உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/22 பக். 11-13
  • என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள்
  • அடுத்தவர்மீது அக்கறை
  • அன்பே தூண்டுகோல்
  • என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?
    விழித்தெழு!—1999
  • நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • உரையாடல் ஒரு கலை
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/22 பக். 11-13

இளைஞர் கேட்கின்றனர் . . .

என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?

“நான் எப்பவும் கலகலப்பா பேசறதே கிடையாது. எதையாவது தெரியாம சொல்லிட்டா மத்தவங்க என்னை ஒதுக்கிடுவாங்களோனு! யோசிப்பேன். என் அம்மாவுக்கு ரொம்ப கூச்ச சுபாவம். அதனால்தானோ என்னவோ நானும் அவங்க மாதிரியே இருக்கேன்.”—ஆர்டி.

எனக்கு ஏன்தான் இவ்வளவு வெட்கம் வருதோ தெரியல. கொஞ்சம் கம்மியா வரக்கூடாதா? அப்போ, நானும் மத்தவங்க மாதிரி கலகலப்பா, சகஜமா பழகுவேனே! என்று ஏக்கப் பெருமூச்சை நீங்கள் விட்டதுண்டா? கூச்சம் என்பது எல்லாருக்கும் உள்ள பொதுவான குணம் என்பதை சென்ற இதழில் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதியில் பார்த்தோம். a ஒருவேளை நீங்கள் அமைதியான, அதிகம் பேசாத நபராக இருந்தால் உங்களிடம் ஏதோ கோளாறு என்று நினைத்துவிடாதீர்கள். அதேநேரத்தில், ஒரேயடியாக கூச்சப்பட்டால், அதுவே பெரும் பிரச்சினையாக ஆகிவிடும். ஏனென்றால், அதிகமாக கூச்சப்படுவதால், நண்பர்களோடு ஜாலியா இருக்க முடியாது. பார்ட்டிகளில் மற்றவர்களோடு பழக சங்கோஜமாக இருக்கும் அல்லது சகஜமாக பழக முடியாது.

இந்தக் கூச்ச சுபாவம் பெரியவர்களையும்கூட விட்டுவைப்பதில்லை. இதனால் அவர்களும் அவதிப்படுகிறார்கள். ஜான் b என்பவர் கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பர். ஆனால் கும்பலாக கூடியிருக்கும்போது வாயேதிறப்பதில்லை. அவ்வளவு கூச்சம். அவரே ஒத்துக்கொள்கிறார்: “என்னால் எதையும் உருப்படியா சொல்ல முடியாதுனு நினைப்பேன்.” அவருடைய மனைவி டேனுக்கும் இதே பிராப்ளம். ஆனால் இவருடைய மனைவி எப்படி இப்பிரச்சினையை சமாளிக்கிறார்? இதோ அவரே கூறுகிறார்: “சகஜமா பேசறவங்க மத்தியில் இருக்கவே எனக்கு பிடிக்கும். ஏன்னா அவங்களே எல்லாத்தையும் பேசிடுவாங்க.” சரி, சகஜமா பழக ஏதாவது டிப்ஸ் உண்டா?

மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள்

முதலாவதாக, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்களை மாற்ற வேண்டியிருக்கும். உங்களை நீங்களே ஒரேயடியாக மட்டம் தட்டுகிறீர்களா? மற்றவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்று நீங்களாகவே நினைக்கிறீர்களா? உருப்படியாக எதுவும் பேச தெரியாது என்ற எண்ணம் உண்டா? இப்படி உங்களைப் பற்றி நீங்களே மட்டம் தட்டினால் கண்டிப்பாக மற்றவர்களோடு சகஜமாக பழக முடியாது. இயேசு சொன்னதை கவனியுங்கள்: ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.’ அவர் உன்னை விட்டுவிட்டு அன்பு செலுத்து என்று கூறவில்லையே! (மத்தேயு 19:19, பொ.மொ.) ஆகவே, உங்களை நீங்களே ஓரளவுக்கு நேசிப்பதில் தவறில்லை. அது நல்லது. அப்போது, மற்றவர்களிடம் சென்று பேசுவதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்.

உங்களையே நீங்கள் மட்டமாக நினைத்து கஷ்டப்படுகிறீர்களா? இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில், c “என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை?” என்ற தலைப்பில் உள்ள 12-⁠ம் அதிகாரத்தை வாசியுங்கள். உதவியாக இருக்கும். இதிலிருக்கும் தகவல், உங்களிடம் உள்ள நல்ல குணங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இவ்வளவு ஏன்? “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறாரே! (யோவான் 6:44) அப்படியென்றால், நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதே, கடவுள் ஏதோ நல்ல குணத்தை உங்களிடம் காண்கிறார் என்றுதானே அர்த்தம்!

