உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 5/8 பக். 12-14
  • யூரோ கண்டம் பழையது நாணயம் புதியது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யூரோ கண்டம் பழையது நாணயம் புதியது
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இந்த எண்ணம் கருத்தரித்தது எவ்வாறு?
  • சிலருடைய பார்வையில் வரப்பிரசாதமாக . . .
  • . . . மற்றவர்களுடைய பார்வையிலோ சாபமாக
  • இது எல்லாருக்கும் ஒத்துவருமா?
  • “மிகப் பெரிய சூதாட்டம்”
  • ஒன்றுபட்ட ஐரோப்பா—அவ்வளவு முக்கியமானதா?
    விழித்தெழு!—2000
  • ஐரோப்பா உண்மையிலேயே ஒன்றுபடுமா?
    விழித்தெழு!—2000
  • கள்ளத் தயாரிப்பு—உலகெங்கிலுமுள்ள ஒரு பிரச்சினை
    விழித்தெழு!—1996
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 5/8 பக். 12-14

யூரோ கண்டம் பழையது நாணயம் புதியது

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போன பிரான்ஸின் நிதியமைச்சர் அந்த புதிய நாணயத்தை “செல்லமாக” கடித்தார். ஏன்? அடையாள அர்த்தத்தில் அதனுடைய உண்மைத் தன்மையை இவ்வாறு சோதித்தப்பின் அவர் பின்வருமாறு அறிவித்தார்: “இது நிஜந்தான். இது போலி நாணயம் அல்ல. ஐரோப்பாவிலும் பிரான்ஸிலும் முதன்முறையாக பிறந்தது இந்த நாணயம்தான்.” இந்த யூரோ நாணயம் பிரான்ஸின் அதிகாரப்பூர்வமான நாணயசாலையில் அச்சிடப்பட்ட முதல் நாணயமாகும். திங்கள் கிழமை மே 11, 1998-⁠ல் இச்சம்பவம் நடைபெற்றது.

யூரோ என்றால் என்ன? ஐரோப்பா முழுவதும் பரம்பிக்கிடக்கும் இல்லத்தரசிகளையும் வேலைக்கு செல்பவர்களையும் சுற்றுலா பயணிகளையும் வர்த்தகர்களையும் இது எவ்வாறு பாதிக்கும்? உலக பொருளாதாரச் சந்தையில் இதனுடைய பிரவேசம் ஏதாவது பெரும் விளைவுகளை ஏற்படுத்துமா? உங்களுடைய ஜெர்மன் மார்க், லேயர், பிராங்க் போன்ற நாணயங்களை தூக்கி எறிகிறதற்கு முன்பாக, இந்த கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து கொள்வது நல்லது.

இந்த எண்ணம் கருத்தரித்தது எவ்வாறு?

மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் (Maastricht Treaty) ஐரோப்பிய சமுதாயத்தை ஐரோப்பிய யூனியனாக மாற்றியது. இதனுடைய அடிப்படை இலக்குகளில் ஒன்று, உறுப்பு நாடுகளுக்கு பொதுவான நாணயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாக நவம்பர் 1, 1993-⁠ல் தீர்மானிக்கப்பட்டது. a ரோமர்களுடைய காலத்திற்கு பிறகு ஐரோப்பாவில் பொதுவான நாணயம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. இப்புதிய நாணயத்திற்கு யூரோ என்று பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டது. இந்த நாணயநிர்ணய முறைக்குரிய பேரவையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள எல்லா நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இந்தச் சமயத்தில் ஐரோப்பிய யூனியனிலுள்ள 15 நாடுகளில் 11 நாடுகளே யூரோவை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. அயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுக்கல், லக்ஸம்பர்க், ஜெர்மனி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் இது அமலில் உள்ளது. இந்த மாற்றத்தில் கலந்துகொள்வதற்கு பின்பற்ற வேண்டிய பொருளாதார விதிமுறைகளுக்கு கிரீஸ் தகுதிபெறவில்லை. இங்கிலாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மற்ற மூன்று நாடுகள் தற்சமயம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

