மூட்டு அழற்சி—முடங்கச் செய்யும் நோய்
“இது என்ன மாதிரி வலியென்று உங்களுக்கு வந்தால்தான் தெரியும். சாவுதான் இதிலிருந்து விடுபட ஒரே வழி என்று நான் நினைத்தேன்.”
—சிட்ஸுகோ, ஜப்பான்.
“16 வயசிலிருந்தே இந்நோயின் பிடியில் சிக்கி தவிப்பதால் இது என் இளமையை திருடிவிட்டதாகவே உணருகிறேன்.”
—டாரண், பிரிட்டன்.
“படுக்கையே கதி என கிடந்ததால் என் வாழ்நாளில் இரண்டு வருடங்களை தொலைத்துவிட்டேன்.”
—காட்யா, இத்தாலி.
“எல்லா மூட்டுக்களும் வலிக்க தொடங்கியதிலிருந்து, என் வாழ்க்கையே ஒரே வலிதான்.”—ஜாய்ஸ், தென் ஆப்பிரிக்கா.
மூட்டு அழற்சி எனப்படும் நோயால் அவதிப்படுவோர் சோகத்துடன் தெரிவிப்பவை இவை. இதனால் ஏற்படும் வலி, உறுப்புக்களை அசைக்க முடியாமை, உருச்சிதைவு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தேடி ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான நோயாளிகள் தங்கள் டாக்டர்களிடம் செல்கின்றனர்.
ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, 4.2 கோடிக்கும் அதிகமானோர் மூட்டு அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர்; 6 நோயாளிகளுக்கு ஒருவர் என்ற கணக்கில் ஊனமடைகின்றனர். சொல்லப்போனால் அந்நாட்டில் ஏற்படும் ஊனத்திற்கு முக்கிய காரணம் மூட்டு அழற்சியே. மருத்துவச் செலவு, உற்பத்தி வீத இழப்பு போன்றவற்றால் அமெரிக்கர்களுக்கு இந்நோய் வருடா வருடம் 6,400 கோடி டாலர் செலவு வைப்பதால் இந்த பொருளாதார பாதிப்பு, “ஏறக்குறைய பொருளாதார சரிவின் சராசரி மதிப்புக்குச் சமம்” என தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் என்ற நிறுவனம் குறிப்பிடுகிறது. பிரேஸில், சிலி, சீனா, இந்தியா, இந்தோனீஷியா, மலேசியா, மெக்ஸிகோ, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளிட்ட ஆய்வுகளின்படி, மூட்டு வீக்கம், முடக்கு வாதம் ஆகிய நோய்களால் மேற்கூறிய வளரும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொல்லை, கிட்டத்தட்ட “தொழில்மய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொல்லைக்கு சமம்” என்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.
மூட்டு அழற்சி முதியவர்களை மட்டுமே தாக்கும் நோய் என்பது தவறான கருத்து. மக்கள் வயதாக வயதாக இந்நோயால் மிக மோசமாய் பாதிக்கப்படுவர் என்பது நிஜம்தான். ஆனால், இந்நோயின் சர்வசாதாரணமான ஒரு வகை, முடக்கு வாதம் ஆகும்; இது 25 முதல் 50 வயது வரையான ஆட்களை பொதுவாக பாதிக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 5 பேரில் கிட்டத்தட்ட மூவர் 65 வயதுக்கும் குறைவானவர்களே. அதைப் போலவே பிரிட்டனில், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள 80 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் 45 வயதைக்கூட எட்டாதவர்கள். 14,500-க்கும் மேற்பட்டோர் பிள்ளைகள் ஆவர்.
ஒவ்வொரு வருடமும் மூட்டு அழற்சி நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கிறது. கனடாவில், அடுத்த பத்தாண்டுக்குள், மூட்டு அழற்சியால் அவதியுறுவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கு அதிகரிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ளதைவிட ஐரோப்பாவில் அதிகமாய் இருந்தாலும், அவ்விரண்டு கண்டங்களிலும்கூட இந்நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூட்டு அழற்சி நோய் அவ்வளவு தீவிரம் காட்டுவதால், 2000-2010 வருடங்களை எலும்பு மற்றும் மூட்டுப் பத்தாண்டு என்று அறிவிக்க உலக சுகாதார அமைப்பை தூண்டியுள்ளது. இவ்வாண்டுகளின்போது, மூட்டு அழற்சியைப் போன்று தசைகளையும் எலும்புகளையும் தாக்கும் நோய்களால் அவதிப்படுவோரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிக்கும் முயற்சியில் உலக முழுவதிலுமுள்ள டாக்டர்களும் உடல்நல நிபுணர்களும் இணைந்து செயலாற்றுவர்.
வேதனைமிக்க இந்நோய் பற்றி அறியப்பட்டுள்ள தகவல்கள் யாவை? யார் யாரெல்லாம் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்? மூட்டு அழற்சியால் அவதியுறுவோர், முடங்கச் செய்யும் இதன் பாதிப்புகளை எவ்வாறு சமாளிக்கலாம்? எதிர்காலத்தில் இதற்கு நிவாரணம் கிடைக்குமா? அடுத்துவரும் எமது கட்டுரைகள் இவ்விஷயங்களை ஆராயும். (g01 12/8)
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
எக்ஸ் கதிர்: Used by kind permission of the Arthritis Research Campaign, United Kingdom (www.arc.org.uk)