உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 5/22 பக். 4-9
  • பிள்ளைகளின் வியர்வை மழையில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிள்ளைகளின் வியர்வை மழையில்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினையின் வியூகம்
  • குழந்தை தொழிலுக்கு காரணங்கள்
  • பலவகை குழந்தைத் தொழில்கள்
  • சிதைக்கப்பட்ட குழந்தைப்பருவம்
  • உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
    விழித்தெழு!—2007
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
  • அரும்புகளை அரவணைப்பது யார்?
    விழித்தெழு!—1999
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 5/22 பக். 4-9

பிள்ளைகளின் வியர்வை மழையில்

“உற்பத்திச் சுழற்சியின் பாகமாகிவிட்ட பிள்ளைகளை, சமுதாயத்தின் எதிர்கால சொத்தாக நினைப்பதைவிட லாபம் ஈட்டும் கடைச்சரக்காகவே கருதுகின்றனர்.”—சிரா ஹோங்லடராம், மனிதவள நிறுவனத்தின் இயக்குநர், தாய்லாந்து.

அடுத்த முறை உங்கள் அருமை மகளுக்காக ஒரு பொம்மை வாங்கும்போது, அது தென்கிழக்கு ஆசியாவின் இளந்தளிரால் செய்யப்பட்டது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை உங்கள் மகன் ஒரு ஃபுட்பாலை எட்டி உதைக்கும்போது, அது ஒரு மூன்று வயது பெண்குழந்தையின் பிஞ்சுக் கரங்களால் தைக்கப்பட்டது என்பதையும், அவளோடு அவளுடைய அம்மாவும் நான்கு அக்காக்களும் சேர்ந்து நாளொன்றுக்கு 75 அமெரிக்க சென்ட் சம்பாதிக்கின்றனர் என்பதையும் நினைத்துப்பாருங்கள். அடுத்த முறை ஒரு தரைவிரிப்பை வாங்கும்போது, படுமோசமான நிலைகளின்கீழ் நாட்கணக்காக, மணிக்கணக்காக உழைக்கும் ஆறு வயது சிறுவர்களின் லாவகமான விரல்களே அதை உருவாக்கின என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

குழந்தைத் தொழில் எந்தளவு பிரபலமாய் இருக்கிறது? இது பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது? இந்த சூழ்நிலையில் இருந்து மீள என்ன வழி?

பிரச்சினையின் வியூகம்

வளரும் நாடுகளில், 5 முதல் 14 வயதுள்ள குழந்தைத் தொழிலாளிகள் 25 கோடி இருப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) கணக்கிட்டிருக்கிறது. a இவர்களில் 61 சதவீதத்தினர் ஆசியாவிலும் 32 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவிலும் 7 சதவீதத்தினர் லத்தீன் அமெரிக்காவிலும் இருப்பதாக நம்பப்படுகிறது. தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளிலும் இந்த விஷக்காளான் அதன் கோரமுகத்தைக் காட்டுகிறது.

தென் ஐரோப்பாவில், பண்ணைகள், சிறு தொழிற்சாலைகள் போன்ற அந்தந்த பருவகால வேலைகளில் பெரும்பாலான பிள்ளைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, சமீபத்தில் கம்யூனிஸத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளிகள் மளமளவென அதிகரித்து வருகின்றனர். ஐக்கிய மாகாணங்களில், குழந்தைத் தொழிலாளிகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 55 லட்சம். பெரிய பண்ணைகளுக்கு வேலை தேடி வந்தவர்கள், அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்ற வேலைகளை செய்ய வந்தவர்கள் அல்லது சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக வேலை பார்த்துவரும் 12 வயதுக்கும் குறைவான அநேகம் பிள்ளைகளின் எண்ணிக்கை போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை. இப்படிப்பட்ட லட்சக்கணக்கான பிள்ளைகள் எப்படி உழைக்கும் வர்க்கமாக மாறினர்?

