உங்கள் அன்புச் செல்வத்தை விபத்தினின்று காத்திடுங்கள்
ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபர்
மழலை மொழி பேசி பட்டாம்பூச்சிபோல் திரிந்துகொண்டிருந்தாள் ஹானா என்ற மூன்று வயது சிறுமி. அவள் பெற்றோராகிய காரல்-எரிக்கும் பிர்கிட்டாவும், இறந்துபோன தங்களுடைய அயலகத்தாரின் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஹானாவும் அங்கு இருந்தாள். சற்று நேரம் கழித்து ஹானா ஓர் அறையிலிருந்து வெளியே வந்தாள், அவளுடைய பிஞ்சு கைகளிலோ மாத்திரை பாட்டில் இருந்தது. அதில் சிலவற்றை அவள் ஏற்கெனவே ருசித்துவிட்டிருந்தாள். தன் மகளின் கையில் இருந்த பாட்டிலை பார்த்துவிட்டு என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் பதறிப்போனாள் பிர்கிட்டா. இதய நோய்க்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர் சாப்பிட்டுவந்த மருந்து அது.
உடனடியாக ஹானாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கே அந்த இரவு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டாள். அவள் உடல்நிலையை நிரந்தரமாக பாதிக்கும் ஒரு-டோஸ் மாத்திரையை விழுங்கியிருந்தபோதிலும் எவ்வித பக்கபாதிப்புமின்றி ஹானா காப்பாற்றப்பட்டாள். எப்படி? அவள் இந்த மாத்திரைகளை விழுங்குவதற்கு சற்றுமுன்புதான் கொஞ்சம் சீரியலை சாப்பிட்டிருந்தாள். அந்த மாத்திரைகளின் நச்சை உறிஞ்சியிருந்த சீரியலை சிறிது நேரத்திற்கெல்லாம் வாந்தியெடுத்துவிட்டாள்.
ஹானாவுக்கு சம்பவித்தது ஒன்றும் வினோதமானதல்ல. ஒவ்வொரு நாளும், உலகமுழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இதுவே சம்பவிக்கிறது, அவர்கள் இப்படிப்பட்ட விபத்துக்குள்ளாகையில் டாக்டரை சந்திக்க அல்லது மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. ஸ்வீடனில், ஒவ்வொரு வருடமும் எட்டில் ஒரு குழந்தை விபத்துக்குள்ளாகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை: உங்கள் பிள்ளைச் செல்வமும் இது போன்ற விபத்துகளை சந்திக்க அநேக வாய்ப்புகள் உள்ளன.
பிள்ளைகள் தங்களுடைய வீடு அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்கள் போன்ற நன்கு பழக்கமான இடங்களிலேயே பெரும்பாலும் காயமடைகின்றனர். பிள்ளைகள் வளர வளர விபத்துகளினால் அவர்களுக்கு ஏற்படும் காயங்களும் வேறுபடுகின்றன. வாழ்க்கை ஓட்டத்தை அப்போதுதானே துவக்கியிருக்கும் ஓர் சின்னஞ்சிறு சிசு மேஜையிலிருந்தோ தொட்டிலிலிருந்தோ எளிதில் தவறி விழ நேரிடலாம். அல்லது ஒரு உணவுத் துணிக்கையோ, ஏதாவதொரு சிறிய பொருளோ அதன் தொண்டையில் மாட்டிக்கொள்ளலாம். சிறு பிள்ளைகள் பெரும்பாலும் எதிலாவது ஏற முயலுகையில் தவறி விழலாம், தீயினால் சுட்டுக்கொள்ளலாம், அருகில் ஏதாவது நஞ்சுமிக்க பொருள் இருந்தால் அதை தொடலாம் அல்லது சாப்பிடலாம். பள்ளி செல்லும் வயதிலுள்ள பிள்ளைகள் சாலை விபத்துகளில் அல்லது வெளியில் விளையாடுகையில் காயமடைகின்றனர்.
