உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 1/22 பக். 13-15
  • தொலைதூர காதலை தொடர்வது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொலைதூர காதலை தொடர்வது எப்படி?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனதை மனது அறிவது
  • நேர்மை—ஒரே வழி
  • அவன்(ள்) உண்மையில் எப்படிப்பட்டவர்?
  • நேருக்கு நேர்
  • திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு உதவி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • திர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளும், விவாக நோக்குடன் பழகுதலும்
    உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்
  • வெற்றிகரமான திருமணத்திற்கென தயாராகுதல்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 1/22 பக். 13-15

இளைஞர் கேட்கின்றனர். . .. .

தொலைதூர காதலை தொடர்வது எப்படி?

“யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளின் ஒரு குழுவிற்கு துணையாக அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரை போனேன். அவர்களை ஹோட்டலில் விட்டுவிட்டு, வீட்டிற்கு செல்ல புறப்படும்போது, மற்றொரு குழு வந்தது. எனவே, நான் அவர்களோடு பேசுவதற்காக நின்றேன். அப்போதுதான், ஆடெட்டை முதன்முதலாக சந்தித்தேன். அந்த வாரக்கடைசியில் மறுபடியும் நாங்கள் சந்திந்தோம். கடிதம் மூலம் தொடர்புகொள்ள தீர்மானித்தோம். கடிதம் மூலம் சில வருடங்கள் பழகியபின், விவாக நோக்குடன் பழக ஆரம்பித்தோம்.”—டோனி.

சமீப ஆண்டுகளில், குறைந்த செலவு விமானப் பிரயாணம், உலகையே இணைக்கும் டெலிஃபோன் வசதிகள், அதிவிரைவு தபால் பட்டுவாடா, இன்டர்னெட் கம்ப்யூட்டர் இணைப்பகம் ஆகிய முன்னேற்றங்கள், பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகை சின்னஞ்சிறிய இடமாக்கிவிட்டது. இதன் விளைவாகப் புதுப்புது முறைகளில் காதல் செய்வதற்கு இந்த சாம்ராஜ்யத்தின் எல்லை விரிவாகியிருக்கிறது. மேலும், அநேக வழிகளில், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் உள்ளவர்களோடும்கூட தொடர்ந்து விவாக நோக்கோடு பழகுவது விரும்பத்தக்கதாகத் தோன்றலாம். உங்களுடைய சொந்த நாட்டில், விவாக வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்; ஆகவே, தொலைதூரத்தில் உள்ளவரோடு விவாக நோக்கோடு பழகுவது வெகுவாய் வரவேற்கப்படத்தக்கதாகத் தோன்றலாம்.

வெகுதூரத்தில் இருந்தவரோடு விவாக நோக்கோடு பழகியது, சில தம்பதிகளுக்கு பெரிய ஆசீர்வாதமாக நிரூபித்திருக்கிறது. “நாங்க 16 வருஷமா மகிழ்ச்சியான மண வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம்” என்று டோனி சொல்லுகிறார். வெறும் உடல் கவர்ச்சியால் மாத்திரமே ஈர்க்கப்படாமல், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இது உதவுகிறது என சிலர் வாதாடுகின்றனர். தூரத்தில் உள்ளவரோடு விவாக நோக்கோடு பழகுவதில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதற்கே உரிய சில சிக்கல்களும் இருக்கின்றன.

மனதை மனது அறிவது

நீங்கள் மணந்துகொள்ள விரும்பும் ஒருவரைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது சிறந்தது. இருப்பினும், “ ‘இருதயத்தில் மறைந்திருக்கும் குணத்தை’ அதாவது ஒரு நபரின் உண்மையான குணங்களை அறிந்து கொள்வது சுலபமல்ல” என்று தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து, ஃப்ராங்க் என்னும் பெயருடைய ஒரு கணவர் சொல்லுகிறார். (1 பேதுரு 3:4) டக் என்னும் மற்றொரு கிறிஸ்தவரும், இவ்வாறு தொலைதூரத்தில் இருந்தவரோடு பழகி விவாகம் செய்து கொண்டவர். அவர் சொல்லுகிறார்: “கடந்த காலத்தை மனதில் அசை போட்டால், நாங்கள் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்பதைத் தெளிவாக உணர்கிறேன்.”

பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் இருக்கும் ஒருவரை அறிந்து கொள்வது உண்மையிலேயே சாத்தியமா? ஆம், சாத்தியமே. ஆனால், அது மாபெரும் முயற்சியை தேவைப்படுத்துகிறது. “ஃபோன் பண்றதுக்கு எங்ககிட்ட காசில்ல, அதனால வாரத்துக்கு ஒரு லெட்டர் எழுதினோம்” என்று டக் கூறுகிறார். இருப்பினும், ஃப்ராங்க்கும் ஜோவனும் லெட்டர் எழுவதிலேயே திருப்தி அடைந்துவிடவில்லை. “முதல்ல லெட்டர்ல ஆரம்பிச்சி, அப்புறம் ஃபோன்லயும் பேசிக்கிட்டோம்” என்று ஜோவன் கூறுகிறார். “அதுக்கப்புறம், ஃப்ராங்க் எனக்கு ஒரு சின்ன டேப் ரிக்கார்டரை அனுப்பி வைச்சார். அதனால, ஒவ்வொரு வாரமும் கேஸட்மூலம் பேசிக்க ஆரம்பிச்சோம்.”

நேர்மை—ஒரே வழி

நீங்கள் எந்தவிதத்தில் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டாலும்சரி, நேர்மையே பிரதானம். “நீங்கள் பொய் சொன்னால், பிறகு அது வெட்ட வெளிச்சமாகும்போது உங்களுடைய உறவையே அது முறித்துவிடும்” என கிறிஸ்தவ மனைவி எஸ்டர் சுட்டிக்காட்டுகிறார். “ரெண்டு பேருக்கு நடுவிலயும் நேர்மை வேணும். நமக்கு நாமேயும் நேர்மையா இருந்துக்கணும். எந்த விஷயமாவது உங்க மனசை நெருடுச்சின்னா, அசட்டையா இருந்துடாதீங்க. உடனுக்குடன் பேசி தெளிவுபடுத்திக்கோங்க.” அப்போஸ்தலனாகிய பவுல், நல்ல புத்திமதி கொடுக்கிறார்: “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.”—எபேசியர் 4:25; எபிரெயர் 13:18-ஐ ஒப்பிடுக.

எந்தெந்த விஷயங்களைப் பற்றி எல்லாம் நீங்கள் கட்டாயம் கலந்து பேச வேண்டும்? விவாக நோக்கோடு பழகும் எல்லாருமே வாழ்க்கையின் இலக்குகள், பிள்ளைகள், பண விஷயங்கள், உடல் நலம் போன்ற விஷயங்களைப் பற்றி கலந்து பேச வேண்டும். இருப்பினும், தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. உதாரணமாக, நீங்களோ அல்லது நீங்கள் இருவருமோ, திருமணத்திற்கு பிறகு இடம் மாற வேண்டி வரலாம். அவ்வாறு செல்வதற்கு நீங்கள் மனப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் தயாராய் இருக்கிறீர்களா? நீங்கள் அதை எப்படி அறிய முடியும்? இதற்குமுன், உங்களுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து நீண்ட காலத்திற்கு தனியாக இருந்திருக்கிறீர்களா? தாங்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகு, இந்த பத்திரிகையை பிரசுரிப்பவர்களின் அலுவலகத்தில் அதாவது உவாட்ச்டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்தில், மனமுவந்து வேலை செய்பவர்களில் ஒருவராக வேண்டுமென்பதே ஜோவனின் வருங்கால கணவரின் விருப்பமாய் இருந்தது. “ஒரு சின்ன ரூம்ல, கொஞ்ச பணத்தோட நீ வாழ ரெடியா என்று என்னைக் கேட்டார்” என ஜோவன் நினைவுப்படுத்திக் கூறுகிறார். “அதப்பத்தி நாங்க தெளிவா கலந்து பேச வேண்டி இருந்தது.”

