உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 2/8 பக். 4-6
  • கடவுளுடைய நோக்கம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய நோக்கம் என்ன?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுக்கு ஒரு நோக்கமுண்டு
  • ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்றியது
  • கடவுளுடைய ஆயிரவருட அரசாங்கம்
  • கடவுள் துன்பத்தை அனுமதிக்க காரணமென்ன?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • கடவுள் அனுமதித்திருக்கும் துன்பத்திற்கு முடிவு அருகில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • கடவுளுடைய ராஜ்யம்—பூமியின் புதிய அரசாங்கம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 2/8 பக். 4-6

கடவுளுடைய நோக்கம் என்ன?

சர்வசக்தி படைத்த, அன்பான கடவுள் இருப்பதை சந்தேகிக்கும் அநேகர் இப்படி கேட்கின்றனர்: கடவுள் இருந்தால், ஏன் இவ்வளவு துன்பத்தையும் அக்கிரமத்தையும் காலங்காலமாக அனுமதித்திருக்கிறார்? இன்றைய உலகத்தில் நாம் பார்க்கிற இந்தப் பரிதாபகரமான நிலைமையை அவர் ஏன் அனுமதிக்கிறார்? போர், குற்றச்செயல், அநீதி, வறுமை, மற்றும் பூமியில் பல பாகங்களில் அச்சுறுத்தும் வேகத்தில் வளர்ந்துகொண்டே போகும் பிற அவல நிலைமைகளுக்கு அவர் ஏன் முடிவுகட்டவில்லை?

இந்தப் பிரபஞ்சத்தை கடவுள் படைத்து, பூலோகத்தில் மனிதர்களை குடிவைத்து, அதன்பின்பு அவர்களுடைய வேலைகளை அவர்களே பார்த்துக்கொள்ளும்படி விட்டுவிட்டார் என சிலர் கருத்து சொல்கின்றனர். இதன்படி, பேராசையாலோ குளறுபடியான நிர்வாகத்தாலோ மனிதர்கள் தங்கள்மீது துன்பத்தையும் தொல்லையையும் வருவித்துக்கொண்டதற்கு கடவுளை குற்றம்சாட்ட முடியாது.

ஆனால், இப்படிப்பட்ட கருத்தை வேறுசிலர் ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். உதாரணமாக, கடவுள் நம்பிக்கையுடைய இயற்பியல் பேராசிரியராகிய கானியர்ஸ் ஹெரிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கடவுள் வெகு காலத்திற்கு முன்பே எல்லாம் இயங்குவதற்கு ஒரு கடிகாரம்போல் செட்பண்ணி வைத்துவிட்டார். அப்போது முதற்கொண்டு, மனிதவர்க்கம் இந்த விடுகதையை விடுவிப்பதற்காக அடித்துப் பிடித்து போராடுவதை ஒரு பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதை நான் ஏற்றுக்கொள்ளாததற்கு ஒரு காரணம் என்னவென்றால், இந்த அண்டம் ஒரு ‘கிளாக்வொர்க்’ மாடல் என்றும், அதுவே முற்றிலும் சரி என்று நம்புவதற்கும் என்னுடைய அறிவியல்பூர்வ அனுபவம் அனுமதிப்பதில்லை. நம்முடைய அறிவியல்பூர்வ கருத்துக்கள் . . . எப்போதும் பெரும் மாற்றத்திற்கு ஆளாகின்றன, அவை எப்போதும் குறைபாடாகவே இருக்கும் என நிச்சயமாக கருதுகிறேன். இப்படிப்பட்ட முன்னேற்றங்களை எல்லா சமயத்திலும் ஏற்படுத்தவல்ல ஓர் உயிருள்ள சக்தியிடம் நாம் நம்பிக்கை வைப்பது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.”

கடவுளுக்கு ஒரு நோக்கமுண்டு

நீதியுள்ள, பரிபூரண மனிதர்கள் இந்தப் பூமியில் குடியிருக்க வேண்டுமென்பதே கடவுளுடைய ஆதிநோக்கம். தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு எழுதினார்: “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] சொ”ன்னார்.​—⁠ஏசாயா 45:⁠18.