இந்த விபத்துகளில் பெரும்பாலானவை தவிர்க்க முடிந்தவையே. சிறிது முன்யோசனையும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றிய அறிவும் இருந்தால்போதும், உங்கள் குழந்தை காயப்பட்டுக்கொள்ளாமல் இருக்க அல்லது உயிரையே பலி வாங்கும் விபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும்கூட நீங்கள் உதவலாம். ஸ்வீடனில் 1954 முதல் செயல்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் இதை உண்மை என நிரூபித்திருக்கிறது. இத்திட்டம் செயல்பட துவங்கும் முன், ஒவ்வொரு வருடமும் ஏற்பட்ட விபத்துகளால் சுமார் 450-திற்கும் அதிகமான தொட்டிலில் தூங்கவேண்டிய குழந்தைகள் கல்லறையில் தூங்கின. ஆனால் இன்றோ இந்த எண்ணிக்கை சுமார் 70-ஆக சரிந்திருக்கிறது.
வீட்டிற்கு உள்ளே
“மூன்று வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கெல்லாம் விபத்துகளை தவிர்க்க சொல்லிக்கொடுக்கவும் முடியாது, அந்த குழந்தைகள் அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எதிர்பார்க்கவும் முடியாது” என்கிறார் குழந்தை உளவியல் நிபுணரான கெஷ்டின் பேக்ஸ்ட்ரோம். அதனால், விபத்துகளிலிருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோராகிய உங்களுடையது அல்லது அந்த குழந்தையை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் வயதுவந்த நபருடையது.
முதலாவது, நீங்கள் குடியிருக்கும் வீட்டை கொஞ்சம் சுற்றிப்பாருங்கள். அப்போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள செக்லிஸ்டை பயன்படுத்தி சரிபாருங்கள். சில பாதுகாப்பு சாதனங்கள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் நம்மால் வாங்கமுடிந்த நியாயமான விலையில் கிடைப்பதில்லை. இருப்பினும் சிறிது சாமர்த்தியத்தை பயன்படுத்தி உங்கள் கற்பனா சக்தியையும் ஓடவிட்டாலே போதும் உங்களுடைய சூழ்நிலையை எளிதில் சமாளிக்க ஐடியா கிடைக்கலாம்.
உதாரணமாக, உங்கள் சமையல் அறை அலமாரிகளின் கைப்பிடிகள் வளையவடிவில் இருந்தால், அந்த கைப்பிடிகளின் இடையில் ஒரு குச்சியையோ அல்லது சிறு கட்டையையோ நுழைத்து டிராயரை அடைத்து வைக்கவும். ஒருவேளை உங்களிடம் ஓவன் (oven) இருக்குமேயானால் அதன் கைப்பிடிகளையும் இதேபோல அடைத்து வைப்பது பாதுகாப்பானது. பிளாஸ்டிக் பைகளை முடிச்சு போட்டு வைக்கும்போது அவ்வளவு ஆபத்து இல்லை.
ஒருவேளை உங்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் விபத்துகளை தவிர்க்க சின்ன சின்ன வழிகள் சிலவற்றை யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்டுபிடித்த வழிகளை சிறு பிள்ளைகளையுடைய நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வீட்டிற்கு வெளியே
உங்கள் குழந்தை விளையாடும் இடங்களை சற்று பார்வையிடுங்கள். நான்கு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஏற்படும் காயங்கள் அல்லது விபத்துகளில் பெரும்பாலானவை வீட்டிற்கு வெளியே விளையாடும்போதே ஏற்படுகின்றன. அவர்கள் கீழே விழுந்து காயமடைகிறார்கள் அல்லது சிலசமயம் சைக்கிளிலிருந்து விழுந்துவிடுகிறார்கள். பெரும்பாலும், தண்ணீரில் மூழ்கிவிடுதல், சாலை விபத்துகள் போன்ற விபத்துகளே, மூன்று முதல் ஏழு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை மரண படுக்கைக்கு அனுப்பியிருக்கின்றன.
