கோமனியஸ்—நவீன கல்வித் திட்டத்தின் தந்தை
செக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஜான் கோமனியஸ் ஒரு ஆசிரியர். ஆகவே அவர் பணிபுரிந்து வந்த 17-ம் நூற்றாண்டு கல்வித் திட்டத்தின் குறைபாடுகள் அவருக்கு அத்துப்படி. கல்வித் திட்டங்கள் ஒரு காலத்திலும் நிறைவாக இருந்ததில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் 17-ம் நூற்றாண்டிலிருந்த ஐரோப்பிய பள்ளிகளின் கல்வித் திட்டமோ சந்தேகமில்லாமல் படுமோசமாக இருந்தது.
‘இதெல்லாம் ஒரு படிப்பா என்ன?’ என்பதாக புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் அள்ளிவீசிக்கொண்டு இல்லாமல், இதுகுறித்து பிரயோஜனமாக எதையாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார் கோமனியஸ். அவர் அப்படி என்னதான் செய்தார்? எதற்காக செய்தார்? நவீன கல்வித் திட்டத்திற்கு வித்திட்ட மகான் என பெயர்பெற்ற இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன?
பிள்ளைப்பருவமும் கல்வியும்
இன்று செக் குடியரசு என்று அறியப்பட்டிருக்கும் நாட்டிலுள்ள மோராவியா என்னும் இடத்தில் மார்ச் 28, 1592-ல் ஜான் ஆமோஸ் கோமனியஸ் பிறந்தார் (யான் ஆமோஸ் கோமென்ஸ்கி, செக் மொழியில் அவரது பெயர்). ஐந்து பிள்ளைகளில் இவர்தான் கடைக்குட்டி. ஓரளவிற்கு நல்ல வசதியுடன் வாழ்ந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒரே ஆண்வாரிசு இவர்.
இவருடைய பெற்றோர்கள் யூனிட்டி ஆஃப் பிரதரன் சர்ச்சின் அங்கத்தினர்கள். (இது பிற்பாடு போஹிமியன் பிரதரன் அல்லது மோராவியன் சர்ச் என்பதாக அழைக்கப்பட்டது.) இது 15-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் வால்டன்சஸ் என்ற தொகுதியினர், பீட்டர் கெல்சிட்ஸ்கி போன்ற மதச்சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கினால் உருவான மதப்பிரிவு. ஜெர்மனியில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு கோமனியஸ் தாயகம் திரும்பினார். தனது 24-ம் வயதில் யூனிட்டி ஆஃப் பிரதரன் சர்ச்சில் பாதிரியாக நியமனம் செய்யப்பட்டார்.
அகதியானது ஏன்?
அது 1618-ம் ஆண்டு. ப்ராக்கின் கிழக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் புல்னெக்கிலிருந்த சிறிய தொகுதிக்கு பாதிரியாக கோமனியஸ் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் ஐரோப்பாவில் புராட்டஸ்டண்டினருக்கும் கத்தோலிக்க சீர்திருத்த இயக்கத்திற்கும் இடையே போட்டி பயங்கரமாகவே இருந்தது. இதனால் கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டினருக்கும் மத்தியில் கடுமையான பதட்டம் நிலவியது. கடைசியாக முப்பது வருட யுத்தம் (1618-48) வெடிக்கும் வரைக்கும் இந்நிலை தொடர்ந்தது.
முதல் பத்து வருட யுத்தத்திற்கு பிறகு இறுதியில் கத்தோலிக்க மதம் மட்டுமே மோராவியாவில் சட்டப்பூர்வமான மதமாக பிரகடனம் செய்யப்பட்டது. கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கோமனியஸுக்கும் மற்ற உயர்குடி மக்களுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டது. கோமனியஸ் மதம் மாறுவதற்கு தயாராக இல்லாததால் தன்னுடைய குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேற தீர்மானித்தார். போலந்தில் யூனிட்டி ஆஃப் பிரதரன் சர்ச்சினுடைய முக்கிய மையமாக விளங்கிய லெஷ்னோ என்ற சிறிய நகரத்திற்கு அவருடைய குடும்பம் குடிபெயர்ந்தது. அகதியாக அந்நிய நாட்டில் வாழ்ந்த 42 வருட கால அனுபவத்தின் ஆரம்பமாக அது இருந்தது. அதன்பின்பு தன்னுடைய தாய்நாட்டிற்கு அவர் திரும்பிச் செல்லவேயில்லை.
