நமக்கு உதவி செய்கிறது. கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.”—1 பேதுரு 3:3, 4.
உடல் தோற்றத்தை பார்க்கிலும் நம்முடைய பண்புகளைக் குறித்து நாம் அதிக அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேதுரு சொல்கிறார். பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ [“யெகோவா,” NW] இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) இது நமக்கு எவ்வளவு ஆறுதலளிக்கிறது! ஏனெனில் நம்முடைய உடலமைப்பின் குறிப்பிட்ட அம்சங்களை நாம் மாற்றவே முடியாது. ஆனால் நாம் எப்படிப்பட்ட நபராக இருக்கிறோம் என்பதில், அதாவது நம்முடைய ஆள்தன்மையில் முன்னேற்றங்களை கட்டாயம் நம்மால் செய்ய முடியும்.—எபேசியர் 4:22-24.
தன்னைக்குறித்து மிகவும் தாழ்மையாக உணரும் ஒருவர் சாப்பிடுவதில் கோளாறுகளை அனுபவிக்கலாம். ஆகவே நீங்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுள்ள ஒரு ஆள் என்ற உணர்வை உங்களுக்குள் தூண்டி எழுப்புவது அவசியம். உண்மைதான், தேவையில்லாமல் நம்மைக்குறித்து அதிகமாக எண்ணக்கூடாது என்பதாக பைபிள் சொல்லுகிறது. (ரோமர் 12:3) ஆனால் அதே சமயத்தில் சிறு குருவிகளையுங்கூட கடவுள் மறந்து விடவில்லை என்பதையும் பைபிள் குறிப்பிடுகிறது. “அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6, 7) ஆகவே சரியான சுயமரியாதையை வளர்ப்பதற்கு உங்களுக்கு பைபிள் உதவி செய்யும். உங்கள் உடல் எவ்வளவு பிரமிக்கதக்கவிதமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள்; அப்படிச் செய்தீர்கள் என்றால் அதை நல்லவிதத்தில் பராமரிப்பீர்கள்—எபேசியர் 5:29-ஐ ஒப்பிடுக.
ஆனால் நீங்கள் உண்மையிலேயே எடையை குறைக்க வேண்டியது அவசியம் என்று உணருகிறீர்கள். அப்பொழுது என்ன செய்வது? ஒருவேளை நல்ல ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதும் பிரயோஜனமாயிருக்கலாம். ‘உடற்பயிற்சி . . . பயன்தரும்’ என்பதாக பைபிள் சொல்லுகிறது. (1 தீமோத்தேயு 4:8, பொ.மொ.) அது உண்மைதான் என்றாலும் அதனால் ஓரளவுக்காவது பயன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களுடைய எடையைக் குறித்து அளவுக்கதிகமாக கவலைப்படாதீர்கள். உடலின் தோற்றத்தை பற்றி நடத்தப்பட்ட சுற்றாய்வு அதன் முடிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நன்றாக உடற்பயிற்சி செய்வதே ஞானமான காரியம். உங்களுடைய தோற்றம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருங்கள். மனம்போனபோக்கில் போய்க்கொண்டிருக்கும் உலகின் அழகைப் பற்றிய தராதரங்கள் உங்கள் உடலை வடிவமைக்க இடமளிக்காதீர்கள்.” அமெரிக்காவில் வாழும் 33 வயதான பெண், இப்படிப்பட்ட அணுகுமுறை பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறாள். “எனக்கென்று ஒரு எளிமையான சட்டம் இருக்கிறது. வாழ்க்கையில் எதில் உண்மையான முன்னேற்றம் செய்ய முடியுமோ அதற்காக முயற்சிக்க வேண்டும். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுபோல நம்முடைய கைக்கு எட்டாத, நம்மால் மாற்றமுடியாத விஷயங்களைக் குறித்து கவலைப்படக் கூடாது.”
வாழ்க்கையைப் பற்றியதில், நம்பிக்கையூட்டும் மனநிலையோடு நல்ல ஆரோக்கியமான உணவு உண்டு, நியாயமான அளவுக்கு உடற்பயிற்சியும் தவறாமல் செய்தால் நீங்கள் நினைக்கிற மாதிரியே உங்களுடைய எடையை ஜம் என்று குறைத்து விடலாம்.
