உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g02 7/8 பக். 3-4
  • அடிமைத்தனம் தொடரும் கொடூரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அடிமைத்தனம் தொடரும் கொடூரம்
  • விழித்தெழு!—2002
  • இதே தகவல்
  • அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா?
    விழித்தெழு!—2001
  • அடிமைத்தனம் ஒரு நீண்ட கால போராட்டம்
    விழித்தெழு!—2002
  • ரகசியத்திலும் ரகசியம்
    விழித்தெழு!—2000
  • அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அன்றும் இன்றும்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
விழித்தெழு!—2002
g02 7/8 பக். 3-4

அடிமைத்தனம்—தொடரும் கொடூரம்

அடிமைத்தனம் ஒழிந்துவிட்டதா? ஒழிந்துவிட்டது என நினைக்கவே அநேகர் ஆசைப்படுகிறார்கள். அந்த வார்த்தையை கேட்டாலே போதும் மிருகத்தனமும் ஒடுக்குதலும் நிறைந்த கொடூர காட்சிகளே மனத்திரையில் ஓடுகின்றன. ஆனாலும் இவற்றை கடந்தகால காட்சிகளாகவே பலரும் கருதுகின்றனர். உதாரணமாக, கடந்த நூற்றாண்டுகளில் அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல்களின் இந்தக் காட்சியே சிலருடைய நினைவுக்கு வருகின்றன: கிரீச் ஒலியுடன் ஆடியசைந்து செல்லும் மரக் கலன்களில், பயத்தில் உறைந்துபோய் குப்பைக் கூளம்போல் குவியலாக கிடக்கும் அடிமைக் கூட்டங்கள்.

அடிமைகளை ஏற்றிச் செல்லும் அப்படிப்பட்ட கப்பல்கள் இப்போது பயணிப்பதில்லை என்பதும் அத்தகைய அடிமைத்தனத்தை இன்றைய சர்வதேச ஒப்பந்தங்கள் தடை செய்கின்றன என்பதும் உண்மைதான். ஆனாலும், அடிமைத்தனம் எனும் விலங்கு இன்னும் தகர்க்கப்படவில்லை. 20 கோடி மக்கள் இன்னும் ஏதேனும் ஒருவகை அடிமைத்தனத்தின்கீழ் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என மனித உரிமைகள் அமைப்பாகிய சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நிறுவனம் கணக்கிடுகிறது. முந்தின நூற்றாண்டு அடிமைகள் சகித்ததைவிட மோசமான சூழ்நிலைகளில் அவர்கள் வேலை செய்யலாம். சொல்லப்போனால், “சரித்திரத்தில் எந்தக் காலப்பகுதியையும்விட அதிகமானோர் இன்று அடிமைத்தனத்தில் கிடக்கிறார்கள்” என ஆய்வாளர்கள் சிலர் சொல்கிறார்கள்.

இந்த நவீன கால அடிமைகளைப் பற்றிய பதிவுகள் நெஞ்சை பிளக்க வைக்கின்றன. பத்தே வயதுடைய கான்ஜி தன் எஜமானர்களின் கால்நடைகளை தினம் தினம் மேய்க்கிறான்.a கடுகடுப்பான அந்த எஜமானர்களோ அவனை எப்போதும் அடித்து நொறுக்குகிறார்கள். “எனக்கு யோகம் இருந்தால் ஒரு பழைய ரொட்டித் துண்டு கிடைக்கும். இல்லையென்றால் அந்த நாள் பூராவும் பட்டினிதான்” என அவன் கூறுகிறான். “எனக்கு சம்பளமே கொடுத்தது கிடையாது, ஏனென்றால் நான்தான் அவர்களுடைய அடிமையும் சொத்துமாச்சே. . . . என் வயசு பிள்ளைகள் மற்ற பிள்ளைகளோடு ஓடியாடி விளையாடுகிறார்கள். நான் இப்படி பயந்து பயந்து வாழ்வதைவிட சாவதே மேல்.”

கான்ஜியைப் போல இன்றைய அடிமைகளில் பெரும்பாலோர் பிள்ளைகள் அல்லது பெண்களே. தங்களுடைய விருப்பத்திற்கு எதிராக அவர்கள் மாடாக உழைக்கிறார்கள்; ஜமுக்காளங்கள் நெய்கிறார்கள், சாலைகள் அமைக்கிறார்கள், கரும்பு வெட்டுகிறார்கள், ஏன், விலைமாதராகவும் வேலை செய்கிறார்களே. அவர்கள் வெறும் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்படலாம். அடைக்க முடியாத கடனை அடைப்பதற்காக, சில குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரே அடிமைகளாக விற்றுவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட அறிக்கைகள் உங்களை அதிர்ச்சியடையச் செய்கின்றனவா? உங்களை மட்டுமல்ல, எல்லாரையும்தான். வீசியெறியப்படும் மக்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் எழுத்தாளர் கெவன் பேல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அடிமைத்தனம் கேவலமானது. இது வெறுமனே ஒருவரது உழைப்பை திருடுவதல்ல; ஒருவரது முழு வாழ்க்கையையே களவாடுவதாகும்.” மனிதன் மனிதனிடமே ஈவிரக்கமின்றி நடந்துகொண்டிருக்க, இந்த அடிமைத்தனம் என்ற கொடுமை என்றாவது முடிவுக்கு வரும் என நம்புவதற்கு நமக்கு என்ன காரணம் இருக்கிறது? இந்தக் கேள்வி நீங்கள் நினைப்பதைவிட அதிக அளவில் உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது.

பல வகையான அடிமைத்தனங்கள் இருப்பதை நாம் பார்க்கப் போகிறோம். அடிமைத்தனம் பல விதங்களில் உருவெடுக்கிறது; அவற்றில் சில உயிரோடிருக்கும் ஒவ்வொருவரையும் பாதிக்கின்றன. அப்படியானால், மனிதகுலத்திற்கு மெய்யான விடுதலை என்றாவது கிடைக்குமா என நாம் அனைவருமே அறிய வேண்டும். ஆனால் அதற்கு முன்பு, அடிமை வியாபாரத்தைப் பற்றிய சரித்திரத்தை சுருக்கமாக அலசிப் பார்க்கலாம். (g02 6/22)

[அடிக்குறிப்பு]

a அவனுடைய உண்மையான பெயரல்ல.

[பக்கம் 3-ன் படங்கள்]

வறுமையில் வாடிய பெண்களும் பிள்ளைகளும் வெகு காலமாகவே அடிமை வியாபாரத்திற்கு ஆளாகி வந்தனர்

[படங்களுக்கான நன்றி]

மேலே உள்ள படம்: UN PHOTO 148000/Jean Pierre Laffont

U.S. National Archives photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்