உங்கள் பிள்ளை விளையாடும் இடங்களை நீங்கள் பார்வையிடுகையில், அங்கிருக்கும் சாதனங்களை கவனியுங்கள். உங்கள் பிள்ளைகள் அந்த சாதனங்களை பயன்படுத்தும்போது காயமடையாதபடிக்கு, அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பதையும் பாருங்கள். உங்கள் செல்லப் பிள்ளை சிறைக்கட்ட ஆட்டத்தில் (monkey bars) ஏறி இறங்கி விளையாடும்போது விழுந்தாலும் அல்லது ஊஞ்சலில் ஆனந்த களிப்பில் பறக்கும்போது விழுந்தாலும் அவன் காயமடையாமலிருக்க அதுபோன்ற சாதனங்களுக்கு கீழே மணல் போன்றவற்றாலான மெத்தென்ற தரை இருக்கிறதா?
உங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர் நிறைந்த குளம் அல்லது நீரோடை ஏதாவது இருக்கிறதா? கொஞ்சம் தண்ணீர் இருந்தாலே போதும், ஓரிரண்டு வயது குழந்தை அதில் மூழ்கிவிடும். “ஒரு சிறு குழந்தை தண்ணீர் தொட்டியிலோ குளத்திலோ தலைகுப்புற விழும்போது, மேலே என்ன இருக்கிறது கீழே என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய சுயநினைவை இழந்துவிடுகிறது; அந்த குழந்தையால் தானாகவே மேலே எழுந்து வர முடியாது” என்கிறார் குழந்தை உளவியல் நிபுணரான பேக்ஸ்ட்ரோம்.
ஆகவே, நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அடிப்படை சட்டம் இதோ: பெரியவர்கள் மேற்பார்வையின்றி மூன்று வயதிற்குட்பட்ட குழந்தையை வீட்டிற்கு வெளியே தனியாக ஒருபோதும் விளையாடவிடாதீர்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர்த் தேக்கம் ஏதாவது இருந்தால், உங்கள் குழந்தையை யாருடைய மேற்பார்வையுமின்றி வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்காதீர்கள். அவன் கொஞ்சம் வளரும்வரை காத்திருங்கள்.
சாலையில்
உங்கள் வீட்டிற்கு அருகே சாலை ஏதேனும் இருந்தால், அதற்கும் மேலே குறிப்பிடப்பட்டவை பொருந்தும். “பள்ளி செல்லும் வயதைக்கூட எட்டாத ஒரு குழந்தையால் தெளிவான குறிப்பான தகவல்களையே புரிந்துகொள்ள முடியும், அதோடு ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே அதனால் கவனம் செலுத்த முடியும். ஆனால், சாலையின் விஷயமோ வேறு; அங்கு நிலவும் குழப்பமான, தெளிவற்ற, எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலையே அதற்கு காரணம்” என்கிறார் பேக்ஸ்ட்ரோம். உங்கள் சுட்டிப்பிள்ளை பள்ளியில் காலடி வைப்பதற்கு முன், தனியாக தெருவை கடக்க விடாதீர்கள். சில நிபுணர்களின் கருத்து, 12 வயதிற்கும் குறைவான பிள்ளைகள், பிஸியான ஒரு சாலையில் தன்னந்தனியாக சைக்கிளில் செல்ல தகுதியானவர்கள் அல்ல என்பதே.
உங்கள் பிள்ளை சைக்கிள் ஓட்டுகையில், சவாரி செய்கையில், ரோலர்-ஸ்கேட்டிங் போகையில் அல்லது பனிச்சறுக்கு விளையாடுகையில் பாதுகாப்பு ஹெல்மெட்டை அணிந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். தலையில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது சாதாரண விஷயம் அல்ல, அது ஒருவேளை நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது மரணத்திற்கேகூட வழிநடத்தலாம்! குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், சைக்கிள் விபத்துகளில் சிக்கிய பிள்ளைகளில் 60 சதவீதத்தினர், தங்களுடைய முகத்திலும் தலையிலும் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டனர், ஆனால் ஹெல்மெட் அணிந்தவர்கள் தலையோ பெரும் ஆபத்து ஏதுமின்றி தப்பியது.