“மனதின் கொலைக்கூடங்கள்”
லெஷ்னோ ஜிம்னேஷியம் என்ற பள்ளியில் கோமனியஸ் லத்தீன் மொழியை போதிக்கும் ஆசிரியராக சேர்ந்தார். அது கல்லூரி மாணவர்களுக்கான ஆயத்தப் பள்ளியாக இருந்தது. இங்கு போதிக்கப்படும் கல்வி பொருத்தமற்றதாக இருந்ததை கோமனியஸ் வெகு சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார். ஆகவே இவர் அந்த கல்வித் திட்டத்தில் அதிருப்தியடைந்ததற்கு நல்ல காரணம் இருந்தது.
கோமனியஸின் காலத்தில் கல்வித் திட்டம் பரிதாபகரமான நிலையில் இருந்தது. உதாரணமாக ஆண்கள் மட்டுமே கல்வி பயில தகுதியானவர்களாக கருதப்பட்டார்கள். இருப்பினும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆண்கள் நிராகரிக்கப்பட்டவர்களாக, பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமுடியாமல் இருந்தனர். லத்தீன் வார்த்தைகளும் வாக்கியங்களும் சொற்றொடரின் இலக்கணங்களும் மாணவர்களுடைய மண்டைகளில் பலவந்தமாக திணிக்கப்படுவதே வகுப்பறையின் முக்கியமான போதனைகளாக இருந்தன. இதற்கு காரணம் என்ன? அநேக இடைக்கால பள்ளிகள் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருந்தன. கத்தோலிக்க சர்ச்சில் பொதுவழிபாடு லத்தீன் மொழியில்தான் நடத்தப்பட்டது. ஆகவே, பாதிரியார்களாக வேலை செய்வதற்கு போதுமான நபர்களை தயார்படுத்தி அனுப்புவதற்கு வசதியாக இப்பள்ளிகளில் லத்தீன் போதிக்கப்படுவது மிகவும் அவசியமாக இருந்தது.
இதற்கும் மேல், கற்றுக்கொள்ளும்போது பிரத்தியேக இலக்குகளை வைப்பதையோ அவற்றை அடைவதையோ குறித்து யாரும் சட்டை செய்யவேயில்லை. சாதாரண விஷயங்களிலிருந்து மிகவும் சிக்கலான விஷயங்களை மாணவர்களுக்குப் படிப்படியாக கற்றுக் கொடுக்கும் போதனா திட்டங்கள் பேருக்குக்கூட இல்லை. இருப்பினும் கட்டுப்பாடுகள் மிகவும் கண்டிப்பானவையாகவும் சில சமயங்களில் கொடுமையானவையாகவும் இருந்தன. ஆனால் ஒழுக்க தராதரங்களோ மகா மட்டரகமாக இருந்தன.
ஸ்காட்லாந்தின் கல்வியாளர் சைமன் லாரி, 17-ம் நூற்றாண்டின் பள்ளிகளைக் குறித்து ஒருசமயம் பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “திருத்த முடியாத கோணல்மாணலான, ஆர்வமேயில்லாத அமைப்புகள்.” கோமனியஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று குற்றஞ்சாட்டினார். “மனதின் கொலைக்கூடங்கள்” என்பதாக அப்பள்ளிகளை தாக்கிப் பேசினார்.