“உண்மையான நண்பனை” கண்டுபிடித்தல்
பெரும்பசி நோயால் பாதிக்கப்பட்ட அநேகரை ஆய்வு செய்த பேராசிரியர் பென்னிபேகர் இவ்வாறு முடிவுக்கு வந்தார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த ‘ஏற்றுமதி, இறக்குமதி’ பழக்கம் இந்தப் பெண்களை பெரும்பாலும் இரட்டை வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது. அவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “அவர்களுடைய இந்த மோசமான சாப்பாட்டு பழக்கத்தை நண்பர்களிடத்திலிருந்தும் குடும்பத்தினர்களிடமிருந்தும் மறைப்பதற்கு அவர்களில் ஒவ்வொருவரும் படாதபாடுபட்டிருக்கின்றனர். இதற்கு அதிக நேரமும் அதிக முயற்சியும் தேவைப்பட்டது. அவர்கள் பொய்யான வாழ்க்கையையே வாழ்ந்ததால் அதை வெறுத்தனர் என்று அந்த ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் உடனடியாக ஒப்புக்கொண்டனர்.”
இந்த நோயிலிருந்து குணமடைய ஒரு முக்கியமான படி இருக்கிறது. மனந்திறந்து பேசுவதே அது. பசியின்மை நோயாலும் பெரும்பசி நோயினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். ஆனால் யாரிடம் பேசுவது? பைபிளின் ஒரு பழமொழி சொல்லுகிறது: [“உண்மையான,” NW] சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) இந்த ‘உண்மையான நண்பன்’ பெற்றோராக அல்லது முதிர்ச்சிவாய்ந்த நபராக இருக்கலாம். சாப்பிடும் பழக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய உதவியை நாடுவதும் அவசியம் என்பதாக சிலர் உணர்ந்திருக்கின்றனர்.
உதவிக்காக யெகோவாவின் சாட்சிகளுக்கு மற்றொரு ஊற்றுமூலமும் இருக்கிறது. சபையிலுள்ள மூப்பர்களின் உதவியே அது. இவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள். (ஏசாயா 32:2) நமது மூப்பர்கள் டாக்டர்கள் அல்ல என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆகவே மூப்பர்களுடைய பிரயோஜனமான ஆலோசனைகளுக்கு செவிகொடுங்கள். அதே சமயம் மருத்துவ சிகிச்சைகளையும் நாடுங்கள். இருப்பினும் ஆவிக்குரிய தகுதியுள்ள இந்த நபர்கள் நீங்கள் குணமடைய நன்கு உதவிசெய்வார்கள்.b—யாக்கோபு 5:14, 15.
எல்லாருக்கும் மேலாக உங்களுடைய படைப்பாளரை நீங்கள் முழுவதும் நம்பலாம். சங்கீதக்காரன் சொல்லுகிறார்: “கர்த்தர்மேல் [“யெகோவா,” NW] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) பூமியில் வாழும் தம்முடைய பிள்ளைகள் மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறது. உங்களுடைய ஆழ்ந்த கவலைகளை கடவுளுக்கு ஜெபத்தில் எப்பொழுதும் தவறாமல் தெரியப்படுத்துங்கள். பேதுரு இவ்வாறு ஞாபகமூட்டுகிறார்: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது அவசியமென்றால்
வெறுமனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுவதால் எல்லாம் சரியாகிவிடும் என்பதில்லை. ஒரு இளம்பெண் பசியின்மை நோயால் ஊட்டசத்து குறைந்து, உடல் பலவீனமாகி விடுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இவளுக்கு விசேஷ மருத்துவ கவனிப்பு தேவை. இதைச் செய்வது பெற்றோருக்கு அவ்வளவு எளிதல்ல. தன்னுடைய மகளை ஆஸ்பத்திரியில்தான் சேர்த்தாக வேண்டும் என்ற நிலை வந்ததைக் குறித்து எமிலி புலம்புகிறார்: வாழ்க்கையை “எங்களாலும் எங்க மகளாலும் சகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. என்னோட மகள் ஆஸ்பத்திரியில தேம்பித்தேம்பி அழுதத என்னால மறக்கவே முடியாது. இப்படிப்பட்ட வேதனைய நான் வாழ்க்கையில அனுபவிச்சதே கெடையாது. அது என்னோட வாழ்க்கையில மகாமோசமான நாள்.” இதே மாதிரி இலேன் சொல்லுவதையும் கேளுங்களேன்: “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும் மோசமான நிகழ்ச்சி இதுதான். என்னோட பொண்ணை ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப அவ சாப்பிட முடியாதுன்னுட்டா. அதனால டுயூப் மூலமா அவளுக்கு கட்டாயப்படுத்தி உணவு கொடுத்தாங்க. இது அவளுக்கு கொஞ்சம்கூட பிடிக்கல.”
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதென்னவோ யாருக்கும் பிடிக்காத விஷயம்தான். ஆனால் ஒரு சில நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமாக இருக்கலாம். இவ்வாறு செய்ததால் இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்ட அனேக நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள். தன்னுடைய மகளைப் பற்றி எமிலி சொல்லுகிறாள்: “என்னோட பொண்ணை ஆஸ்பத்திரியில சேர்த்தேயாகணுங்கர நிலை ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில அன்னைக்கு சேர்த்ததிலிருந்துதான் அவ கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சா.”