குழந்தை தொழிலுக்கு காரணங்கள்

வறுமையை சாதகமாக்கிக் கொள்ளுதல். “ஆபத்தான, ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளில் பிள்ளைகளை சிக்கவைக்கும் மிக சக்திவாய்ந்த காரணங்களில் ஒன்று, வறுமையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுதலே” என உலக பிள்ளைகளின் நிலை 1997 சொல்கிறது. “ஏழைக் குடும்பங்களில், ஒரு பிள்ளை சம்பாதிப்பது அல்லது வீட்டில் இருந்து மற்ற காரியங்களில் உதவுவதால் பெற்றோர் வேலைக்கு போக முடிவது, அந்தக் குடும்பம் பட்டினி கிடந்து சாவதற்கும், ஒரு வேளை சாப்பாட்டில் காலம் தள்ளுவதற்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும்.” இந்த பிள்ளைகளின் பெற்றோர் பெரும்பாலும் வேலை வெட்டி ஏதும் இல்லாமலோ அல்லது சரியான வேலை கிடைக்காமலோ இருக்கின்றனர். நிரந்தர வருவாய்க்கு வழிதேடி, நித்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பதிலாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி சுலபமாக வேலை கிடைக்கிறது? ஏனென்றால், பிள்ளைகளுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுத்தாலே போதும். மேலும், பிள்ளைகள் எதிர்பேசாமல், பணிந்து போகிறவர்கள். பெரும்பாலும் பிள்ளைகள் கேள்வி எதுவும் கேட்காமல், சொன்ன வேலையை செய்வார்கள். அடக்கி, ஒடுக்கப்படும்போதும் பிள்ளைகள் எதிர்த்து புரட்சிக்கொடி உயர்த்தமாட்டார்கள். அவர்களை அடிக்கும்போதும் திருப்பி அடிக்கமாட்டார்கள்.

கல்வியின்மை. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் லட்சக்கணக்கான பிள்ளைகளுள் இந்தியாவில் உள்ள 11 வயது சிறுவன் சுதிரும் ஒருவன். ஏன்? “ஸ்கூல்ல, டீச்சர்ஸ் பாடம் சரியா நடத்தறதே இல்லை. அ, ஆ, இ, ஈ சொல்லித்தர கேட்டாகூட எங்கள அடிப்பாங்க. அவங்க வகுப்புல தூங்குவாங்க. . . . எங்களுக்கு ஏதாவது புரியலன்னாகூட சொல்லித்தர மாட்டாங்க” என்று அவன் சொல்கிறான். விசனகரமான விஷயம் என்னவெனில், பள்ளியைப் பற்றிய சுதிரின் மதிப்பீடு நூற்றுக்கு நூறு உண்மை. வளரும் நாடுகளில், சமூகநல திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் உதவித்தொகையை குறைப்பதால், குறிப்பாக கல்வி திட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. 1994-⁠ல், உலகின் 14 பின்தங்கிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஐநா ஆய்வு, கவனத்தை ஈர்க்கும் சில தகவல்களை கொடுக்கின்றது. உதாரணமாக, இவற்றில் பாதி நாடுகளில், ஆரம்பப் பள்ளி வகுப்பறைகளில் 10 மாணவர்களில் 4 பேருக்கு மட்டுமே உட்கார பென்ச்சோ நாற்காலியோ இருக்கிறது. மாணவர்களில் பாதி பேருக்கு பாடப்புத்தகங்கள் இல்லை. பெரும்பாலான வகுப்பறைகளில் கரும்பலகைகளே இல்லை. இந்த பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளில் பலர் உழைக்கும் இயந்திரங்களாக மாறியிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

