காடுகளின் சேவைகள்—எந்தளவு மதிப்புள்ளவை?
இன்றும் பூமியின் நிலப்பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகத்தை காடுகள் போர்த்தியிருக்கின்றன; ஆனால் இந்த விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. வளரும் நாடுகளில் மட்டுமே “40 லட்சம் ஹெக்டேர் [ஒரு கோடி ஏக்கர்] பரப்பளவுள்ள—சுவிட்சர்லாந்தின் அளவுள்ள—காட்டுப் பகுதிகள் ஒவ்வொரு வருடமும் அழிக்கப்படுகின்றன” என ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டம் பிரசுரித்த தெரிவுகள்—மனித வளர்ச்சி பத்திரிகை (ஆங்கிலம்) 1998-ல் குறிப்பிட்டது.
காடுகளை அழிப்பது ஏன் வேடிக்கையான முரண்பாடு
காடுகளை தொடர்ந்து அழித்துவருவது ஒரு வேடிக்கையான முரண்பாடு என சில நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் காடுகளை எரிப்பதற்கும் மரங்களை வெட்டுவதற்கும் காரணம் பொருளாதார லாபம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் “காடுகளை வெட்டாமல் அல்லது எரிக்காமல் விட்டால் இன்னும் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என ஒரு அறிக்கை சொல்கிறது. அது எப்படி?
பிரேசிலின் மனாஸிலுள்ள அமேசானில், ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றும் டாக்டர் ஃபிலிப் எம். ஃபர்ன்சைட் மற்றும் டாக்டர் ஃப்ளாவ்யூ ஜே. லிசான் விழித்தெழு!-விடம் சொன்னபடி, அழிக்கப்படாத மழைக்காடுகள் “உலகிற்கு சேவைகள் செய்கின்றன.” கார்பன் டையாக்ஸைடை (பசுங்கூட வாயு) உறிஞ்சி சேகரித்து வைப்பது, மண் அரிப்பையும் வெள்ளப்பெருக்கையும் தடுப்பது, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வது, மழையை கட்டுப்படுத்துவது, அழியும் ஆபத்திலுள்ள மிருகங்களுக்கு வாழிடம் தருவது, காட்டுப் பயிர்களுக்கு தஞ்சம் அளிப்பது என அவற்றின் சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கூடுதலாக, காடுகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன, பொழுதுபோக்கிற்கும் இடமளிக்கின்றன. இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் சேவைகள் அனைத்திற்கும் பொருளாதார மதிப்பு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு உதாரணத்தை கவனியுங்கள்; கார்பனை சேகரிக்கும் திறனை காடு பெற்றிருக்கிறது. அக்காட்டின் மரங்கள் வெட்டப்படும்போது, அவை வெளிவிடும் கார்பன் வளிமண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடாக மாறி புவிச் சூட்டிற்கு பங்களித்துவிடுகிறது. இவ்வாறு, அந்தக் காடு ‘உலகிற்கு செய்யும் சேவையின்’ பொருளாதார மதிப்பை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கார்பன் வெளியேற்றப்படுவதைக் குறைக்க மனிதன் எடுக்கும் முயற்சிகளுக்கான செலவை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட கணக்கீடுகள் எதைக் காட்டுகின்றன என்பதை பிரேசில் நாட்டிலுள்ள இன்டர்-அமெரிக்கன் டெவலெப்மன்ட் பாங்க்கில் பணிபுரியும் சுற்றுச்சூழல் ஆலோசகரான மார்க் ஜே. டோரோட்ஷிஹானி சொல்கிறார்: “கார்பன் சேமிப்பகங்களாக [கிடங்குகளாக] காடுகள் பெற்றிருக்கும் மதிப்பு, மரங்களின் பிறப்பிடமாகவும் வேளாண்மை நிலமாகவும் அவை பெற்றிருக்கும் மதிப்பைவிட மிக மிக அதிகம்.” இருந்தாலும் காடுகள் அதிகமதிகமாக அழிக்கப்படுகின்றன. ஏன்?
பாதுகாப்பதற்கான தூண்டுதல்
இந்த ஒப்புமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: ஒருசிலர் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்து ஊர்களுக்கு இந்த நிலையம் மின்சாரம் வழங்குகிறது. ஆனால் அந்த ஊர்க்காரர்கள் மின்சாரத்திற்கு கட்டணமாக ஒரு பைசாகூட செலுத்துவதே இல்லை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு அந்நிலையத்தின் சொந்தக்காரர்கள் ஒரு தீர்மானத்திற்கு வருகிறார்கள்; ‘நிலையத்தை இழுத்து மூடிவிட்டு, சாதனங்களை கழற்றியெடுத்துவிட்டு, எல்லாவற்றையும் விற்றுவிடுவதுதான் நல்லது; கொஞ்சமும் காசு வசூலாகாத ஒரு நிலையத்தை வீணாக வைத்திருப்பதைவிட நல்ல லாபத்திற்கு விற்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம்’ என முடிவு செய்கிறார்கள். காடுகள் மிகுந்திருக்கும் நாடுகளில் உள்ள சில அதிகாரிகளும் அதேவிதமாகத்தான் நினைப்பதாக தோன்றுகிறது. காடுகளிலிருந்து பெறும் சேவைகளுக்கு உலக மக்கள் கட்டணம் செலுத்துவதில்லை என்பதால் காட்டு மரங்களை வெட்டி (மின் உற்பத்தி நிலையத்தின் சாதனங்களை கழற்றியெடுப்பது போல), மரங்களை விற்று (சாதனங்களையெல்லாம் விற்று), கொஞ்ச காலத்திற்குள்ளேயே கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் நியாயப்படுத்த பார்க்கிறார்கள்.