இப்படிப்பட்ட நோய்களில்லா வாழ்க்கை
நோயிலிருந்து குணப்படுவதன் பாகமாக, பசியின்மை நோயாலும் பெரும்பசி நோயாலும் பாதிக்கப்பட்ட நபர்கள் உணவுப் பழக்கங்களில் பிரச்சினை இல்லாமல் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. பசியின்மை நோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் தனது எடையில் 20 கிலோவை பத்தே மாதங்களில் இழந்துவிட்டதாக கிம் குறிப்பிடுகிறாள். இருப்பினும் மீண்டும் தனது எடையில் 15 கிலோவை கூட்டுவதற்கு அவளுக்கு ஒன்பது வருடங்கள் ஆனது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! “இதுக்கு நான் பட்டபாடு இருக்கே, அது கொஞ்ச நஞ்சம் இல்ல. எப்படியோ மீண்டும் கொஞ்ச கொஞ்சமா நார்மலா சாப்பிட ஆரம்பிச்சேன். முன்னாடியெல்லாம் சாப்பிட ரொம்ப யோசிப்பேன். நான் எவ்வளவு சாப்பிடறேன், இதுல எவ்வளவு கலோரி இருக்குது, இந்த குழம்பிலேயும் ஸ்வீட்லேயும் என்னல்லாம் சேர்த்துருக்காங்கன்னு அதிகமா கவலப்படுவேன். இதனால எப்பவுமே சாலட் கட்டாயமா கிடைக்கும்னு நல்லா தெரிஞ்ச ஹோட்டலுக்குதான் எப்பொழுதும் போவேன்.”
ஆனால் கிம் வெறுமனே குணமானது மட்டுமல்ல. அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொண்டாள். “முன்னாடியெல்லாம் ஏதாவது பிரச்சினைன்னா, அதனால வர கோபத்தை நடவடிக்கையிலும் சாப்பாட்டுப் பழக்கத்திலும்தான் வெளிப்படுத்துவேன். இப்பல்லாம் அப்படி கிடையாது. என்னோட உணர்ச்சிகள புரிஞ்சுக்கவும் அவற்றை வாய்விட்டு சொல்லவும் கத்துகிட்டேன். பிரச்சனைகள சமாளிக்கறதுக்கும் தீர்க்கறதுக்கும் புதுசு புதுசா எவ்வளோவோ வழிகளெல்லாம் இருக்கு. இதையெல்லாம் பின்பற்றினா நண்பர்களோடும் குடும்பத்தோடும் ரொம்ப நெருக்கமாக இருக்கலாம்” என்பதாக இவள் கூறுகிறாள்.
தெளிவாகவே சாப்பிடுவதில் உள்ளப் பிரச்சினைகளை தவிர்ப்பது ஒரு சவாலான விஷயம்தான். ஆனால் இதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் ஒட்டுமொத்தமாக பிரயோஜனமானதே. இவ்வாறு இத்தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜீன் நம்புகிறாள். இவள் கூறுகிறாள்: “மனநல நோயாளிகளை அடைத்துப் போடும் ஸ்பெஷல் அறையில் மாட்டிக்கொள்வது போலத்தான் பழையபடி மீண்டும் அதே பிரச்சினையில மாட்டிக்கிறதும் இருக்கும்.”
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! எந்த தனிப்பட்ட சிகிச்சை முறையையும் சிபாரிசு செய்வதில்லை. தாங்கள் பின்பற்றப் போகிற சிகிச்சை முறைகளை குறித்து கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட தீர்மானம் எடுக்க வேண்டும். அவை பைபிள் சட்டங்களோடு முரண்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் அத்தீர்மானங்களைக் குறித்து குறைகூறுவதோ அல்லது தவறு என்று குறிப்பிடுவதோ தவறாகும்.
b பசியின்மை நோயாலும் பெரும்பசி நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமாக உதவுவது என்பதை அறிந்துகொள்ள, “சாப்பிடும் பழக்கத்தில் உள்ள பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்” விழித்தெழு! பிப்ரவரி 22, 1992 (ஆங்கிலம்) என்ற கட்டுரையையும், விழித்தெழு! டிசம்பர் 22, 1990-ல் (ஆங்கிலம்) வெளிவந்த “சாப்பிடும் பழக்கத்தில் உள்ள பிரச்சினைகள்—இதைக் குறித்து என்ன செய்யலாம்” என்ற தொடர் கட்டுரைகளையும் பாருங்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி]
குணமடைவதற்கு அஸ்திபாரமிடுதல்
உங்கள் மகளுக்கு சாப்பிடும் பழக்கத்தில் பிரச்சினை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் என்ன செய்வது? இந்த விஷயத்தை நீங்கள் ஏனோதானோவென்று விட்டுவிட முடியாது. ஆனால் இதை நீங்கள் எவ்வாறு கையாளப்போகிறீர்கள்? “உங்கள் மகளிடம் ஒளிவுமறைவின்றி பேசுவது சிலசமயங்களில் பயனுள்ளது. இருப்பினும் சில சமயங்களில் அவள் மனந்திறந்து பேச மறுக்கும்போது உங்களுக்கு வேதனையளிக்கும்” என்பதாக நூலாசிரியர் மைக்கேல் ரீயரா குறிப்பிடுகிறார்.
