எமது வாசகரிடமிருந்து
மின்காந்த அலைகளினால் நாசம்? எனக்கு வயது பத்து. “பைபிளின் கருத்து: மின்காந்த அலைகளினால் நம்முடைய உலகம் அழிந்து விடுமா?” (டிசம்பர் 8, 1998) என்ற கட்டுரையை படித்து மகிழ்ந்தேன். நம் கோளத்திற்கு எந்தவித விண்வெளி பொருட்களாலும் நாசம் வராது என்பதை நான் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், நாம் பரதீஸிய பூமியில் வாழ்வதையே யெகோவா விரும்புகிறார்.
ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்
இரத்தமில்லா அறுவை “இரத்தமேற்றாமல் ஆபரேஷன்—டாக்டர்களின் புதிய கண்ணோட்டம்” (டிசம்பர் 8, 1998) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதைப் படித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால், எனக்கு இடுப்பு எலும்பு முறிந்தபோது, இரத்தமில்லாமல் செய்த அறுவைசிகிச்சை பெரும் வெற்றியடைந்தது. இதே முறையை பின்பற்றி, ஆனால் இரத்தமேற்றி அறுவை செய்யப்பட்ட ஒருவரும் நானும் ஆஸ்பத்திரியில் ஒரே அறையில் இருந்தோம். நான் ஒரு வாரத்திற்குள்ளேயே வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால், அவரோ சில வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஆஸ்பத்திரியிலேயே நீண்ட நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று.
என். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்களேன்! “எங்களால் முடிந்ததே, உங்களால் முடியாதா என்ன?” (டிசம்பர் 8, 1998) என்ற கட்டுரை எனக்கு குறிப்பாக தேவைப்பட்டது. ஏனென்றால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடைய ஒரு பெண்ணோடு இப்போதுதான் பைபிள் படிப்பை முடித்தேன். அவர் நம்முடைய கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் வருகிறார். ஆனால், இந்தக் கெட்டப் பழக்கம் அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்தது. புகைப்பிடித்தலை விட்டுவிடுவது பற்றி ஏற்கெனவே சில கட்டுரைகளை அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், இந்தக் கட்டுரையாவது அவருடைய இந்தத் தடையை முழுவதுமாக உடைத்தெறிய உதவும்படி ஜெபிக்கிறேன்.
இ. கே., ஐக்கிய மாகாணங்கள்
இரசாயனங்களும் உங்கள் ஆரோக்கியமும் சமீபத்தில்தான் நான் இரசாயன பாடத்தில் சேர்ந்தேன். டிசம்பர் 22, 1998 பிரதி என் கருத்தைக் கவர்ந்தது. எப்போதும்போல் நீங்கள் சிக்கலான, குழப்பமான பொருளையும் எல்லாரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மிக எளிமையாக விளக்குகிறீர்கள். இரசாயனப் பொருட்களுக்கும் மாசுப் பொருட்களுக்கும் எல்லைகளே இல்லை. எல்லா மக்களையும் பாதிக்கக்கூடியவை. தூய்மைக்கேடு பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு தேவையென்றால், சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் தேவை. ஆனால், மனிதனின் சுயநலமும் பேராசையும் இதற்கு பெரும் தடையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு பரிகாரத்தைக் கொண்டுவர யெகோவா அறிந்திருப்பதற்கு நாம் சந்தோஷமாக இருக்கலாம்.
சி. வி., கனடா
பெற்றோரை இழத்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . அப்பா அம்மா இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்?” (டிசம்பர் 22, 1998) என்ற அருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி. எங்களைப் போன்ற இளைஞர்கள் பெற்றோர் இல்லாமல் தவித்தால் யெகோவா நிச்சயம் காப்பார் என்ற உறுதியை அளித்தது. என்னுடைய பெற்றோரை நான் இழக்கவில்லை. ஆனால், அவர்கள் இல்லையென்றால் என் நிலை என்ன என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். ஒராஸ்யோவின் சிறந்த முன்மாதிரி என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
எம். ஜே., ட்ரினிடாட்
ரெப்படிட்டிவ் ஸ்ட்ரெயின் இன்ஜுரி நீங்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைப் பற்றியே ஒரு கட்டுரை வரும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை வார்த்தைகளில் சொல்வது மிகக் கடினம். “ஒரேவித வேலையால் ஒரே வலியா?—படிக்கத் தவறாதீர்கள்” (டிசம்பர் 22, 1998) என்ற கட்டுரை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மணிக்கட்டில் இதேமாதிரியான வலி எனக்கு இருந்தது. இப்போதுதான், அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டேன். இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஆலோசனை எனக்கு மிக உதவியது.
எஸ். டி., யூகோஸ்லாவியா
RSI-க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் கருவிகளை உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனியில் நான் வேலை செய்கிறேன். RSI ஆர்வத்தையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஆனால், உங்கள் கட்டுரை வெகு அருமை. மற்றவர்களுடைய அபிப்பிராயங்களை சாராமலும் பாரபட்சமற்ற முறையிலும் தயாரிக்கப்பட்ட கட்டுரை இது. எங்கள் கம்பெனியின் இயக்குநர் குழுமம் இக்கட்டுரையால் மிகவும் கவரப்பட்டு, பிரேஸில் முழுவதும் இருக்கும் எங்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்ப அநேக பிரதிகளை ஆர்டர் செய்துள்ளது.
ஜே. பி. எம்., பிரேஸில்
நான் வேலைக்கு செல்லும் குடும்பத்தலைவி. பளுவான மரப் பெட்டிகளை ஏற்றுவதுதான் என் வேலை. ஆரம்பத்தில் இருந்தே, என் இடுப்பு, கைகள், மணிக்கட்டுகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளாக, படுக்கையில் இருந்து எழுந்திருப்பதற்குமுன் பத்து நிமிடங்களுக்கு கைகால்களை நீட்டி மடக்கி தசைகளுக்காக உடற்பயிற்சி செய்கிறேன். அந்தப் பயிற்சிகளே போதும் என நினைத்தேன். ஆனால், இந்தப் பிரச்சினையை சமாளிக்க உபயோகமான பல குறிப்புகளை இக்கட்டுரை அளித்தது. இந்தப் பத்திரிகையின் பிரதிகளை என்னோடு வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொன்று கொடுப்பேன்.
கே. வொய்., ஜப்பான்