இந்தப் போக்கை மாற்றுவதற்கு ஒரே வழி, காடுகளை பாதுகாப்பதால் பொருளாதார நன்மை கிடைக்க வழி செய்வதுதான் என டோரோட்ஷிஹானி சொல்கிறார். நிலத்தடி எரிபொருட்கள் என பெரும்பாலும் அழைக்கப்படுபவற்றை பயன்படுத்துபவர்களுக்கு “உலகளாவிய கார்பன் வரி” விதிப்பது ஒரு நல்ல ஐடியா என பேராசிரியரான டாக்டர் சூசெ கோல்டன்பர்க் சொன்னார்; அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அணுக்கரு இயற்பியல் நிபுணர், சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும்கூட.
அந்த ஐடியாவை ஆதரிப்பவர்கள் சொல்கிறபடி, எந்தளவு வரி விதிப்பது என்பது அந்தந்த நாடு அல்லது மாகாணம் எந்தளவு எரிபொருளை பயன்படுத்துகிறது என்பதையும் எந்தளவு பசுங்கூட வாயுக்களை வெளியேற்றுகிறது என்பதையும் பொறுத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, உலக ஜனத்தொகையில் சுமார் 5 சதவீதத்தினர் குடியிருக்கும் ஐக்கிய மாகாணங்களில், உலகப் பசுங்கூட வாயுக்களில் கிட்டத்தட்ட 24 சதவீதம் வெளியேற்றப்படுகிறது. அப்படிப்பட்ட நாடு செலுத்தும் வரிப் பணத்தை, உடனடி லாபத்திற்காக காடுகளை அழிக்காமல் அவற்றை பாதுகாக்க முயலும் நாடுகளுக்கு உதவ பயன்படுத்தலாம் என கொள்கை இயற்றுவோர் சிலர் நியாயப்படுத்துகிறார்கள். இவ்விதத்தில், நுகர்வோர் தங்கள் ‘மின்சார கட்டணத்தை’ செலுத்துவார்கள், சொந்தக்காரர்களாக கருதப்படுபவர்களும் பொருளாதார நன்மையின் காரணமாக தங்கள் ‘மின் உற்பத்தி நிலையத்தை’ தொடர்ந்து பேணிப் பாதுகாக்க தேவையான தூண்டுதலை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.
ஆனால் சுற்றுச்சூழலின் சேவைகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கப்போவது யார்? அந்தக் கட்டணத்தை வசூலித்து, பகிர்ந்தளிக்கப்போவது யார்?
நடத்தையில் மாற்றங்கள் தேவை
“இந்தப் பிரச்சினைகளை உலக வன மாநாட்டில் கலந்துபேசுவது சிறந்தது” என டோரோட்ஷிஹானி சொல்கிறார். காடுகள் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணங்களை அந்த மாநாட்டில் தீர்மானிக்க முடியும். பிறகு, “இந்த சர்வதேச முயற்சியில் இறங்க ஓர் உலக வன அமைப்பை நிறுவ வேண்டும்” என்றும் சொல்கிறார்.
சர்வதேச பிரச்சினையைத் தீர்க்க ஒரு சர்வதேச அமைப்பை நிறுவுவது நல்ல யோசனை போல தோன்றினாலும், “காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எக்கச்சக்கமான நிறுவனங்களையும் கழகங்களையும் நிறுவியும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை” என டோரோட்ஷிஹானி ஒப்புக்கொள்கிறார். “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மக்களின் நடத்தையில் பெரிய மாற்றங்கள்” ஏற்படுவதே உண்மையில் தேவை என்றும் அவர் சொல்கிறார். ஆம், காடுகளை பாதுகாக்க சட்டங்களை மாற்றினால் மட்டுமே போதாது, மனப்பான்மைகளையும் மாற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட பிரச்சினைகள் என்றாவது தீருமா? தீரும் என்று பூமியின் படைப்பாளரான யெகோவா தேவன் வாக்குறுதி தருகிறார். சீக்கிரத்தில் உலகத்தையே ஆட்சிசெய்து பூமியின் பிரச்சினைகளை எல்லாம் அடியோடு ஒழிக்கப் போகும் ஒரு அரசாங்கத்தை அவர் ஏற்படுத்தியிருப்பதாக பைபிள் சொல்கிறது. அந்த அரசாங்கம் ‘என்றென்றைக்கும் அழியாது.’ (தானியேல் 2:44) மேலும், பூமியின் சூழியல் அமைப்புகள் சரியாக பயன்படுத்தப்படும்படி பார்த்துக்கொள்ளும்; பூமியின் படைப்பாளரைப் பற்றி அதன் குடிமக்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வார்கள். அப்படைப்பாளரின் பெயர் யெகோவா என்று பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 54:13) அவரது அரசாங்கத்தில் வாழப்போகும் மனிதர் அனைவருமே காடுகள் உட்பட முழு பூமியின் மதிப்பை முற்றுமுழுக்க மதித்துணருவார்கள். (g03 12/22)
[பக்கம் 26-ன் படங்களுக்கான நன்றி]
Ricardo Beliel / SocialPhotos
© Michael Harvey/Panos Pictures