உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 5/22 பக். 14-15
  • ஒட்டுண்ணிகளோடு ஒட்டாமலே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒட்டுண்ணிகளோடு ஒட்டாமலே!
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வரும்முன் காப்பதே சிறந்த வழி
  • பாதுகாப்பாக உணவருந்துங்கள்
    விழித்தெழு!—1990
  • நத்தை காய்ச்சல்—விரைவில் ஒழித்துக்கட்டப்படுமா?
    விழித்தெழு!—1997
  • மலேரியா—ஜாக்கிரதை!
    விழித்தெழு!—2015
  • பிள்ளைகள் உயிருடன் இருப்பதற்கு உதவுதல்!
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 5/22 பக். 14-15

ஒட்டுண்ணிகளோடு ஒட்டாமலே!

ஹோண்டுராஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

தூங்கி எழும்போதே குமட்டல். சீக்கிரத்திலேயே சோர்வு. இலேசாக வயிறு உப்புசம். ஒருவேளை மசக்கையா? இருக்கலாம். ஆனால் வெப்பமண்டல நாடுகளிலோ அல்லது ஓரளவு வெப்பம் மிகுந்த பகுதிகளிலோ வாழும் மக்களுக்கு வயிற்றில் ஒட்டுண்ணிகள் இருந்தாலும் மேற்சொன்ன அத்தனை நோய் அறிகுறிகளும் பொருந்தும். இந்த ஒட்டுண்ணிகள் யாவை? இவை அழையாத விருந்தாளிகளாக உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்று எப்படி சொல்ல முடியும்?

ஒட்டுண்ணி என்பது ஓர் உயிரியல் பிராணி. அது தனித்து வாழக்கூடிய நிலையில் இல்லாமல் பிரிதொரு பிராணியுடன் (விருந்தோம்பி) ஒட்டிக்கொண்டு, அதன் மூலம் பல நன்மைகளை அடைந்து உயிர் வாழும். குடலில் வாழும் ஒட்டுண்ணிகள் இரண்டு வகைப்படும். ஒன்று புரோட்டோஜோவான் தொகுதியை சேர்ந்த அமீபா. மற்றொன்று ஹெல்மின்திஸ் அல்லது புழுக்கள். விருந்தோம்பியின் வயது, உடல் ஆரோக்கியம், ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொருத்து அவை விளைவிக்கும் தீங்கின் அளவும் இருக்கும்.

உதாரணத்திற்கு ஒரு பெண் நாக்குப் பூச்சி ஒருநாளைக்கு சுமார் 2,00,000 முட்டைகளை இடும். ஆனால் முட்டைகள் பொரிய மண்ணில் அடைகாக்கப்பட வேண்டும். ஒருவருடைய வயிற்றில் எத்தனை நாக்குப் பூச்சிகள் உள்ளன என்பது, குஞ்சு பொரியும் நிலையிலுள்ள முட்டைகள் அல்லது லார்வாக்கள் உணவு மூலம் அவர் வயிற்றுக்குள் செல்வதை பொருத்தது. நிறையப் பேர் வயிற்றில் நாக்குப் பூச்சிகள் சில நிரந்தர விருந்தாளிகளாக இருப்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் இவை எண்ணிக்கையில் அதிகம் இருந்தால் குடலில் அடைப்பை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

குடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால், அடி வயிற்றில் வலி, வாந்தி, பசியின்மை, வயிறு உப்புசம், சோர்வு, எப்போதும் அஜீரணக்கோளாறு, பேதி அல்லது மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் பொதுவாக இருக்கும். மேலும் உடல் மெலிதல், சரிவர தூக்கமின்மை, நமைச்சல், மூச்சுவாங்குதல், ஜுரம் ஆகியவையும் இருக்கும். இதே அறிகுறிகள் வேறுபல நோய்களுக்கும் இருக்கலாம். ஆனால் மலத்தை பல்வேறு சோதனைகள் செய்து ஒட்டுண்ணிகள் இருப்பதை கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால் அவற்றை சரியாக கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, நாக்குப் பூச்சிகளும் இன்னும் வேறுசில ஒட்டுண்ணிகளும் இருந்தால் முதலில் நாக்குப் பூச்சிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். ஏன்? ஏனென்றால் ஒருசில மருந்துகள் நாக்குப் பூச்சிகளை கொல்வதற்கு பதிலாக, அவற்றை எரிச்சல்படுத்தி, தூண்டிவிடுகின்றன. அப்போது அவை உடம்பில் வேறு பாகங்களுக்கு சென்று பெரும் தீங்கை விளைவிக்கின்றன.