யூரோ படிப்படியாக புழக்கத்திற்கு வரும். கரன்ஸியை உட்படுத்தாமல், நிதி மற்றும் வர்த்தக பரிமாற்றங்களில் யூரோவைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஜனவரி 4-⁠ம் தேதி முதல் சர்வதேச செலாவணி நடைபெற்றது. ஜனவரி 1, 2002 முதல், அடுத்த ஆறு மாதங்களில் யூரோ நாணயங்களும் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின் முன்னாள் நாணயங்களும் நோட்டுகளும் ஒருவேளை மியூஸியங்களை அலங்கரிக்கும் காட்சிப்பொருள்களாகலாம்; அல்லது அரும்பொருட்களைப் பாதுகாக்கும் பெட்டிகளிலும் தூங்கிக்கொண்டு இருக்கலாம். 1,200 கோடி நோட்டுகளையும் 7,000 கோடி நாணயங்களையும் யூரோ மாற்றீடு செய்துவிடும் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய மொத்த எடை 3,00,000 டன் என்பதாக கணிக்கப்படுகிறது. காலப்போக்கில் ஐரோப்பிய யூனியனிலுள்ள மற்ற நாடுகளும் இந்த பொதுவான பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கும் என்பதாக நம்பப்படுகிறது.

யூரோவிற்கு மாறுவதைப் பற்றி ஆஸ்திரியாவின் நிதியமைச்சர் பின்வருமாறு கூறினார்: “ஐரோப்பிய ஒருமைப்பாட்டினுடைய புதிய சகாப்தத்தின் நுழைவாயிலில் நாம் இருக்கிறோம்.” இருப்பினும் யூரோவை குறித்த பொதுமக்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. பொது நாணயத்தை பயன்படுத்துவது பொருளாதாரத்தில் ஐரோப்பாவை அசைக்க முடியாத சக்தியாக மாற்றிவிடும் என்பதாக 47 சதவிகிதத்தினர் நினைக்கின்றனர். ஆனால் 40 சதவிகிதத்தினரோ இந்த மாற்றம் ஐரோப்பிய பொருளாதாரத்தை பின்னடைய செய்யும் என்பதாக நம்புகின்றனர். பொது யூரோ நாணயம் யுத்தத்திற்கு வழிநடத்தும் என்பதும் சிலருடைய கருத்து. இதற்கிடையில் “யூரோஸ்கெப்டிக்ஸ்” (Euroskeptics) என்ற நடுநிலைவாதிகளும் இருக்கின்றனர். இவர்கள் ஐரோப்பாவில் பொது நாணயம் புழக்கத்தில் இருப்பதால் வரும் நன்மைகளை மனமார வரவேற்கிறார்கள். அதேசமயம் எதிர் காலத்தில் இதனுடைய வெற்றியையோ சந்தேகிக்கிறார்கள்.

சிலருடைய பார்வையில் வரப்பிரசாதமாக . . .

ஐரோப்பிய யூனியனின் வலிமை வாய்ந்த செயல்நிறைவேற்ற குழுமமாகிய யூரோப்பியன் கமிஷன் (European Commission) இவ்வாறு அறிவித்தது: “பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, ஐரோப்பா தன் குடிமக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பங்காளிகளுக்கும் . . . எல்லாரும் மனமுவந்து தெரிந்தெடுத்த பொதுவான வழிமுறையின் நிஜ அடையாளத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறது. அதன் நோக்கம் சமாதானத்தையும் செழுமையையும் ஆதாரமாக வைத்து கட்டப்படும் ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவதே.”

யூரோவின் ஆதரவாளர்கள் பொது நாணயத்தை உபயோகிப்பதால் விளையும் நிறைய நன்மைகளை பட்டியலிட்டு காண்பிக்கின்றனர். வெளிநாட்டு பணத்தை மாற்றும்போது ஏற்படும் அன்னிய செலாவணியை தவிர்ப்பதில் இது நேரடியாக உட்படுகிறது. ஐரோப்பிய யூனியனிலுள்ள தன்னுடைய சொந்த நாட்டைவிட்டு மற்ற 14 நாடுகளை ஓய்வேயில்லாமல் சுற்றித்திரியும் பயணியின் உதாரணம் சிலசமயங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பயணி 1,000 ஜெர்மன் மார்க்கை எடுத்துக்கொண்டு தன்னுடைய பயணத்தைத் துவங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலும் தன்னிடமுள்ள கரன்ஸியை அந்நாட்டின் கரன்ஸியாக மாற்றுகிறார். கடைசியில் இவர் அயல் நாட்டு நாணயமாற்றுக்காக மட்டுமே 500 மார்க்குகள் செலவழிக்க வேண்டியிருக்கும்!

ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் அயல் நாட்டு நாணயமாற்றுக்காக இனிமேலும் செலவு செய்ய அவசியம் இருக்காது. அதேவிதமாக மாறிக்கொண்டே இருக்கும் நாணய மதிப்பால் விளையும் மறைமுக வீழ்ச்சியையும் இந்த பொது நாணயம் தவிர்த்துவிடும். ஒரு நாட்டினுடைய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடையுமேயானால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை அந்நாட்டில் கிடுகிடுவென ஏறிவிடுகிறது. இதன் விளைவாக பணவீக்கம் ஏற்படுகிறது. ஐரோப்பாவில் பொது நாணயம் பயன்படுத்தப்படுவதால் அந்நியச் செலாவணி மாற்றத்திற்கான அவசியம் இல்லை. ஆகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை இது ஐரோப்பாவிற்குள் சுண்டி இழுக்கும்.

ஐரோப்பா முழுவதும் விலைவாசியை யூரோ குறைத்துவிடும் என்பதும் இதன் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு. வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் விலைகளை இப்பொழுது எளிதாக ஒத்துப்பார்க்க முடியும். 2002-⁠ல் யூரோ நாணயமும் நோட்டும் புழக்கத்திற்கு வரும்போது இவ்வாறு செய்வது இன்னும் எளிதாகிவிடும். ஐரோப்பாவில் ஒரே பொருளின் விலை இடத்திற்கு இடம் மாறுபடுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்தான்.

. . . மற்றவர்களுடைய பார்வையிலோ சாபமாக

குறைகண்டுபிடிப்பவர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யூரோ முட்டுக்கட்டையாக இருக்குமோ என இவர்கள் அஞ்சுகின்றனர். இது பொருளாதாரத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையையும் வளர்ச்சியையும் அழித்துவிடும் என்பதாக சொல்லுகின்றனர். இந்த பொது நாணயம் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்துவிடும், பணச் சந்தையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும், அரசியலில் நெருக்கடி நிலையை உண்டாக்கும் என்பதாகவும் இவர்கள் எதிர்காலத்தை கணிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஒன்றும் புதிதல்ல. உதாரணமாக ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவை கவனியுங்கள். யூரோவை கட்டுக்குள் வைத்திருக்கும் யூரோப்பியன் சென்ரல் பாங்கின் தலைவராக யார் இருப்பது என்பதைக் குறித்து இருநாடுகளுக்கும் இடையே சச்சரவு எழுந்தது. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள், தங்களது சொந்த நோக்கங்களை சாதித்துக்கொள்ள துடிக்கும்போது இப்படிப்பட்ட சச்சரவுகள் தொடர்கதையாகலாம்.

ஐரோப்பிய யூனியனிலுள்ள சில நாடுகளில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பொது நாணயத்தின் விதிக்கிணங்க செலவுகளை குறைப்பதும் வரிகளை அதிகரிப்பதுமே இதற்கு காரணம் என்பதாக அநேகர் குற்றஞ்சாட்டுகிறார்கள். பொதுநல திட்டங்களையும் ஓய்வூதியத்தையும் சுகாதார திட்டங்களையும் குறைத்துப்போடும் கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு ஐரோப்பா முழுவதும் எதிர்ப்பலைகள் எழும்பியிருக்கின்றன. இப்படிப்பட்ட கடுமையான பொருளாதார கொள்கைகள் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும்? யூரோ உண்மையில் புழக்கத்திற்கு வந்த பிறகு தங்களுடைய செலவினங்களை சற்று அதிகரிக்க சில நாடுகள் தூண்டப்படுமா? இப்படிப்பட்ட வளைந்து கொடுக்கும் கொள்கைகள் ஐரோப்பிய பொது நாணய ஏற்பாட்டை மிகமோசமாக பலவீனமடையச் செய்யுமா?

தங்களுடைய நாட்டின் பணத்தின்மீது மக்களுக்கு இருக்கும் அலாதியான உணர்ச்சிப் பிணைப்பை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பணம் உங்களுடைய பாக்கெட்டில் வெறுமனே இருப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. அநேகருக்கு பணம் தங்களுடைய நாட்டின் வரலாறாக, தேசியக் கொடியைப்போல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சின்னமாக இருக்கிறது. ஒரு நாட்டின் பணம், சம்பாதிப்பதற்கும் கணக்கிடுவதற்கும் மதிப்பீடுகள் செய்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் அந்நாட்டு மக்களுக்கு உயிர் நாடியாக இருக்கிறது. உதாரணமாக ஜெர்மானியர்கள் தங்களுடைய பாங்க் அக்கெளண்டுகளில் யூரோ மாற்றீடு செய்யப்படுகையில் அவர்களிடம் முன்பிருந்ததில் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்திருப்பதைக் காண்பார்கள்; இத்தாலியிலோ, ஒருவருக்கு 2,000 லேயர் பணம் பாங்கில் இருந்தால் அது 1 யூரோவாக மாறும் என்று கணக்கிடப்படுகிறது; ஆனால் மதிப்பு என்னவோ குறையவில்லை. ஒரு ஆய்வின் பிரகாரம் யூரோவிற்கு தாவுவது அநேக ஐரோப்பிய நாட்டவர்களுக்கு “கடும் வேதனையான” அனுபவமே.

