வாஸ்கோடகாமாவின் சாதனை படைத்த கடல் யாத்திரை
பொங்கிவரும் பேரலைகள் கப்பலின் முகப்பை தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அநேக இன்னல்களுக்கு பலியான வாஸ்கோடகாமாவும் அவருடைய குழுவினரும் கடலிலே பல மாதங்களை தொலைத்திருந்தனர். இறுதியாக ஆப்பிரிக்காவின் தென்முனையைச் சுற்றி, இந்தியாவை அடையப்போகும் முதல் ஐரோப்பியர்கள் என்ற பெயரை தட்டிச் செல்ல தயாராக இருந்தனர். இன்று கடற்பயண நுட்ப அறிவும் நவீன உபகரணங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவற்றின் மத்தியிலும் இப்படிப்பட்ட கடற்பயணம் எளிதான ஒன்றல்ல. ஆனால் 500 வருடங்களுக்கு முன் வாஸ்கோடகாமாவின் மூன்று சிறிய கப்பலில் இருந்தவர்களுக்கோ, இப்பயணம் ஏதோ நிலவிற்கு செல்வதைப் போன்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். இதை மேற்கொள்ள, துணிச்சல்மிக்க இந்த போர்ச்சுகீஸிய கண்டுபிடிப்பாளரையும் அவரது கூட்டாளிகளையும் உந்துவித்தது என்ன? அந்தப் பயணம் உலகத்தை எவ்வாறு பாதித்தது?
போர்ச்சுகலின் இளவரசர் ஹென்றி திறமை வாய்ந்த கப்பலோட்டி என பெயர் பெற்றிருந்தார். இவர் வாஸ்கோடகாமாவின் பிறப்பிற்கு முன்பாகவே கடற்பயணத்திற்கு அஸ்திவாரமிட்டவர். ஹென்றியின் பேராதரவின் கீழ் போர்ச்சுகீஸிய கப்பலோட்டிகளும் கடல் மார்க்க வணிகர்களும் நல்ல முன்னேற்றம் கண்டனர். ஹென்றியையும் அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களையும் பொருத்தமட்டில் கண்டுபிடிப்பு, வியாபாரம், மதம் ஆகியவை வெவ்வேறு அல்ல. அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதாக நினைத்தார்கள். போர்ச்சுகலை செழிப்பாக்கி, கத்தோலிக்க மதத்தை பரப்ப வேண்டும் என்பதே ஹென்றியின் குறிக்கோள். போர்ச்சுகலில் இராணுவமும் மதமும் சேர்ந்த மிகப்பெரிய அமைப்பாகிய ஆர்டர் ஆஃப் க்ரைஸ்ட் என்பதன் கவர்னராக ஹென்றி இருந்தார். போப் ஆதரித்த இந்த அமைப்பின் மூலமாக, ஹென்றியின் திட்டங்களுக்கு பெருமளவில் பண உதவி அளிக்கப்பட்டது. இதனால் அவருடைய எல்லா கப்பல்களும் சிகப்பு நிற சிலுவைக்குறியிட்ட கொடிகளை தாங்கியிருந்தன.