அடுத்தவர்மீது அக்கறை

நீதிமொழிகள் 18:1 (பொ.மொ.) இவ்வாறு எச்சரிக்கிறது: “பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றனர்.” ஆம், உங்களை சுற்றி நீங்களே வட்டம் போட்டுக்கொண்டால், உங்களைப் பற்றியே அளவுக்கு அதிகமாக யோசிக்கிறீர்கள் என்று அர்த்தம். “உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” என்று பிலிப்பியர் 2:4 நம்மை தட்டிக்கொடுக்கிறது. மற்றவர்களது நலனிலும், தேவைகளிலும் நீங்கள் கவனம் செலுத்தும்போது, உங்களைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டீர்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்கள் நலனில் அக்கறை எடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முன்முயற்சி எடுப்பீர்கள்.

உதாரணத்திற்கு, நட்போடு பழகுவதிலும், அன்பாக உபசரிப்பதிலும் நல்ல பெயரை தட்டிக்கொண்டு போன லீதியாள் என்ற பைபிள் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் உரைத்த வார்த்தைகளை கேட்டபிறகு அவர் முழுக்காட்டுதல் எடுத்தார். உடனே, பவுலையும், அவருடைய தோழர்களையும் தன் வீட்டிற்கு வரும்படி கெஞ்சினார். இதைப்பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” (அப்போஸ்தலர் 16:11-15) லீதியாள் புதியதாக கிறிஸ்தவ மதத்தை தழுவியவர். ஆனாலும் அந்தச் சகோதரர்களைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள தானாகவே வலியச்சென்றார். அதனால் அவர் கண்டிப்பாக பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பார். பவுலும் சீலாவும் சிறையிலிருந்து விடுதலையானப்பின் எங்கே சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்? அவர்கள் லீதியாள் வீட்டிற்கு போனார்கள் என்பது கவனிக்கத் தக்கது.​—⁠அப்போஸ்தலர் 16:35-40.

இதேபோல், நீங்களும் மற்றவர் நலனில் அக்கறை காட்டினால், அவர்களும் பதில் உபகாரம் செய்வார்கள். சரி, மற்றவர்கள்மீது எப்படி அக்கறை காட்டலாம்? இதோ சில பயனுள்ள டிப்ஸ்.

● அகல கால் வைக்காதீர்கள். சகஜமாக பழகுவது என்பது ஊர் கவனத்தை எல்லாம் தன்பக்கம் திருப்புவது அல்ல. இதற்காக காலில் சக்கரம் கட்டி சூழலும் முக்கிய சமூக புள்ளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எல்லோரிடத்திலும் ஒரே சமயத்தில் பேச வேண்டும் என்று அகல கால் வைக்காதீர்கள். அதற்கு பதிலாக, ஒவ்வொருவரிடமாக பேச முயலுங்கள். கிறிஸ்தவ கூட்டத்திற்கு வரும்போது, எப்படியும் ஒருவரிடத்தில் பேச வேண்டும் என்று இலக்கு வையுங்கள். புன்னகைக்க முயற்சி செய்யுங்கள். முகத்தை பார்த்து பேச பழகிக்கொள்ளுங்கள்.

● இரும்பு திரையை விலக்குங்கள். ‘எப்படி?’ என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு மற்றவர்கள்மீது உண்மையில் அக்கறையிருந்தால் பொதுவாகவே, பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். ஸ்பெய்னை சேர்ந்த, ஹார்ஹ என்ற இளைஞன் இவ்வாறு கூறுகிறான்: “மற்றவர்களிடம் நலம் விசாரித்தாலே போதும் அல்லது அவர்கள் வேலை எப்படி இருந்தது என்று கேட்டாலும் போதும், அவர்கள் சொல்லும் பதில், அவர்களிடம் நெருங்கி பழக உதவும் என்பது என் அனுபவம்.” இன்னொரு இளைஞன் ஃபிரட் தரும் டிப்ஸ் இதோ: “உங்களுக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை என்றால், சும்மா கேள்விகளை கேளுங்கள்.” அதேசமயத்தில், கவனம் தேவை. அவர்களிடம் ஏதோ புலன்விசாரணை செய்வதுபோல் இருக்கக்கூடாது. நீங்கள் கேள்வி கேட்டும், அந்த நபர் பதில் சொல்லவில்லை என்றால், நீங்கள் உங்களைப் பற்றி அவரிடத்தில் சொல்லுங்கள்.