இது எல்லாருக்கும் ஒத்துவருமா?

ஐரோப்பிய யூனியனிலும் ஐக்கிய மாகாணங்களிலுமுள்ள சில பொருளாதார வல்லுநர்கள் பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகிறார்கள்: ஒரே நாணய புழக்கத்திற்கு அரசியல்வாதிகளின் விருப்பம் கணிசமான அளவு இருந்தபோதிலும் ஐரோப்பாவின் பொருளாதாரம் உடைந்து துண்டுதுண்டாகத்தான் இருக்கிறது. மேலும் ஐரோப்பாவின் மக்கள் தங்கள் தங்கள் நாட்டிலேயும் முற்றிலும் வித்தியாசமான கலாச்சாரங்களிலும் மூழ்கியிருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துவிட்டால் வேலை வெட்டி தேடி தொலை தூரங்களுக்கு குடிபெயருகின்றனர். ஆனால் ஐரோப்பியர்கள் இவ்விதம் செய்வதில்லை. ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் துண்டுதுண்டாக இருப்பதால் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தேவையான பொது பொருளாதாரம் இல்லை; எனவே அப்படிப்பட்ட பொது கரன்ஸியும் தாக்குப்பிடிக்காது என்பதாக சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஒரே பொது நாணயத்தை பயன்படுத்துவதால் தனிப்பட்ட அரசாங்கங்கள் பொருளாதார சிக்கல்களை தீர்க்க உதவும் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்க நேரிடும் என்பதாக குறைகாண்பவர்கள் சொல்லுகின்றனர். தனி நாடுகளிலிருக்கும் அதிகாரத்தை ஜெர்மனியின் ப்ராங்ஃபர்டிலுள்ள யூரோப்பியன் சென்ரல் பாங்கிற்கு யூரோ மாற்றிவிடும் என்பதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பா கண்டம் முழுவதும் வரிவிதிப்பு சட்டங்களையும் மற்ற பொருளாதார கொள்கைகளையும் ஒருங்கமைப்பதில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இது விளைவடையும். ப்ரூஸெல்ஸ்ஸிலும் ஸ்ட்ராஸ்பார்க்கிலுள்ள செயலாட்சித்துறை மற்றும் சட்டமியற்றும் குழுமங்கள் அதிக அதிகாரம் பெற்றுவிடும் என்பதாக இக்குறைகாண்போர் வாதாடுகின்றனர். மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம்தான் வெளிநாடு, பாதுகாப்பு, பொருளாதார, சமூக பாலிஸிகள் போன்றவற்றை பொறுப்பேற்கும் ஒரு அரசியல் யூனியனின் தேவையை முன்வைத்தது. இந்த மாற்றீடுகள் பிரச்சினைகள் இன்றி சுமூகமாக நடக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.

“மிகப் பெரிய சூதாட்டம்”

இதற்கிடையில் பாங்குகளும் சூப்பர் மார்க்கெட்டுகளும் ஏற்கெனவே யூரோவிற்கு மாறுவதற்கு தங்களால் இயன்றவற்றை செய்ய ஆரம்பித்துவிட்டன. கணக்கு வழக்குகளை யூரோவில் நடைமுறைப்படுத்துவதற்காக அக்கவுண்ட்களை ஏற்படுத்துவதும், ஒரு பொருளின் விலைக்கு அருகில் அதின் விலையை யூரோவின் மதிப்பில் பொறிப்பதும் இந்த வேலைகளில் அடங்கும். 2002-⁠ம் வருடத்தில் கூடுமானவரை சுமூகமாக மாற்றங்களை செய்யவேண்டும் என்பதே இலக்கு. பிரெஞ்சு பிராங்க்கிலிருந்து யூரோவிற்கு கணக்குகளை மாற்றீடு செய்யும் 2,00,000-⁠க்கும் அதிகமான கால்குலேட்டர்களை பிரபலமான பிரெஞ்சு பத்திரிகை, ஏற்கெனவே தயாரித்து விநியோகித்து விட்டது.