வரும்முன் காப்பதே சிறந்த வழி

இந்த ஒட்டுண்ணிகளை ஒட்ட ஒழித்திட நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஆனால் முதலில் அவற்றை ஏன் ஒட்ட விடவேண்டும், பிறகு மெனக்கெட்டு வைத்தியம் பார்க்க வேண்டும்! அவை ஒட்டும் முன்னே ஒதுக்கிவிடுவது நல்லது இல்லையா? சரி, ஒட்டுண்ணிகளோடு ஒட்டாமலே வாழ்வது எப்படி?

சுத்தமே சிறந்த பாதுகாப்பு. திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது. குடிநீர் இருக்கும் இடத்திற்கும், கழிப்பிடம் உள்ள இடத்திற்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். மனிதனுடைய கழிவுகளை எருவாகப் பயன்படுத்தக்கூடாது. முறையான சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறு பிள்ளைகளை மண்ணைத் தின்னவிடாதீர்கள். ஒரு பிள்ளைக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், வீட்டிலுள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.

பொருட்களை வாங்கும்போது, சமைக்கும்போதும் கவனம் தேவை. கூடுமானவரை காய்கறி, பழம், தானியங்கள் சுத்தமான இடத்தில் விளைந்தவை என்று தெரிந்துகொண்டு வாங்க முயற்சி செய்யுங்கள். மாமிசம் சமைக்கும்போது அது உள்ளேயும் நன்றாக வெந்திருக்க வேண்டும். பச்சை மாமிசத்தை சாப்பிடவே சாப்பிடாதீர்கள். சாப்பிடுவதற்கு அல்லது சமைப்பதற்கு முன் காய்கறி, பழங்களை நன்றாக கழுவ வேண்டும். கழுவிய தண்ணீரை மறுபடியும் உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால் ஏற்கெனவே அதில் நோய்க்கிருமிகள் இருக்கும்.

குடிநீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சூடு ஆறியப்பிறகு, மறுபடியும் ஆக்ஸிஜனை சேர்ப்பதற்காக ஏரேஷன் கொடுக்கலாம். வீடுகளில் இருக்கும் ஃபில்டர்கள் பல, எல்லா ஒட்டுண்ணிகளையும் நீக்குவதில்லை. பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்குமா என்றால், அது நிரப்பப்படும் தொழிற்சாலை எவ்வளவு தூரத்திற்கு சுகாதார முறைகளை கடைப்பிடிக்கிறது என்பதை பொருத்தது.

பயணம் செய்யும்போது அல்லது வெளியில் சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பாட்டில்களில் அல்லது டின்களின் கிடைக்கும் பானங்களை ஐஸ் போடாமல் குடித்தால் பாதுகாப்பு. ஏனென்றால் சில ஒட்டுண்ணிகள் உறைநிலையிலும் உயிர் வாழ்கின்றன. ஐஸ் செய்ய உபயோகித்த தண்ணீர் எவ்வளவு சுத்தமோ அவ்வளவு சுத்தமே ஐஸும். தெருவோரங்களில் விற்கும் உணவுப்பொருட்களை சாப்பிடும்போதும் கவனம் தேவை. வெட்டி வைத்திருக்கும் அன்னாசிப்பழத் துண்டுகள் அல்லது தர்பூசணியைப் பார்த்ததும் சாப்பிட ஆசை அடித்துக்கொள்ளும். ஆனால் அவை வதங்காமல் இருக்க அடிக்கடி தண்ணீர் தெளிப்பார்கள். ஒருவேளை அழுக்குத் தண்ணீரை தெளித்திருக்கலாம். கவனம் இருக்கட்டும்! ஒட்டுண்ணிகளுக்கு ஒரேயடியாக பயந்துபோய், பயணத்தின் இன்பத்தை காற்றில் பறக்கவிட்டுவிடாதீர்கள்! ஓரளவு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தாலே போதும், ஒட்டுண்ணிகளை ஒட்டவிடாமல் கொஞ்ச தூரம் தள்ளியே வைக்க முடியும்.

[பக்கம் 14-ன் படம்]

சுத்தமே சிறந்த பாதுகாப்பு

[பக்கம் 15-ன் படம்]

ஐஸ் செய்ய உபயோகித்த தண்ணீர் எவ்வளவு சுத்தமோ அவ்வளவு சுத்தமே ஐஸும்

[பக்கம் 15-ன் படம்]

ஒட்டுண்ணியின் இருவகை: அமீபா, புழுக்கள்

[படத்திற்கான நன்றி]

DPDx, the CDC Parasitology Website

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்