டீனேஜ் பிள்ளைக்கு தாயாக இருக்கும் மேரி அவர்கள் கூறியது: “மத்தவங்க ரிலாக்ஸா இருக்கணும்னா, அவங்களப் பத்தி அவங்களையே பேசவிடணும். இது என்னோட சொந்த அனுபவம்.” இளம் பெண் கேட் இவ்வாறு கூறுகிறாள்: “மற்றவர்கள் அணிந்திருக்கும் உடையைப் பற்றி அல்லது வேறு எதையாவது புகழ்வது பேச்சை தொடங்க உதவியாக இருக்கும். அதோடு, உங்களுக்கு அவர்களை பிடித்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.” ஆனால், உங்கள் புகழ்ச்சி உண்மையாக இருக்க வேண்டும். முகஸ்துதிக்காக புகழக்கூடாது. (1 தெசலோனிக்கேயர் 2:5) இனிய கனிவான வார்த்தையை பேசும்போது யாரும் காதில் வாங்காமல் இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக பதிலுக்கு எதையாவது சொல்வார்கள்.​—⁠நீதிமொழிகள் 16:⁠24.

● காதுகொடுத்து கேளுங்கள்: “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகிறது. (யாக்கோபு 1:19) இரண்டு பேர் கருத்துக்களை பரிமாறி கொள்வதை சம்பாஷணை அல்லது உரையாடல் என்கிறோம். ஒருவர் மாத்திரம் பேசினால் அது சம்பாஷணை அல்ல. ஒருவேளை உங்களுக்கு பேச கூச்சமாக இருந்தால், அதுவும் நன்மைக்கே! ஏனென்றால் பேசும்போது காதுகொடுத்து கேட்பவரையே மக்களுக்கு பிடிக்கும்.

● கும்பலோடு சேர்ந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரிடமாக பேச பழகிய பிறகு, கும்பலோடு பேச முயற்சி செய்யுங்கள். இப்படி கும்பலோடு பேசி பழகும் கலையை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு சிறந்த இடம் கிறிஸ்தவ கூட்டம். சில நேரங்களில், மற்றவர்கள் ஏற்கெனவே பேசிக்கொண்டிருக்கும்போது நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். இது சம்பாஷணையில் கலந்துகொள்வதற்கான எளிய வழி. ஆனால், சூழ்நிலைமையை புரிந்துகொண்டு சேர்ந்துகொள்ளுங்கள். இங்கிதம் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏதோ தனிப்பட்ட விஷயம் பேசுவதுபோல் தெரிந்தால், தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். ஆனால், சாதாரண விஷயத்தை கும்பலாக பேசிக்கொண்டிருந்தால் நீங்களும் அதில் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கவனம் இருக்கட்டும். சாதுரியமாக பேசுங்கள். மற்றவர்கள் பேசும்போது இடை இடையே பேசாதிருங்கள். எல்லாவற்றையும் நீங்களே பேசாதீர்கள். முதலில் மற்றவர்கள் பேசுவதையும் கொஞ்சம் நேரம் கேளுங்கள். பிறகு உங்களுடைய கூச்சம் அல்லது பயம் குறைய குறைய எதையாவது சொல்ல வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும்.

● நூறு சதம் எதிர்பார்க்காதீர்கள். எதையாவது தப்பாக பேசிவிடுவோமோ என்று இளைஞர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இத்தாலியை சேர்ந்த, எலைஸா என்ற பெண் இவ்வாறு நினைவுகூருகிறார்: “நான் எதை சொன்னாலும், அது தப்பாகிவிடும் என்ற பயம் எப்போதும் எனக்கு இருந்தது.” ஆனால், நம் எல்லாரிடத்திலும் குறைபாடு அல்லது அபூரணம் உண்டு என்று பைபிள் கூறுகிறது. ஆகவே நூறு சதம் திருத்தமாக அல்லது தப்பே இல்லாமல் நம்மால் பேச முடியாது. (ரோமர் 3:23; யாக்கோபு 3:2-ஐ ஒப்பிடுக.) “இவர்கள் எல்லாரும் என் நண்பர்கள். அப்படியே எதாவது தப்பாக சொல்லிவிட்டாலும் என்னை புரிந்துகொள்வார்கள்” என்பதை எலைஸா புரிந்துகொண்டாள்.