ஒவ்வொரு மனிதனையும் நேரடியாக படைத்து இந்தப் பூமியை குடியிருக்கச் செய்வதற்குப் பதிலாக, இனப்பெருக்கத்தால் மனிதர்கள் பூமியை நிரப்ப வேண்டுமென கடவுள் நோக்கம் கொண்டார். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தபோது, அது அவருடைய நோக்கத்தை முறியடித்து விடவில்லை. ஆனால் மனிதருக்கும் பூமிக்குமான அவருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக அவசியமான சில மாற்றத்தை தேவைப்படுத்தியது.

இந்தக் காலப்பகுதியில் ஏறக்குறைய 6,000 வருடங்களாக, அவருடைய நேரிடையான வழிநடத்துதலின்றி தன்னிச்சையாக செயல்பட மனிதவர்க்கத்தை கடவுள் அனுமதித்திருக்கிறார். இதைத்தான் நம்முடைய ஆதி பெற்றோர் தங்களுடைய சுயாதீனத்தின்படி தெரிந்தெடுத்தார்கள். (ஆதியாகமம் 3:17-19; உபாகமம் 32:4, 5) இவ்வாறு கடவுளுடைய வழிநடத்துதலின்றி தன்னிச்சையாக செயல்பட அனுமதித்ததால், கடவுளின் உதவியின்றி மனிதர்களால் ஆளப்பட்ட ஆட்சி வந்தது. இதனால், மனிதன் தன்னுடைய சொந்த வழிகளை நடத்துவதற்கு திறமையில்லை என்பதையும் சகமனிதனை வெற்றிகரமாக ஆளுவதற்கு திறமையில்லை என்பதையும் தெளிவாக காண்பித்தது.

ஆனால், யெகோவா இந்த விளைவை ஏற்கெனவே அறிந்திருந்தார். இதை எழுத்தில் வடிக்கும்படி பைபிள் எழுத்தாளரை அவர் ஏவினார். உதாரணமாக, தீர்க்கதரிசியாகிய எரேமியா இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”​—⁠எரேமியா 10:⁠23.

மனிதர்கள் சகமனிதர்களை ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கையில் ஏற்படும் கோரமான விளைவுகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஞானியாகிய சாலொமோன் சொல்லிவிட்டார். “இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.”​—⁠பிரசங்கி 8:⁠9.

என்றபோதிலும், ‘மனிதவர்க்கம் அடித்துப் பிடித்து போராடுகையில் ஒரு பார்வையாளராக கடவுள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில்லை.’ அதற்குப் பதிலாக, சர்வவல்லமையுள்ள கடவுள் பெரும்பாலான மனிதவர்க்கத்தின் வாழ்க்கையில் நேரடியாக குறுக்கிடாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துசெல்ல தற்காலிகமாய் அனுமதித்ததற்கு நியாயமான காரணம் இருக்கிறது.

ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்றியது

100 வருடங்களுக்கும் குறைவான சராசரி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கடந்த 6,000 ஆண்டுகால மனித சரித்திரம் ஒரு நீண்ட காலமாய் தோன்றலாம். ஆனால் கடவுளுடைய கால அட்டவணையின்படியும், காலத்தை அவர் நோக்கும் விதத்தின்படியும், இந்த ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆறு நாட்களே​—⁠ஒரு வாரத்திற்கும் குறைவே! அப்போஸ்தலன் பேதுரு விளக்கினார்: “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம் போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.”​—⁠2 பேதுரு 3:⁠8.

கடவுளுடைய பங்கில் அசட்டை மனப்பான்மை அல்லது தாமதம் போன்ற குற்றச்சாட்டை எதிர்த்து பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிறார்.”​—⁠2 பேதுரு 3:⁠9.