காரில் பயணம் செய்யும்போது உங்கள் செல்லக் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அநேக நாடுகளில் சிறு குழந்தைகளுக்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இருக்கையை பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இது சாலை விபத்துகளால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை அல்லது காயங்களின் எண்ணிக்கையை அதிகளவில் குறைத்திருக்கிறது. நீங்கள் வசிக்கும் பகுதியில் இந்த பாதுகாப்பு இருக்கைகள் கிடைத்தால், அதைப் பயன்படுத்துவது உங்கள் பயணத்தை இனிமையாக்கும். அது தரமான ஒன்றா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சிளம் சிசுக்களுக்குரிய இருக்கைகள் வேறு, மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குரிய இருக்கைகள் வேறு என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
நம் பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து வரும் ஒப்பற்ற பரிசு, அவர்களை எல்லா வழிகளிலும் நாம் கவனமாக பராமரிக்க வேண்டும். (சங்கீதம் 127:5) ஹானாவுக்கு நடந்த அந்த சம்பவத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி காரல்-எரிக், பிர்கிட்டா தம்பதியினர் நல்ல பெற்றோராக தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாப்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றனர். “இருப்பினும் அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னும் அதிக ஜாக்கிரதையாக இருந்தோம்” என்கிறார் காரல்-எரிக். “இப்போது எங்களுக்கு பேரப்பிள்ளைகள் இருப்பதால், எங்கள் மருந்து மாத்திரைகளை எல்லாம் பத்திரமாக பூட்டிவைக்கிறோம்” என்று முடிக்கிறார் பிர்கிட்டா.
[பக்கம் 22-ன் பெட்டி]
வீட்டிற்குள் ஒரு கண்ணோட்டம்
• மருந்துகள்: அவற்றை குழந்தைகள் எடுத்துவிடாதபடி அலமாரிகளில் பூட்டிவையுங்கள். டாக்டர் எழுதிக்கொடுக்காத மருந்துகள், நாட்டு மருந்துகள் அல்லது மூலிகை மருந்துகள் போன்றவற்றையும் பூட்டிவையுங்கள். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டில் தங்கும் விருந்தினரிடமும் அவர்களுடைய மருந்துகளை குழந்தைகளுடைய கைக்கு எட்டாதபடி பத்திரமாக வைக்குமாறு சொல்லிவிடுங்கள்.
• வீட்டு உபயோக இரசாயனங்கள்: அவற்றை குழந்தை எடுத்துவிடாதபடி பூட்டும் வசதியுள்ள அலமாரிகளில் வையுங்கள். அவற்றை எளிதில் கண்டுபிடிக்க அவற்றிற்குரிய பாட்டில்களில் அல்லது டப்பாக்களில் வையுங்கள். அவற்றை பயன்படுத்தும்போது அவற்றின்மேல் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். சிறிது நேரத்திற்கு அந்த இடத்தைவிட்டு செல்ல நேர்ந்தால்கூட அவற்றை எப்போதும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள். மீதமான சோப்புகளை அல்லது சோப்பு பவுடர்களை ஒருபோதும் மிஷினிடமே வைத்துவிடாதீர்கள்.
• ஸ்டவ்: வாணலிகள் ஸ்டவ்வின்மேல் இருக்கையில் கைப்பிடிகளை எப்போதும் பக்கவாட்டில் திருப்பி வையுங்கள். அது சரிந்துவிடாமல் இருக்க பிடிப்புகள் ஏதாவது பொருத்த முடிந்தால் பொருத்துங்கள். ஓவன் கதவு திறந்திருக்கையில் அதன்மேல் குழந்தை ஏறினால் அது சாய்ந்து விடாதிருக்க பாதுகாப்பிற்கு ஸ்டவ்வில் பிடிப்புகளை பொருத்துங்கள். அந்த ஓவனின் கதவிற்கும் ஏதாவது லாக்கிங் சிஸ்டத்தை பொருத்துங்கள். ஓவன் கதவை உங்கள் குழந்தை தொட்டு தன் கையை சுட்டுக்கொள்வானா? அப்படியென்றால், அந்த சூடான கதவிற்கு பாதுகாப்பு சாதனத்தை பொருத்துங்கள் அல்லது அவன் அதனிடம் வராதபடி எதையாவது வையுங்கள்.
