சூதாட்டம் எனும் கண்ணியை தவிருங்கள்
“சூதாட்டம் என் ஆரோக்கியத்தை பாதிக்கவில்லை, சூதாடுவதற்கு எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதில் எப்போதும் கட்டுப்பாடு வைத்திருந்தேன். ஆனால் லாட்டரி விளையாடும்போதெல்லாம் அதிர்ஷ்ட எண்கள் என நான் கருதியவற்றையே தேர்ந்தெடுத்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.”—லின்டா.
அநேக சூதாடிகள் அதிர்ஷ்ட எண்களில் அல்லது அதிர்ஷ்ட பொருட்களில் நம்பிக்கை வைக்கிறார்கள். மூட நம்பிக்கைகளுக்கு தாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என அவர்கள் நினைக்கலாம், ஆனாலும் அவற்றை விட்டுவிடுவதில்லை.
சில சூதாடிகள் கடவுளிடம் ஜெபமும் செய்து, தாங்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டில் ஜெயிப்பதற்கு உதவும்படி கேட்கிறார்கள். ஆனாலும், கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டி, அதே சமயத்தில் ‘அதிஷ்டம் என்னும் தேவதைக்குப் படைப்புப் போடுகிறவர்களை’ கடவுள் கண்டனம் செய்வதை பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 65:11, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், அதிர்ஷ்டத்தில் மூடநம்பிக்கை கொள்வதை ஆதரிக்கும் பழக்கவழக்கங்களை கடவுள் அருவருக்கிறார். அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படுவதை கண்மூடித்தனமாக நம்பும்படி ஊக்குவிப்பதே சூதாட்டம்.
சூதாட்டம், பண ஆசையையும்கூட பகிரங்கமாக ஆதரிக்கிறது. ஆன்மீக காரியங்களில் நாளுக்குநாள் மோசமடைந்துவரும் இன்றைய சமுதாயத்தில் பணம் கடவுளின் இடத்தைப் பிடித்து, சூதாட்டம் அதை வணங்குவதற்கான பிரபல வழியாக ஆகிவிட்டிருக்கிறது. கம்பீரமான கிளப்புகளே புதிய கத்தீட்ரல்கள்; பேராசை பயன்தருவது என்பதே புதிய கொள்கை. கிளப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்கோ அங்கு நிலவும் சூழலிற்கோ அல்ல, ஆனால் “கத்தை கத்தையாக பணத்தை” ஜெயிப்பதற்கே அங்கு செல்வதாக சொல்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். என்றாலும், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என பைபிள் எச்சரிக்கிறது.—1 தீமோத்தேயு 6:10.
“வஞ்சிக்கப்படாதிருங்கள்; . . . விக்கிரகாராதனைக்காரரும் . . . பொருளாசைக்காரரும் [“பேராசைக்காரரும்,” NW] . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என 1 கொரிந்தியர் 6:9, 10 வசனங்களில் பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. பேராசை பலவீனப்படுத்தும் சமூக வியாதி மட்டுமே அல்ல; இது சாவுக்கேதுவான ஆன்மீக வியாதி—ஆனால் குணப்படுத்தவல்ல வியாதி.
மாறுவதற்கான பலத்தை கண்டடைந்தார்கள்
“நான் பலமுறை சூதாடுவதை நிறுத்த முயன்றேன்” என தெரிவிக்கிறார் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட காஸுஷிகி. “நண்பர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவது என் குடும்பத்தையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நான் ஜெயித்த பணம் என் கையில் தங்கியதேயில்லை. இரண்டாவது மகனின் பிரசவத்துக்காக என் மனைவி சேமித்து வைத்த பணத்தையும் சூதாடி தொலைத்தேன்; கடைசியில் என்னுடைய கம்பெனி பணத்தையும் வைத்து விளையாட ஆரம்பித்தேன். அதனால் என்னுடைய மதிப்பு, மரியாதை அனைத்தையும் இழந்தேன். சூதாடுவதை நிறுத்தும்படி கேட்டு என் மனைவி அடிக்கடி என்னிடம் அழுது கெஞ்சினாள், ஆனால் என்னால் நிறுத்தவே முடியவில்லை.”
அதற்குப்பின், காஸுஷிகி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். அவர் கூறுகிறார்: “பைபிளை அதிகமாக படிக்க படிக்க, கடவுள் ஒருவர் இருக்கிறார், அவருக்கு செவிகொடுப்பதால் எனக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமானது. கடவுள் அருளும் பலத்தால் சூதாடுவதை நிறுத்த முடியும் என உறுதிபூண்டேன். சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அதன் மீது வெறுப்பும் ஏற்பட்டிருப்பதை நினைத்தால் அது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சூதாட்டத்தால் என் குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னலை இப்போது நினைத்துப் பார்க்கையில் என் இருதயம் வலிக்கிறது. சூதாட்ட அடிமைத்தனத்திலிருந்து விடுபடவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் உதவியதற்காக நான் யெகோவா தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்!”—எபிரெயர் 4:12.
