இரட்டைக் குவி லென்சுகள்—யார் முன்னோடி?
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பென்ஜமின் ஃப்ராங்க்ளின். அவர், இரண்டு ஜதை கண்ணாடிகளை எடுத்து அவற்றை சரி பாதியாக வெட்டினார். அதில் ஒன்று, கிட்டப்பார்வைக்கான லென்சு, மற்றொன்று தூரப்பார்வைக்கு. பின்னர், ஒரே மூக்குக்கண்ணாடி ஃப்ரேமில் மேலே தூரப்பார்வை லென்சையும் கீழே கிட்டப்பார்வை லென்சையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தார். இதோ, முதல் இரட்டைக் குவி லென்சு கண்ணாடி ரெடி!
இன்று, உயர்தரமான தொழில்நுட்பம் மூலம் ஒரே கண்ணாடித் துண்டிலேயே மேலும் கீழும் வித்தியாசமான குவிகளை உடைய இரட்டை லென்சு மூக்குக்கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. இரட்டைக் குவி கான்டாக்ட் லென்சுகளும் இருக்கின்றன. நவீன கண்ணாடி தொழில்நுட்பம் இரட்டைக் குவி லென்சுகளை கண்டுபிடிப்பதற்கு வெகு முன்னதாகவே, நன்னீரில் வாழும் இப்படிப்பட்ட ‘அதிநவீன’ லென்சை உடைய ஓர் அபூர்வமான மீனை உங்களுக்குத் தெரியுமா?
அனப்லப்ஸ் என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும், இச்சிறு மீன்கள் ஒரு அடி நீளமுடையவை. பார்ப்பதற்கு மின்னோ மீன்களைப்போல் இருக்கும் இவை, தென் மெக்ஸிகோவில் இருந்து தென் அமெரிக்காவின் வடக்கு பாகம் வரையாக உள்ள நீர்நிலைகளில் காணப்படுகின்றன. செவுள்களில் இருந்து வால் வரையாக எந்தவித வித்தியாசமுமின்றி இருக்கும் இதன் உருவம். செவுள்களுக்கு மேலே நம் கவனத்தை ஈர்ப்பது அதன் கண்களே.
சட்டென்று பார்த்தால், இந்த மீன்களுக்கு நான்கு கண்கள் இருப்பதுபோல் தோன்றும். ஒரு ஜோடி மேலே பார்த்துக் கொண்டும் மற்றொரு ஜோடி கீழே பார்த்துக் கொண்டும் இருக்கும். இதனாலேயே அநேகர் இதனை நான்கு-கண் மீன் என்று அழைக்கின்றனர். ஆனால் அது நம் பார்வையில் ஏற்படுத்தும் ஜாலமே. பெரிய வட்டவடிவ கண்கள் இரண்டே இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கண்ணுக்கும் நடுவில் கெட்டியான தோல் இருக்கிறது. அது கண்ணை இரண்டாக பிரிக்கிறது. இம்மீன்கள், நீர் பரப்பை ஒட்டி நீந்துவதால் மேல்பாதி கண்கள் நீர்மூழ்கிக் கப்பலின் மேல் இருக்கும் பெரிஸ்கோப் கருவியைப் போல் நீருக்கு மேலே நீட்டிக்கொண்டு, ஆகாயத்தை பார்த்தபடி இருக்கும். அதே சமயம், கீழ்பாதியோ நீருக்கடியில் இருப்பதை பார்க்கிறபடி நீரில் மூழ்கி இருக்கும். இப்படி இந்த நான்கு-கண் மீன் உணவுக்காக நீருக்கடியிலும் அதே சமயம் ஒரு கண்—சரியாக சொல்லவேண்டும் என்றால், இரண்டு கண்கள்—நீருக்கு மேலே பசியோடு பறக்கும் நீர்ப்பறவைகளை கண்காணித்துக் கொண்டும் இருக்கும்.
இருப்பினும், நீருக்கு மேலே பார்ப்பதைவிட நீருக்கடியில் பார்க்க தடிப்பான லென்சு தேவை. இந்த தேவைக்கு தீர்வு என்ன? இரட்டைக் குவி லென்சே! ஒவ்வொரு கண்ணிலும், முட்டை வடிவ லென்சு ஒன்றே இருக்கிறது. அதன் கீழ்பாகம் மேல்பாகத்தைவிட தடிமனாக இருக்கிறது. தடிமனாக இருக்கும் கீழ் பாகம் மூலம் நீருக்கடியில் இருக்கும் எதையும் காண முடியும். தட்டையான மேல்பாகம் ஆகாயத்தை ஆராயும்.
இப்படி ஒரே நேரத்தில் இரு திசைகளில் பார்க்கக்கூடிய இந்த மீனின் பார்வை தெளிவாக இருப்பது லென்சுகளைப் பொறுத்ததே. லென்சு சுத்தமாக இருந்தால், பார்வையும் தெளிவாக இருக்கும். கண் லென்சுகளை இவை எப்படி சுத்தம் செய்கின்றன? லென்சு உலர்ந்து போகும்போதெல்லாம் மீன் தன் தலையை நீருக்குள் அமிழ்த்தும். மறுபடியும் வெளிவரும்போது சுத்தமான, மினுமினுக்கும் இரட்டைக் குவி லென்சுகளோடு வரும். பளபளக்கும் இந்த லென்சுகள் சிருஷ்டிகரின் ஞானத்திற்கோர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Painting by Charles Willson Peale/Dictionary of American Portraits/Dover
©Dr. Paul A. Zahl, The National Audubon Society Collection/PR
©William E. Townsend, Jr., The National Audubon Society Collection/PR