உலகை கவனித்தல்
டாப் டென் தொற்றுநோய்கள்
உலகம் முழுவதும், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ஆட்கள் தொற்றுநோய்களால் சாகின்றனர். 1997-ல், அதிகமான உயிரிழப்பிற்கு பின்வரும் தொற்றுநோய்களே காரணம் என நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை தெரிவிக்கிறது. நிமோனியா போன்ற கடுமையான சுவாசம் சம்பந்தப்பட்ட தொற்றுநோய் அதிகம் பேரை சாகடித்திருக்கிறது. இது 37 லட்சம் பேரைக் கொன்று, முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. காசநோய், 29 லட்சம் பேரைக் கொன்று இரண்டாவது இடத்தை வகிக்கிறது. காலரா, வயிற்றுப்போக்கு சம்பந்தமான மற்ற நோய்களால் 25 லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். இவை, மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 23 லட்சம் பேரை எய்ட்ஸ் கொன்றிருக்கிறது. 15 முதல் 27 லட்சம் பேர் மலேரியாவால் இறந்தவர்கள். தட்டம்மை நோய்க்கு பலியானவர்கள் 9,60,000 பேர். ஹெபடிடிஸ் பி-க்கு பலியானவர்கள் 6,05,000 பேர். கக்குவான் இருமல் 4,10,000 பேரை சாகடித்திருக்கிறது. இதோடு, இன்னும் 2,75,000 பேர் டெடனஸ் நோய்க்கு பலியானவர்கள். டெங்கு/ இரத்தக்கசிவு டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் 1,40,000. எவ்வளவுதான் அரிய முயற்சிகளை எடுத்தாலும், கடந்த காலங்களில் இருந்த தொற்றுநோய்கள் இன்னமும் உலகம் முழுவதும் மனிதனுடைய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்களாகவே இருந்துவருகின்றன.
வெனிசுலாவில் மது துர்ப்பிரயோகம்
மற்றெந்த லத்தீன் அமெரிக்க நாடுகளைவிட வெனிசுலா நாட்டு மக்கள் அருந்தும் மதுபானங்களின் சராசரி அளவு அதிகம் என காரகாஸ் செய்தித்தாள் எல் யூனீவர்சால் அறிவிக்கிறது. வெனிசுலாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு, 60 முதல் 70 லிட்டர் மதுபானம் அருந்துகிறார். நகர்ப்புறங்களில் நடக்கும் கொலைகள், தற்கொலைகளில் 50 சதவீதம் மது துர்ப்பிரயோகத்தால்தான் என நல்வாழ்வுத்துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. வெனிசுலாவின் மத்திய பல்கலைக்கழகம், சமாதானத்திற்கான மையம், நீதித்துறைக்கான காவல் ஆகியவை சேர்ந்து ஓர் ஆய்வு நடத்தியது. காரகாஸின் நகர்ப்புறங்களில் நடக்கும் வன்முறை மரணங்களில் 10-ல் 9-க்கு அதிகமானவை மது சம்பந்தப்பட்டதே என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மது துர்ப்பிரயோகத்தை எதிர்த்துப் போராட, அநேக மையங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. உடன் மாணவர்களிடம் இருந்து வரும் தொந்தரவுகளை எப்படி எதிர்ப்பது, மாறாக அவர்கள் செய்ய வேண்டிய மற்ற செயல்களை எப்படி கண்டுபிடிப்பது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் பேச்சுத்தொடர்பை அதிகரிப்பது போன்ற எல்லா காரியங்களுக்கும் இந்த மையங்கள் உதவுகின்றன.
கடலுக்கு நோய்?
உலகம் முழுவதிலுமுள்ள பவளப்பாறைகள், தொற்றுநோய்கள், கழலைகள், சிதைவுகள், மற்ற பல அச்சுறுத்தல்களால் அழிக்கப்பட்டு வருகின்றன என சயன்ஸ் நியூஸ் அறிவிக்கிறது. கடந்த 20 வருடங்களில், குறைந்தபட்சம் 15 புதிய பவளங்களைக் கொல்லும் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றன என கடல் உயிரியலாளர் ஜேம்ஸ் ஸர்வீனோ சுட்டிக்காட்டுகிறார். கடல் புல், சிப்பி, கடல் ஆமை, கடல் பசு போன்ற மற்ற வகை கடல்வாழ் உயிரினங்களும் இப்படி அச்சுறுத்தப்படுகின்றன. “உயிரியக் கோளம்—உயிர்கள் அடங்கிய உலகம்—95 சதவீதம் கடலால் ஆனது” என கடலியலாளர் ஸில்வியா எர்ல் சொல்லுகிறார். “கடல்கள் தத்தளித்தால், நாமும் தத்தளிக்கவேண்டியதுதான். கடல்கள் உண்மையிலேயே வியாதிப்பட்டு இருக்கின்றன.”