ஹென்றி 1460-ல் மரணமடைந்தார். இதற்குள்ளாக போர்ச்சுகலுக்கு தெற்கே, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள் வரை, அதாவது இன்றைய சியாரா லியோன்வரை போர்ச்சுகீஸியர்கள் கண்டுபிடித்திருந்தனர். 1488-ல் பர்தோலோமியூ டையாஸ், ஆப்பிரிக்காவின் முனையைச் சுற்றி கடற்பயணத்தை மேற்கொண்டார். இதன் பின்பு மன்னராகிய இரண்டாம் ஜான் இந்தியாவிற்கான கடற்பயணத்திற்காக ஆயத்தப்படுத்தும்படி நம்பிக்கையுடன் உத்தரவிட்டார். ஜானுக்கு பின்வந்த மன்னராகிய முதலாம் மேனுவேலும் ஆயத்த வேலைகளை தொடர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய நறுமணப் பொருட்களை இத்தாலிய, அரேபிய வியாபாரிகள் தரை மார்க்கங்கள் வாயிலாகத்தான் ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடைபெற்ற வாணிபம் அரேபிய முஸ்லிம் வணிகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இந்தக் கடற்பயணத்திற்கு தலைமை தாங்குபவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்? ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டபடி “படை வீரனைப் போன்ற தைரியமும் வியாபாரியைப்போல தந்திரமும் அயல்நாட்டு தூதுவர்போல் சாமர்த்தியமும் நிறைந்தவரே” பொருத்தமானவர் என்பதாக மேனுவேல் அறிந்திருந்தார். இந்த குணாதிசயங்கள் ஒருங்கமையப் பெற்ற வாஸ்கோடகாமாவை ஒருவேளை, மேனுவேல் தெரிவு செய்திருக்க வேண்டும்.
சரித்திரம் படைத்த பயணம்
ஜூலை 8, 1497-ல், ஆர்டர் ஆஃப் க்ரைஸ்ட் என்று பொறிக்கப்பட்டிருந்த கொடியை ஏந்திய புதிய கப்பல்கள் தயாராக இருந்தன. வாஸ்கோடகாமாவும் 170 பேர் அடங்கிய அவருடைய குழுவினரும் இரண்டு, இரண்டு பேராக அக்கப்பல்களை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அந்த கடற்கரையில் வாஸ்கோடகாமாவுக்கும் அவருடைய குழுவினருக்கும் ஒரு பாதிரியார் பாவ மன்னிப்பை வழங்கினார். கடற்பயணத்தின்போது யாரவது இறந்துபோனால், அவர்கள் பயணத்தின்போது செய்யும் பாவத்திலிருந்து விடுதலை அடைவதற்காகவே இந்த முன் ஏற்பாடு. பயணத்தின்போது பிரச்சினைகள் வரும் என்று வாஸ்கோடகாமா எதிர்பார்த்தார். அதன் காரணமாக பீரங்கிகளையும் பல கணைகளையும் (crossbows) வேல்கம்புகளையும் ஈட்டிகளையும் தன்னுடன் தயாராக எடுத்துச் சென்றார்.
பத்து வருடங்களுக்கு முன் டயாஸ் எதிர்ப்பட்ட சாதகமற்ற புயலையும் நீரோட்டத்தையும் தவிர்ப்பதற்கு வாஸ்கோடகாமா தீர்மானித்தார். சியர்ரா லியோனில் தன்னுடைய கப்பல்களை தென்மேற்கு திசையில் செலுத்தினார். அவர் ஆப்பிரிக்காவிற்கு போவதற்கு பதிலாக பிரேஸிலுக்கு அருகில் போய்ச்சேர்ந்தார். தென் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசிக்கொண்டிருந்த காற்று அவரை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு, நன்னம்பிக்கை முனைக்கு அருகில் கொண்டு சென்றது. இதற்கு முன்பாக இந்த பாதையில் யாரும் கடற்பயணம் மேற்கொண்டதாக வரலாறு கிடையாது. ஆனால் வாஸ்கோடகாமாவிற்கு பிறகு, எல்லா கப்பல்களும் நன்னம்பிக்கை முனைக்கு செல்வதற்கு இந்த பாதையைத்தான் பயன்படுத்தின.
டயாஸால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் திரும்பிய பகுதியையும் கடந்து வாஸ்கோடகாமாவின் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரமாக தங்களது வெற்றிப்பயணத்தை தொடர்ந்தன. வாஸ்கோடகாமாவையும் அவரது குழுவினரையும் கொலை செய்வதற்கு மொஸாம்பிக்கிலும் மொம்பாஸாவிலும் இருந்த உள்ளூர் சுல்தான்கள் சதித் திட்டம் தீட்டினர். ஆகவே வாஸ்கோடகாமா மாலின்டிக்கு சென்று விட்டார் (தற்போதைய தென்கிழக்கு கென்யா). இந்த இடத்தில்தான் இந்தியப் பெருங்கடலில் வழிநடத்திச் செல்ல அனுபவம் வாய்ந்த மாலுமி ஒருவரை வாஸ்கோடகாமா கண்டுபிடித்தார்.
