எமது வாசகரிடமிருந்து
சோரம்போதல் ஏப்ரல் 22, 1999 விழித்தெழு!-வில் வெளிவந்த “துணையே துரோகியானால்” என்ற தொடர் கட்டுரைக்கு நன்றி. இந்த பயங்கர கொடுமைக்கு நானும் இரையானவள். மூன்று வருடங்களுக்கு முன்பே நான் விவாகரத்து பெற்றபோதிலும், அதன் ரணம் ஆறாது இன்னும் துடி துடிக்கிறேன். என்னுடைய பழைய நினைவுகளை ஒதுக்கிவிட்டு, மீண்டும் வழக்கம் போல் வேலைகளில் கவனம் செலுத்தி என் வாழ்க்கையை தொடர அந்த கட்டுரைகள் உற்சாகமளித்தன.
வி. பி., ட்ரினிடாட்
இந்த விஷயத்தை குறித்து முன்பு எவ்வளவோ ஆராய்ந்திருக்கிறேன், ஆனால் இந்தளவுக்கு அருமையாக எப்போதும் இது விளக்கப்படவில்லை. பைபிள் செய்தியை கேட்ட அக்கணமே, இதுதான் சத்தியம் என்பதை புரிந்துகொண்டேன். அதை நான் இன்னும் உறுதியாக நம்புவதற்கு மற்றொரு காரணத்தை இப்போது யெகோவா கொடுத்திருக்கிறார்.
ஜி. பி., இத்தாலி
மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை மற்றும் முடிவில்லா உடல்நலக் கோளாறுகள் போன்ற கொடுமைகளே என்னுடைய விவாகரத்து எனக்களித்திருக்கும் பரிசு. அந்த வேதனைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன; இருப்பினும், யெகோவாவின் வாக்குறுதிகளில் எனக்குள்ள விசுவாசத்தினாலும் என்னுடைய சபையார் என்மீது காட்டும் அன்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவினாலும் நான் ஆறுதலடைகிறேன்.
எ. பி., கனடா
நான் என் கணவரை விட்டு பிரிந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன, இருந்தும் தனியே வாழ்வதன் வேதனைகளையும் சவால்களையும் இன்னமும் எதிர்ப்படுகிறேன். என் கைகளை கோர்த்தபடி அன்பாய் அரவணைத்து அழைத்து செல்வாரில்லாமல் நான் எப்படி தெருவில் நடப்பேன்? கிறிஸ்தவ கூட்டங்களில் யார் என் அருகில் உட்காருவார்? மருத்துவமனைக்கு என்னுடன் யார் வருவார்? அப்பாவித் துணைகளை யெகோவா கைவிடுவதில்லை என்பதை எனக்கு நினைப்பூட்டியமைக்கு மிக்க நன்றி.
ஈ. எஸ்., பிரேஸில்
“யார் பொறுப்பு?” என்ற பெட்டி எனக்கு ஆறுதலளித்தது. என் கணவர் எனக்கு துரோகம் செய்தபோது நான், அவரை விவாகரத்து செய்தேன். யோபுவைப்போல, சிலசமயம் செத்துவிட வேண்டும் என்றுகூட நினைத்திருக்கிறேன். (யோபு 17:11-13) ஆனால் என் குடும்ப அங்கத்தினர் மற்றும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என்மேல் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைத் தடுத்து என் மனதை மாற்றிவிட்டது.
எம். ஓ., அர்ஜன்டினா
நான் அந்த தொடர் கட்டுரையை மற்ற கட்டுரைகளை வாசிப்பது போல வாசிக்கவில்லை—பேரார்வத்தோடு படித்தேன். நான் ஏற்கெனவே விவாகரத்து எனும் புயலை சந்தித்தவள், எனக்குள் எழுந்த சில கேள்விகள், கவலைகள் பற்றியும்கூட அந்த கட்டுரைகள் கலந்தாலோசித்தன. எங்களைக் குறித்து அக்கறையுடன் இருப்பதற்கு மிக்க நன்றி.