வழிவழியாக தொடரும் எதிர்பார்ப்புகள். ஆபத்தான, கடும் உழைப்பை உட்படுத்தும் வேலை என்றாலே, அது சிறுபான்மை இனத்தாருக்கோ, தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கோ, பின்தங்கிய நிலையில் இருப்போருக்கோ, ஏழைகளுக்கோ விட்டுவிடப்படுகின்றன. “சிலர் மற்றவர்களை ஆளும் வர்க்கமாகவும் மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்கவும் பிறந்திருக்கின்றனர்; ஆனால், பெரும்பாலானோர் உழைத்து, உழைத்து ஓடாய் தேயவே பிறந்திருக்கின்றனர் என்ற எண்ணம்தான் இங்கே நிலவி வருகிறது” என ஆசிய நாடு ஒன்றைப் பற்றி ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பு குறிப்பிடுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இப்படிப்பட்ட மனநிலைதான் நிலவுகிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. செல்வாக்குமிக்க மக்கள் தங்கள் பிள்ளைகள் ஆபத்தான வேலை செய்வதை கற்பனை செய்து பார்க்கவும் விரும்புவதில்லை. ஆனால், சிறுபான்மை இனத்தாரோ அல்லது ஜாதியாரோ, பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டோரின் இளம்பிள்ளைகளோ இப்படிப்பட்ட வேலைகள் செய்தால், அதை சட்டைப்பண்ணுவதே இல்லை. உதாரணமாக, வட ஐரோப்பாவில், குழந்தைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் துருக்கியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்கள்; ஐக்கிய மாகாணங்களில் அவர்கள் ஆசியா அல்லது லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பொருட்களை வாங்கி அடுக்கிக் கொண்டே போகும் மனோபாவமுடைய நவீன சமுதாயமே, குழந்தைத் தொழிலாளிகளை ஊட்டி வளர்க்கிறது. குறைந்த-விலைப் பொருட்களுக்கே எங்கும் கிராக்கி அதிகம். இவையனைத்தும், கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, ஊர்பேர் தெரியாத குழந்தைகளின் கைவண்ணமே என்பதை பெரும்பாலானோர் பொருட்படுத்துவதே இல்லை.

பலவகை குழந்தைத் தொழில்கள்

என்னென்ன வகையான குழந்தைத் தொழில்கள் இருக்கின்றன? பொதுவாக, குழந்தைத் தொழிலாளிகளில் அநேகர் வீட்டுவேலை செய்கின்றனர். “உலகின் அறவே மறக்கப்பட்ட பிள்ளைகள்” என்பதே இப்படிப்பட்ட பாட்டாளிகளின் பட்டப்பெயர். வீட்டுவேலை ஆபத்தானதல்ல என்றாலும் அநேக சமயங்களில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டுவேலை செய்யும் பிள்ளைகளுக்கு குறைந்த சம்பளமே கொடுக்கப்படுகிறது​—⁠அல்லது சம்பளமே கொடுக்கப்படுவதில்லை. அவர்களுடைய வேலையை பொருத்தவரை எல்லாமே அவர்களுடைய எஜமானர்களின் இஷ்டப்படித்தான். பாசம், படிப்பு, விளையாட்டு, சமூக கூட்டுறவு போன்றவை இந்த பிள்ளைகளுக்கு எட்டாத கனிகளாக இருக்கின்றன. அடிக்கப்படுதல், பாலுறவு துர்ப்பிரயோகம் போன்றவற்றிற்கும் இவர்கள் ஆளாகின்றனர்.

மற்ற பிள்ளைகள் கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளிகளாகவோ, கொத்தடிமைகளாகவோ ஆக்கப்படுகின்றனர். தென் ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலும் எட்டு அல்லது ஒன்பது வயது பிள்ளைகள், சொற்ப கடன்களுக்காக ஃபேக்டரி சொந்தக்காரர்களிடமோ அல்லது அவர்களுடைய ஏஜன்டுகளிடமோ தங்களுடைய பெற்றோராலேயே கொத்தடிமைகளாக அடகு வைக்கப்படுகிறார்கள். பிள்ளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இந்தக் கடனைக் குறைக்கவும் முடிவதில்லை.

குழந்தை விபசார தொழிலைப் பற்றியதென்ன? ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் குறைந்தபட்சம் பத்து லட்சம் இளம்பெண்கள் நயவஞ்கமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் சிறுவர்கள் விதிவிலக்கல்ல. இந்த வகையான துர்ப்பிரயோகத்தால் வரும் உடல், உணர்ச்சிரீதியான பாதிப்பு​—⁠ஹெச்ஐவி தொற்றுநோய்​—⁠குழந்தைத் தொழிலின் மிக ஆபத்தான ஒரு வகையாக இதை ஆக்குகிறது. “ஒரு வேலையும் செய்யாமல் இங்கும் அங்கும் சுற்றி திரியும் பிச்சைக்காரர்களைப் போலவே எங்களையும் சமுதாயம் கருதுகிறது” என செனிகலிலுள்ள 15 வயது விபசாரி கூறுகிறாள். “எவருமே எங்களைப் புரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை அல்லது எங்களோடு காணப்படுவதையும் விரும்புவதில்லை.” b

