எமது வாசகரிடமிருந்து
உடல் அலங்காரம் “பைபிளின் கருத்து—அளவுக்கு மிஞ்சினால் அலங்காரமும் நஞ்சு” (ஆகஸ்ட் 8, 2000) என்ற கட்டுரையை படித்த பிறகு இதை எழுதுகிறேன். நயமிக்க உடல் அலங்காரம் அழகானதே, அது உண்மையில் ஒரு கலையே. என்னுடைய வெளிப்புற தோற்றத்தை வைத்து சமுதாயம் என்னை எடைபோடலாம், குறிப்பிட்ட சிலரோடு வகைப்படுத்தலாம், ஆனால் கடவுள் என்னை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன். மற்றவர்களும் நான் பச்சை குத்தியிருப்பதையே பார்த்துக் கொண்டில்லாமல் என் உள்ளான குணங்களை கவனிப்பார்கள் என நம்புகிறேன், அதற்காக ஜெபிக்கிறேன்.
கே. எம்., ஐக்கிய மாகாணங்கள்
உடலை அலங்கரிப்பதா வேண்டாமா என்பது தனிப்பட்டவரின் தீர்மானமே என அந்தக் கட்டுரை ஒப்புக்கொண்டது. என்றாலும், ‘தன்னடக்கத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் தன்னை அலங்கரிப்பதே’ உள்ளான ஆள்தன்மையில் அழகாய் இருப்பதற்கு ஒருவர் கொடுக்கும் அத்தாட்சியாகும். (1 தீமோத்தேயு 2:9, NW) ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய மனசாட்சியை மட்டுமல்ல ‘மற்றொருவருடைய மனசாட்சிக்கும்’ கவனம் செலுத்த வேண்டிய கடமை உள்ளது என்பதையும் பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 10:29)—ED.
(g01 4/8)
பிரெயில் “லூயி பிரெயில்—விழி இழந்தோரின் விளக்கு” (செப்டம்பர் 8, 2000) என்ற கட்டுரைக்காக பாராட்டுகள். நான் வேலை செய்யும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பார்வை இழந்தவர். அந்தக் கட்டுரையை அவருக்கு வாசித்து காண்பித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனார். ஒரு பிரதி பள்ளியின் நூலகத்திலும் வைக்கப்பட்டது.
எம். ஏ. எஸ்., பிரேஸில்
(g01 5/8)
ஒல்லியாக இருத்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்?” (அக்டோபர் 8, 2000) என்ற கட்டுரை என் கருத்தைக் கவர்ந்தது. நான் 32 வயது பெண், ஆனால் எப்போதுமே மிகவும் ஒல்லியாக இருந்ததால் என்னையே எனக்கு பிடிக்கவில்லை. தீக்குச்சி, குருவி கால்கள் என அழைத்து எப்போதுமே என்னை கேலி செய்திருக்கின்றனர். இதனால் அநேக சமயங்களில் சோர்ந்து போயிருக்கிறேன். நம் உள்ளான குணத்தைப் பார்த்து நம்மை மதிப்பவர்களிடம் பழகும்படி நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களின் உடல்வாகைப் பார்த்து கிறிஸ்தவர்கள் அவர்களை ஏளனப்படுத்தக் கூடாது.
டபிள்யூ. எல்., ஐக்கிய மாகாணங்கள்
(g01 5/22)
மரபணு பொறியியல் “அறிவியலால் பரிபூரண சமுதாயத்தை உருவாக்க முடியுமா?” (செப்டம்பர் 22, 2000 [ஆங்கிலம்]) என்ற தொடர் கட்டுரைகளை நேற்று இரவு வாசித்தேன். அதை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். அதனால் டாக்டராக இருக்கும் என் முதலாளியோடு பேசுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்த படங்கள் சிந்தனையைத் தூண்டி, போற்றுதலை வளர்த்தன. ஒவ்வொரு படத்தையும் தயாரிக்க முன் யோசனையோடு நேரமும், முயற்சியும் செலவு செய்திருப்பது தெளிவாக தெரிந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி.
என். எம்., ஐக்கிய மாகாணங்கள்
மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிதாக விளக்கியதற்கு உங்களுக்கு நன்றி. இனப்பெருக்கம் செய்ய யாருக்கு தகுதியிருக்கிறது, யாருக்கு “தகுதியில்லை” என விஞ்ஞானிகள் தீர்மானிக்கையில் அன்பு, இரக்கம், ஆவிக்குரிய காரியங்களுக்கான போற்றுதல் போன்ற குணங்களை பற்றி யோசித்தாவது பார்ப்பார்களா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதிக அறிவுத்திறனோ நல்ல ஆரோக்கியமோ ஒருவரை சிறந்த நபராக்காது. ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம். இடது கை பழக்கம் ஒரு குறைபாடு என ஏன் குறிப்பிடப்பட்டிருந்தது?
ஜே. சீ., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கேள்வி, “த பயோடெக் செஞ்சுரி” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் சம்பந்தப்பட்டது. “குறைபாடு” என்ற வார்த்தை மேற்கோள் குறிகளுக்குள் இருந்தது, அந்த ஆசிரியர் அதை கிண்டலாக உபயோகித்தார் என காட்டுகிறது. மரபணு பொறியியலால் எழும் தார்மீக கேள்விகளில் சிலவற்றை அந்த வாக்கியம் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், மனித மரபியல் தொகுப்பை மாற்றியமைக்கும் திறமையின் காரணமாக தோலின் நிறம் அல்லது இடது கை பழக்கம் போன்ற பண்புகள் விரும்பத்தகாதவை என்று சிலர் கண்மூடித்தனமாக முடிவுக்கு வரும் ஆபத்து உள்ளது.—ED.
அறிவியல் எனக்குப் பிடித்தமான பாடமல்ல என்றாலும் அந்தக் கட்டுரைகள் என் இதயத்தைத் தொட்டன. மனித இன மேம்பாடு என்பது அபூரண மனிதர்கள் பரிபூரணத்தை அடைய நாடுவதாகும். நினைப்பதை சாதித்துவிட்டார்கள் என்றால் வியாதிப்பட்டவர்களும் முடமானவர்களும் இவர்களுடைய கண்களில் ‘தாழ்ந்தவர்களாகத்தான்’ தென்படுவர். அப்படிப்பட்டவர்களுக்கு யாருமே இரக்கம் காட்ட மாட்டார்கள். அதற்கு மாறாக, ஆயிர வருட ஆட்சியின்போது மனிதனுக்கு பரிபூரணத்தைக் கொடுப்பதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:4, 5) அதே சமயம், தெரிவு செய்யும் நம் சுயாதீனத்தையும் மதித்து அவ்வாறு செய்வார்.
எஸ். ஓ., ஜப்பான்
(g01 5/22)