வாசிக்க இயலாத புத்தகங்கள்
அலமாரி முழுவதும் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் எல்லாரும் புத்தகப்புழுக்கள் அல்ல. “என்னைச் சுற்றி புத்தகங்கள் கடல்போல் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், நான் அவற்றை வாசிப்பதே இல்லை” என க்ரிஸ் மாதேயுஸ் என்ற கடைக்காரர் ஒத்துக்கொள்கிறார். இந்தப் பிரச்சினைக்கு எளிமையானதொரு தீர்வை மாதேயுஸ் கொடுக்கிறார். இவரும் இவருடைய கூட்டாளியும் சேர்ந்து, போலிப் புத்தகங்களை விற்கும் கடையை முதன்முதலாக ஜெர்மனியில் துவக்கியுள்ளனரென வேஸர்-கூரீர் செய்தித்தாள் அறிவிக்கிறது. கலைகள், தத்துவம், விஞ்ஞானம் போன்ற துறையைச் சார்ந்த சிறந்த புத்தகங்களின் “தலைப்புகள்” மட்டும் உள்ள சுமார் 2,800 அட்டைகள் விற்பனைக்கு இருக்கின்றன. இவ்வகைப் போலி புத்தகங்கள், பல டிசைன்களில் வருகின்றன. எளிய கார்ட்போர்ட் அட்டைகள் முதல் ஆடம்பரமான, முதல்தரமான தேக்கு மரத்தாலான கவர்ச்சியான அட்டைகளுடன் அசல் புத்தகங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. உண்மையான புத்தகங்களின் விலையோ மிக அதிகம்; ஆனால் கண்ணைக் கவரும் இந்தப் போலி கலைப் புத்தகங்கள் வெறுமெனே 10 முதல் 15 அமெரிக்க டாலருக்கு விறகப்படுகின்றன. “புத்தகங்களின் விலை, அவற்றில் அடங்கியுள்ள விஷயங்களைப் பொருத்தல்ல, மாறாக புத்தகத்தின் அளவைப் பொருத்ததே” என மாதேயுஸ் சொல்கிறார்.
பலன்தரும் வீடியோ கேம்ஸ்
“வீடியோ கேம்ஸ்” என்ற வார்த்தையை சொன்னாலே போதும், அநேகருக்கு மனதிற்கு வருவது வன்முறைதான். இருந்தாலும், “தகுந்த பொருத்தமான விளையாட்டுகள், சர்க்கரை வியாதி, ஆஸ்துமா போன்ற நோய்களை உடைய பிள்ளைகள், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயிற்சி அளிக்க முடியும்” என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக டெக்னாலஜி ரிவ்யூ அறிவிக்கிறது. ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம், 8 முதல் 16 வயது நிரம்பிய, சர்க்கரை வியாதியுள்ள, சுமார் 60 பிள்ளைகளிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அவர்களில் பாதிபேர், சாதாரண வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். மீதிப்பேர், பேக்கீ அண்ட் மார்லன் என்றழைக்கப்படும் வீடியோ கேம்ஸை விளையாடினார்கள். விளையாட்டில் பங்கு பெறுபவர்கள், சரியான உணவை தேர்ந்தெடுக்கவும், அவர்களுடைய இரத்தத்தில் க்ளூகோஸின் அளவை சரிபார்க்கவும், இன்ஸூலினை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும் காட்சிகளில் வரும் இரண்டு யானைகள் உதவுகின்றன. ஆறு மாத காலப்பகுதியில், இந்த யானை கேம்ஸை விளையாடியவர்கள், சாதாரண கேம்ஸ் விளையாடியவர்களைவிட “77 சதவீதம் குறைவாகவே அவசர சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்வது அல்லது அவசரப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலை” ஏற்பட்டதென டெக்னாலஜி ரிவ்யூ குறிப்பிடுகிறது. இதைப்போலவே, ஆஸ்துமாவால் அவதிப்படும் பிள்ளைகள் அதை சமாளிக்கத் தேவையான குறிப்புகளையும், புகைப்பிடித்தலை தவிர்க்க உதவும் வீடியோ கேம்ஸ்கள் உள்ளன.
