உள்ளம் திறந்து பெற்றோருக்கு கடிதம்
ஸ்பெய்னில் இரண்டு டீனேஜ் பெண்கள், பெற்றோருக்கு நன்றி சொல்லி, சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அக்கடிதத்திலிருந்து ஒருசில பகுதிகள் இதோ:
எங்கள் அன்புமிக்க அப்பா பேபேவுக்கும், அம்மா பிதன்தாவுக்கும்,
கடிதத்தை எங்குத் தொடங்குவதென்றே புரியவில்லை. என்னென்னவோ நிறைய சொல்லவேண்டும் என்று எங்கள் மனம் தவிக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் ஒருசில வார்த்தைகளில் வடிக்க தெரியவில்லை. நாங்கள் இருவரும் 17-ம், 15-ம் வயதுகளில் காலெடுத்து வைக்கும்வரை எங்களுக்கு அளவற்ற அன்பையும், அரவணைப்பையும் தந்து வளர்த்ததற்காக நன்றிகள் கோடி.
உங்களுடைய கருத்துகளும், விதித்த கட்டுப்பாடுகளும் இன்னும் எங்கள் மனதில் நிழலாடுகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு நாங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று முன்பெல்லாம் நீங்கள் எங்களிடத்தில் சொன்னபோது, எதற்காக அப்படி சொல்கிறீர்கள் என்று சிலநேரங்களில் நாங்கள் குழம்பிப் போனதென்னவோ உண்மைதான். ஆனால், பெற்றோர்களின் கட்டுப்பாடு இல்லாமல் கண்டபடி திரிந்த பிள்ளைகளின் அவலநிலையை இப்போது கண்ணெதிரே காணும்போது, நீங்கள் போட்ட கட்டுப்பாடுகள் எங்களை பாதுகாத்த வேலிகள் என்று உணருகிறோம்.
சரியான காரணம் இருந்தாலே ஒழிய, ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லவும், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களோடு சேர்ந்து வெளி ஊழியத்துக்குச் செல்லவும் நீங்கள் அன்று ஏற்படுத்திக்கொடுத்த பழக்கம், இன்றும் எங்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி ஊழியத்திற்கு போகிறீர்களா என்று யாரும் எங்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்களே டாணென்று சென்றுவிடுகிறோம்!
விருந்தோம்பும் பழக்கத்தையும் எங்களுக்கு தாய்ப்பாலில் கலந்து ஊட்டிவிட்டீர்கள். நம் வீட்டிற்கு நிறையப் பேர் வருவார்கள், இருப்பதிலேயே நல்ல பொருளாக எடுத்து, வந்தவர்களுக்குக் கொடுத்து நீங்கள் மகிழ்ந்ததை பார்த்தே வளர்ந்தோம். உங்களை போன்ற அபூர்வ பெற்றோர் கிடைத்தற்காக பூரித்துப்போகிறோம்.
உங்களைப் போல் வேறு யாரும் எங்களை தெரிந்துகொண்டதும் இல்லை, புரிந்துகொண்டதும் இல்லை. நாங்கள் நம்பிக்கையோடு நாடிவரும் உயிர் நண்பர்கள் நீங்கள்.
உங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறோம் என்று சொல்லி கடிதத்தை முடிக்கிறோம். உங்களது இடத்தை யாருக்குமே கொடுக்க மாட்டோம். பெற்றோரையும், வாழவேண்டிய முறையையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு இன்னொரு தடவை கிடைத்தால், கண்டிப்பாக உங்களையே பெற்றோராக தேர்ந்தெடுப்போம். உங்களோடு வாழ்ந்த அதே வசந்த காலத்தில் உலா வருவோம்.
உங்கள் இருவருக்கும் அன்பு முத்தங்கள். இப்படிக்கு, மகள்கள்
எஸ்மெரால்டா, யோலான்டா