நீங்கள் விவாக நோக்கோடு பழகும் ஒருவர், வேறே நாட்டைச் சேர்ந்தவராக இருக்கையில், அவருடைய கலாச்சாரத்தோடு ஒத்துப்போக நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? “ரெண்டு நாட்டோட கலாச்சாரத்தை ரெண்டு பேருமே பழகிக்க தெனம் முயற்சி செய்கிறீர்களா?” என்று ஃப்ராங்க் கேட்கிறார். “ஆரம்பத்துலயே இந்தமாதிரி முக்கியமான விஷயங்கள எல்லாம் கலந்து பேசிடுங்க. இல்லன்னா, உணர்ச்சிப்பூர்வமாகவும் பொருளாதாரரீதியாகவும் நீங்க ரொம்ப பாதிக்கப்படுவீங்க.” ஆம், ஏதோ கொஞ்ச நாட்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக வேறு நாட்டுக்கு போய் வருவதற்கும், அந்தக் கலாச்சாரத்திலேயே ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. இன்னொரு மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? வாழப் போகிற இடத்தில் இருக்கும் மலைபோன்ற வித்தியாசங்களை நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வீர்களா? மறுபக்கத்தில் நீங்கள் அந்தக் காதலன்(லி)யிடம் கவர்ந்திழுக்கப்படுவதற்கு பதில், அந்நாட்டு கலாச்சாரத்தில் மயங்கிவிட்டீர்களா? இப்படிப்பட்ட மயக்கம் கொஞ்ச நாட்களில் தெளிந்துவிடும். ஆனால், திருமணம் என்பதோ இருவரையும் நிரந்தரமாக இணைக்கும் ஒன்று.—மத்தேயு 19:6.

டோனி விளக்குகிறார்: “வேறே தேசத்தைச் சேர்ந்த, எனக்கு தெரிந்த ஒரு பெண், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவரை மணந்தாள். ஆனால், அவளால் கரீபியன் கலாச்சாரத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. அந்தத் தீவில் காலம் தள்ளுவதே அவளுக்கு மிக கடினமாக இருந்தது. அவள் உஷ்ணம் தாங்காமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். அந்த ஊர் சாப்பாடும் வித்தியாசமாய் இருந்தது. தன்னுடைய குடும்பத்தாரின் நினைவும் அவளை வாட்டி வதைத்தது. எனவே அவர்கள், அவளுடைய சொந்த ஊரில் போய் வாழ திட்டமிட்டனர். ஆனால், அங்கிருந்த வாழ்க்கைப் பாணி அவளுடைய கணவனுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்தவர்கள் படோடாபமாக இருப்பதாய் அவருக்கு பட்டது. குடும்பத்தாரோடும், அயலகத்தாரோடும் இருந்த அந்நியோன்யமான உறவிற்காக ஏங்கினார். கடைசியில், அவர்கள் இருவரும் இப்பொழுது ஆளுக்கொரு மூலையில் வாழ்கின்றனர். அவள், அவளுடைய ஊரிலும், அவளுடைய கணவன் அவனுடைய ஊரிலும் வாழ்கின்றனர். அவர்களுடைய இரு குழந்தைகள், இருவரின் அன்பும் கவனமும் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.”

