பைபிளின் கருத்து
மனம்போல் மணத்துணை அமைய
அவளோ திருமணமாகாத பருவமங்கை. அவளிடம், “உன் கல்யாணத்தைப் பற்றி எப்பொழுதாவது நினைப்பாயா?” என்று கேட்டபோது, “என்னது, ‘நினைப்பாயா’வா? எப்ப பாத்தாலும் அந்தக் கவலைதான்” என சட்டென்று பதில் சொன்னதைப் பார்க்க வேண்டுமே!
இந்தப் பெண் நறுக்கென்று சொல்லிய நாலு வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தம்! அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் உள்ளங்களைக் காட்டும் ஜன்னல்தான் இது. சிலருக்கு, தங்கள் மணத் துணைக்காக வலைவீசுவதே வாழ்க்கை. வேறு எதுவும் அந்தளவுக்கு முக்கியமில்லை. அதனால்தான் வாழ்க்கைத் துணையை தேடித்தரும் மணப்பந்தல் சேவை அமைப்புகள் உலகமுழுவதிலும் காளான்போல் முளைத்துவருகின்றன. எப்படியாவது இளஞ்சிட்டுக்கள் உற்ற துணையோடு உலாவர உதவுவதே இவற்றின் உத்தேசம். ஆனால் உலகெங்கும் அநேக இடங்களில் மலர்ந்து மணம்வீச வேண்டிய திருமணங்கள் காய்ந்த சருகுகளாக உதிர்ந்து மலைபோல் குவிந்து வருகின்றன.
மேலைநாடுகளில், தங்கள் வருங்கால துணையை தாங்களே தெரிவுசெய்வது சகஜம். மறுபட்சத்தில், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் சில பகுதிகளில் பெரியோர்கள் பார்த்து திருமணம் செய்துவைப்பதே வழக்கம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதாவது, இரண்டுவித திருமணங்களிலுமே மெத்தனம் கூடாது. ஒருவர் மற்ற விஷயங்களில் எடுக்கும் தீர்மானங்கள், அவரது சந்தோஷத்தையோ துக்கத்தையோ இந்தளவுக்கு பாதிப்பதில்லை. துணை கச்சிதமாக அமைந்துவிட்டால், இன்பத்துக்கும் திருப்திக்கும் ஏது பஞ்சம்! துணையே துயரமாகிவிட்டால் துக்கமும் கவலையும்தான் மிஞ்சும்.—நீதிமொழிகள் 21:19; 26:21.
யாருக்குமே, தங்கள் மணவாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் காணத்தான் ஆசை. உண்மை கிறிஸ்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் விரும்புவதும் அதுவே. ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், இவ்விஷயத்தில் கடவுளுக்குப் பிரியமாய் நடந்துகொள்ளவும் அவருக்கு மரியாதை காட்டவும் அவர்கள் விரும்புகிறார்கள். (கொலோசெயர் 3:22) நம்மைப் படைத்தவரும் முதல் ஜோடியை மணமேடையில் ஏற்றியவரும் அவரே. ஆகவே நமக்கு உண்மையில் என்ன தேவையென்றும் எது நமக்கு சிறந்தது என்றும் அவருக்குத்தானே தெரியும்! (ஆதியாகமம் 2:22-24; ஏசாயா 48:17-19) அதுமட்டுமா, நல்லதோ கெட்டதோ, மனிதன் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக லட்சோபலட்சம் திருமணங்களை அவர் பார்த்திருக்கிறார். ஆகவே வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்பதும் அவருக்குத் தெரியும். (சங்கீதம் 32:8) அதனால்தான் அவருடைய வார்த்தையாகிய பைபிளில், திட்டவட்டமான நியமங்களை துல்லியமாக வகுத்துக் கொடுத்திருக்கிறார். எந்தவொரு கிறிஸ்தவனும் இவற்றையெல்லாம் அறிந்து அதற்கேற்றாற்போல் புத்திசாலித்தனமாய் தீர்மானம்செய்ய அவை கைகொடுக்கும். இதுபோன்ற நியமங்கள் சில யாவை?
‘கண்டதும் காதல்’ கசக்கும்!