மேற்கும் கிழக்கும் சந்திக்கின்றன
மாலின்டியிலிருந்து 23 நாட்கள் பயணப்பட்டு, வாஸ்கோடகாமாவும் அவரது குழுவினரும் மே 20, 1498-ல் இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டை அடைந்தார்கள். அங்குக் கப்பல்களை நங்கூரமிட்ட போது அனைவர் முகத்திலும் பெருமிதம் ததும்பியது. மிகுந்த செல்வத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு இந்து மன்னரை வாஸ்கோடகாமா சந்தித்தார். தங்களுடைய பயணம் நல்லுறவை மேம்படுத்தும் ஒன்று என்பதாகவும் தானும் தனது குழுவினரும் கிறிஸ்தவர்களை தேடி வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில், நறுமணப்பொருட்கள் வியாபாரம் சம்பந்தமாக வாஸ்கோடகாமா வாயைத் திறக்கவே இல்லை. ஆனால் அப்பகுதியில் வாணிபத்தை தங்களுடைய கைக்குள் வைத்திருந்த வியாபாரிகள் விழித்துக்கொண்டனர். தங்களுடைய வியாபாரத்திற்கு இவர்களுடைய வருகை குந்தகம் விளைவிக்கும் என்பதை உடனடியாக புரிந்துகொண்டனர். ஆகவே அத்துமீறி நுழைந்த அனைவரையும் கொன்றுவிடுமாறு மன்னருக்கு ஆலோசனை அளித்தனர். போர்ச்சுகீஸியர்களோடு மன்னர் தொடர்பு வைத்திருப்பாரேயானால் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்பதாகவும் எச்சரித்தனர். இப்படிப்பட்ட ஆலோசனைகளால் குழம்பிப்போன மன்னர் தீர்மானமெடுக்க தடுமாறினார். கடைசியில் வாஸ்கோடகாமாவின் விருப்பத்தை மன்னர் நிறைவேற்றினார். போர்ச்சுகல் நாட்டு மன்னருடன் வியாபாரத் தொடர்புக்கு ஒப்புக்கொள்ளும் கடிதத்தை வாஸ்கோடகாமா பெற்றுக்கொண்டார்.
மாறியது உலகம்
வாஸ்கோடகாமா செப்டம்பர் 8, 1499-ல் லிஸ்பனுக்கு திரும்பினார். அங்கே மாபெரும் வரவேற்பு, அந்த வெற்றி நாயகனுக்கு அளிக்கப்பட்டது. மன்னராகிய மேனுவேல் இன்னுமநேக பயணங்களுக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார். அடுத்த கப்பற்பயணமானது பெய்ரோ ஆல்வரேஸ் காப்ரல் என்பவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. போர்ச்சுகீஸியர்களின் நலனைக் காப்பதற்காக எழுபதுக்கும் அதிகமான ஆட்களை கோழிக்கோட்டிலேயே இவர் விட்டுவிட்டு வந்தார். ஆனால் தங்களுடைய வியாபாரத்தில் மூக்கை நுழைக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டு உள்ளூர் வியாபாரிகள் பொங்கியெழுந்தனர். ஓர் இரவில் பெரிய கலகக்கும்பல் தாக்கியதில், அங்கிருந்த எழுபது போர்ச்சுகீஸியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மூன்றாவது அணி வாஸ்கோடகாமாவின் தலைமையில் இந்தியாவிற்கு வந்தது. பழிக்குப்பழி வாங்குபவராய் போர்த்தளவாடங்களால் நன்கு ஆயத்தம் செய்யப்பட்ட தனது 14 கப்பல்களின் உதவியால் கோழிக்கோட்டில் குண்டுமழை பொழிந்து பதிலடி கொடுத்தார். அதோடு மெக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஒரு கப்பலையும் அவர் கைப்பற்றி அதை தீக்கரையாக்கினார். அதுமட்டுமா, அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் சிறுபிள்ளைகளையும் கொன்று குவித்தார். தயவு காண்பிக்கும்படி அவர்கள் உயிர்ப்பிச்சைக் கேட்டபோதிலும் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி வாஸ்கோடகாமா எல்லாரையும் தீர்த்துக்கட்டினார்.
இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீஸியர்கள் பெரும் சக்தியாக ஆதிக்கம் செலுத்தினார்கள். பின்தொடர்ந்த காலங்களில் இவர்கள் மலாக்கா, சீனா, ஜப்பான், மல்லுகாஸ் (நறுமணத் தீவுகள்) போன்ற நாடுகளுக்கும் தங்களது கடல் ஆய்வு பயணத்தை மேற்கொண்டனர். இந்த சமயத்தில் அவர்கள் அநேக மக்களை சந்தித்தனர். “அந்த மக்கள் கிறிஸ்துவின் சட்டத்திற்கு புறம்பானவர்கள். ஆகவே இவர்கள் நித்திய நரக ஆக்கினைக்கு தகுதியானவர்கள்” என்று போர்ச்சுகீஸியர்கள் நம்பியதாக 16-ம் நூற்றாண்டின் வரலாற்று அறிஞர் ஜோ டி பாரோஸ் எழுதினார். ஆகவே இந்த கண்டுபிடிப்பாளர்கள் எப்போதெல்லாம் தேவையென்று தாங்களாகவே நினைத்தார்களோ அப்போதெல்லாம் தங்கள் இஷ்டம்போல் வன்முறையில் இறங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவமற்ற செயல்களினால் ஆசியாவில் கிறிஸ்தவத்தைப் பற்றி மக்களிடையே ஆழ்ந்த மனக்கசப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்.
வாஸ்கோடகாமாவின் சாதனை ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே கடல் மார்க்கத்தை திறந்து வைத்தது. புதிய நாடுகளை கண்டுபிடிப்பதில் ஒரு புதிய திருப்புக் கட்டம் ஏற்பட்டது. கண்டுபிடிப்பாளர்களால் சந்திக்கப்பட்ட மக்கள் மூலமாக புதிய எண்ணங்கள் தலைதூக்கின. பேராசிரியர் ஜே. ஹெச். பார்ரி எழுதுகிறார்: “ஐரோப்பியர்களின் சமூகத்தாலும் மதத்தாலும் வியாபாரத்தாலும் அல்லது தொழிற்நுட்பத்தாலும் பாதிக்கப்படாத மக்கள் யாருமே இல்லை.” கிழக்கத்திய கொள்கைகள் இப்படிப்பட்ட ஊற்றுமூலங்கள் வழியாக ஐரோப்பாவிற்கு வந்து ஓரளவு ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்த கருத்துப் பரிமாற்றங்கள், பல்வேறு மனித கலாச்சாரங்களுக்கு எல்லையே இல்லை என்ற விழிப்புணர்வை அதிகரித்தன. வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்தின் விளைவுகள் உண்மையில் நல்லதோ கெட்டதோ, ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம், இந்த நவீன உலகம் அவருடைய கடற்பயணத்தின் பலன்களை இன்னும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறது.
[பக்கம் 25-ன் படம்]
வாஸ்கோடகாமாவின் முதல் கடற்பயண மார்க்கம்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 26-ன் படம்]
ஓவியரின் கைவண்ணத்தில் வாஸ்கோடகாமாவின் கப்பல்
[படத்திற்கான நன்றி]
Cortesia da Academia das Ciências de Lisboa, Portugal
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Cortesia do Museu Nacional da Arte Antiga, Lisboa, Portugal, fotografia de Francisco Matias, Divisão de Documentação Fotográfica - IPM