எய்ட்ஸ் சூறையாடல்
ஆப்பிரிக்காவில், சஹாராவுக்கு தெற்கேயுள்ள பகுதிகளில், கடந்த பத்தாண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் ஆறு வருடங்கள் குறைந்திருக்கிறது. இது இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்? ஏனென்றால், இந்தப் பகுதிகளிலுள்ள நாடுகளில், “எய்ட்ஸ் கொள்ளைநோய் சூறையாடிக்கொண்டிருக்கிறது” என தி யுனெஸ்கோ கூரியர் பத்திரிகை அறிவிக்கிறது. தற்போது, இந்தப் பகுதியில் இருக்கும் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஹெச்ஐவியால் (HIV) தாக்கப்பட்டிருக்கின்றனர். போஸ்ட்வானா, மலாவி, மொஸாம்பிக், நமிபியா, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் அதிக மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், “ஆப்பிரிக்காவில், ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயால் இறக்கும் 5,500 பேர் அடக்கம் பண்ணப்படுகின்றனர்” என பத்திரிகை அறிவிக்கிறது.
மத வகுப்பு—மாபெரும் தோல்வி
மத போதனைகளை அளிக்கும் வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, 20 வயது நிரம்பிய மாணவர்களும்கூட “திரித்துவத்துக்கும் கன்னி மரியாளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல்தான் இருக்கிறார்கள்” என சியேனாவின் தலைமைக்குரு, காயேடானோ போனீசெலீ, தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கத்தோலிக்க கோட்பாடுகளைப் பற்றிய இப்படிப்பட்ட மடமை, “தற்போதைய மத வகுப்புகளின் படுதோல்விக்கான” அறிகுறி என உயர் பதவியில் இருக்கும் மற்றொரு போப் ராட்சிங்கர் அழைக்கிறாரென இத்தாலியிலுள்ள மிலனில் வெளியாகும் கோரீரே டேல்லா சேரா என்ற பத்திரிகை அறிவிக்கிறது. சுவிசேஷக வேலை மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என தலைமைக்குரு போனீசெலீ பரிந்துரைக்கிறார். “மூவாயிரமாவது ஆண்டுகளில் சர்ச்சுகளை மறுபடியும் உயிர்ப்பிக்க சுவிசேஷக வேலைதான் ஒரே வழி.”
ஒழுக்கங்களுக்கே திரும்பவும்?
“திருமண பந்தத்திற்கு வெளியே பாலுறவு கொள்ளுதலை சீனர்கள் கண்டிக்காது விடுகிறபோதிலும், பெரும்பாலான டீனேஜர்கள் இன்னமும் இப்படிப்பட்ட நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு காண்பிக்கிறதென சைனா டுடே பத்திரிகை அறிவிக்கிறது. சுமார் 8,000 பேரை உட்படுத்தியது இந்த ஆய்வு. “37 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆட்களில் 70 சதவீதத்தினர் இப்படிப்பட்ட நடத்தைக்கு எந்தவொரு தண்டனையும் அவசியமில்லை என நினைக்கின்றனர். ஆனால், ஐந்தில் மூன்று பங்கு டீனேஜர்கள், இப்படிப்பட்ட நடத்தையால், இன்னொருவருடைய திருமண வாழ்க்கையை நாசமாக்குபவர்களை அபராதம் விதத்தோ அல்லது மற்ற எந்த வழியிலோ நிச்சயம் தண்டிக்க வேண்டுமென ஒத்துக்கொள்வதாக” அந்த ஆய்வு காட்டுகிறது.