பிறந்தது புதிய கல்வித் திட்டம்
கல்வித் திட்டத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என முதலாவது கோரிக்கை விடுத்தது கோமனியஸ் அல்ல. லத்தீனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும்; மாறாக இயற்கையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் பாகோன் என்பவர் சிபாரிசு செய்திருந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த வால்ஃப்காங்க் ரோட்கா, ஜான் வாலன்டின் ஆண்ரேயா உட்பட இன்னுமநேகர் கல்வித் திட்டத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு கடுமையாக முயற்சித்தனர். இருப்பினும் இவர்களுடைய எல்லா யோசனைகளும் அதிகாரப்பூர்வமான ஆதரவை பெற தவறின.
கல்வித் திட்டம் என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கவேண்டுமே தவிர உப்புசப்பில்லாமல் டல்லாக இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு திட்டத்தை கோமனியஸ் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய கல்வித் திட்டத்தை “அகில உலக கல்வித் திட்டம்” என்பதாக அர்த்தப்படும் போம்பதியா (pampaedia) என்பதாக அழைத்தார். ஒவ்வொருவரும் நன்றாக அனுபவித்து மகிழும் படிப்படியாக, முன்னோக்கிச் செல்லும் கல்வித் திட்டத்தை நிறுவவேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. இயற்கையாகவே மிகவும் சிக்கலான விஷயங்களுக்கு வழிநடத்தும் சாதாரண விஷயங்களை பிள்ளைகளுக்கு படிப்படியாக போதிக்கவேண்டும் என்பதாகவும் அவர் சொன்னார். பிள்ளைகள் லத்தீனில் அல்ல, தங்களுடைய தாய்மொழியை ஆரம்பப் பள்ளியில் சில வருடங்களுக்கு கற்க வேண்டும் என்று கோமனியஸ் ஊக்கமளித்தார்.
வளரிளமைப் பருவத்தில் மாத்திரம் அல்ல, மாறாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே கல்வியை கற்க வேண்டும். கல்வி “எப்போதும் நடைமுறைக்கு உதவுவதாகவும் முழு மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்க வேண்டும்; மகிழ்ச்சியின் [பிறப்பிடமாக] கூடமாக இருக்க வேண்டும்; விளையாடுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதேபோல, பள்ளியும் நம்முடைய முழு வாழ்க்கையை வசந்ததின் வாயிலுக்கு கொண்டுசெல்ல வேண்டும்” என்பதாகவும் கோமனியஸ் எழுதினார். வெறுமனே மனதை மாத்திரம் அல்லாமல், பள்ளியானது முழு மனிதனையே பயிற்றுவிக்க வேண்டும்; ஆகவே ஒழுக்க தராதரங்களையும் ஆன்மீக அறிவுரைகளையும் போதிப்பதற்கு பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகவும் அவர் நம்பினார்.
ஜான் கோமனியஸின் சாதனைகள்
கற்பிக்கும் துறையில் கோமனியஸின் முதற்கட்ட சாதனைகளான த கிரேட் டைடக்டிக், த ஸ்கூல் ஆஃப் இன்பன்சி போன்ற புத்தகங்கள் 1630-ல் பிரசுரிக்கப்பட்டன. பிள்ளைகளை வீட்டிலேயே பயிற்றுவிப்பதற்கு தாய்மார்களுக்கும் செவிலித்தாய்களுக்கும் கைகொடுக்கும் விதத்தில் த ஸ்கூல் ஆஃப் இன்பன்சி என்ற புத்தகம் தயார் செய்யப்பட்டது. இதற்கடுத்ததாக த கேட் ஆஃப் லாங்குவேஜஸ் அன்லாக்ட் என்ற புத்தகம் 1631-ல் வெளிவந்தது. இந்தப் புத்தகம் லத்தீன் மொழியை வித்தியாசமான புதிய முறையில் நன்றாக போதிப்பதற்கு வகை செய்தது. இப்புத்தகம் செக் மொழியிலும் லத்தீன் மொழியிலும் அருகருகே இணையான பத்திகளை கொண்டிருந்தது. இது அவ்விரண்டு மொழிகளையும் எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. இது கற்றுக்கொள்வதை வெகு சுலபமாக்கியது. போதிப்பதற்கு உபகரணமாக இருந்த கோமனியஸினுடைய இப்புத்தகத்தின் மறுபதிப்பு மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் இப்புத்தகம் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
