இளைஞர் கேட்கின்றனர் . . .
ஹோம்வர்க் செய்ய நேரமில்லையே, என்ன செய்வது?
‘நான் ஹையர் செகன்டரி படிக்கிறேன், எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு. . . . ஏகப்பட்ட புராஜக்ட் செய்ய வேண்டும், இது சும்மா விளையாட்டு இல்ல. இதையெல்லாம் செய்ய எனக்கு நேரமே இல்லையே?’—18 வயது பெண்.
பள்ளிக்கூடத்திலிருந்து சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் வீட்டுப்பாடம் தலைக்குமேல் இருப்பதை நினைத்து திணறி விடுகிறீர்களா? அப்படியானால், இப்படி கஷ்டப்படுவது நீங்கள் மட்டுமே அல்ல. “எல்லா பள்ளிக்கூடங்களும் தரத்தை உயர்த்துவதிலும் தேசிய அளவில் நடைபெறும் பரீட்சைகளில் தங்கள் மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண்களை பெறுவதிலும் குறியாக இருப்பதால், மாணவர்கள் தலையில் வீட்டுப்பாடம் குவிந்துவிடுகிறது” என ஐக்கிய மாகாணங்களிலிருந்து வரும் பிரெஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது. “சில இடங்களில், ஹைஸ்கூல் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு நாள் இராத்திரியும் ஹோர்ம்வர்க் செய்ய மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக செலவழிப்பதாக சொல்கிறார்கள். 20 வருஷத்திற்கு முன்பு பிள்ளைகள் செய்த வீட்டுப் பாடத்தைவிட மூன்று மடங்கு அதிகமான வீட்டுப்பாடத்தை இன்றைய பிள்ளைகள் செய்வதாக யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன் நடத்திய ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.”
வீட்டுப்பாடம் தலைக்குமேல் இருப்பது ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக வீட்டுப்பாடம் செய்கிறவர்கள் 13 வயது மாணவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் என்றால், தைவானிலும் கொரியாவிலுமோ 40 சதவீதத்தினர், பிரான்சில் 50 சதவீதத்தினருக்கும் அதிகமானோர். “சில சமயங்களில், வீட்டுப்பாடம் குவிந்து கிடப்பதை பார்த்தால் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது” என புலம்புகிறார் ஐ.மா. யுனிவர்சிட்டி மாணவர் கேட்டீ. பிரான்சிலுள்ள மார்செய்ல்ஸில் படிக்கும் மாணவிகளாகிய மெர்லினும் பெலின்டாவும் அவளைப் போலவே புலம்புகிறார்கள். “வீட்டுப்பாடம் செய்வதற்காக ஒவ்வொரு இராத்திரியும் நாங்கள் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் செலவழிக்கிறோம்” என மெர்லின் கூறுகிறாள். “அதுவும் உங்களுக்கு வேறெதாவது வேலை இருந்தால் அவ்வளவுதான், நேரம் கிடைப்பதே ரொம்ப கஷ்டமாகிவிடும்” என்கிறாள்.
நேரத்தை எப்படி கண்டுபிடிப்பது?
தேவைப்படும்போது ஒரு நாளோடு கூடுதலாக சில மணிநேரத்தை கூட்டி, வீட்டுப் பாடத்தையும் மற்றெல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா? “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போல் கவனமாய் நடந்துகொண்டு, . . . வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்” என எபேசியர் 5:15, 16-ல் (NW) சொல்லப்பட்டுள்ள பைபிள் நியமத்திலிருந்து கற்றுக்கொண்டால் இதுபோன்ற ஒன்றை உங்களால் சாதிக்க முடியும். இந்த பைபிள் எழுத்தாளர் வீட்டுப்பாடம் சம்பந்தமாக இந்த வார்த்தைகளை எழுதவில்லை, என்றாலும் அதிலுள்ள நியமத்தை அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தலாம். நீங்கள் ஒன்றை வாங்கும்போது, அதற்கு ஒரு விலையை செலுத்த வேண்டும். இங்கு சொல்லப்படும் குறிப்பு, படிப்பதற்கு நேரத்தை கண்டுபிடிக்க நீங்கள் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பதே. ஆனால் என்ன தியாகம் செய்ய வேண்டும்?