வெகு தொலைவில் இருந்து வரும், வேறே கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவரை மணப்பதால் வரும் பிரச்சினைகள் இன்னும் எத்தனை எத்தனையோ. தொலைவில் உள்ளவரோடு பேசுவதற்கும், பிரயாணத்திற்கும் ஆகும் கூடுதல் செலவை ஏற்க தயாராக இருக்கிறீர்களா? லிடியா கூறுகிறாள்: “ஃபோன் பில் எக்கச்சக்கமாக ஆகுது; அதனால நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கறதுதான் பெஸ்ட்ன்னு சொல்லி ஃபில் ஜோக் அடிப்பார். ஆனால், இப்பொழுதும் அதே நிலைமைதான். ஏன்னா, நான்தான் அம்மாவோடு ஃபோன்ல பேசிட்டிருக்கேனே.” பிள்ளைகள் பிறந்தால்? அவர்கள் தங்களுடைய சொந்தபந்தங்கள் யாரென்று தெரியாமலேயே வளருகின்றனர். பாஷை தெரியாத காரணத்தால் ஃபோனில்கூட பேச முடிவதில்லை! இந்த பிரச்சினைகள் எல்லாம் சமாளிக்க முடியாதவையல்ல. இருந்தாலும், இப்படித் திருமணம் செய்துகொள்கிறவர்கள் அதில் உட்பட்டிருக்கும் செலவுகளையும் கணக்கு பார்க்க வேண்டும்.—லூக்கா 14:28, 30-ஐ ஒப்பிடுக.

அவன்(ள்) உண்மையில் எப்படிப்பட்டவர்?

உங்களுடைய காதலன்(லி) உண்மையிலேயே எதையும் மூடி மறைக்காமல் பேசுபவர் என்றும் பாசாங்குத்தனமில்லாதவர் என்றும் நீங்கள் எப்படி சொல்லமுடியும்? “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” என்று மத்தேயு 7:17 சொல்லுகிறது. ஆகவே, அவர் எப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்? அவர் பேசுகிறதொன்று செய்கிறதொன்றா? அவருடைய கடந்த கால செயல்கள் அவருடைய எதிர்கால இலக்குகளோடு ஒத்துப்போகின்றனவா? “எங்க ரெண்டு பேருக்குமே எப்படிப்பட்ட ஆன்மீக இலக்குகள் இருந்தன என்பதைத்தான் நாங்க ரெண்டு பேரும் முதன் முதலில் தெரிந்து கொண்டோம்” என்பதாக எஸ்டர் சொல்லுகிறாள். “எட்டு வருஷமா அவர் தொடர்ந்து சுவிசேஷ ஊழியத்தை முழுநேரமா செய்து வருகிறார். அதனாலதான், அதை தொடருவாருங்கற நம்பிக்கை எனக்கு வந்துச்சு.”

நீங்கள், விவாகம் செய்துகொள்ளும் நோக்கத்தில் ஒருவரோடு பழகுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் பிடிகொடுக்காமல், மழுப்பி, தட்டிக்கழிப்பவராக இருக்கிறார் என்றால், இதை அசட்டையாக விட்டுவிடாதீர்கள். எல்லாம் தன்னாலே சரியாகிவிடும் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அதை தோண்டித் துருவிப் பாருங்கள். பதில் கிடைக்கும்வரை ஏன் என்று கேள்வி கேட்பதை நிறுத்திவிடாதீர்கள். ஒரு பழமொழி இப்படி சொல்லுகிறது: “மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.” (நீதிமொழிகள் 20:5) “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று மற்றொரு பழமொழி எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 14:15.

நேருக்கு நேர்

கடிதம் அல்லது ஃபோன்மூலம் ஒருவரைப் பற்றி இவ்வளவுதான் தெரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் என்னவெனில், அப்போஸ்தலனாகிய யோவான் அவருடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பல கடிதங்களை எழுதினார். அவர்களுக்கிடையே இருந்த பாசப்பிணைப்பை பலப்படுத்தும் பசையாக அந்த கடிதங்கள் நிரூபித்தன. இருந்தபோதிலும், “நான் உங்களுக்கு எழுதவேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான் எழுத்துவடிவில் தர விரும்பவில்லை; மாறாக உங்களிடம் வந்து நேரில் பேசுவேன் என எதிர்பார்க்கிறேன்” என்று எழுதினார். (2 யோவான் 12, பொது மொழிபெயர்ப்பு) இதைப்போலவே, நேரில் பேசுவதற்கு எதுவும் இணையாகாது. உங்கள் இருவரில் ஒருவர் தற்காலிகமாக இடம் மாற முடிந்தால், நீங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வதை சுலபமாக்கும். இது, இடம் மாறி வருபவர், அவருடைய அல்லது அவளுடைய வருங்கால புதிய இடத்தில் எதிர்ப்படவேண்டிய சீதோஷ்ண நிலையையும் வாழ்க்கைத் தரத்தையும் ருசி பார்க்க சந்தர்ப்பத்தைத் தரும்.

நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரத்தை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்? உங்களுடைய குணங்களை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாக எண்ணி செயல்படுங்கள். கடவுளுடைய வார்த்தையை சேர்ந்து படியுங்கள். ஊழியத்திலும் கூட்டங்களிலும் எப்படி ஒருவர் பங்குகொள்கிறார் என்பதை மற்றவர் கவனிக்க வேண்டும். சுத்தம் செய்தல், கடைக்கு போகுதல் போன்ற வீட்டு வேலைகளை சேர்ந்து செய்யுங்கள். இக்கட்டான சமயங்களிலும் பிரச்சினைகளின் மத்தியிலும் ஒருவர் நடந்து கொள்ளும் முறை அவரை பற்றி கதைகதையாய் சொல்லும். a

வருங்கால மாமனார், மாமியாரோடுங்கூட நேரம் செலவழியுங்கள். அவர்களோடு நல்ல, சுமுகமான உறவை வளர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய திருமணத்திற்கு பிறகு, நீங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகப் போகிறீர்கள். அவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா? அவர்களோடு ஒத்துப் போகிறீர்களா? “முடிந்தால், இரண்டு குடும்பத்தாரும் சந்தித்துக்கொள்வது நல்லது” என ஜோவன் அறிவுரை கூறுகிறார். “தன்னுடைய குடும்ப அங்கத்தினரை அவனோ, அவளோ எப்படி நடத்துகிறார்களோ, அதேமாதிரிதான் உங்களையும் நடத்துவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று டோனி கூறுகிறார்.

விவாக நோக்கோடு பழகுதலை, கடிதம், ஃபோன், அல்லது நேருக்கு நேர் சந்திப்பதன்மூலமாக தொடரலாம். எப்படியானாலும்சரி, அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். (நீதிமொழிகள் 21:5) உங்கள் இருவருக்கும் ஒத்துவராது என்பது தெளிவாகி விட்டால், விவாக நோக்கோடு பழகுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். இதுவே, புத்திசாலித்தனம். (நீதிமொழிகள் 22:3) அதற்கு மாறாக, ஒளிவுமறைவற்ற, நேர்மையான பேச்சுத் தொடர்புக்கு கூடுதல் நேரம் தேவைப்படலாம்.

தூரத்தில் உள்ளவரோடு, விவாக நோக்கோடு பழகுதல் கஷ்டமே. ஆனால், அது ஆசீர்வாதத்தையும் தரலாம். எப்படி இருப்பினும், இது ஆற அமர யோசித்து செய்ய வேண்டிய விஷயம். இதற்கு கணிசமான நேரம் செலவழியுங்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தால், விவாக நோக்கோடு பழகுவதற்காக நீங்கள் செலவழித்த நேரம் வீண் இல்லை. அவ்வாறு பழகியதை மதிப்புமிக்க பொக்கிஷமாக எண்ணுவீர்கள்.

[அடிக்குறிப்புகள்]

a விவாக நோக்கோடு பழகுதல் சம்பந்தமாக கூடுதல் தகவல்களுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் புத்தகத்தில், பக்கங்கள் 255-60-ஐக் காண்க.

[பக்கம் 15-ன் படம்]

நீங்கள் விவாக நோக்கோடு பழக ஆரம்பிக்கையிலேயே வாழ்க்கையின் இலக்குகள், பிள்ளைகள், பண விஷயங்கள் போன்றவற்றை கட்டாயம் கலந்து பேசுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்