குழந்தை தொழிலாளிகளில் அதிக சதவீதத்தினர் தொழிற்சாலை, தோட்டத் தொழிலாளிகளாக ஒடுக்கப்படுகின்றனர். பெரியவர்களே அபாயகரமானதாக நினைக்கும் சுரங்க வேலைகளில் இந்தப் பிள்ளைகள் உழல்கின்றனர். இதனால், அநேகர் காசநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற வியாதிகளால் அவதிப்படுகின்றனர். தோட்டவேலை செய்யும் குழந்தை தொழிலாளிகள் பூச்சிக்கொல்லிகளுக்கும் பாம்புக்கடிக்கும் பூச்சிக்கடிக்கும் ஆளாகின்றனர். கரும்பை வெட்டும்போது ஏற்படும் காயங்களால் இவர்களில் சிலர் முடமாகிவிடுகின்றனர். மேலும், கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு வேலை செய்யும் இடம் தெருக்களே. உதாரணமாக, பத்து வயது ஷரீன் என்பவள் குப்பைப் பொறுக்குவதில் கைகாரி. அவள் ஸ்கூல்பக்கமே தலைகாட்டியதில்லை. ஆனால், அனுதின வாழ்க்கைப்பாட்டின் கணக்கை நன்கு கற்று வைத்திருக்கிறாள். 30 முதல் 50 சென்ட் மதிப்புடைய வேஸ்ட் பேப்பரையும் பிளாஸ்டிக் பைகளையும் விற்றால்தான், அவளுக்கு மதியம் ஒருவாய் சாப்பிட முடியும். இதற்கு குறைவாக சம்பாதித்தால், அன்று அவள் பட்டினி கிடக்கவேண்டியதுதான். வீட்டில் புறக்கணிக்கப்படுவதாலோ அல்லது துர்ப்பிரயோகம் செய்யப்படுவதாலோ வீட்டைவிட்டு தெருவே கதியென ஓடிவரும் பிள்ளைகள், அங்கே இன்னும் மோசமாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டு கசக்கப்படுகின்றனர். “கயவர்களின் கைகளில் அகப்பட்டுவிடக் கூடாதென ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என ஆசிய நகரம் ஒன்றின் தெருக்களில் மிட்டாய் விற்கும் பத்து வயது சிறுமி ஜோஸி சொல்கிறாள்.

சிதைக்கப்பட்ட குழந்தைப்பருவம்

இவ்வகை குழந்தைத் தொழிலால், கோடிக்கணக்கான பிள்ளைகள் மிக மோசமான ஆபத்துக்களுக்குள் வீழ்ந்துவிடுகின்றனர். செய்கிற வேலையோ அல்லது மோசமான சூழ்நிலையோ இவற்றிற்கு காரணமாக இருக்கலாம். பெரியவர்களைவிட, பிள்ளைகளும் இளம் வயதினரும் வேலையில் ஏற்படும் ஆபத்தான விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஏனென்றால், பெரியவர்களில் இருந்து பிள்ளைகள் உடலமைப்பில் வித்தியாசப்படுவதனாலேயே. கடின வேலையால், ஒரு சிறுவனுக்கு கூன் விழலாம் அல்லது இடுப்பெலும்பு வளைந்துபோகலாம். மேலும், பெரியவர்களைவிட பிள்ளைகளே அபாயகரமான ரசாயன பொருட்களால் அல்லது கதிர்வீச்சால் பயங்கரமாக பாதிக்கப்படுகின்றனர். அதோடு, கடினமான, ஒரேவிதமான வேலையை மணிக்கணக்காக செய்வது பிள்ளைகளின் உடலுக்கு ஏற்றதல்ல. ஆனால், அதை செய்தாக வேண்டும் என்பதுதான் உண்மைநிலை. இந்த வேலைகளில் இருக்கும் ஆபத்துக்களை அவர்கள் அறியாமல் இருக்கின்றனர். எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