முதலாவதாக, என்னென்ன காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “முதலில் நீங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள்” என ஜில்யன் என்ற இளம்பெண் அறிவுரை கூறுகிறாள். உங்களுடைய பட்டியலில் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அதோடு, உங்களுடைய குடும்ப பொறுப்புகளையும், வீட்டு வேலைகளையும், வீட்டுப்பாடங்களையும் மறந்துவிடாதீர்கள்.
அடுத்ததாக, சுமார் ஒரு வாரத்திற்கு உங்களுடைய நேரத்தை உண்மையில் எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதை கவனிப்பதற்கு ஒரு டைரி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கே அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கண்டுபிடிப்பீர்கள். டிவி பார்ப்பதற்கு எவ்வளவு மணிநேரம் செலவழிக்கிறீர்கள்? இன்டர்நெட்டில் ‘சர்ஃபிங்’ செய்வதற்கு? சினிமாவுக்கு போவதற்கு? போனில் பேசுவதற்கு? நண்பர்களை சந்திப்பதற்கு? இப்பொழுது, எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென காட்டும் பட்டியலையும் உங்கள் டைரியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இப்பொழுது, டிவி பார்ப்பதற்கோ போனில் பேசுவதற்கோ அல்லது ‘சர்ஃபிங்’ செய்வதற்கோ செலவிடும் நேரத்தை ஆராய்ந்து பார்த்து, அவற்றிலிருந்து அதிகமான நேரத்தை வாங்குவதற்கு நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கலாம்!
அதிமுக்கியமானவற்றிற்கு முதலிடம்
டிவி பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும் என்பதையோ சந்நியாசியாகிவிட வேண்டும் என்பதையோ இது அர்த்தப்படுத்தாது. “அதிமுக்கியமானவற்றிற்கு முதலிடம்” என்ற கொள்கையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கலாம். “அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பதே கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு பைபிள் வசனம். (பிலிப்பியர் 1:10, NW) உதாரணமாக, நீங்கள் பள்ளிக்கூடம் போவது முக்கியம் என்பதால், உங்களுடைய வீட்டு வேலைகளைக் கவனிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்காக படிப்பது, உங்களுடைய வீட்டுப்பாடங்களை முடிப்பது ஆகியவற்றை எல்லாம் செய்யும் வரை டிவியை ‘ஆன்’ செய்யாதபடி உங்களுக்கு நீங்களே ஒரு சட்டம் போட்டுக்கொள்ளலாம். உண்மைதான், உங்களுக்குப் பிடித்தமான ஒரு டிவி புரோகிராமை பார்க்காமல் விட்டுவிட்டால் ரொம்ப கவலையாக இருக்கும். ஆனால் உண்மையில், பிடித்தமான புரோகிராமை மட்டுமே பார்க்க வேண்டுமென நினைத்து, கடைசியில் சாயங்காலம் பூராவும்—ஒரு வேலையும் செய்யாமல்—டிவி முன்னாடியே எத்தனை முறை தவம் கிடந்தீர்கள்?
மறுபட்சத்தில், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல போதிய முக்கியத்துவம் நீங்கள் கொடுக்க வேண்டும். உதாரணமாக, முக்கியமான பரீட்சையோ வீட்டுப்பாடமோ இருக்கப்போவதை நீங்கள் அறிய வந்தால், கூட்டங்களுக்குப் போவதை தடை செய்யாதவாறு முன்கூட்டியே இவற்றிற்காக தயாரிக்க முயற்சி செய்யலாம். உங்கள் ஆசிரியர்களோடும் அதைப் பற்றி பேசிப் பார்க்கலாம். கூட்டத்திற்கு போக வேண்டிய நாளில், அதற்கு தடையாக வீட்டுப்பாடம் செய்ய வேண்டி வராமல் இருப்பது உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை அவர்களிடம் தெரிவிக்கலாம். ஆசிரியர்கள் சிலர் இதற்கு நம்முடன் ஒத்துழைக்க மனமுள்ளவர்களாய் இருக்கலாம்.