ஆகவே சற்று கனிவோடும் தயவோடும் அணுகுவது அதிக பயனுள்ளது. “உங்களுடைய மகளிடம் பேசும்போது, நீங்கள் கவனமாக பேசவேண்டும். ஏதோ தவறான காரியம் செய்துவிட்டதால் நீங்கள் அவளைக் குற்றப்படுத்துகிறீர்கள் என்பதாக அவள் உணரக்கூடாது. நீங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைமையை உருவாக்கும்போது வளரும் பிள்ளைகள் அனேகர் உண்மையைச் சொல்வார்கள். ஓரளவிற்கு மனஅழுத்தங்களிலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள். கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அவர்கள் மீது இருக்கும் அக்கறையையும் ஆதரவையும் சில பெற்றோர் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இதில் அனேக பெற்றோர்கள் வெற்றியும் அடைந்திருக்கின்றனர். அதன்பின்னர் பெற்றோரும் பிள்ளைகளும் இந்தப் பிரச்சினையைக் குறித்து பேசும்போது இதற்கு நல்ல அஸ்திபாரமே போட்ட மாதிரிதான்” என்பதாக ரீயரா சிபாரிசு செய்கிறார்.
[பக்கம் 12-ன் பெட்டி]
பெற்றோருக்கு ஒரு சவால்
சாப்பிடுவதில் பிரச்சினையுடைய பிள்ளைகள் பெற்றோருக்கு நிறைய சவால்களை அளிக்கின்றனர். “உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு தகப்பனோ அல்லது தாயோ இரும்பு அல்லது கல்லைப்போல் உறுதியாக இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கவில்லை என்றால் கண்ணெதிரே உங்கள் பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக சாவதைப் பார்க்க வேண்டி வரும்” என்பதாக ஒரு தகப்பன் சொல்லுகிறார்.
இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பிடிவாதமான பழக்கவழக்கங்களை பார்க்கும்போது நீங்கள் வெறுப்படைவீர்கள் என்பது உண்மையே. இருப்பினும் பொறுமையுடன் இருங்கள். அன்பு மழை பொழிவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். இது எந்தளவுக்கு சாத்தியம்? எமிலியின் மகள் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டவள். தன் மகளிடம் அன்பாகவும் பொறுமையுடனும் இருப்பது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை என்பதாக அவள் ஒத்துக்கொள்கிறாள். இருப்பினும் “நான் என் மகளோடு நெருங்கிப் பழகினேன், அவளை கட்டியணைத்தேன், அவளுக்கு அன்பு முத்தங்களை வாரிவழங்கினேன், நான் அவளோடு இவ்வளவு நெருக்கமாக இல்லாதிருந்தால் நிலைமை அதிக மோசமாகி இருக்கும். சொல்லப்போனால் அன்பான குடும்ப பிணைப்பே இல்லாதிருந்திருக்கும்” என்பதாக கூறுகிறாள்.
சாப்பிடுவது சம்பந்தப்பட்ட நோயையுடைய உங்கள் பிள்ளை குணமடைய ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதுதான் பேச்சுத்தொடர்பு. நீங்களே பேசிக்கொண்டிராமல் உங்கள் பிள்ளை என்ன சொல்லுகிறது என்பதை சற்று செவிகொடுத்துக் கேளுங்கள். உங்கள் பிள்ளை பேசிக்கொண்டிருக்கும்போது. “இல்ல. . . நீ சொல்றது தப்பு” அல்லது “நீ இந்த மாதிரியெல்லாம் யோசிக்கக்கூடாது” என்பதாக சொல்லி இடையே புகுந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடாதீர்கள். உண்மையில் ‘ஏழையின் கூக்குரலுக்குத் செவியை’ அடைத்துக் கொள்ளக்கூடாது. (நீதிமொழிகள் 21:13) மனந்திறந்த பேச்சுத்தொடர்பு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இக்கட்டான சூழ்நிலைமைகள் ஏற்படும்போது வயசுப்பிள்ளைகள் வழிநடத்துதலுக்கு பெற்றோரிடம் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களையும் வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி]
சாப்பிடுவதில் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உதவ பொறுமையும் நன்கு புரிந்துகொள்ளும் தன்மையும் அளவற்ற அன்பும் அவசியம்