● சிரித்து வாழுங்கள். எதையாவது தெரியாமல் சொல்லிவிட்டால், தர்மசங்கடமாக இருக்கும் என்பது உண்மையே. ஆனாலும், ஃபிரட் கூறுவதை கேளுங்கள்: “சும்மா ரிலாக்ஸா இருங்க. நீங்களும் சேர்ந்து சிரிங்க. கொஞ்சநேரத்திற்குள் நார்மலாயிடுவீங்க. ஆனால் இதுக்காக நீங்கள் அப்செட்டாகி, நொந்துபோய், கவலைப்பட்டால் சின்ன பிரச்சினைக்கூட மலையாட்டம் பெருசா தெரியும்.”

● பொறுமையோடு இருங்கள். எல்லாரும் உடனே நம்மிடம் பேசிவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு சரிவர பேச வரவில்லை என்றால், அடுத்தவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று முடிவுசெய்ய வேண்டாம். மற்றவர்களோடு பேச வேண்டும் என்ற உங்களது முயற்சியிலிருந்து பின்வாங்க வேண்டாம். சிலநேரங்களில் மக்கள் ஏதாவது யோசனையில் மூழ்கிப்போயிருப்பார்கள் அல்லது உங்களைப் போலவே கூச்சப்படுவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அடுத்தவரை கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நபர் உங்களிடம் சங்கோஜப்படாமல் பேசுவார்.

● பெரியவர்களிடம் பேசி பழகுங்கள். பெரியவர்கள், குறிப்பாக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள், கூச்ச சுபாவத்தை நீக்க போராடும் இளம் வயதினரிடம் பரிவோடு இருக்கிறார்கள். ஆகவே பெரியவர்களிடம் பேச்சுக்கொடுக்க பயப்படாதீர்கள். இளம் பெண் கேட் இவ்வாறு கூறுகிறாள்: “என்னை சுற்றி பெரியவர்கள் இருந்தால், நான் ரிலாக்ஸா இருப்பேன். ஏன்னா, ‘இவ இப்படிதான்’ என்ற முத்திரையை பெரியவங்க குத்தமாட்டாங்க. என்னை கேலியும் செய்ய மாட்டாங்க. சங்கோஜப்பட வைக்க மாட்டாங்க. என் வயசு பசங்கத்தான் இப்படியெல்லாம் செய்வாங்க.”

அன்பே தூண்டுகோல்

கூச்ச சுபாவம் உள்ள உங்களுக்கு இதுவரை கூறிய டிப்ஸ் ஒருவேளை உதவும். ஆனாலும் கூச்ச சுபாவத்தை போக்க எந்தவித எளிய ஃபார்மூலாவும் கிடையாது. புத்திசாலித்தனமான டெக்னிக்கை கையாள்வதோ, முறையைப் பின்பற்றுவதோ ரொம்ப காலத்திற்கு கை கொடுக்காது. ஆனால், “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதற்கு ஏற்ப வாழ்வதே கைகொடுக்கும். (யாக்கோபு 2:8) மற்றவர்கள்மீது, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளிடம் அக்கறை காட்ட கற்றுக்கொள்ளுங்கள். (கலாத்தியர் 6:10) இயேசு இவ்வாறு கூறினார்: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.” (மத்தேயு 12:34) ஆகவே உங்களுக்கும் அன்பு நிறைந்த இதயம் இருந்தால், தயக்கத்திற்கும், பயத்திற்கும் அதில் இடமே இருக்காது. அதனால் மற்றவர்களிடம் கலகலப்பாக பழக முடியும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜான், இவ்வாறு கூறுகிறார்: “நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, அவர்களிடம் பேசறது ஈஸியா இருக்கு.” இதை இன்னொரு விதமாக சொன்னால்: சகஜமாக இருக்க எவ்வளவுக்கு எவ்வளவு பழகுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு ஈஸி. உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைத்து, மற்றவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டால், எடுத்த முயற்சிகள் வீண்போகவில்லை என்பதை உணருவீர்கள்!

[அடிக்குறிப்புகள்]

a எமது அக்டோபர் 22, 1999, இதழில் வெளியான “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் சகஜமாக பழகமுடியவில்லை?” என்ற கட்டுரையைக் காண்க.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c உவாட்ச் டவர் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்ட புத்தகம்.

[பக்கம் 13-ன் படம்]

வலியச்சென்று பேச்சுக்கொடுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்