இயேசுவின் நண்பராகிய மார்த்தாளைப் பற்றிய பைபிள் பதிவு மற்றொரு பயனுள்ள நியமத்தை கற்பிக்கிறது. அவள் அதிக சுறுசுறுப்புள்ளவளாகவும் கடினமாய் உழைப்பவளாகவும் இருந்தாள், ஆனால் அவள் முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவுக்காக ஒரு பெரிய விருந்து செய்ய ஓடியாடியதில் களைத்துப்போயிருந்தாள், ஆனால் அவளுடைய சகோதரியாகிய மரியாளோ அவளுக்கு உதவி செய்யாமல் இயேசு சொல்வதை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். இதைப் பற்றி இயேசுவிடம் மார்த்தாள் முறையிட்டபோது அவர் இவ்வாறு கூறினார்: “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்.”—லூக்கா 10:41, 42.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? வேலையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய சூழ்நிலைமைக்கு இந்த நியமத்தை நீங்கள் எவ்வாறு பொருத்தலாம்? சரி, ‘அநேக காரியங்களைக் குறித்து நீங்கள் கவலைப்பட்டுக் கலங்குகிறீர்களா?’—ஒருவேளை வீட்டுப் பாடத்தையும் பகுதிநேர வேலையையும் ஒன்றாக செய்ய முயலுகிறீர்களா? நீங்கள் ஒரு வேலை செய்தால், உங்களுடைய குடும்பத்திற்கு அந்தப் பணம் உண்மையிலேயே அவசியமா? அல்லது உங்களுக்குத் தேவையான பொருட்களை அல்ல, ஆனால் விருப்பமான பொருட்களை வாங்குவதற்காக ‘எக்ஸ்ட்ரா’ பணம் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?
உதாரணமாக, சில நாடுகளில், இளைஞர்கள் தங்களுக்கென்று சொந்தமாக கார் வாங்க ஆசைப்படுகிறார்கள். “கார் வைத்திருந்தால் அதை பராமரிப்பதற்கு ரொம்ப செலவாகும், அதனால் பணம் வைத்திருக்க வேண்டும் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் இன்று இளைஞர்களுக்கு அதிகமாய் ஏற்படுகிறது” என ஹைஸ்கூல் ஆலோசகர் கேரன் டர்னர் விளக்குகிறார். ஆனால், டர்னர் இவ்வாறு சொல்லி முடிக்கிறார்: “படிக்க வேண்டிய பாடம் நிறைய இருப்பதோடு ‘எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிட்டீஸும்’ அதோடு வேலையும் சேர்ந்துகொள்ளும்போது அது பெரும் தடையாக ஆகிவிடுகிறது. பின்பு ‘ஓவர்லோடினால்’ மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.” நீங்கள் ஏன் அனாவசியமாக உங்களைப் பாரப்படுத்திக்கொள்ள வேண்டும்? உங்களுடைய பள்ளிப் படிப்பு பாதிக்கப்படுமானால், ஒருவேளை சில மணிநேரங்களே நீங்கள் வேலை செய்யலாம் அல்லது வேலையை விட்டும்கூட விடலாமே.
பள்ளியில் நேரத்தை ‘வாங்குங்கள்’
கூடுதலான நேரத்தை பள்ளி நேரத்திற்குப் பிறகு அட்ஜஸ்ட் செய்ய முயற்சி செய்வதோடு, நீங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே எவ்வாறு உங்களுடைய நேரத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். “பள்ளிக்கூடத்தில் ஸ்டடி பீரியடிலேயே முடிந்தளவு வீட்டுப்பாடத்தை முடித்துக்கொள்ள நான் முயற்சி செய்கிறேன்” என ஹோஸ்வே கூறுகிறான். “இப்படி செய்வதால், வகுப்பு நடக்கும்போது ஏதாவது புரிந்துகொள்ள கஷ்டமாக இருந்தால் அதை டீச்சரிடம் அங்கேயே கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது.”
சிந்தித்துப் பார்ப்பதற்கு உதவும் மற்றொரு விஷயம் என்னவென்றால், உங்களுடைய ‘ஆப்ஷனல்’ பாடங்களை குறைத்துக்கொள்வதாகும். அதோடு, உங்களுடைய ‘எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிட்டீஸ்’ பற்றியும் சிந்தித்துப் பார்க்கலாம். இப்படிப்பட்ட காரியங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்களுடைய பாடங்களைப் படிப்பதற்கு கூடுதலான நேரத்தை நீங்கள் பெறலாம்.