கோமனியஸின் பிரபலமான அதேசமயம் எளிமையான படைப்பு த விசிபில் உவர்ல்ட் என்ற புத்தகம்தான். குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக விளக்கப் படங்களுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருந்தது. கல்வி துறையின் சரித்திரத்தில் எட்டப்பட்ட முக்கியமான மைல்கல்லாகவும் இது அமைந்தது. “நூற்றிப் பதினைந்து வருடங்களுக்கு இப்புத்தகத்திற்கு இணையாக வேறு எந்த புத்தகமும் போட்டிபோட முடியவில்லை; சுமார் இருநூறு வருடங்களுக்கு அறிமுக பாடப்புத்தகமாக இப்புத்தகம் பயன்படுத்தப்பட்டது” என்கிறார் 20-ம் நூற்றாண்டின் கல்வித்துறை பேராசிரியர் எல்வுட் கபர்ல்லி. இன்று விளக்கப் படங்களுடன் வெளிவரும் பாடபுத்தகங்கள் கோமனியஸினுடைய பொதுவான வழிமுறைகளை பின்பற்றுகின்றன. ஆம், இவை போதிப்பதற்கு படங்களை ஏதுக்களாக பயன்படுத்துகின்றன.
இதன் விளைவாக கோமனியஸ் சீக்கிரத்தில் கல்வியுலகின் பிதாமகர் என்பதாக புகழாரம் சூட்டப்பட்டார். ஐரோப்பா முழுவதிலுமுள்ள அறிஞர்கள் கோமனியஸை ஒரு தலைவராகவே கருதி அவருடைய அறிவுரைகளை நாடினார்கள். மக்னலியா க்ரிஸ்டி அமெரிக்கானா என்ற புத்தகத்தின் பிரகாரம், கோமனியஸின் புகழ் அவ்வளவாக கொடிகட்டிப் பறந்ததால் மாசசூட்ஸ், கேம்பிரிட்ஜிலுள்ள ஹார்வர்டு யுனிவர்சிட்டியின் தலைவராக பொறுப்பேற்குமாறு 1654-ல் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் பேரையும் புகழையும் உயர்ந்த பதவிகளையும் வெறுத்த கோமனியஸ் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அவரை உந்துவித்தது எது?
இவ்வாறு செய்யும்படியாக அவரை உந்துவித்தது எது என்பதை அறிந்துகொள்ள கோமனியஸின் வாழ்க்கை சரிதையை ஆராய்பவர்கள் ஆவலாயிருப்பார்கள். மனித குலத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக கல்வி இருக்கிறது என்பதாக கோமனியஸ் கருதினார். உலகளாவிய கல்வித் திட்டம் உலக சமாதானத்தை பேணிப் பாதுகாக்கும் என்பதாகவும் அவர் வற்புறுத்திக் கூறினார்.
கோமனியஸ் அறிவையும் தெய்வபக்தியையும் இணைத்துத்தான் பேசினார். மனிதவர்க்கம் முயற்சி செய்து அறிவை தேடுகையில் கடைசியில் கடவுளிடம்தான் வழிநடத்தப்படுகிறது என்பதாக அவர் நம்பினார். இதுதானே அவருக்கு முக்கியமான தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.
கல்வியில் கோமனியஸுக்கு இருந்த ஆழமான அறிவு இன்றும் பிரயோஜனமாக இருக்கிறது. விளக்கப் படங்களுடன், திட்டமிட்டு, படிப்படியாக போதிக்கும் அவருடைய போதனா வழிமுறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரசுரங்களும் இதில் அடங்கும். நம்முடைய பைபிள் படிப்பிலும் குடும்ப பைபிள் படிப்பிலும் அவருடைய முறைகளை பின்பற்றும்போது தனிப்பட்டவர்களாக நாம் ஒவ்வொருவரும் பயன்பெறுவோம். எவ்விதமாக?