ஆனால், ஒதுக்கப்பட்ட காலம் முடிவடைகையில், நம்முடைய அழகிய கோளத்தை மனிதர்கள் தாறுமாறாக நிர்வாகம் செய்வதை படைப்பாளர் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார். ஆளுவதற்கும், போர், வன்முறை, வறுமை, நோய், துன்பத்திற்கான மற்ற காரணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனிதனிடம் திறமையில்லை என்பதை மெய்ப்பித்துக் காண்பிப்பதற்காக கடவுள் போதுமான காலத்தை அனுமதித்திருக்கிறார். இவ்வாறு காலத்தை அனுமதிப்பது, ஆரம்பத்தில் மனிதர்களிடம் கடவுள் சொன்னதை​—⁠வெற்றிகரமாய் வாழ்வதற்கு அவர்கள் தெய்வீக வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும் என்பதை⁠—⁠அனுபவத்தின் மூலம் உறுதிப்படுத்தும்.​—⁠ஆதியாகமம் 2:15-17.

பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, நாம் இப்பொழுது தேவபக்தியற்ற இந்தக் காரிய ஒழுங்குமுறையின் ‘கடைசி நாட்களின்’ கடைமுனையில் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5, 13; மத்தேயு 24:3-14) தம்முடைய வழிநடத்துதலின்றி தன்னிச்சையாக செயல்படும் மனித ஆட்சியையும், துன்மார்க்கத்தையும், துன்பத்தையும் கடவுள் பொறுத்திருக்கிறார்; அதற்கு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. (தானியேல் 2:44) இவ்வுலகம் இதுவரை காணாத மிகப் பெரிய உபத்திரவத்தைக் காணும், அது ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தமாகிய’ அர்மகெதோனில் உச்சநிலையை அடையும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) கடவுளுடைய இந்தப் போர் அவருடைய கைவண்ணமாகிய இந்தப் பூமியை அழிக்காது, ஆனால் அது ‘பூமியைக் கெடுத்தவர்களுக்கு’ அழிவைக் கொண்டுவரும்.​—⁠வெளிப்படுத்துதல் 11:⁠18.

கடவுளுடைய ஆயிரவருட அரசாங்கம்

அர்மகெதோனின் முடிவில் லட்சோபலட்சம் பேர் தப்பிப்பிழைப்பர். (வெளிப்படுத்துதல் 7:9-14) நீதிமொழிகள் 2:21, 22-⁠ல் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேற்றம் அடைந்திருக்கும்: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”

நீதியுள்ள போராகிய அர்மகெதோனுக்குப் பிறகு ஆயிர வருட விசேஷித்த காலப்பகுதி ஆரம்பமாவதே கடவுளுடைய நோக்கம். (வெளிப்படுத்துதல் 20:1-3) இது, கடவுளுடைய குமாரனும் அவருடைய பரலோக ராஜ்யத்தின் அரசருமாகிய கிறிஸ்து இயேசுவின் ஆயிரவருட அரசாட்சியை ஸ்தாபிக்கும். (மத்தேயு 6:10) பூமியின்மீது ஆளப்படும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஆட்சியின்போது, அர்மகெதோனில் தப்பிப்பிழைத்த லட்சக்கணக்கானோருடன் சேர்ந்துகொள்ள மரணம் எனும் நித்திரையிலிருந்து எண்ணற்ற கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவர். (அப்போஸ்தலர் 24:15) அவர்கள் அனைவரும் பரிபூரணத்திற்கு கொண்டுவரப்படுவார்கள், அதன்பின்​—⁠கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் முடிவில்​—⁠ஆதாம் ஏவாளின் சந்ததியாராகிய பரிபூரண ஆண்களாலும் பெண்களாலும் இந்தப் பூமி நிரப்பப்படும். கடவுளுடைய நோக்கம் மகிமையுடனும் வெற்றிக்களிப்புடனும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

ஆம், ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைத்து, இனி மரணமோ துக்கமோ அலறுதலோ வருத்தமோ இல்லாமல் செய்வதே’ கடவுளுடைய நோக்கம். ‘முந்தினவைகள் ஒழிந்துபோய்விடும்.’ ‘சிங்காசனத்தின்மீது வீற்றிருப்பவர், இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.’ (வெளிப்படுத்துதல் 21:4, 5) வெகுசீக்கிரத்தில் அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேற்றமடையும்.​—⁠ஏசாயா 14:24, 27.

[பக்கம் 5-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில், மக்கள் மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ்வர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்