மனம், உணர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றில் குழந்தைத் தொழில் ஏற்படுத்தும் பாதிப்புகள் படுமோசமானவை. இப்படிப்பட்ட பிள்ளைகள் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கின்றனர். அடி, திட்டு, பட்டினி, பாலுறவு துர்ப்பிரயோகம் போன்றவையே இவர்கள் வாழ்க்கையின் அனுதின நிகழ்ச்சிகள். கிட்டத்தட்ட 25 கோடி குழந்தைத் தொழிலாளிகளில் ஏறக்குறைய பாதிபேர் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களே என ஓர் ஆய்வு கூறுகிறது. மேலும், நீண்ட நேரம் வேலை செய்யும் பிள்ளைகளுடைய கற்றுக்கொள்ளும் திறமை பாதிக்கப்படலாம் என கவனிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் சுட்டிக்காட்டுவது எதை? குழந்தைத் தொழிலாளிகளில் அநேகர் வாழ்நாள் முழுவதும் வறுமை, ஏழ்மை, நோய், படிப்பறிவின்மை, சமூக காரியங்களில் ஒதுக்கப்படுதல் போன்ற கேடுகளை அனுபவிக்கின்றனர். அல்லது பத்திரிகை எழுத்தாளர் ராபின் ரைட் சொல்லுவதுபோல், “இந்த 20-⁠ம் நூற்றாண்டின் இறுதியில், எவ்வளவுதான் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியிருந்தாலும், சாதாரண ஒரு வாழ்க்கை அமையும் என்கிற நம்பிக்கையே இல்லாத கோடிக்கணக்கான பிள்ளைகளை இந்த உலகம் உருவாக்கியிருக்கிறது. இவர்கள்தான் 21-⁠ம் நூற்றாண்டிற்குள் உலகத்தை தலைமை தாங்கி அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை.” இந்த தெளிவான கருத்துக்கள் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றன: பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும்? குழந்தைத் தொழிலாளிகள் துர்ப்பிரயோகம்​—⁠இந்தப் பிரச்சினைக்கு விடிவு காலம் வருமா?

[அடிக்குறிப்புகள்]

a பொதுவாக பிள்ளைகளை வேலைக்கு செல்ல அனுமதிக்கும் குறைந்தபட்ச வயது 15 என ஐஎல்ஓ நிர்ணியிக்கிறது​—⁠அதாவது 15 வயது என்பது கட்டாயக் கல்வியை முடிக்கும் வயதிற்கும் அதிகமாக இருந்தால்தான் இந்த நியதி. உலகம் முழுவதும் தற்சமயம் எத்தனை பிள்ளைகள் தொழிலாளிகளாக இருக்கின்றனர் என்பதை பொதுவாக நிர்ணயிக்கும் அளவுகோல் இதுவே.

b பிள்ளைகளை பாலுறவு சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்தல் பற்றி கூடுதல் தகவலுக்கு, ஏப்ரல் 8, 1997 விழித்தெழு! இதழில் பக்கங்கள் 11-15-ஐக் காண்க.

[பக்கம் 5-ன் பெட்டி]

குழந்தைத் தொழில் என்றால் என்ன?

எல்லா சமுதாயத்திலும் பெரும்பாலான பிள்ளைகள் ஏதாவதொரு வேலையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் வேலைகள் காலத்திற்கேற்ப, சமுதாயத்திற்கு சமுதாயம் மாறுபடுகிறது. வேலை செய்வது பிள்ளைகளுடைய கல்வியின் முக்கிய பாகமாகும். பெற்றோரிடம் இருந்து கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வழியாகும் இது. சில நாடுகளில், பிள்ளைகள் பெரும்பாலும் சிறுதொழில்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய ஆரம்பித்து, படிப்படியாக வேலையில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிடுவர். மற்ற நாடுகளில், டீனேஜ் பிள்ளைகள் தங்களுடைய சொந்த செலவுகளுக்காக வாரத்தில் சில மணிநேரம் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட வேலை, “நன்மையானதும், படிப்பு, பொழுதுபோக்கு, ஓய்வு இவற்றை எந்தவிதத்திலும் பாதிக்காமல், பிள்ளையின் உடல், மனம், ஆன்மீக, ஒழுக்க அல்லது சமூக வளர்ச்சியை அதிகரிக்கவும் அல்லது மேம்படுத்தவும் செய்கிறது” என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு தெரிவிக்கிறது.