தங்கள் விவாக துணையை தாங்களாகவே இஷ்டம்போல் தெரிந்தெடுக்கும் இடங்களில் இதுதான் நடக்கிறது. எதிர்கால துணையை அவர்கள் தற்செயலாக சந்திக்க நேரிடலாம், அல்லது நண்பர்களோ குடும்பத்தினரோ அறிமுகம் செய்துவைக்கலாம். பொதுவாக, கவர்ச்சியான தோற்றத்தைக் கண்டதும் காதல்வயப்பட்டு மயங்கிவிடுகின்றனர். இது இயற்கையானதும் சக்திவாய்ந்த தூண்டுகோலும்கூட. ஆனால் திருமணம் செய்ய நினைக்கும் ஒருவர், புற அழகை மாத்திரம் கண்டு மயங்கிவிடாமல் அகத்தின் அழகையும் ஆராயும்படி பைபிள் ஆலோசனை அளிக்கிறது.
“சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” என்கிறது நீதிமொழிகள் 31:30. “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே . . . தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” என்கிறார் அப்போஸ்தலன் பேதுரு. (1 பேதுரு 3:4) வருங்கால துணைவரது அங்க அழகைவிட ஆவிக்குரிய அழகே அருமையானது. அதாவது, கடவுளிடம் அந்நபருக்கு நேசமும் பக்தியும் உள்ளதா? கிறிஸ்தவ குணங்கள் அவரிடம் உள்ளதா? என்பதே கேள்வி. இவ்விஷயத்தில் அவசரப்படாதீர்கள், ஆற அமர, தீர ஆலோசித்து தெரிவு செய்யுங்கள். உங்களது ஆன்மீக லட்சியம் எதுவோ அதையே தனது லட்சியமாக கொண்டவரும், ஆவியின் கனிகளை அப்பியாசிக்க முயல்பவருமான ஒருவரையே தெரிவு செய்வது அத்தியாவசியமான விஷயம். இப்படி அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் துணையே துயர்துடைக்கும் ‘தென்றலாக’ அமைவார்.—நீதிமொழிகள் 19:2; கலாத்தியர் 5:22, 23.
‘கர்த்தருக்குட்பட்டவரையே மணத்தல்’
உங்கள் திருமணத் துணையின் லட்சியமும் நம்பிக்கையும் உங்களுடையதைப் போலவே இருப்பது அவசியம். கல்யாணம் செய்வது என்பது கத்திரிக்காய் வாங்குவதுபோல அல்ல, சொத்தையாயிருந்தால் கடாசிவிடுவதற்கு! காலமெல்லாம் ஒருவருக்கொருவர், மனம் குணம் என எல்லாவற்றையுமே விட்டுகொடுக்க வேண்டிவரும். சொல்லப்போனால் உங்களிடமும் வருங்கால துணையிடமும் ஒத்துப்போகும் அம்சங்கள் பல இருந்தால், மீதி இருக்கும் சில அம்சங்களில் ஒருவருக்கொருவர் மாற்றங்களை செய்வது எளிது.
“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு ஏன் அறிவுரை கூறினார் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. (2 கொரிந்தியர் 6:14) திருமணம் செய்துகொள்ள நினைக்கும் இருவரது விசுவாசமும் பைபிள் நியமங்களை புரிந்து நடந்துகொள்ளும் விதமும் ஒன்றுபோல் அமையாவிட்டால் ஓயாமல் சண்டை சச்சரவுகள் எழும் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஆகவேதான், ‘கர்த்தருக்குட்பட்டவரையே விவாகம்பண்ணு’ என்ற அறிவுரை நியாயமானது. (1 கொரிந்தியர் 7:39) கடவுளுடைய எண்ணமும் அதுவே. புத்தியோடு இந்த அறிவுரையைக் கேட்பவர்கள் எவ்வளவோ மோசமான பிரச்சினையையும் சிக்கலையும் தவிர்ப்பார்கள்.—நீதிமொழிகள் 2:1, 9.
பெரியோர் பார்த்து நடத்தும் திருமணம்
பெரியவர்களாக பார்த்து நடத்திவைக்கும் திருமணங்கள் இன்னும் வழக்கில் இருக்கும் இடங்களைப் பற்றியென்ன? உதாரணமாக, தென்னிந்தியாவில் நடக்கும் மொத்த திருமணங்களில் 80 சதவீதம் பெரியோர் பார்த்து நடத்திவைப்பது என கணிக்கப்பட்டுள்ளது. இதே பழக்கத்தை கிறிஸ்தவ பெற்றோர் பின்பற்றுவதும் பின்பற்றாதிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனாலும், ஆன்மீக அம்சங்களை முன்வைத்து நடத்தினால்தான் வெற்றி கிட்டும்.
பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணமே நல்லது என நினைப்போர், தீர்மானம் செய்ய வேண்டிய விஷயங்களையெல்லாம் அனுபவம் வாய்ந்த முதியோரின் கைகளில் விட்டுவிடுகின்றனர். “வயதும் அனுபவமும் போதாத தங்கள் பிள்ளைகள், தங்களது வருங்கால துணைவரது ஆன்மீக முதிர்ச்சி பற்றி தப்புக்கணக்கு போட்டுவிடலாம் என்றே சில பெற்றோர் நினைக்கின்றனர்” என ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மூப்பர் குறிப்பிடுகிறார். “இவ்விஷயத்தில் பிள்ளைகள் வாழ்க்கையில் அடிபடாததால் உணர்ச்சிவசப்பட்டு தீர்மானம் எடுக்க நேரிடலாம்” என்று இந்தியாவிலிருந்து பயணக் கண்காணி ஒருவர் தெரிவிக்கிறார். வேறு எவரையும்விட பெற்றோருக்கே தங்கள் பிள்ளைகளின் குணம் எப்படி என்று நன்றாக தெரியும். ஆதலால், பிள்ளைகளுக்கு நல்லதை தெரிந்தெடுக்க தாங்களே ஒரு முக்கியமான நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த இளஞ்சிட்டுக்களின் மனதிலும் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்துகொள்வது ஞானமான காரியம்.
ஆனால் பைபிள் நியமங்களை பெற்றோரே புறக்கணிக்கையில், திருமணத்தையடுத்து வரும் பிரச்சினைகளையும் கஷ்டநஷ்டங்களையும் அவர்களே சுமக்க வேண்டி வரலாம். ஏனென்றால் வருங்கால துணையுடன் திருமணத்துக்கு முன்னதாகவே பழகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட இளஞ்சிட்டுக்களுக்கு வாய்ப்புகள் குறைவு. அதனால் பிரச்சினைகள் வரலாம். அவ்வாறு பிரச்சினைகள் எழும்போது, “அப்பா அம்மாவின் மேல் பழிபோடவே நினைக்கின்றனர்” என இந்தியாவிலுள்ள தந்தை ஒருவர் சொல்கிறார்.
ஒரு திருமணத்தை நடத்திவைக்கும் கிறிஸ்தவ பெற்றோர் மனதில் என்ன நினைப்பு இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தன் பையனுக்கோ பெண்ணுக்கோ, நல்ல வசதியான இடம் பார்த்து பணத்திலும் அந்தஸ்திலும் ‘குளிர்காய’ நினைத்தால் பிரச்சினைதான். (1 தீமோத்தேயு 6:9) ஆகவே, திருமணத்தை நடத்திவைக்கும் பெரியோர்கள் தங்களைத் தாங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும், ‘இந்த செலக்ஷன் இருதரப்பினருக்குமே சந்தோஷமும் ஆன்மீக நலமும் கிடைப்பதற்கு உதவுமா? அல்லது குடும்ப அந்தஸ்து, ரொக்கம், சீர் சாமான்கள் கிடைப்பதற்கு மட்டுமே உதவுமா?’—நீதிமொழிகள் 20:21.
பைபிளின் புத்திமதி தெளிவானது, நன்மை தருவது. திருமண துணைக்காக வலைவீசுகையில், வரப்போகிறவர், மற்ற அம்சங்களில் எப்படி இருந்தாலும்சரி, அவரிடம் நற்குணமும் ஆன்மீக ஐசுவரியமும் அமைந்துள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இப்படி செய்தால், திருமண ஏற்பாட்டுக்கே காரணகர்த்தாவான யெகோவா தேவனை கனம்பண்ணுகிறோம்; அவ்வாறு பார்த்து திருமணம் செய்துகொள்பவர்களும் அசைக்க முடியாத ஆன்மீக அஸ்திவாரத்தில் தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம். (மத்தேயு 7:24, 25) இதுவே திருமணத்தை தேன்சிந்தும் இனிய இணைப்பாக்கும்.