• ஆபத்தான வீட்டு உபகரணங்கள்: கத்திகள், கத்தரிக்கோல்கள், மற்ற ஆபத்தான சாதனங்களை அலமாரிகளிலோ டிராயர்களிலோ பூட்டி வையுங்கள் அல்லது அந்த குழந்தையின் கையில் கிடைக்காதபடி பத்திரப்படுத்துங்கள். அப்படிப்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் சமயத்தில், சிறிது நேரம் அந்த இடத்தைவிட்டு போகவேண்டியிருந்தால், அவற்றை டேபிளின் முனையிலோ குழந்தை எடுக்கக்கூடிய இடத்திலோ வைக்காதீர்கள். தீக்குச்சிகளும் பிளாஸ்டிக் பைகளும்கூட பிள்ளைகளுக்கு ஆபத்தானவை.
• படிக்கட்டுகள்: படிக்கட்டின் இரு புறத்திலும் குறைந்தபட்சம் 70-75 சென்டிமீட்டர் உயரத்திற்கு தடுப்புகளை பொருத்தவும்.
• ஜன்னல்களும் பால்கனி கதவுகளும்: குழந்தை தவறி கீழே விழுந்துவிடாதபடி பாதுகாப்பு இணைப்புகளை பொருத்துங்கள். குழந்தை கதவுகளை திறந்துவிடாதபடி அல்லது காற்றோட்டத்திற்காக கதவுகளை திறந்துவைத்திருக்கும்போது அதின் வழியாக உங்கள் பிள்ளை நுழைந்துவிடாதபடி மற்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துங்கள்.
• புத்தக அலமாரிகள்: இவற்றில் உங்கள் சுட்டிக் குழந்தை ஏறினால் அல்லது தொங்கினால் அவை கீழே விழுந்துவிடாதபடி புத்தக அலமாரிகளை அல்லது மற்ற உயரமான பொருட்களை சுவரோடு சாய்த்து பாதுகாப்பாக வையுங்கள்.
• சுவிட்சு போர்டுகளும் மின்சார வயர்களும்: பயன்படுத்தப்படாத போர்டுகள் இருந்தால், அவற்றிற்கு ஏதாவது பொருத்தமான லாக்கிங் சிஸ்டத்தை பொருத்துங்கள். மேஜையின்மீது விளக்கு அல்லது அதுபோன்ற சாதனங்களின் வயர்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தால், துரு துருவென்றிருக்கும் உங்கள் பிள்ளை அதைப் பிடித்து இழுத்து அதனால் ஆபத்துக்குள்ளாகாதபடி அந்த வயர்களை சுவரிலோ அல்லது மேஜையிலோ பொருத்திவையுங்கள். அப்படியில்லை என்றால், அந்த விளக்கை அங்கே வைக்காதீர்கள். மின்சார அயர்ன் பாக்ஸை ஒருபோதும் மேஜையிலேயே விட்டுவிடாதீர்கள், அதன் வயரையும் கீழே தொங்கும்படி விடாதீர்கள்.
• சுடு தண்ணீர்: சுடு தண்ணீரின் சூட்டை உங்களுக்கு தேவையான அளவு கூட்ட குறைக்க முடியுமென்றால், உங்கள் பிஞ்சு மழலை தண்ணீர் குழாயை திறந்து அதனால் சுட்டுக்கொள்ளாதபடி தண்ணீரின் வெப்பத்தை சுமார் 50 டிகிரி செல்ஸியஸுக்கு குறைக்கவும்.