அதற்கு மாறாக, குழந்தைத் தொழில் என்பது அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் மோசமான சூழ்நிலையில், குறைந்த கூலிக்கு மணிக்கணக்காக பாடுபடுவதையே அர்த்தப்படுத்துகிறது. இந்த வகையான வேலை “மிகத் தெளிவாகவே, நாசகரமானது அல்லது ஒடுக்கக்கூடியது” என உலக பிள்ளைகளின் நிலை 1997 குறிப்பிடுகிறது. “எந்த சந்தர்ப்பத்திலும், பிள்ளைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதை ஆதரித்து எவருமே வெளிப்படையாக விவாதிக்கமாட்டார்கள். ‘குழந்தை கொத்தடிமைகள்’ விஷயத்திலும் இதே நியமம் பொருத்தப்படலாம். பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிமார் பட்ட கடனை திருப்பிக் கொடுக்க பிள்ளைகளை சொல்லர்த்தமாகவே அடிமைகளாக்குவதற்கு இப்பதம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியம், பாதுகாப்பு சம்பந்தப்பட்டவற்றில் அதிக ஆபத்துக்களை உடைய மோசமான தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தும் . . . ஆபத்தான வேலை எந்த பிள்ளையாலும் பொறுத்துக் கொள்ள முடியாததே.”

[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]

“செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது”

குழந்தைத் தொழிலில் படுமோசமானவற்றை அறவே ஒழிக்கும் முயற்சியில் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) முனைப்பாய் ஈடுபட்டிருக்கிறது. 15 வயதுக்கு குறைவான பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்தும்படி ஐஎல்ஓ அரசாங்கங்களை தூண்டுகிறது. 12 வயதுக்கும் குறைவான குழந்தைத் தொழிலாளிகளையும் மிக ஆபத்தான ஒடுக்குமுறைகளையும் தடை செய்யும் புதிய ஒப்பந்தங்களை இது முன்னேற்றுவிக்கிறது. இந்த முயற்சிகளில் அடைந்த வெற்றிகளைப் பற்றி தெரிந்து கொள்ள, ஐ.மா. தொழில் துறையின் சர்வதேச குழந்தைத் தொழில் திட்டத்தின் இயக்குநர் சோன்யா ரோஸன்-ஐ விழித்தெழு! நிருபர் பேட்டி கண்டார். ஐஎல்ஓ-வின் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்துவதில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அந்த பேட்டியின் சில பகுதிகள் இதோ!

கே.: குழந்தைத் தொழிலை எதிர்த்துப் போராட மிகச் சிறந்த வழி எது?

ப.: இதற்கு சிறந்த வழி என்று குறிப்பாக எதையும் சொல்வதற்கில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் நாங்கள் கலந்தாலோசித்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவை, உலகளாவிய ஆரம்ப கல்வி திட்டமும் இத்திட்டங்களை அமல்படுத்த தேவையான சட்டங்களும்; இக்கல்வி திட்டம் கட்டாயமானதாகவும் இலவசமானதாகவும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நிச்சயமாகவே, பெற்றோருக்கு வேலை கிடைக்கும்படி செய்வதும் முக்கியமானதுதான்.

கே.: குழந்தைத் தொழிலை எதிர்க்கும் போராட்டத்தில் ஏற்கெனவே அடைந்துள்ள முன்னேற்றங்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கின்றனவா?

ப.: நான் எப்போதுமே திருப்தியடைந்ததில்லை. எந்த ஒரு குழந்தையும் மோசமான சூழ்நிலைகளில் வேலை செய்யக்கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம். ஐஎல்ஓ-வின் திட்டங்கள் மூலமாக நாங்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறோம். ஆனாலும், செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது.

கே.: குழந்தைத் தொழிலை ஒழிக்கும் முயற்சியை சர்வதேச சமூகம் எப்படி கருதுகிறது?