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜானும்கூட அவ்வாறு பைபிளை படிக்க ஆரம்பித்தார். அவர் சொல்கிறார்: “நான் பைபிளை படித்தது என்னுடைய சூழ்நிலைகளை மறுபடியும் சீர்தூக்கிப் பார்க்க எனக்கு உதவியது. சூதாட்டத்தால் எனக்கும் என் குடும்பத்துக்கும் எவ்வளவு சீரழிவு ஏற்பட்டிருக்கிறது என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. சூதாட்டம், யெகோவா வெறுக்கும் சுயநலம், பேராசை போன்ற குணங்களையே மக்களின் மனதில் வளர்க்கிறது என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பைபிளை படிக்க படிக்க, யெகோவா மீதுள்ள அன்பு சூதாட்டத்தை விட்டு விலக எனக்கு பலத்தை தந்தது. சிறந்ததோர் வாழ்க்கையை கண்டடையும் கனவில்தான் சூதாட ஆரம்பித்தேன். இப்போது நான் சூதாடுவதை விட்டுவிட்டு யெகோவாவை மகிழ்ச்சியோடு சேவிக்கிறேன்; இதனால் என் கனவும் நனவாகியிருக்கிறது.”
ஜானின் மனைவி லின்டாவும் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட தீர்மானித்தார். “அது சாமானியமான விஷயமாக இருக்கவில்லை” என அவர் கூறுகிறார். “ஆனால், நானும் என் கணவரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்த பிறகு, வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க கற்றுக்கொண்டேன். கடவுள் நேசிக்கும் காரியங்களை நேசிப்பதோடு அவர் வெறுக்கும் காரியங்களை—எல்லா வகையான பேராசையும் உட்பட்ட காரியங்களை—வெறுக்கவும் நான் கற்றுக்கொண்டேன். நோக்கமுள்ள சிறந்த வாழ்க்கை வாழ்வதோடு, என் பர்ஸில் நிறைய பணமும் தங்குகிறது.”—சங்கீதம் 97:10.
யெகோவா தேவனுடன் ஓர் உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நீங்களும்கூட சூதாட்டம் என்ற கண்ணியை தவிர்ப்பதற்குத் தேவையான பலத்தையும் ஞானத்தையும் கண்டடையலாம். அவ்வாறு செய்வது உங்களுடைய பொருளாதார, உணர்ச்சிப்பூர்வ, ஆன்மீக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அப்போது, நீதிமொழிகள் 10:22-ல் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள்: “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” (g02 7/22)
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
பேராசை பலவீனப்படுத்தும் சமூக வியாதி மட்டுமே அல்ல; இது சாவுக்கேதுவான ஆன்மீக வியாதி
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
சூதாட்டமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியும்
டியூக் யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்கள் நேஷனல் கேம்ப்ளிங் இம்பேக்ட் ஸ்டடி கமிஷனுக்குக் கொடுத்த அறிக்கையில், சூதாட்டம் விளம்பரப்படுத்தப்படும் முறைக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் பேரிலுள்ள நம்பிக்கைக்கும் இடையிலான தொடர்பை குறிப்பிட்டார்கள். அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “[லாட்டரி] விளம்பரங்கள் பல பொருளாசையையே வெட்கமின்றி வலியுறுத்துகின்றன . . . ஆனால் அது கடின உழைப்போடும் விடாமுயற்சியோடும் சம்பந்தப்பட்ட பொருளாசை அல்ல, மாறாக எதிர்பார்ப்புகள், கற்பனைகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் பூதங்களிலும், மாய விளக்குகளிலும் நம்பிக்கை வைப்பதோடு சம்பந்தப்பட்ட பொருளாசையாகும். அதோடு சிறந்த வாடிக்கையாளர்களில் பலரும் தங்களுடைய சொந்த மூடநம்பிக்கைகள், சோதிட அட்டவணைகள், குறிசொல்பவர்கள், பெயர்களுக்கும் தேதிகளுக்கும் கனவுகளுக்கும் பொருத்தமான எண்கள் கொடுக்கப்பட்டுள்ள புனித ‘கனவு புத்தகங்கள்’ ஆகியவற்றின் அடிப்படையில் பந்தயம் கட்டுவதை எல்லா லாட்டரி மேலாளர்களும் அறிவர். எல்லா எண்களுமே தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளன என்பதையும் பிரபலமான எண்களை வைத்து சூதாடும்போது வென்றவர்கள் தங்களுக்குள் பணத்தை பிரித்துக்கொள்வதால் ஒருவர் எதிர்பார்த்ததற்கும் குறைவாகவே பணம் கிடைக்கும் என்பதையும் லாட்டரி ஏஜன்சிகள் வலியுறுத்துவதில்லை; அதற்கு பதிலாக, தங்களுடைய அதிர்ஷ்ட எண்களையே தேர்ந்தெடுக்கும்படி (அதையே தொடர்ந்து செய்யும்படி) பந்தயம் கட்டுபவர்களை ஊக்குவிக்கின்றன.”
[பக்கம் 10-ன் படங்கள்]
“யெகோவா மீதுள்ள அன்பு சூதாட்டத்தை விட்டுவிலக எனக்கு பலத்தை தந்தது.”—ஜான்
“நோக்கமுள்ள சிறந்த வாழ்க்கை வாழ்வதோடு, என் பர்ஸில் நிறைய பணமும் தங்குகிறது.”—லின்டா
“சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அதன் மீது வெறுப்பும் ஏற்பட்டிருப்பதை நினைத்தால் அது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.”—காஸுஷிகி