அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முடிவு?
நாற்பது வருடங்களுக்கும் மேலாக, உலகமே அணு ஆயுதப் பேரழிவின் அச்சுறுத்தலின்கீழ் அல்லாடியது. பிறகு 1989-ல், பெர்லின் சுவர் வீழ்ந்தது. சோவியத் கம்யூனிஸம் வீழ்வதற்கு இதுவே அச்சாரமாய் இருந்தது. இச்சம்பவத்திற்கு பின் கொஞ்ச நாட்களிலேயே, ஒன்றுக்கெதிராக மற்றொன்று ஏவுகணைகள் ஏவுவதை நிறுத்துவதற்கு வல்லரசுகள் ஒப்புக்கொண்டன. அணு ஆயுத “அர்மகெதோன்” நிறுத்தப்பட்டுவிட்டது அல்லது ஒத்திப்போடப்பட்டுவிட்டது போல் தோன்றவே, உலகமே நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.
என்றபோதிலும், அணு ஆயுத யுத்தமே முடிவடைந்துவிட்டதுபோல் கொண்டாடுவது அவசர புத்தியாகும் என அநேக வல்லுநர்கள் கருதுகின்றனர். அணு அறிவியலாளர்களின் அறிக்கை (ஆங்கிலம்) என்ற வெளியீட்டின் அட்டையிலுள்ள பிரபல இறுதித்தீர்ப்பு கடிகாரத்தின் முள், 1998-ல், ஐந்து நிமிடங்கள் நகர்த்தி வைக்கப்பட்டது. அதாவது, நள்ளிரவுக்கு இன்னும் ஒன்பது நிமிடங்கள் இருக்கும்படி நகர்த்தி வைக்கப்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை என்பதற்கு தெளிவான அடையாளம் இது. a ஆம், உலக அரங்கில் காட்சி மாறியுள்ளது. இரு முக்கியமான அணு ஆயுத வல்லரசுகள் இனிமேலும் முடக்கநிலைக்கு தள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. அணு ஆயுதங்களை தயாரிக்கும் திறமை இப்போது அநேக நாடுகளிடம் இருக்கிறது! மேலும், சில தீவிரவாத குழுக்கள், கதிரியக்கப் பொருளை அபகரிப்பதற்கும், கொடிய அணுகுண்டை தயாரிப்பதற்கும் அதிக சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் பயப்படுகின்றனர்.
மேலும், அணு ஆயுத தளவாடங்களை குறிப்பிடத்தக்க அளவு குறைத்தபோதிலும், ஐக்கிய மாகாணங்களும் ரஷ்யாவும் இன்னும் பிரமாண்டமான அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. தற்சமயம், எந்த நேரத்திலும் ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் சுமார் 5,000 இருப்பதாக கமிட்டி ஆன் நியூக்ளியர் பாலிஸி என்றழைக்கப்படும் ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. “எனவே, தற்போதைய சூழ்நிலையில், ஆயுதங்களை ஏவுவதற்கான ஒரு கட்டளை பிறந்தால்போதும், ஒருசில நிமிடங்களில் 4,000 போராயுதங்கள் [கண்டங்களைத் தாண்டிச் செல்லும் ஏவுகணை] (ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் 2,000) ஏற்கெனவே இலக்கை சென்றெட்டிவிடும். அதுமட்டுமா, அதற்குப் பிறகு இன்னும் ஒருசில நிமிடங்களில், 1,000 போராயுதங்கள் [நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் விசை ஏவுகணைகள்] இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கும்” என அவர்களுடைய அறிக்கை குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட யுத்த தளவாடங்கள் இருப்பது, திட்டமிட்டு அல்லது தற்செயலாகவும்கூட போர் மூள்வதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. “ஒரு சிறு விபத்துகூட, அரசியல் தலைவர்களின் ஆசைக்கனவுகளுக்கு மாறாக, இந்த உலகத்தையே அணுவெப்பாற்றல் பேரழிவுக் கடலுக்குள் அமிழ்த்திவிடும்” என பிரபல வ்லெடீமிர் பெலூஸ் எச்சரிக்கிறார். போர்த்திற நடவடிக்கைகளில் தேர்ச்சிப் பெற்ற இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். பனிப்போர் முடிவடைந்தபோதிலும், அணு ஆயுதப் பேரழிவு எனும் அச்சுறுத்தல் உண்மையில் முடிவுக்கு வரவில்லை. ஆனால், இந்த அச்சுறுத்தல் எந்தளவு இருக்கிறது? அணு ஆயுதங்களில் இருந்து இந்தப் பூமி விடுபட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு அடுத்து வரும் கட்டுரைகள் பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a அணு அறிவியலாளர்களின் அறிக்கை என்ற வெளியீட்டின் அட்டையிலுள்ள இறுதித்தீர்ப்பு கடிகாரம், அணு ஆயுத யுத்தம் எனும் “நள்ளிரவுக்கு” உலகம் எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக உள்ளது. பல ஆண்டுகளாக, உலக அரசியல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அந்தக் கடிகாரத்தின் முள் நகர்த்தப்பட்டிருக்கிறது.
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
பக்கங்கள் 2, 3-ல் அணுகுண்டு வெடிக்கும் காட்சி: U.S. National Archives photo