ப.: இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. குழந்தைத் தொழில் என்பது முற்றிலும் துடைத்தழிக்க வேண்டிய ஒன்று என்ற ஒருமித்த கருத்து ஓரளவு இன்று உலகம் முழுவதும் வளர்ந்திருக்கிறது. பின்வரும் கேள்விகளே இந்த சமயத்தில் சிந்திக்கப்பட வேண்டியவை என நான் நினைக்கிறேன்: இந்தப் பிரச்சினை எவ்வாறு, எவ்வளவு துரிதமாக கையாளப்பட வேண்டும்? குறிப்பிட்ட சிலவகை குழந்தைத் தொழில்களை நீக்க என்ன சிறந்த வழிகள் நமக்கு இருக்கின்றன? இவைதான் உண்மையிலேயே நாம் எதிர்ப்படும் பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.

கே.: குழந்தை தொழிலாளிகள் அடுத்ததாக எதை எதிர்பார்க்கலாம்?

ப.: உலகின் எல்லா நாடுகளும் இந்த வருடம் ஜெனிவாவில் மறுபடியும் ஒன்றுகூடி, குழந்தைத் தொழிலின் மிக மோசமான வகைகளைப் பற்றி ஒரு புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருக்கின்றன. எல்லா நாடுகளோடும் தொழிலாளிகளின் சங்கங்களும் முதலாளிவர்க்க அமைப்புகளும் இங்கே கூடுகின்றன. எனவேதான் உண்மையிலேயே அதிகமதிகமான எதிர்பார்ப்புகளை உடையவையாய் இருக்கின்றன. மிக மோசமான வகை குழந்தைத் தொழில்களை முழுவதுமாக நீக்கும் ஒரு புதிய அமைப்பை இது உருவாக்கும் என நம்புகிறோம்.

சோன்யா ரோஸனின் நம்பிக்கையான மனநிலை எல்லாருக்குமே இருப்பதில்லை. குழந்தைகளைக் காப்பீர் அமைப்பின் தலைவர், சார்ல்ஸ் மெக்கார்மக் என்பவர் இந்தக் கருத்தை ஒத்துக்கொள்வதில்லை. “இந்தப் பிரச்சினையை நீக்க அரசியல்வாதிகளுக்கு விருப்பமோ, அல்லது பொது மக்களுக்கு இதைப்பற்றிய அறிவோ இல்லை” எனக் கூறுகிறார். ஏன்? “குழந்தைத் தொழில் மிக சிக்கலான பிரச்சினை. அநேக முதலாளிகள், சுரண்டிப் பிழைக்கும் கும்பல்கள், எப்படியாகிலும் தடையிலா வணிக வாய்ப்பையுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருளியல் ஆய்வாளர்கள், ஜாதி அல்லது இனத்தை சம்பிரதாயமாக பின்பற்றுபவர்கள் போன்றோர் ஒருசில பிள்ளைகளின் உரிமைகளை பறித்துவிடுகின்றனர்” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு பதிலளிக்கிறது.

[படம்]

சோன்யா ரோஸன்

[பக்கம் 5-ன் படம்]

குழந்தைத் தொழிலாளர்களின் சோகக்கதை சுரங்கத்தில், பருத்தி ஆலைகளில் உழல்வதையும் உட்படுத்துகிறது

[படத்திற்கான நன்றி]

U.S. National Archives photos

[பக்கம் 7-ன் படம்]

குப்பைகளைப் பொறுக்குதல்

[பக்கம் 7-ன் படம்]

சுள்ளிகளைப் பொறுக்கும் கடினமான வேலை

[படத்திற்கான நன்றி]

UN PHOTO 148046/ J. P. Laffont - SYGMA

[பக்கம் 7-ன் படம்]

நூல் நூற்கும் ஆலையில் வேலை செய்தல்

[படத்திற்கான நன்றி]

CORBIS/Dean Conger

[பக்கம் 8-ன் படம்]

வெறும் இருபது ரூபாய் தினக்கூலிக்காக வேலை செய்யும் தெருப்பிள்ளைகள்

[படத்திற்கான நன்றி]

UN PHOTO 148027/Jean Pierre Laffont

[பக்கம் 8-ன் படம்]

தச்சுப்பட்டறையில் கடினமாக வேலைசெய்தல்

[பக்கம் 8-ன் படம்]

UN PHOTO 148079/ J. P. Laffont - SYGMA

[பக்கம் 9-ன் படம்]

சம்பாத்தியத்திற்கான போராட்டம்

[பக்கம் 9-ன் படம்]

UN PHOTO 148048/J. P. Laffont - SYGMA

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்