• பொம்மைகள்: கூர்மையான முனைகளையுடைய பொம்மைகளை தூக்கியெறியுங்கள். ஒருவேளை சின்னஞ் சிறிய பொருட்களை உங்கள் அன்புச் செல்வம் தன் வாயில் போட்டுக்கொண்டால், அதன் தொண்டையில் மாட்டிக்கொள்ளக்கூடும். அதனால், சிறிய பொம்மைகள் அல்லது அக்குவேறு ஆணிவேறாக பிரிக்கமுடிந்த பொம்மைகளை அதற்குரிய இடமாகிய குப்பை தொட்டிக்கு தாரைவார்த்துவிடுங்கள். உங்கள் குழந்தை வைத்திருக்கும் பொம்மைகளின் கண்கள், மூக்குகள் எல்லாம் சரியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பெரிய பிள்ளைகள் அப்படிப்பட்ட பொம்மைகளை வைத்து விளையாடுகையில் உங்கள் சிறு குழந்தை அங்கு வந்தால் அப்பொம்மைகளை அப்புறப்படுத்தும்படி சொல்லிக்கொடுங்கள்.
• நொறுக்குத் தீனிகள்: வேர்க்கடலை அல்லது மென்றுதின்ன கடினமான ஸ்வீட்டுகளை குழந்தை எடுத்துவிடும் இடங்களில் வைக்காதீர்கள். அவை அந்த பிஞ்சு தொண்டையில் அடைத்துக்கொள்ளக்கூடும்.
[படத்திற்கான நன்றி]
ஆதாரம்: சிறார் புலன்விசாரணை அதிகாரிகள் அலுவலகம்
[பக்கம் 22-ன் பெட்டி]
விபத்து சமயத்தில்
• விஷம்: ஒருவேளை குழந்தை நஞ்சுத்தன்மையுடைய எதையாவது குடித்துவிட்டால், உடனே அதன் வாயை கழுவிவிட்டு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரையோ பாலையோ குடிக்க கொடுங்கள். அதன் பிறகு, உதவிக்காக டாக்டரையோ அல்லது அந்த பொருளின் தயாரிப்பாளரையோ அணுகவும். அந்த குழந்தையின் கண்ணை பாதிக்கும் ஏதாவது பட்டுவிட்டால் உடனே அதிகளவான தண்ணீரில் குறைந்தபட்சம் பத்து நிமிடத்திற்கு கண்களை கழுவுங்கள்.
• தீ காயங்கள்: சிறிய தீ காயங்களுக்கு குறைந்தபட்சம் 20 நிமிடத்திற்கு, அந்த காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை (அதிகம் குளிர்ந்த தண்ணீர் அல்ல) ஊற்றுங்கள். ஒருவேளை அந்த காயம் குழந்தையின் உள்ளங்கை அளவைவிட பெரியதாக இருந்தால் அல்லது முகத்தில், மூட்டில், இடுப்பிற்கு கீழே அல்லது பிறப்புறுப்புக்களில் ஏற்பட்டால் உடனே அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லுங்கள். தோலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கும் டாக்டர்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.
• மூச்சு அடைப்பு: குழந்தையின் மூச்சுக் குழாயில் ஏதாவது மாட்டிக்கொண்டால், அதை உடனடியாக வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு குழந்தையை சரிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த முறை ஹைம்லிக் முயற்சி. இந்த முறையைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியவில்லை என்றால் உங்கள் டாக்டரை அணுகுங்கள் அல்லது இந்த முறை சொல்லித்தரப்படும் சிறார் விபத்து அல்லது முதல் உதவி பயிற்சி போன்றவற்றிற்கு செல்லுங்கள்.
[படத்திற்கான நன்றி]
ஆதாரம்: ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம்
[பக்கம் 23-ன் படம்]
பாதுகாப்பான சைக்கிள் ஹெல்மெட்டை அணியவேண்டும்
[பக்கம் 23-ன் படம்]
காரில் பாதுகாப்பாக