“மாணவர்களுடைய வயதிற்கு மிஞ்சிய, புரிந்துகொள்ள முடியாத, தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஒத்துவராத விஷயங்களை அவர்களுடைய மனதில் திணிப்பதன் வாயிலாக அவர்களை அதிக பாரமடையச் செய்யக்கூடாது” என்பதாக கோமனியஸ் எழுதினார். ஆகவே உங்களுடைய பிள்ளைகளுக்கு பைபிளையோ மற்ற பாடங்களையோ சொல்லித்தரும்போது அவர்களுடைய தேவைக்கேற்ப பாடங்களை அமையுங்கள். வெறுமனே கேள்வி-பதில் முறையை பின்பற்றுவதற்கு பதிலாக, பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளை ஏன் சொல்லக்கூடாது? படிப்பில் அவர்களை உட்படுத்துங்கள். பைபிள் சம்பவங்களை ஓவியமாக வரைவதற்கு அவர்களை பழக்குவியுங்கள். பைபிள் நாடகங்களில் நடிப்பதற்கு உங்கள் பிள்ளைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். உங்கள் கற்பனாத்திறமையை சிறகடித்து பறக்கவிடுங்கள்! அப்புறமாக உங்களுடைய முயற்சியின் நல்ல பலன்களை பார்த்து நீங்களே மலைத்துப்போய் விடுவீர்கள்!—நீதிமொழிகள் 22:6.
கண்ணைக் கவரும் வண்ணப்படங்களுடன் திட்டமிட்டு படிப்படியாக கருத்துக்களை விளங்கிக்கொள்ளும் விதத்தில் விளக்கப்படும் புத்தகங்களாகிய என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் a போன்ற புத்தகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வயதினருக்கு பைபிளை போதித்தாலும் சரி, அவர்களுடைய அனுபவம் “முழுவதும் நடைமுறையானதாகவும் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும்” இருப்பதற்கு முன்முயற்சி எடுங்கள்.
நிரந்தரமான பரம்பரைச் சொத்து
லெஷ்னோ நகரத்தில் 1656-ல் தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம், தனக்கு சொந்தமானவற்றையெல்லாம் ஏறக்குறைய கோமனியஸ் இழந்துவிட்டார். மதிப்புமிக்க வேறு ஒன்றை அவர் விட்டுச்சென்றது மகிழ்ச்சி தரும் விஷயம். கல்வியைப் பற்றிய சுருக்கமான வரலாறு என்ற ஆங்கில புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “வார்த்தைகளை அல்ல அதற்கு மாறாக பொருட்களுக்கான காரணகாரியங்களை போதிக்கவேண்டும் . . . என்பதாக கோமனியஸ் சொன்னார். இவ்விதமாக எல்லா முக்கியத்துவத்தையும் வார்த்தைகளிலிருந்து காரியங்களுக்கு திருப்பினார். விஞ்ஞான அறிவையும் பயனுள்ள உலக தகவல்களையும் தன்னுடைய நூல்களின் முக்கிய பாகமாக்கினார்.”