நேரத்தை மிகத் திறமையுடன் பயன்படுத்துதல்
சரி, நீங்கள் தியாகங்களும் மாற்றங்களும் செய்துவிட்டீர்கள், வீட்டுப்பாடம் செய்ய இன்னும் கொஞ்சம் மணிநேரத்தையும் எப்படியோ திக்குமுக்காடி பெற்றுவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் இப்பொழுது அந்த நேரத்தை எவ்வாறு பலன்தரும் விதத்தில் பயன்படுத்துவீர்கள்? கூடுதலாக 50 சதவீத வீட்டுப்பாடத்தை உங்களால் முடித்துவிட முடிகிறதென்றால், கூடுதலாக 50 சதவீத நேரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்? ஆகவே உங்களுடைய திறமையை வளர்ப்பதற்கு இதோ சில ஆலோசனைகள்.
✔திட்டமிடுங்கள். உங்களுடைய வீட்டுப்பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, இதுபோன்ற விஷயங்களுக்கு கவனம் செலுத்துங்கள்: எந்தப் பாடத்தை முதலில் செய்ய வேண்டும்? இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? இதைச் செய்வதற்கு என்னென்ன உபகரணங்கள்—புத்தகங்கள், பேப்பர், பேனா பென்சில்கள், கால்குலேட்டர்—உங்களுக்குத் தேவை?
✔படிப்பதற்கேற்ற இடத்தை கண்டுபிடியுங்கள். எந்தவித கவனச் சிதறல்களும் இல்லாத இடமே சிறந்த இடம். ‘உங்களிடம் ஒரு டெஸ்க் இருந்தால், அதை பயன்படுத்துங்கள்’ என எலீஸ் என்ற இளைஞி கூறுகிறாள். ‘உங்களுடைய படுக்கையில் சாய்ந்துகொண்டு படிப்பதைவிட உட்கார்ந்துகொண்டு படிக்கும்போது உங்களால் நன்றாக கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.’ உங்களுக்கென்று ஒரு தனி அறை இல்லையென்றால், நீங்கள் படிப்பதற்கு உதவியாக உங்களுடைய தம்பி தங்கைகள் சத்தம் போடாமல் அமைதியாக இருக்க சம்மதிக்கலாம். அல்லது ஒருவேளை பூங்காவிற்கோ பொது நூலகத்திற்கோ சென்று படிக்கலாம். உங்களுக்கென்று ஒரு தனி அறை இருக்கிறதென்றால், நீங்கள் படிக்கும்போது டிவியோ மியூஸிக்கோ உங்களுடைய கவனத்தைக் குலைக்க அனுமதிக்காதீர்கள்.
✔அவ்வப்பொழுது சற்று இடைவெளி விடுங்கள். சிறிது நேரத்திற்குப்பின் கவனம் செலுத்துவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், சற்று இடைவெளி விட்டு மீண்டும் வந்து படியுங்கள்.
✔தள்ளிப்போடாதேயுங்கள்! “எப்பொழுதும் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது என்னுடைய பழக்கம்” என முன்பு குறிப்பிடப்பட்ட கேட்டீ கூறுகிறாள். “ஒரு வேலையை ஆரம்பிக்காமல் கடைசி நேரம் வரை தள்ளிப்போடுவதை என்னால் நிறுத்த முடியவில்லை.” வீட்டுப்பாடம் செய்ய திட்டவட்டமான ஓர் அட்டவணை போட்டு அதை உறுதியாக கடைப்பிடிப்பதன் மூலம் தள்ளிப்போடும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.
பள்ளிப் பாடம் முக்கியம், ஆனால் மார்த்தாளிடம் இயேசு சொன்னபடி, மிக முக்கியமான காரியங்கள்—‘நல்ல பங்குகள்’—ஆவிக்குரிய காரியங்களே. பைபிள் வாசிப்பது, வெளி ஊழியத்தில் பங்குகொள்வது, கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராவது போன்ற முக்கியமான காரியங்களை வீட்டுப்பாடம் தடை செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய காரியங்களே உங்களுடைய வாழ்க்கைக்கு என்றென்றும் வளம் சேர்க்கும் காரியங்கள்!—சங்கீதம் 1:1, 2; எபிரெயர் 10:24, 25. (g04 1/22)
[பக்கம் 15-ன் படங்கள்]
பல காரியங்களை இழுத்துப்போட்டுக் கொண்டால் வீட்டுப்பாடம் செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்
[பக்கம் 15-ன் படம்]
நன்கு திட்டமிட்டால் உங்களுடைய வீட்டுப்பாடத்தை செய்யத் தேவையான நேரம் கிடைக்கும்