பணத்தின் மதிப்பில் யு.எஸ். டாலருடன் யூரோ என்றாவது ஒரு நாள் போட்டிப்போடுமா? இப்பொழுது உலக பொருளாதாரத்தில் ஐக்கிய மாகாணம் கொடிகட்டிப் பறக்கிறது. யூரோ ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு நிலைமைகள் மாறிவிடும். ஏனெனில் இனிமேலும் ஐக்கிய மாகாணங்கள் அவ்வளவு சுலபமாக உலக பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்க முடியாது என்பதாக அநேகர் நினைக்கின்றனர். டாலருக்கு இணையாக உலக கையிருப்புப் பணமாக யூரோ இருக்கும் என்பதாக அவர்கள் முன்னுரைக்கின்றனர். நியூ யார்க் க்லியரிங் ஹவுஸ் அசோஸியேஷனைச் சேர்ந்த ஜில் கோன்சடின் கூறுகிறார்: “எதிர்காலத்தில் கடும் போட்டி இருக்கும்.”

யூரோவின் எதிர்காலத்தைப் பற்றியதென்ன? ஜெர்மன் எடிட்டரான யூசஃப் யோப்பா பொது நாணயத்தைப் பற்றிச் சொல்லும்போது “இதை வைத்து ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இயலாது, அது மிகப் பெரிய சூதாட்டம்” என குறிப்பிட்டார். “ஒருவேளை இந்த பொது நாணயம் தோல்வியடையுமேயானால் விளைவுகள் படுநாசகரமாக இருக்கும். கடந்த 50 வருடங்களாக ஐரோப்பா முயன்று அடைந்த வளர்ச்சிகளை இது தரைமட்டமாக்கிவிடும்” என்பதாக இவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். அநேக ஐரோப்பியர்களின் உணர்ச்சிகளை பிரெஞ்சு நிதியமைச்சர் பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டார்: “மகிழ்ச்சி நிறைந்த ஒளிமயமான எதிர்காலம் அடிவானில் தெரிகிறது. கூடவே கடும் பயமும் அலைக்கழிக்கிறது.”

[பக்கம் 14-ன் பெட்டி]

யூரோ பற்றிய தகவல்

ஒரு யூரோ, ஒரு யு.எஸ். டாலருக்கும் சற்று அதிக மதிப்புள்ளது

யூரோ நோட்டுகள் 5, 10, 20, 50, 100, 200, 500-⁠ன் தாள்களாக இருக்கும்

யூரோ நோட்டில், ஒருபுறம் மாதிரி பாலங்களுடன் ஐரோப்பாவின் வரைபடமும் மறுபுறத்தில் ஜன்னல்கள் அல்லது நுழைவாயில்களும் இடம் பெற்றிருக்கும்

ஆங்கில மற்றும் கிரேக்க எழுத்துக்களான “EURO” மற்றும் “EYPΩ” என்ற வார்த்தைகள் நோட்டில் இருக்கும்

யூரோ நாணயங்கள் எட்டு விதங்களில் கிடைக்கும்: 1, 2, 5, 10, 20, 50 சென்ட்; மேலும் 1, 2 யூரோக்களும் இவற்றில் உள்ளடங்கும்

யூரோ நாணயங்களின் ஒரு புறத்தில் ஐரோப்பாவின் வரைபடமும் மறுபுறத்தில் நாட்டினுடைய தேசிய சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்

[அடிக்குறிப்புகள்]

a ஐரோப்பிய சமுதாயத்தைப்பற்றி இன்னுமதிகமான தகவல்களுக்கு ஆங்கில விழித்தெழு! பிப்ரவரி 22, 1979-⁠ல் பக்கம் 4-8-ஐயும் டிசம்பர் 22, 1991-⁠ல் பக்கம் 20-4-ஐயும் பாருங்கள்.

[பக்கம் 13-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஐரோப்பிய யூனியன்

டென்மார்க்

ஸ்வீடன்

கிரீஸ்

நாணயமுறையில் தற்போது அங்கம் வகிக்கும் நாடுகள்

அயர்லாந்து

போர்ச்சுக்கல்

இங்கிலாந்து

ஸ்பெய்ன்

பெல்ஜியம்

பிரான்ஸ்

நெதர்லாந்து

ஜெர்மனி

லக்ஸம்பர்க்

பின்லாந்து

ஆஸ்திரியா

இத்தாலி

[பக்கம் 12-ன் படங்களுக்கான நன்றி]

பக்கங்கள் 12 முதல் 14-லிலுள்ள எல்லா கரன்சிகளும்: © European Monetary Institute

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்