“மன ஆரோக்கியம் பற்றிய கசப்பான உண்மை”
“உடல் ஆரோக்கியத்தை கட்டிக்காக்க மருத்துவ துறை வியத்தகு முன்னேற்றங்களை கண்டபோதிலும், மன ஆரோக்கியம் பற்றிய கசப்பான உண்மை உலக அரங்கில் எதிரொலிப்பதை நாம் எதிர்ப்படுகிறோம்” என கனடாவின் சர்வதேச சுகாதார அமைப்பின் சினர்ஜி என்னும் ஒரு செய்தி மடலில் வெளிவந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
உலகம் முழுவதும் 4 பேரில் ஒருவர் மன, உணர்ச்சி சம்பந்தமான கோளாறுகளால் அவதியுறுவதாகவும் அல்லது இயல்புக்கு மாறாக நடந்துகொள்வதாகவும் ஒரு அறிக்கை முடிவுக்கு வந்துள்ளது. மன உளைச்சல் அல்லது பெரும் கவலைகளால் அவதிப்படும் நோயாளிகளில் மூன்றில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவதாக மற்றொரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏன்? “ரொம்ப பேர் அதிக வயது வாழ்கிறார்கள்.” இதனால், மருத்துவ பரிசோதனை மூலம் அறியப்படும் மன உளைச்சல், மனக் கோளாறு, மனச் சிதைவு போன்ற நோய்கள் பெருகிவருகின்றன என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. இருந்தாலும், நீண்ட நாட்கள் வாழ்வது மாத்திரமே ஒரே காரணமல்ல. நவீன வாழ்க்கைப் பாணியினால் ஏற்படும் அழுத்தங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளும் காரணங்களே.
இந்த இருண்ட நிலை மாறுமா? உடல் ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களில், மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில், “மனித மேம்பாட்டிற்கான முன்னேற்றத்தில் இது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவதாலேயே.”