முறையாக, திட்டமிட்டு, கற்று பயன்பெறும் விதத்தில் கல்வியை மாற்றியமைத்த பெருமை கோமனியஸை சேரும். இவருடைய போதனைகள் வகுப்பறைகளில் உண்மையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தின. அமெரிக்க கல்வியாளர் நிகோலஸ் பட்லர் சொன்னார்: “கல்வியின் வரலாற்று ஏடுகளில் கோமனியஸின் சாதனைகள் பொன்முத்திரையைப் பொறித்தன. தொடக்க மற்றும் மேல்நிலை கல்வியின் நவீன கால முழு வளர்ச்சியை அவர் அறிமுகப்படுத்தினார்; அது மட்டுமல்ல இன்றும் அதில் பேராதிக்கம் செலுத்துகிறார்.” நவீன கல்வித் திட்டத்திற்கு வித்திட்ட மகானாகிய கோமனியஸை பாராட்டுவதற்கு பைபிளில் பேராவலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கும் நல்ல காரணங்கள் இருக்கின்றன.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
ஒரு அடிக்குறிப்பு இல்லை
[பக்கம் 25-ன் பெட்டி/படம்]
ஜான் கோமனியஸின் கற்பிக்கும் முறைகளில் சில முத்துச் சிதறல்கள்
எவ்வளவு போதிக்க வேண்டும்: “ஆசிரியர்கள் தங்களால் எவ்வளவு போதிக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களையும் மாணாக்கரின் மனதில் திணிக்கக்கூடாது; மாறாக மாணாக்கர்களுடைய கற்றுக்கொள்ளும் திறமையைப் பொருத்தே போதிக்க வேண்டும்.”
போதிக்கும் வழிமுறைகள்: “ஒருவர் குறுகிய காலத்தில், வேகமாக, இணக்கமாக, முழுமையாக கற்றுக்கொள்வதற்கு ஏற்ப போதிக்க வேண்டும்.”
“தகுதியான ஆசிரியர் தன்னுடைய மாணாக்கர்களின் அறியாமையை பொறுமையுடன் சகித்திருப்பதற்கும் அந்த அறியாமையை திறமையான விதத்தில் போக்குவதற்கும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும்.”
“விஷயங்கள் நோக்கங்களிலும் அமைப்பிலும் அவற்றினுடைய ஆரம்பத்திலும் எவ்விதமாக ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதையே போதனை அர்த்தப்படுத்துகிறது . . . ஆகவே வித்தியாசங்களை திருத்தமாக வித்தியாசப்படுத்தி காட்டுபவரே சிறந்த போதகராவார்.”
நியாயமான முறையில் ஒன்றோடு ஒன்றை பொருத்துவது: “ஒரு விஷயத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால் அதை நிச்சயமாக புரிந்துகொள்ளவோ அல்லது அதனுடைய மதிப்பை கண்டுணரவோ முடியாது; ஆகவே அதை ஞாபகத்தில் வைக்கவும் முடியாது.”
“நுணுக்க விவரங்கள் இல்லாதிருக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதோ அல்லது அதை சீர்தூக்கிப்பார்ப்பதோ ஒருபோதும் முடியாத காரியம்; அதே விதமாக அந்த விஷயத்தை ஞாபகத்தில் வைப்பதும் இயலாத காரியம்.”
புரிந்துகொள்ளும் திறன்: “காரியத்தின் ஒரு அம்சம் மற்றொன்றோடு ஏன், எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் இதற்கொப்பான விஷயத்திலிருந்து இது எப்படி, எந்தளவுக்கு வித்தியாசப்பட்டிருக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; எந்த விஷயத்தையும் புரிந்துகொள்வதற்கு இதுவே மிகவும் அவசியம்.”
“நாம் வாசிக்கும் பகுதியில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வதற்கு வாசிக்க வேண்டும்; இரண்டாவது தடவை வாசிப்பது புரிந்துகொள்வதற்காக; மூன்றாவது தடவை வாசிப்பது நம்முடைய ஞாபகத்தில் பதிய வைப்பதற்காக; நான்காவது தடவை நாம் இதில் கைதேர்ந்தவராகி விட்டோம் என்பதை சோதித்து நிச்சயப்படுத்திக்கொள்ள நமக்குள்ளாகவே மௌனமாக சொல்லிப் பார்க்க வேண்டும்.”
[படம்]
“த விசிபில் உவர்ல்ட்” புத்தகத்திலிருந்து ஒரு பக்கம், 1883-ம் ஆண்டு பதிப்பு
[பக்கம் 24-ன் படம்]
கோமனியஸினுடைய போதக நியதிகளுக்கு இசைய 1775-ல் வெளியிடப்பட்ட ஜெர்மானிய அரிச்சுவடி