கண்ணியமற்ற உடையில் சர்ச்சுக்கு
ஐக்கிய மாகாணங்களில், அதிகமதிகமான ஆட்கள் சர்ச்சுக்கு கண்ணியமற்ற முறையில் உடையணிந்து வருவதாக தி அசோஸியேடட் பிரஸ் அறிவிக்கிறது. ஷார்ட்ஸ், ஜீன்ஸ், அல்லது மற்ற கேஷூவல் உடைகளை அணிந்து சர்ச் சர்வீஸுக்கு வருவதைப் பார்ப்பது மிகவும் கவலை தருவதாக சில பாதிரிமார்கள் தெரிவிக்கின்றனர். தகுதியான உடையணிந்து வர விரும்பாத புதிய அங்கத்தினர்களை விரட்டவும் முடியாமல் அல்லது அப்படிப்பட்ட உடைகளையே அணியும் பழைய அங்கத்தினர்களை தள்ளி வைக்கவும் முடியாமல் சர்ச் அதிகாரங்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன. “அமெரிக்கர்களில் சுமார் 30 சதவீதத்தினர், முறைப்படியல்லாத, நவீன முறைக்கேற்ற சர்ச் சர்வீஸுகளையே விரும்புகின்றனர்.” இதோடு ஒப்பிட, வழிவழியாக முறைப்படி நடக்கும் சர்ச் சர்வீஸுகளை 21.5 சதவீதத்தினரே விரும்புகின்றனர் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
டீனேஜ் கர்ப்பங்கள் சகஜம்
“திருமணமாகாத தாய்மார்கள் சமுதாயத்தால் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுவதே இவர்களுடைய எண்ணிக்கையில் இருக்கும் அதிகரிப்புக்கு முக்கிய காரணம்” என மெக்ஸிகோ நகரத்தின் தி நியூஸ் பத்திரிகை சொல்லுகிறது. திருமணமாகாத டீனேஜ் கர்ப்பங்களால் வரும் இழுக்கை துடைத்தழிக்க சமுதாயம் தன்னுடைய நிலையிலிருந்து பின்னோக்கி செல்வதுபோல் தோன்றுகிறது. இப்படிச் செய்வதால், அதை எதிர்ப்பதற்கு பதிலாக ஆதரித்துவிடும் போல் தோன்றுகிறது.” இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமா? “விளம்பர நிறுவனங்கள், புகைப்பிடிக்கும் ஒருவரை உலகம் அறிந்தவராக புகழ்வதை நிறுத்தி தரங்கெட்டவராக விளம்பரப்படுத்த முடியுமென்றால், அதேபோல அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பழக்கத்தில் இருந்து அதிக நார்ச்சத்துள்ள உணவுக்கு அமெரிக்கர் ஒருவரை மாற்ற முடியும் என்றால், உயர்நிலைப் பள்ளியில் புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில் பிள்ளைகளை சுமப்பது முட்டாள்தனம் என்றும் நாசகரமான விளைவுகளை உடையது என்றும் டீனேஜர்களின் கருத்துக்களை மாற்ற முடியும்” என அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
கருணையை வளர்க்க சார்ட்
“குறைந்தபட்சம் 4 வயது வரை பிள்ளைகள் அடிப்படையில் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர். அதற்கு பிறகுதான், மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் பண்பை வளர்த்துக்கொள்ள துவங்குகிறார்கள்” என ஓர் அறிக்கை தெரிவிப்பதாக தி டோரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. மற்றவர்கள்மீது கருணை காட்டும் பண்பை பிள்ளைகள் வளர்க்க பயிற்சி வீட்டிலே கொடுக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் கூறப்படுகிறது. இதற்காக ஒரு சார்ட்டை ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்த குறைந்தபட்சம் இரண்டு நல்ல காரியங்களை ஒவ்வொரு அங்கத்தினரும் அந்த சார்ட்டில் எழுதலாம். பிள்ளைகள் செய்யும் கருணையான செயல்களை கவனிக்கும் பெற்றோர் அவற்றையும் அந்த சார்ட்டில் சேர்க்கலாம். பிள்ளைகளை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதை சமாளிக்க, நிறைய பள்ளிகள் இப்படிப்பட்ட சார்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். மற்ற பிள்ளைகள் செய்யும் கருணையான செயல்களை அந்த சார்ட்டுகளில் எழுதும்படி மாணவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். “மற்றவர்களுக்கு இரக்கம் காட்டவும், கருணையான செயல்களை செய்யவும் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கான மிக முக்கியமான படியாகிய இரக்கம் என்ற பண்பை தெரிந்துகொள்ள இது உதவுகிறது” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.