ஈ. எல்., பிரான்ஸ்
என் தந்தை எங்கள் குடும்பத்தை உதறிவிட்டு சென்றபோது எனக்கு ஏழு வயது. அது எங்கள் குடும்பத்தில் பூமியதிர்ச்சியே ஏற்பட்டதுபோல இருந்தது. சில வருடங்கள் கழித்து, என் தந்தை தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படியாக எங்களை கேட்டார். எனக்கும் என் அண்ணன்களுக்கும் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனால் அம்மாவோ ஏற்றுக்கொண்டார், எங்களுக்கோ ஒரே ‘ஷாக்’. சிந்திக்கவே கஷ்டமாக இருந்த ஒரு முடிவை அம்மாவால் எப்படி எடுக்க முடிந்தது? உங்களுடைய கட்டுரையை படித்தப்பிறகே கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்கிறேன்.
எ. எ., பிரேஸில்
அந்த தொடர் கட்டுரைகளுக்கு நன்றிகள் பல! இப்படிப்பட்ட சூழ்நிலைமையை எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரேவிதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் உள்ளன என்பதை தெரிந்துகொண்டது அதிக ஆறுதலாய் இருந்தது. இருப்பினும், அதில் “உங்களுடைய துணை எதிர்பார்க்கும் அளவுக்கு ஒருவேளை நீங்கள் அன்பையும் கனிவான பாசத்தையும் பாராட்டையும் மரியாதையையும் காண்பிக்காமல் இருந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வேதனை மிக்க குடும்ப உறவுகளை சரிசெய்வதற்கு முயற்சி செய்த எங்களை போன்றவர்களை இந்த வாக்கியம் மிகவும் புண்படுத்தியது. விபசாரத்திற்கு திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர், வெறுக்கத்தக்க முறையில் நடந்துகொள்வார், அப்படிப்பட்டவருக்கு அன்பையும் பாசத்தையும் காண்பிப்பது மிகக் கடினம்.
எல். டபிள்யு., ஐக்கிய மாகாணம்
இந்த குறிப்புகள் எங்கள் வாசகர் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறோம். தவறுசெய்தவர் அவருடைய தவறான நடத்தைக்கு தன்னுடைய துணைமீது பழிபோடலாம் என்று குறிப்பிடுவது எங்களுடைய நோக்கமல்ல. “யார் பொறுப்பு?” என்ற பெட்டியில் “அப்பாவி துணையின் பலவீனங்கள்” என்னவாக இருந்தாலும்சரி, அவருடைய தவறுகளுக்கு அந்த குற்றவாளியே பொறுப்பு என்பதை வலியுறுத்திக் கூறினோம். கேள்விக்கிடமான இந்த கூற்று சமரசத்தைப் பற்றி கலந்தாலோசிப்பில் காணப்படுகிறது. அதில் நாங்கள் வெறுமனே நல்ல பேச்சுத்தொடர்புக்கான அவசியத்தை வலியுறுத்துவதோடு, அவ்வாறு சமரசமாகும் தம்பதிகள் ஒருவேளை உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய சில பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொள்ளவும் உற்சாகப்படுத்துகிறோம். இருவரும் மனந்திறந்து வெளிப்படையாக பேச வேண்டிய சில மறைமுகமான மனக்கசப்புகள் ஒருவேளை இருக்கலாம். பெரும்பாலும், இப்படிப்பட்ட பேச்சுவார்த்தை துணைவர் இருவரும் தங்களுடைய குறைபாடுகளை ஒத்துக்கொள்வதில் விளைவடைகிறது. சொல்லப்போனால், “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) அப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகள் பெரும்பாலும் வேதனையளிப்பதாய் இருந்தபோதிலும், நம்முடைய கட்டுரை சொன்ன விதமாக, “நம்பிக்கையை புதுப்பிக்க எடுக்கும் நடவடிக்கைக்கு இவை முக்கியம்.”—ED.